Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

தமிழ் இலக்கிய வரலாறு
தி. வை. சதாசிவப் பண்டாரத்தார்




தமிழ் இலக்கிய வரலாறு


1.  தமிழ் இலக்கிய வரலாறு
    1.  மின்னூல் உரிமம்
    2.  மூலநூற்குறிப்பு
    3.  அணிந்துரை
    4.  பதிப்புரை
    5.  முதற் பதிப்பின் முகவுரை
    6.  இரண்டாம் பதிப்பின் முகவுரை
    7.  தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250- கி. பி. 600)
2.  நான்மணிக்கடிகை
3.  இன்னா நாற்பது
4.  இனியவை நாற்பது
5.  திரிகடுகம்
6.  ஆசாரக்கோவை
7.  பழமொழி
8.  சிறுபஞ்சமூலம்
9.  ஏலாதி
10. கார்நாற்பது
11. ஐந்திணை ஐம்பது
12. திணைமொழி ஐம்பது
13. ஐந்திணை எழுபது
14. திணைமாலை நூற்றைம்பது
15. கைந்நிலை
16. காரைக்காலம்மையார் நூல்கள்
17. திருமந்திரம்
18. முத்தொள்ளாயிரம்
19. கிளிவிருத்தம், எலிவிருத்தம், நரிவிருத்தம்
    1.  தமிழ் இலக்கிய வரலாறு (13, 14, 15 - ஆம் நூற்றாண்டுகள்)
20. திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்
21. நள வெண்பா
22. சிவஞானபோதம்
23. சிவஞான சித்தியார்
24. இருபா இருபஃது
25. உண்மை விளக்கம்
26. பாரதம்
27. காங்கேயன் பிள்ளைக்கவி
28. சேனாவரையர்
29. பரிமேலழகர்
30. தஞ்சைவாணன் கோவை
    1.  II கி. பி. பதினான்காம் நூற்றாண்டு
31. சிவப்பிரகாசம்
32. திருவருட்பயன்
33. வினா வெண்பா
34. போற்றிப்பஃறொடை
35. கொடிக்கவி
36. நெஞ்சுவிடுதூது
37. உண்மைநெறி விளக்கம்
38. சங்கற்ப நிராகரணம்
39. தில்லைக் கலம்பகம்
40. திருவாமாத்தூர்க் கலம்பகம்
41. ஏகாம்பரநாதர் உலா
42. வில்லிபுத்தூராழ்வார் பாரதம்
43. தேசிகப் பிரபந்தம்
44. கப்பற்கோவை
    1.  III கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு
45. திருப்புகழ்
46. கந்தர் அந்தாதி
47. கந்தர் அலங்காரம்
48. கந்தர் அநுபூதி
49. திருவகுப்பு
50. திருவானைக்கா உலா
51. ஓங்கு கோயிற் புராணம்
   


தமிழ் இலக்கிய வரலாறு

 

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார்

 

 


மூலநூற்குறிப்பு

  நூற்பெயர் : தமிழ் இலக்கிய வரலாறு

  தொகுப்பு : தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 6

  ஆசிரியர் : தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்

  பதிப்பாளர் : கோ. இளவழகன்

  அளவு : 1/8 தெம்மி

  எழுத்து : 12 புள்ளி

  பக்கம் : 16 + 224 = 240

  நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)

  விலை : உருபா. 215/-

  படிகள் : 1000

  நூலாக்கம் : பாவாணர் கணினி, தி.நகர், சென்னை - 17.

  அட்டை வடிவமைப்பு : செல்வி வ. மலர்

  அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர், இராயப்பேட்டை, சென்னை - 14.

  வெளியீடு : தமிழ்மண் அறக்கட்டளை, பெரியார் குடில், பி.11. குல்மொகர் குடியிருப்பு, 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை, தியாகராயர்நகர், சென்னை - 600 017., தொ.பே. 2433 9030

ஆராய்ச்சிப் பேரறிஞர்
தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்
116 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு
தோற்றம் : 15.08.1892 - மறைவு : 02.01.1960

தொன்மைச் செம்மொழித் தமிழுக்கு
உலக அரங்கில் உயர்வும் பெருமையும்
ஏற்படுத்தித் தந்த தமிழக முதல்வருக்கு…
தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு அறிவித்து
உவப்பை உருவாக்கித் தந்த தமிழக முதல்வருக்கு…
ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்
அருந்தமிழ்ச் செல்வங்களை நாட்டுடைமையாக்கி
பெருமை சேர்த்த தமிழக முதல்வருக்கு…
பத்தாம் வகுப்பு வரை
தாய்மொழித் தமிழைக் கட்டாயப் பாடமாக்கிய
முத்தமிழறிஞர் தமிழக முதல்வருக்கு….
தலைமைச் செயலக ஆணைகள்
தமிழில் மட்டுமே வரவேண்டும்
என்று கட்டளையிட்ட தமிழக முதல்வருக்கு…
தமிழ்மண் அறக்கட்டளை
நெஞ்சம் நிறைந்த
நன்றியைத் தெரிவிக்கிறது.


அணிந்துரை

முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி

தமிழ் இணைப் பேராசிரியர்

அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி)

கும்பகோணம் 22.12.2007

இலக்கிய வரலாறு எழுதுவது என்பது அவ்வளவு எளிமையான செயல் அன்று. இந்த வரலாற்றை எழுதுவதற்கு மூல ஆதாரங்கள் கிடைக்காத 17 ஆம் நூற்றாண்டில் வெளிவந்த தமிழ் நாவலர் சரிதையும், பின்னர்த் தண்டபாணி சுவாமிகள் பாடிய புலவர் புராணமும் முதன்மை நூல்களாக அமைந்தன. அதனைத் தொடர்ந்து சபாபதி நாவலரின் திராவிடப் பிரகாசிகை ( 1899) என்னும் நூல் சிறந்த சில இலக்கியங்களின் இயல்புகளைத் தொகுத்து இயம்புகிறது. சுன்னாகம் குமாரசாமிப் பிள்ளை எழுதிய புலவர் சரித்திரம் புலவர் சிலரது வரலாற்றைச் சுட்டுகிறது. தஞ்சை சீனிவாச பிள்ளையின் தமிழ் வரலாறு (1921) முற்றுப் பெறவில்லை. இந்த நூலும் ஜி.எ. துரைசாமிப் பிள்ளையின் தமிழ் இலக்கியம் என்ற நூலும் முதல் முயற்சி என்னும் வகையில் குறிப்பிடத் தக்கவையாகும்.

நம் தமிழ்மொழியின் சிறப்புக்களை அயல்நாட்டாரும் விளங்கிக் கொள்ளும் வகையில் முந்நீர்ப் பள்ளம் - பூர்ணலிங்கம் பிள்ளை **‘*Tamil Literature’ என்னும் பெயரிலும், வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் ‘Studies in Tamil Literature and History’** (1936) என்னும் பெயரிலும் ஆங்கிலத்தில் நூல்கள் எழுதினார்.

தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய சிந்தனை அறிஞர் கா.சுப்பிரமணியப் பிள்ளை 1930இல் எழுதி வெளியிட்ட இலக்கிய வரலாற்றில்தான் முழுமைப் பெறுகிறது எனலாம். இந்த நூலையடுத்துத் தமிழில் பல இலக்கிய வரலாற்று நூல்கள் வெளிவரத் தொடங்கின.

கி.பி.1950-க்குப்பின் தமிழ் இலக்கிய வரலாறு படைப்பதில் புது ஊக்கம் பிறந்தது. அவ்வகையில் சு.இராமசாமி நாயுடுவின் தமிழ் இலக்கியம், தி.வை.சதாசிவப் பண்டாரத்தாரின் தமிழ் இலக்கிய வரலாறு - கி.பி.250-600, தமிழ் இலக்கிய வரலாறு - 13,14,15ஆம் நூற்றாண்டுகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கப் பெறாத இருண்ட காலமாகிய களப்பிரர் கால இலக்கிய வரலாற்றை இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அறிஞர் பண்டாரத்தாரை எழுதுமாறு பணித்தது. களப்பிரர் ஆட்சிக் காலத்தில் வடமொழியில் எழுதப் பெற்ற சில சைன நூல்களும், பாலி மொழியில் இயற்றப் பெற்ற சில பௌத்த நூல்களும், பிராகிருதத்திலும் வடமொழியிலும் வரையப் பெற்ற சில செப்பேடுகளும் உரையாசிரியர்களின் சில உரைக் குறிப்புக்களும் களப்பிரர் கால இலக்கிய வரலாற்றை எழுதுவதற்குப் பண்டாரத்தாருக்குத் துணை புரிந்தன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு இருண்ட கால இலக்கிய வரலாற்றைத் தமிழுலகம் வியக்கும் வகையில் எழுதிய பெருமை பண்டாரத்தாருக்கு உண்டு.

அதுபோன்றே 13, 14. 15 ஆம் நூற்றாண்டின் இலக்கிய வரலாற்றைத் தமக்குக் கிடைத்த அகச் சான்றுகளையும் புறச்சான்றுகளையும் அடிப்படை யாகக் கொண்டு, ஆதாரமற்ற கற்பனைச் செய்திகளை நீக்கி, சமயச் சார்பு பற்றி நடுவுநிலைமை மாறாமல் உண்மையை உணரும் உயர்ந்த நோக்குடன் அறிஞர் பண்டாரத்தார் எழுதியுள்ளார். இந்த நூலில் நூலாசிரியர்களின் காலங்கள் அகச்சான்றுகளையும் கல்வெட்டுக்களையும் அடிப்படையாகக் கொண்டு நிறுவப்பட்டிருக்கின்றன. இலக்கியங்களையும் கல்வெட்டுக் களையும் மூல ஆதாரங்களாகக் கொண்டு வரலாறு எழுதிய பெருமைக் குரியவர் பண்டாரத்தார். அவருடைய இலக்கிய வரலாற்று ஆய்வுகள் தமிழ் மண்ணுக்குப் பெருமை சேர்க்கக் கூடியவையாகும்.


பதிப்புரை

கோ. இளவழகன்

நிறுவனர்

தமிழ்மண் அறக்கட்டளை

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார், தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருப்புறம்பயம் எனும் சிற்றூரில் 15.8.1892ல் பிறந்தார். இவர் 68 ஆண்டுகள் வாழ்ந்து 02.01.1960ல் மறைந்தார். பண்டாரம் என்னும் சொல்லுக்குக் கருவூலம் என்பது பொருள். புலமையின் கருவூலமாகத் திகழ்ந்த இம்முதுபெரும் தமிழாசான் இலக்கியத்தையும் வரலாற்றையும் இருகண்களெனக் கொண்டும், கல்வெட்டு ஆராய்ச்சியை உயிராகக் கொண்டும், அருந்தமிழ் நூல்களைச் செந்தமிழ் உலகத்திற்கு வழங்கியவர். இவர் எழுதிய நூல்களையும், கட்டுரைகளையும் ஒருசேரத் தொகுத்து 10 தொகுதிகளாக தமிழ் கூறும் உலகிற்கு வைரமாலையாகக் கொடுக்க முன்வந்துள்ளோம்.

சங்கத் தமிழ் நூல்களின் எல்லைகளையும் , அதன் ஆழ அகலங் களையும் கண்ட பெருந்தமிழறிஞர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயரிடம் தமிழ்ப்பாலைக் குடித்தவர்; தமிழவேள் உமாமகேசுவரனாரால் வளர்த் தெடுக்கப்பட்டவர்; பண்டிதமணி கதிரேசன் செட்டியார் தலைமையில் தமிழ்ப்பணி ஆற்றியவர்; நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அய்யா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்.

திருப்புறம்பயம் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிற்றூர்; திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக்குரவர் நால்வராலும், திருத்தொண்டர் புராணம் படைத்தளித்த சேக்கிழாராலும், தேவாரப் பதிகத்தாலும் பாடப்பெற்ற பெருமை மிக்க ஊர்; கல்வி, கேள்விகளில் சிறந்த பெருமக்கள் வாழ்ந்த ஊர். நிலவளமும், நீர்வளமும் நிறைந்த வளம் மிக்க ஊர்; சோழப் பேரரசு அமைவதற்கு அடித்தளமாய் அமைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர்.

பண்டாரத்தாரின் ஆராய்ச்சி நூல்களான சோழப் பெருவேந்தர்கள் வரலாறு - பாண்டியப் பெருவேந்தர்கள் வரலாறு - தமிழ் இலக்கிய வரலாறு - ஆகிய நூல்கள் எழுதப்பட்ட பிறகு அந்நூல்களை அடிப்படையாகக் கொண்டுதான் வரலாற்று நாவலாசிரியர்களான கல்கி - சாண்டில்யன் - செகசிற்பியன் - விக்கிரமன் - பார்த்தசாரதி - கோவி.மணிசேகரன் ஆகியோர் வரலாற்றுப் புதினங்களை எழுதித் தமிழ் உலகில் புகழ் பெற்றனர்.

பண்டாரத்தார் அவர்கள் கல்வெட்டு ஆராய்ச்சியும் , வரலாற்று அறிவும் , ஆராய்ச்சித் திறனும், மொழிப் புலமையும் குறைவறப் பெற்ற ஆராய்ச்சிப் பேரறிஞர். பிற்கால வரலாற்று அறிஞர்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர். வரலாற்று ஆசிரியர்கள் பலர் முன்னோர் எழுதிய நூல்களைக் கொண்டுதான் பெரும்பாலும் வரலாறு எழுதுவது வழக்கம். ஆனால், பண்டாரத்தார் அவர்கள் கல்வெட்டுக்கள் உள்ள ஊர்களுக்கெல்லாம் நேரில் சென்று அவ்வூரில் உள்ள கல்வெட்டுக்களை ஆராய்ந்து முறைப்படி உண்மை வரலாறு எழுதிய வரலாற்று அறிஞர் ஆவார்.

புலமை நுட்பமும் ஆராய்ச்சி வல்லமையும் நிறைந்த இச் செந்தமிழ் அறிஞர் கண்டறிந்து காட்டிய கல்வெட்டுச் செய்திகளெல்லாம் புனைந் துரைகள் அல்ல. நம் முன்னோர் உண்மை வரலாறு. தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காக, பண்டாரத்தார் நூல்கள் அனைத்தையும் ஒரு சேரத் தொகுத்து வெளியிடுகிறோம். பல துறை நூல்களையும் பயின்ற இப்பேரறிஞர், தமிழ் இலக்கிய வரலாற்று அறிஞர்களில் மிகச் சிறப்பிடம் பெற்றவர்.இவர் எழுதிய ஊர்ப் பெயர் ஆய்வுகள் இன்றும் நிலைத்து நிற்பன. இவரது நூல்கள் வரலாற்று ஆய்வாளர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர் களுக்கும் ஊற்றுக்கண்ணாய் அமைவன. வரலாறு, கல்வெட்டு ஆகிய ஆய்வுகளில் ஆழ்ந்து ஈடுபட்டுப் பல வரலாற்று உண்மைகளைத் தெளிவு படுத்தியவர்.

பண்டாரத்தார் நூல்களும், கட்டுரைகளும் வட சொற்கள் கலவாமல் பெரிதும் நடைமுறைத் தமிழில் எழுதப்பட்டுள்ளன. தமிழ் மன்னர்கள் வரலாறு - தமிழ்ப் புலவர்கள் வரலாறு - தமிழக ஊர்ப்பெயர் வரலாறு - தமிழ் நூல்கள் உருவான கால வரலாறு ஆகிய இவருடைய ஆராய்ச்சி நூல்கள் அரிய படைப்புகளாகும். தாம் ஆராய்ந்து கண்ட செய்திகளை நடுநிலை நின்று மறுப்பிற்கும் வெறுப்பிற்கும் இடமின்றி, வளம் செறிந்த புலமைத் திறனால், தமிழுக்கும் தமிழர்க்கும் பெரும்பங்காற்றிய இவரின் பங்களிப்பு ஈடுஇணையற்றது. தென்னாட்டு வரலாறுதான் இந்திய வரலாற்றுக்கு அடிப்படை என்று முதன் முதலாகக் குரல் கொடுத்தவர் சதாசிவப் பண்டாரத்தார் அவர்களே.

தமிழரின் மேன்மைக்கு தம் இறுதிமூச்சு அடங்கும் வரை உழைத்த தந்தை பெரியாரின் கொள்கைகளின் பால் பெரிதும் ஈடுபாடு கொண்டு உழைத்தவர் ஆராய்ச்சிப் பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் ஆவார். தமிழ் - தமிழர் மறுமலர்ச்சிக்கு உழைத்த பெருமக்கள் வரிசையில் வைத்து வணங்கத்தக்கவர். இவர் எழுதிய நூல்கள் தமிழர் தம் பெருமைக்கு அடையாளச் சின்னங்கள்.

நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் வெளியீட்டு விழா கடந்த 29.12.2007இல் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் - தமிழர் நலங்கருதி தொலைநோக்குப் பார்வையோடு தமிழ்மண் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. தொடக்கத்தின் முதல் பணியாக தென்னக ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் அவர்களின் நூல்கள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து முதன்முதலாக தமிழ்மண் அறக்கட்டளை வழி வெளியிடுகின்றன. இப்பேரறிஞரின் நூல்கள் தமிழ முன்னோரின் சுவடுகளை அடையாளம் காட்டுவன. அறிஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க இவ்வருந்தமிழ்க் கருவூலத்தை பொற்குவியலாக தமிழ் உலகிற்குத் தந்துள்ளோம். இவர் தம் நூல்கள் உலக அரங்கில் தமிழரின் மேன்மையை தலைநிமிரச் செய்வன.

பண்பாட்டுத் தமிழர்க்கு
நான் விடுக்கும் விண்ணப்பம்; சதாசிவத்துப்
பண்டாரத் தார்க்கும்; ஒரு
மறைமலைக்கும், மணவழகர் தமக்கும், மக்கள்
கொண்டாடும் சோமசுந்
தர பாரதிக்கும், நம் கொள்கை தோன்றக்,
கண்டார்க்க ளிக்கும் வகை
உருவக்கல் நாட்டுவது கடமையாகும்.

எனும் பாவேந்தர் பாரதிதாசன் வரிகளை நெஞ்சில் நிறுத்துங்கள். இப்பேரறிஞர் எழுதிய நூல்களில் சைவசிகாமணிகள் இருவர் என்னும் நூல் மட்டும் எங்கள் கைக்கு கிடைக்கப்பெறா நூல். ஏனைய நூல்களை பொருள்வாரியாகப் பிரித்து வெளியிட்டுயுள்ளோம். தமிழர் இல்லந்தோறும் பாதுகாத்து வைக்கத்தக்கச் செந்தமிழ்ச் செல்வத்தை பிற்காலத் தலைமுறைக்கு வாங்கி வைத்து தமிழர் தடயங்களை கண்போல் காக்க முன்வருவீர்.

ஆராய்ச்சிப் பேரறிஞர்
தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்
ஆய்வு நூல்களுக்கு மதிப்புரை அளித்து மணம் கமழச் செய்த தமிழ்ச் சான்றோர்கள்
பெரும்புலவர் இரா. இளங்குமரனார்
  கோ. விசயவேணுகோபால்
  பி. இராமநாதன்
  முனைவர் அ.ம. சத்தியமூர்த்தி
  க.குழந்தைவேலன்

ஆகிய பெருமக்கள் எம் அருந்தமிழ்ப்பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து பெருமைப்படுத்தியுள்ளனர். இவர்களுக்கு எம் நன்றி என்றும் உரியது.
  நூலாக்கத்திற்குத் துணை நின்றோர்

  _நூல் கொடுத்து உதவியோர்_ பெரும்புலவர் இரா. இளங்குமரனார், முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி

  _நூல் உருவாக்கம்_ _நூல் வடிவமைப்பு - மேலட்டை வடிவமைப்பு_ செல்வி வ.மலர்

  _அச்சுக்கோப்பு_ _முனைவர்_ கி. செயக்குமார், ச.அனுராதா, மு.ந.இராமசுப்ரமணிய ராசா

  _மெய்ப்பு_ க.குழந்தைவேலன், சுப.இராமநாதன், புலவர் மு. இராசவேலு, அரு.அபிராமி

  _உதவி_ அரங்க. குமரேசன், வே. தனசேகரன், ரெ. விசயக்குமார், இல.தருமராசு,

  _எதிர்மம் (Negative)_ பிராசசு இந்தியா (Process India)

  _அச்சு மற்றும் கட்டமைப்பு_ ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்

  இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . .


முதற் பதிப்பின் முகவுரை

சில ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தார் தமிழ் இலக்கியம் வரலாறு ஒன்று சிறந்த முறையில் எழுதவேண்டுமென்று தமிழாராய்ச்சித் துறைத் தலைவர்க்குத் தெரிவித்தார்கள். அந்நாட்களில் அப்பகுதிக்குத் தலைவரா யிருந்த டாக்டர் A. சிதம்பரநாதச் செட்டியார் M. A., Ph. D. அவர்கள் ஆராய்ச்சித் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆசிரியர் ஐவர்க்கும் அதனை அறிவித்து எழுதத் தொடங்கு மாறு கூறிச் சில வரையறைகளும் செய்தார்கள். தொல்காப்பியர் கால முதல் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு முடியவுள்ள இலக்கிய வரலாற்றை முதலில் எழுதவேண்டும் என்பதும், அதனைச் சில பகுதிகளாகப் பிரித்து ஆராய்ச்சித்துறை ஆசிரியர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியை எழுத வேண்டும் என்பதும், அவற்றுள் இன்னார், இன்னார் இன்ன இன்ன பகுதியை எழுதவேண்டும் என்பதும், அப்போது செய்யப்பட்ட வரையறைகளாகும். அதில் எனக்குக் கொடுத்த பகுதி, கடைச்சங்கத்தின் இறுதிக் காலத்திற்குப் பிறகு கி. பி. 600 வரையிலுள்ள இருண்ட கால இலக்கிய வரலாறேயாகும்.

இவ்விருண்டகாலப் பகுதியில் தோன்றிய இலக்கியங்களை உணர்ந்துகோடற்குத் தக்க ஆதாரங்களின்மை அறிஞர் பலரும் அறிந்ததே. எனினும், கடைச் சங்க காலத்திற்குப் பின்னர், தமிழ் நாட்டில் ஏற்பட்ட அன்னியர் ஆட்சியில் வடமொழியில் எழுதப்பெற்ற சில சைன நூல்களும், பாலி மொழியில் இயற்றப்பெற்ற சில பௌத்த நூல்களும், பிராகிருதத்திலும் வடமொழியிலும் வரையப்பெற்ற சில செப்பேடுகளும் இக்கால நிலையை அறிந்து கொள்வதற்குப் பெரிதும் பயன்பட்டன. அன்றியும், கி. பி. ஆறாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட தமிழ் நூல்களிலும், பேராசிரியர் நச்சினார்க் கினியர் முதலான உரையாசிரியர்களின் உரைகளிலும் காணப்படும் குறிப்புக்களும், சில தமிழ் நூல்களின் காலங்களை உணர்தற்குத் துணை புரிந்தன. தமிழ்நாட்டில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுமுதல்தான் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளமையால் அந் நூற்றாண்டிற்கு முற்பட்டுள்ள இருண்டகாலப் பகுதியில் நிலவிய நூலாசிரியர்களின் காலங்களை ஆராய்ந்து காண்பதற்கு அவை பயன் படவில்லை. ஆயினும், கிடைத்த அகச்சான்றுகளையும் புறச்சான்றுகளையும் உறுதுணையாகக் கொண்டு இவ்விலக்கிய வரலாறு எழுதி முடிக்கப்பட்டது.

இந்நூலில் கடைச் சங்கத்தின் இறுதிக் காலமும், சங்கம் அழிந்தமைக்குக் காரணமும், அக்காலத்தில் தமிழ் நாட்டில் நடை பெற்ற அன்னியர்களின் ஆட்சியில் ஏற்பட்ட பல பல மாறுதல்களும், அப்போது அருகித் தோன்றிய சில தமிழ் நூல்களும், அவை தோன்றியமைக்குரிய ஏதுக்களும், அந் நூல்களின் வரலாறுகளும் இயன்றவரையில் விளக்கப் பட்டுள்ளன.

இத்தகைய வரலாற்று நூல்களில் சில இடங்களில் கருத்து வேறுபாடுகள் நிகழ்வதும் எதிர்காலத்தில் கிடைக்கும் ஆதாரங்களால் காலக் குறிப்புக்களுள் சில மாறுபடுவதும் இயல்பேயாம் என்பது அறிஞர்கள் உணர்ந்ததே.

இந் நூலை எழுதுவதற்கு வாய்ப்பளித்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தார்க்கும் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் A. சிதம்பரநாதச் செட்டியார் M.A., Ph.D. அவர்கட்கும் என்றும் நன்றியுடையேன். இஃது அச்சாகும்போது புரூப் திருத்தியுதவிய ஆராய்ச்சித்துறை விரிவுரையாளர் வித்வான் திரு. க. வெள்ளை வாரணர் அவர்களையும் இதுபோன்ற நூல்களை வெளி யிடுவதில் பேரார்வங்காட்டிச் செயலாற்றிக் கொண்டிருக்கும் பல்கலைக் கழக வெளியீடு அலுவலாளர் திரு. J. M. சோமசுந்தரம் பிள்ளை B. A., B. L. அவர்களையும் எஞ்ஞான்றும் மறவேன்.

  அண்ணமாலை நகர்
  4 - 7 - 55

  இங்ஙனம்,

  -T. V. சதாசிவ பண்டாரத்தார்


இரண்டாம் பதிப்பின் முகவுரை

இவ்விலக்கிய வரலாறு 1955 ஆம் ஆண்டில் முதலில் வெளிவந்தது. இதனை யான் எழுத நேர்ந்தமைக்குரிய காரணத்தை முதற் பதிப்பின் முகவுரையில் தெரிவித்துள்ளேன். முதற்பதிப்புப் புத்தகங்கள் செலவாகிவிட்டமையாலும் பல்கலைக் கழக மாணவர்களுக்கு இது பாடமாக வைக்கப் பெற்றிருத்தலாலும் இவ்விரண்டாம் பதிப்பு இப்போது விரைந்து வெளிடப்பட்டுள்ளது.

இதனை இரண்டாம் பதிப்பாக வெளியிட்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தார்க்கும் அன்புடன் புரூப் திருத்தியுதவிய என் அரிய நண்பர் தமிழாராய்ச்சித்துறை விரிவுரையாளர் வித்வான் க. வெள்ளைவாரணர் அவர்கட்கும் எனது நன்றி உரியதாகும்.

  அண்ணமாலை நகர்
  4 - 7 - 55

  இங்ஙனம்,

  -T. V. சதாசிவ பண்டாரத்தார்


தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250- கி. பி. 600)

பாண்டியரது தலைநகராகிய மதுரையம்பதியில் நடை பெற்ற கடைச்சங்கத்தின் இறுதிக்காலத்திற்குப் பின்னரும் சைவ சமய குரவர் களாகிய திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் தோன்றிய காலத்திற்கு முன்னரும் அமைந்த ஒரு காலப் பகுதியே தமிழ் இலக்கிய வரலாற்றில் இருண்ட காலம் என்று கூறப்படும். அது, கி. பி. 250 முதல் கி. பி. 600 வரையில் அமைந்த ஒரு காலப் பகுதியாகும். மதுரையிலிருந்த கடைச் சங்கம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் முதற் பகுதியில் முடிவெய்தியிருத்தல் வேண்டும் என்பது ஆராய்ந்து கண்டதோர் உண்மையாயினும், அதுபற்றி அறிஞர் களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆகவே, அதனை ஈண்டு ஆராய்வதும் இன்றி யமையாததொன்றாம்.

கடைச்சங்கத்தின் இறுதிக்காலம்

கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடையில், பல்லவர் என்னும் ஓர் அரசர் மரபினர் தமிழகத்தின் வடபகுதியைக் கைப்பற்றிக் காஞ்சியைத் தலைநகராகக்கொண்டு, அதனைச் சூழ்ந்த பகுதியையும் வடக்கே கிருஷ்ணை என்ற பேராறு வரையிலுள்ள பகுதியையும் ஆட்சி புரியத் தொடங்கினர். அவர்கள் தமிழ்நாட்டின் வடபகுதியை வென்று கைப்பற்றிய போது சோழ மன்னரோடும் பிற சிற்றரசரோடும் நிகழ்த்திய போர்கள் பலவாதல் வேண்டும். அப்பல்லவரின் தமிழ்நாட்டுப் படையெழுச்சியை யாதல் அவர்கள் தமிழகத்தில் நடத்திய போர்களையாதல் கடைச்சங்கப் புலவர்கள் தாம் இயற்றியுள்ள பாடல்களில் யாண்டும் கூறவில்லை. வட வேந்தரான மௌரியர் தென்னாட்டின்மீது படையெடுத்து வந்த செய்தியையும்1 முடியுடைத் தமிழ் வேந்தர் மூவரும் தமிழ் நாட்டுக் குறுநில மன்னர்களும் ஒருவருக்கொருவர் பகைமை கொண்டு ஆங்காங்கு நிகழ்த்திய போர்களையும் தம் பாடல்களில் குறித்துள்ள கடைச்சங்கப் புலவர்கள், பல்லவர் தமிழ்வேந்தரோடு புரிந்த போர்களுள் ஒன்றையாவது குறிப்பிடாமை ஊன்றி நோக்கற்பாலதொன்றாம். அன்றியும், பல்லவர் என்ற பெயரே சங்கத்துச் சான்றோர் பாடல்களில் காணப்படவில்லை. இவற்றை யெல்லாம் நுணுகியாராயுங்கால், கி. பி. மூன்றாம் நூற்றாண்டினிடையில் பல்லவர் தமிழகத்திற்கு வந்து காஞ்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னர் மதுரைமாநகரில் நிலவிய கடைச் சங்கம் முடிவெய்தியிருத்தல் வேண்டுமென்பது நன்கு வெளியாதல் காண்க.

அன்றியும், கடைச்சங்கத் திறுதிக்காலத்தில் இயற்றப்பெற்ற சிலப்பதிகாரத்தில் இலங்கை வேந்தனாகிய கயவாகு என்பான் ஆசிரியர் இளங்கோவடிகளால் கூறப்பெற்றுள்ளனன். இவ்வடிகளின் தமையனாகிய சேரன் செங்குட்டுவன் என்பவன், கடைச்சங்கப் புலவராகிய பரணரால் பதிற்றுப்பத்தினுள் ஒன்றாகிய ஐந்தாம் பத்தில் பாடப்பெற்றவன். இவன் தன் தலைநகராகிய வஞ்சியில் கட்டுவித்த கண்ணகிதேவியின் கோயிலுக்கு கடவுண்மங்கலம் நிகழ்த்திய நாட்களில் இலங்கையரசனாகிய அக் கயவாகும் அங்கு வந்திருந்தான். அவன் தன் நாட்டிற்குத் திரும்பிச் சென்ற பிறகு சேரன் செங்குட்டுவனைப்போல் பத்தினிதேவியாகிய கண்ணகிக்கு அங்குக் கோயிலொன்று அமைத்து வழிபாடு புரிந்தான். 3இச் செய்திகள் எல்லாம் ஆசிரியர் இளங்கோவடிகளால் சிலப்பதிகாரத்தில் கூறப் பட்டிருத்தல் அறியத்தக்கது. எனவே, கடைச்சங்கத்தின் இறுதிக் காலத்திலிருந்தவன் கடல் சூழ் இலங்கை கயவாகு மன்னன் என்பது நன்கு தெளியப்படும். இலங்கையில் கயவாகு என்ற பெயருடன் இரண்டு அரசர்கள் ஆட்சி புரிந்துள்ளனர் என்பது அந்நாட்டு வரலாற்றாராய்ச்சியாளர் கண்ட முடிபாகும். அவ்விருவருள் முதல் கயவாகு, கி. பி. 171 முதல் கி. பி. 193 வரையில் அரசாண்டவன்.1 இரண்டாம் கயவாகு என்பான், கி. பி. 1137 முதல் கி. பி. 1153 வரையில் ஆட்சிபுரிந்தவன்.2 இவ்விரண்டாங் கயவாகு சோழ இராச்சியத்தில் இரண்டாங் குலோத்துங்க சோழன் அரசாண்ட காலத்தில் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டினிடைப் பகுதியில் இருந்தவனாதலின், இளங்கோவடிகளால் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பெற்வன் முதற் கயவாகுவே யாதல்வேண்டும் என்பது நன்கு துணியப்டும். எனவே, அம் முதற் கயவாகுவின் காலமாகிய கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மதுரைமா நகரில் கடைச்சங்கம் இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். அச் சங்கப்புலவர்கள் பல்லவரையாதல் அன்னோர் தமிழகத்தில் நிகழ்த்திய போர்களையாதல் தம் பாடல்களில் யாண்டுங் கூற வில்லை என்பது முன்னர் விளக்கப்பெற்றது. எனவே, அவர்கள் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து வந்து அதன் வட பகுதியைக் கைப்பற்றிய காலத்தில் மதுரையம்பதியில் கடைச்சங்கம் இல்லை என்பது தெள்ளிது. பல்லவர் தமிழ் நாட்டிற் புகுந்து ஆட்சி புரியத் தொடங்கிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியேயாம் என்பது வரலாற்றாராய்ச்சியில் வல்ல அறிஞர்களது கருத்து.3 ஆகவே, மூன்றாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் மதுரையில் கடைச்சங்கம் இல்லை என்றும் அதற்கு முன்னரே அஃது அழிந்திருத்தல் வேண்டும் என்றும் ஐயமின்றிக் கூறலாம். எனவே, கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் முதற் பகுதியில் அச் சங்கம் முடிவெய்தியிருத்தல் வேண்டும் என்பது நன்கு வலியுறுதல் காண்க.

இனி, கடைச்சங்கத்தின் இறுதிக்காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டாகும் என்று சில ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அன்னோர் கொள்கை பொருந்துமா என்பது ஈண்டு ஆராய்தற் குரியதாகும். அவர்கள் தாம் கண்ட முடிபிற்கு இரண்டு ஆதாரங்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். அவற்றுள் ஒன்று கங்கைக்கரையிலுள்ள பாடலிபுரம் என்னும் மாநகர் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் வெள்ளப்பெருக்கால் அழிவுற்ற செய்தியைக் கடைச்சங்கப் புலவருள் ஒருவராகிய மாமூலனார் என்பார்,

பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை
நீர்முதல் கரந்த நிதியங் கொல்லோ (அகம்.265)

என்ற அகநானூற்றுப் பாடலில் குறிப்பிட்டுள்ளனர் என்பது; பிறிதொன்று, சமுத்திரகுப்தன் என்பான் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் 9 தமிழ் நாட்டின் மீது படையெடுத்த நிகழ்ச்சியை அப்புலவர் பெருமானே,

முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர்
தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு
விண்ணுற வோங்கிய பனியிருங் குன்றத்
தொண்கதிர் திகிரி யுருளிய குறைத்த
அறையிறந் தவரொ சென்றனர் (அகம்.281)

என்ற மற்றோர் அகநானூற்றுப் பாடலில் கூறியுள்ளனர் என்பது. கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த இவ்விரு நிகழ்ச்சிகளையும் தம் பாடல்களில் குறித்துள்ள மாமூலனார் நிலவிய கடைச்சங்கத்தின் இறுதிக்காலமும் அவ்வைந்தாம் நூற்றாண்டாகவே இருத்தல் வேண்டும் என்பது அன்னோர், கொள்ளையாகும்.

அவர்கள் தம்முடிபிற்கு ஏதுவாக எடுத்துக்காட்டிய அகநானூற்றுப் பாடற்பகுதிகள் இரண்டனுள், பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்- சீர்மிகு பாடலிக்குழீஇக், கங்கைநீர் முதல் கரந்த நிதியங் கொல்லோ என்ற பகுதியின் பொருள்,பல்வகைப் புகழ் நிறைந்த போர் வெல்லும் நந்தர் என்பார், சிறப்புமிகுந்த பாடலிபுரத்தில் திரண்டிருந்து கங்கையாற்றின் நீரின் கீழ்மறைத்துவைத்த நிதியமோ என்பதாம். ஆகவே, அது பாடலிபுரத்தில் ஆட்சிபுரிந்த நந்தர் என்பார் கங்கைப் பேராற்றின் கீழே பெருநிதியம் ஒளித்துவைத்திருந்த செய்தியை உணர்த்துகின்றதேயன்றி அவர்கள் கருதுவதுபோல் நந்தரது பாடலிபுரம் கங்கை வெள்ளத்தால் அழிந்ததை உணர்த்தவில்லை என்பது நன்கு தெளிப்படும். எனவே, மாமூலனார் பாடலிபுரம் ஆற்றுப் பெருக்கால் அழிந்த நிகழ்ச்சியைக் கூறவில்லை என்பது தேற்றம். அம் மாநகரில் வீற்றிருந்தரசாண்ட நந்தர், மோரியர்க்கு முற்பட்டவராவர். அவர்கள் ஆட்சிக்காலம் கி. மு. 413-க்கும் கி. பி. 322க்கும் இடைப் பட்டதென்பது ஆராய்ச்சியாளார்களது கருத்து. ஆகவே, கடைச் சங்ககாலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டெனக் கோடற்குக் காட்டப்பெற்ற ஆதாரங்களுள் ஒன்று வலியற்றொழிந்தமை காண்க.

இனி, முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர் - தென்றிசை மாதிர முன்னிய வரவு என்று மாமூலனார் மற்றொரு அகநானூற்றுப் பாடலில் கூறியிருப்பது, வடுகரைத் துணையாகக் கொண்டு மோரியர் தென்னாட்டின் மேல் படையெடுத்த செய்தியைக் குறிப்பிடுகின்றதேயன்றி அவ்வாராய்ச்சி யாளர் கருதுவதுபோல் சமுத்திரகுப்தன்2 படையெழுச்சியை உணர்த்த வில்லை என்பது தேற்றம். மோரியர் படையெழுச்சியைக் குப்தர் படை யெழுச்சி என்று அன்னோர் தவறாகக் கருதி விட்டமையால் கடைச்சங்க காலம் பற்றி அத்தகைய பிழைபாடு நேர்ந்தது எனலாம். குப்தர் காலத்திற்கு ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவர் மோரியர் என்பது வரலாற்றாராய்ச்சியாளர் யாவரும் அறிந்ததொன்றாம். குப்தர் என்னும் பெயரே கடைச்சங்க நூல்களில் யாண்டுங் காணப்படாமை குறிப்பிடத்தக்கது. ஆகவே, கடைச்சங்க காலத்திற்கு அவர்கள் காட்டியுள்ள பிறிதோர் ஆதாரமும் தவறாகப்போயினமை அறியற்பாலது. எனவே, கடைச்சங்ககாலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டெனக் கூறுவது எவ்வாற்றானும் பொருந்தாமை காண்க.

இனி, கடைச்சங்க காலம் கி. பி. எட்டாம் நூற்றாண் டென்பர் ஒரு சிலர்.2 அன்னோர் தம் கொள்கைக்கு ஆதாரமாக எடுத்துக்காட்டுவன, சிலப்பதிகாரத்தில் இரண்டு இடங்களில் காணப்படும் காலக்குறிப்புக்களும் அவற்றுள், ஒன்றிற்கு அடியார்க்கு நல்லார் எழுதியுள்ள உரைக்குறிப்புமே யாம். அவை,

வான்கண் விழியா வைகறை யாமத்து
மீன்றிகழ் விசும்பின் வெண்மதி நீங்கக்
காரிரு ணின்ற கடைநாட் கங்குல் (சிலப். நாடுகாண்.1-3)

ஆடித் திங்கட் பேரிருட் பக்கத்
தழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று
வெள்ளி வாரத் தொள்ளெரி யுண்ண
வுரைசான் மதுரையோ டரசுகே டுறுமெனு
முரையு முண்டே நிரைதொடி யோயே (சிலப். கட்டுரை.133-7)

அந்தச் சித்திரைத் திங்கட் புகுதிநாள்-சோதி; திதி-மூன்றாம் பக்கம், வாரம்-ஞாயிறு. இத்திங்கள் இருபத்தெட்டிற் சித்திரையும் பூரணையுங் கூடிய சனிவாரத்திற் கொடியேற்றி நாலேழ் நாளினும் என்பதனான் இருபத்தெட்டு நாளும் விழா நடந்து கொடியிறக்கி வைகாசி இருபத்தெட்டினிற் பூருவ பக்கத்தின் பதின்மூன்றாம் பக்கமும் சோமவாரமும் பெற்ற அனுடத்தில் நாட்கடலாடி ஊடுதலின் வைகாசி இருபத் தொன்பதிற் செவ்வாய்க் கிழமையும் கேட்டையும் பெற்ற நாச யோகத்து நிறைமதிப் பதினாலாம் பக்கத்து வைகறைப் பொழுதினிடத்து நிலவுபட்ட அந்தரத்திருளிலே யென்ற வாறு, அது பூருவப்பக்கமென்பது தோன்றக் காரிருணின்ற கடை நாட்கங்கு லென்றார் என்பனவாம். இவற்றில் காணப்படும் சோதிடக்குறிப்புக்களைக் கணித்துப் பார்த்த காலஞ்சென்ற திரு. எ. டி. சாமிகண்ணுப் பிள்ளை அவர்கள் மதுரைமாநகர் எரியுண்டது கி. பி. 756-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 23-ஆம் நாளாகும் என்றும், ஆகவே, கடைச்சங்க காலமும் அதுவேயாதல் வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவ்வறிஞரே அடியார்க்கு நல்லார் உரையில் காணப்படும் சோதிடக் குறிப்புக்கள் சிறிது தவறுடையன என்பர். எனவே, தவறாகவுள்ள குறிப்புக்களின் துணைகொண்டு கணிக்கப் பெறும் காலமும் தவறுடையதேயாம் என்பது திண்ணம். அவ்வுரைக் குறிப்புகளைக் கொண்டு கடைச்சங்க காலத்தை ஆராய்ந்த திரு.கே.ஜி. சங்கரையர் என்ற அறிஞர், கி. பி. முதல் ஆண்டு முதலாக ஆயிரத்து நானூறாம் ஆண்டு வரையில் ஓராண்டாவது அவற்றோடு முழுவதும் பொருந்திவரவில்லை என்றும், ஆகவே அடியார்க்கு நல்லார் உரையிற் காணப்படும் சோதிடக் குறிப்புக்கள் தவறுடையனவேயாம் என்றும், அவற்றின் துணைகொண்டு திரு. எல். டி. சாமிக்கண்ணுப் பிள்ளை அவர்கள் ஆராய்ந்து கண்ட முடிவு ஒப்புக்கொள்ளத் தக்கதன்று என்றும் மிக விரிவாக ஆராய்ந்தெழுதியிருப்பது2 ஈண்டுக் குறிப்பிடுதற்குரியதாகும்.

இனி, சைவ சமய குரவருள் ஒருவராகிய அப்பரடிகள் தம்முடைய பாண்டி நாட்டுத் திருப்புத்தூர்ப் பதிகத்தில் நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக் கருளினோன் காண்1 என்று கடைச்சங்க கால நிகழ்ச்சி யொன்றைக் கூறியுள்ளனர். அன்றியும், அவ்வடிகள் காலத்தில் நிலவிய வரும் சமயகுரவருள் முதல்வருமாகிய திருஞானசம்பந்த சுவாமிகள் தம் திருப்பாசுரத்தில் அந்தண்மதுரைத் தொகை யாக்கினானும் . . . . . . . பெற்றொன்றுயர்த்த பெருமான் என்று மதுரையம்பதியிலிருந்த கடைச் சங்கத்தைக் குறித்துள்ளார். இப்பெரியார் இருவரும் கி. பி. எழாம் நூற்றாண்டின் முதல் இடைப்பகுதிகளில் நம் தமிழகத்தில் விளங்கியர்கள் என்பது வரலாற்றாராய்ச்சியாளர்களால் ஐயமின்றித் துணியப் பட்ட செய்தியாகும்.3 எனவே, கடைச்சங்க காலம் கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாதல் வேண்டும். ஆகவே, அச்சங்க காலம் கி. பி. எட்டாம் நூற்றாண்டென்பார் கூற்றுச் சிறிதும் பொருந்தாமை காண்க.

இதுகாறும் ஆராய்ந்தவாற்றால் கடைச்சங்க காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டெனவும், கி. பி. எட்டாம் நூற்றாண் டெனவும் கூறுவோர் கொள்கைகள் தக்க ஆதாரங்களின்றித் துணியப்பெற்றவை என்பது நன்கு தெளியப்படும். ஆகவே, முதலில் ஆராய்ந்து கண்டவாறு, மதுரைமா நகரில் நிலை பெற்றிருந்த கடைச்சங்கம், கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் முதற் பகுதியில்தான் அழிவெய்தியிருத்தல் வேண்டும் என்பது பல்வகையாலும் உறுதிபெற்று நிற்றல் உணரற்பாலதாம்.

கடைச்சங்க வீழ்ச்சிக்குக் காரணம்

மதுரை மாநகரில் நடைபெற்றுவந்த கடைச்சங்கம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் முதற் பகுதியில் அழிவுற்றமைக்குக் காரணம் யாது என்பது ஈண்டு ஆராயற்பாலதாகும். பாண்டி நாட்டில் பெரும் பஞ்சம் ஒன்று தோன்றிப் பன்னிருயாண்டு மக்களைத் துன்புறுத்தியது எனவும், அக்கொடிய காலத்தில் பாண்டி வேந்தன் சங்கப் புலவர்களைப் பாதுகாத்தற்கிய லாமையால் சேரநாடு, சோழநாடு, நடுநாடு, தொண்டைநாடு ஆகிய புறநாடுகளுக்கு அன்னோரை யனுப்பி விட்டனன் எனவும் அதன் பின்னர் மதுரையம்பதியில் தமிழ்ச் சங்கமே நடை பெறாமல் முடிவெய்தியது எனவும் செவிவழிச் செய்திகளில் நம்பிக்கையுடையோர் சிலர் கூறுகின்றனர். பிறிதொருசாரார், தமிழ்ப்புலவர்கள் சங்கத்தில் அரங்கேற்றுவதற்குக் கொண்டுவரும் நூல்களை அவர்கள் படித்து விளக்கும் போது, சங்கப் புலவர்கள் கீழறை யிலுள்ள சிலரைக் கொண்டுஅவற்றை எழுதுவித்து, பிறகு அந்நூல்கள் சங்கத்திலும் உள்ளன என்று கூறி அவற்றை எடுத்துக்காட்டி, அன்னோரை அவமதித்து அனுப்பிவந்தனர் என்றும், அவ்வடாத செயலை ஒழிக்க வேண்டி இடைக் காடனாரும் ஆசிரியர் திருவள்ளுவனாரும் முறையே ஊசி முறியும் திருக்குறளும் இயற்றிக்கொண்டு தமிழ்ச் சங்கத் திற்குச்சென்றனர் என்றும், அப்போது ஊசிமுறிப் பாடல்களைக் கீழறையிலிருந்தோர் தம் செவியுணர்வு கொண்டு எழுத முடியாமையால் சங்கப் புலவர்கள் தம் செயலில் தோல்வி யுற்றனர் என்றும், பிறகு திருக்குறள் அரங்கேற்றப் பெற்றபோது அந்நூலாசிரியரோடொப்பச் சங்கப் புலவர்கள் வீற்றிருக்க இயலாமையால் சங்கம் அழிவுற்றதென்றும், எனவே திருக்குறள் அரங்கேற்றமே கடைச் சங்கம் வீழ்ச்சி எய்தியமைக்குக் காரணமாகும் என்றும் கூறுகின்றனர். அன்னோர் கொள்கைகள் வலிவுடையனவா என்பதுஆராயற்பாலதாகும்.

கடைச்சங்க நாளில் பாண்டி நாட்டில் பஞ்சமொன்று தோன்றியது என்பதும் அக்காலத்தில் சங்கப் புலவர்கள் வேறு நாடுகளுக்குச் சென்று உயிர்வாழ நேர்ந்தது என்பதும் இறையனார் அகப்பொருளுரையால் நன்கறியக் கிடக்கின்றன. அவ்வுரை கி. பி. எட்டாம் நூற்றாண்டிற்குப் பின்னரே எழுதப் பெற்றதாயினும், அதில் கூறப்பட்டுள்ள கடைச்சங்க காலத்து வற்கட நிகழ்ச்சியை மறுத்துரைத்தற்கு ஏது சிறிதுமில்லை எனலாம். அன்றியும், அந்நிகழ்ச்சி, பன்னீ ராண்டு பாண்டி நன்னாடு - மன்னுயிர் மடிய மழைவள மிழந்து என்று மணிமேகலையிலும் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே, கடைச்சங்க நாளில் பாண்டி நாட்டில் ஒரு வற்கடம் தோன்றி அந்நாட்டு மக்களைப் பெரிதும் துன்புறுத்தியிருத்தல் வேண்டும் என்பது ஐயமின்றித் தெளியப்படும். அந்நாட்களில் சங்கப் புலவருள் பலர் தமிழகத்தில் பற்பல ஊர்கட்குச் சென்று, ஆங்காங்கு நிலவிய வள்ளல்களின் ஆதரவில் தங்கியிருந்திருத்தலும் இயல்பேயாகும். அக்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த பெருங் கொடைவள்ளல்களையும் அரசர்களையும் புலவர் பெருமக்கள் நன்கறிந்திருந்தனர் என்பதற்கும் அவர்கள் புலமைத்திறத்தையும் பெருமையையும் அச்செல்வர்கள் தெள்ளிதின் உணர்ந்து போற்றியுள்ளனர் என்பதற்கும் பத்துப்பாட்டு, புறநானூறு, பதிற்றுப்பத்து முதலான கடைச்சங்க நூல்கள் இன்றும் சான்றாக நிற்றல் காணலாம். எனவே, கடைச்சங்கப் புலவர்கள் வற்கடம் நிகழ்ந்த ஞான்று தமிழகத்தில் யாண்டும் ஆதரவுபெற்றுச் செவ்விதின் வாழ்க்கை நடத்தியமையில் சிறிதும் ஐயமில்லை. அவ்வற்கடம் நீங்கிப் பாண்டிநாடு செழிப்பெய்திய பின்னர், அந்நாட்டரசன் விரும்பியவாறு சங்கப் புலவர்கள் மதுரையம்பதிக்குத் திரும்பிச் சென்று விட்டமை, அவ்வகப் பொருளுரையாலேயே உணரக் கிடக்கின்றது. வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த சங்கப் புலவருள் சிலர் இறந்துபோயிருத்தலும் கூடும். எனினும், எஞ்சி யிருந்த புலவர்கள் பாண்டிவேந்தன் அழைப்பிற்கிணங்கி மதுரைக்குச் சென்று சங்கத்தில் வீற்றிருந்து தமிழாராய்ச்சி செய்திருத்தல் வேண்டும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆகவே, வற்கடமொன்றால் கடைச்சங்கம் முடிவெய்தியது என்று கூறுவது ஏற்புடைத்தன்று.

கடைச்சங்கப் புலவர்கள் திருக்குறளை நன்கு பயின்றவர்கள் என்பதை, அவர்கள் அந்நூற் சொற்பொருள்களைத் தாம் இயற்றிய செய்யுட்களில் ஆங்காங்கு அமைத்துப் பாடியிருத்தலால் இனிதுணரலாம். இவ் வுண்மையைச் சங்க நூல்களைப் பயின்றோர் யாவரும் அறிவரெனினும், எடுத்துக் காட்டாகச் சிலவற்றை ஈண்டுக் குறிப்பிடுதல் பொருத்த முடையதேயாம்.

திருக்குறளில் நட்பாராய்தல் என்னும் அதிகாரத்திலுள்ள நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் - வீடில்லை நட்பாள் பவர்க்கு1 என்ற குறள் வெண்பாவைக் கடைச்சங்கப் புலவருள் ஒருவராகிய கபிலர் பெரியோர் நாடி நட்பினல்லது - நட்டு நாடார்தம் மொட்டியோர் திறத்தே (நற்றிணை, பா. 32) என்ற பாடலில் எடுத்தாண்டிருத்தல் காண்க. திருக்குறளில் கண்ணோட்டம் என்னும் அதிகாரத்திலிலுள்ள பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க - நாகரிகம் வேண்டு பவர்2 என்ற குறள் வெண்பாவின் சொல்லையும் பொருளையும் கடைச்சங்கப் புலவர் ஒருவர், முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின் - நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்3 என்று நற்றிணைப் பாடலொன்றில் அமைத்துப் பாடியிருத்தல் அறியத்தக்கதாகும். திருக்குறளில் செய்ந்நன்றியறிதல் என்னும் அதிகாரத்திலுள்ள எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை - செய்ந்நன்றி கொன்ற மகற்கு4 என்ற குறள் வெண்பாவின் பொருளைக் கடைச்சங்கப் புலவராகிய ஆலத்தூர்கிழார்,

ஆன்முலை யறுத்த அறனி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென
நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன்
செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென
அறம்பா டிற்றே யாயிழை கணவ5

என்றும் புறநானூற்றுப் பாடலில் தெளிவாக விளக்கியிருப்பதோடு ஆசிரியர் திருவள்ளுவனாரது திருக்குறளை அறநூல் என்று பாராட்டியிருப்பதும் உணரற்பாலதாம். நல்லிசைப் புலமை மெல்லியல் நங்கையாராகிய காக்கை பாடினியார் நச்செள்ளையார் தாம் பாடியுள்ள நரம்பெழுந் துலறிய நிரம்பா மென்றோள்1 என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடலின் இறுதியிலுள்ள ஈன்ற ஞான்றினும் பெரிதுவந்தனளே என்ற சொற்றொடரை, ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும்2 என்னும் குறள் வெண்பாவைக் கருத்திற் கொண்டு அமைத்திருத்தல் அறிந்து கோடற்குரியது. இதுகாறும் விளக்கியவாற்றால் கடைச்சங்கப் புலவர்கள் திருக்குறளை நன்கு பயின்றவர்கள் என்பது தெள்ளிதிற் புலப்படுதல் காண்க. ஆகவே, கடைச்சங்கத்தின் இறுதிக்காலத் திற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே திருக்குறள் என்னும் ஒப்புயர் வற்ற நூல் அதன் ஆசிரியரால் இயற்றப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். எனவே, அந்நூல் அரங்கேற்றப்பட்ட நாளில் கடைச்சங்கம் அழிவுற்றது என்றுரைப்பது எவ்வாற்றானும் பொருந்தாது. திருக்குறளுக்கு மதிப்புரையாகவுள்ள திருவள்ளுவ மாலையில் காணப்படும் வெண்பாக்கள் எல்லாம் அந்நூல் அரங்கேற்றப்பட்டபோது சங்கப் புலவர்களால் இயற்றப் பெற்றவையல்ல. அவற்றைப் பாடிய புலவர்களுள் பலருடைய பெயர்கள் சங்கத் தொகை நூல்களில் காணப்படாமை அறியத்தக்கது. அப்பாடல்களுள் பல, சங்கப் புலவர்களின் வாக்கு என்பதற்கேற்றவாறு அத்துணைச் சிறப்பும், பொருளமைதியும் உடையனவாகக் காணப்படவில்லை. எனவே, அப்பாடல் களின் துணை கொண்டு திருக்குறள் கடைச்சங்கத்தில் அதன் இறுதிக் காலத்தில் அரங்கேற்றப்பட்டதென்று கூறுவதற்குச் சிறிதும் இடமில்லை. ஆகவே, அந்நூலின் அரங்கேற்றத்தால் கடைச் சங்கம் அழிந்தொழிந்தது என்பதும் ஆராய்ச்சியறிவுடையோர் எவரும் ஒப்புக்கொள்ளத்தக்கதன்று.

ஆனால், மதுரையில் பாண்டி வேந்தர்களின் பேராதர வினால் நிலை பெற்றுத் தமிழாராய்ச்சி செய்துவந்த கடைச்சங்கம் அழிவுற்றமைக்குத்தக்க காரணம் இல்லாமலில்லை. ஒரு நாட்டின்மேல் படையெடுத்துவந்து அதனைத் தம்மடிப் படுத்தும் அயல்நாட்டார், வென்ற நாட்டின் மொழி, கலை, நாகரிகம் என்பவற்றை இயன்றவரையில் அழித்தும் சிதைத்தும் விடுவதையே தம் முதற்கடமையாக மேற்கொள்வது வழக்கம் என்பது வரலாற்றாராய்ச்சியாளர் யாவரும் அறிந்ததோர் உண்மையாகும். அதனை உலகிலுள்ள பல நாடுகளின் வரலாறுகளும் உறுதிப்படுத்தி நிற்றல் உணரத்தக்கது. எனவே, ஏதிலார் படையெழுச்சியொன்றால் பாண்டி நாட்டில் அத்தகைய நிலையொன்று ஏற்பட்டு, அதனால் மதுரையிலிருந்த கடைச்சங்கமும் அழிவெய்தியிருத்தல் வேண்டும் என்பது தேற்றம். அதற்கேற்ப, பிறமொழியாளரான களப்பிரர் என்பார், பாண்டி நாட்டின்மேல் படை யெடுத்துவந்து, அதனைத் தொன்றுதொட்டு ஆட்சிபுரிந்துவந்த தமிழ் வேந்தர்களான பாண்டியரைப் போரில் வென்று அவர்கள் நாட்டையும் கைப்பற்றி அரசாண்டனர் என்று வேள்விக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன.1 அன்னோர் ஆட்சியில், பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி முன் செய்திருந்த அறச்செயல் அழிக்கப்பட்டுப்போயிற்று என்றும் அச் செப்பேடுகள் அறிவிக் கின்றன. ஆகவே, களப்பிரர் படையெழுச்சியும் ஆட்சியும் பாண்டி நாட்டில் எத்துணையோ மாறுதலையும் புரட்சியையும் உண்டுபண்ணித் தமிழ்மொழி, தமிழ்க்கலை, தமிழர் நாகரிகம் ஆகியவற்றை வீழ்ச்சியுறச் செய்துவிட்டன என்பது அச் செப்பேடுகளால் நன்கறியக் கிடக்கின்றது. எனவே, கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த களப்பிரர் படையெழுச்சியினால்தான் மதுரைமாநகரில் நிலவிய கடைச் சங்கம் அழிவுற்றது என்பது ஐயமின்றித் துணியப்படும்.

கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்தின் அரசாங்க நிலையில் ஏற்பட்ட மாறுதல்கள்

கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழகமானது அதற்கு முன்னர் என்றும் கண்டறியாத துன்ப நிலையை எய்துவதாயிற்று. இப் பெருநிலப்பரப்பானது முதல் முதல் பிற மொழியாளராகிய அயலாரது ஆட்சிக்குள்ளாகித் தன் சீருஞ் சிறப்பும் இழந்த காலம் இதுவே எனலாம். இக்காலப் பகுதியில் தமிழ்
நாடு ஏதிலாரது புதிய அரசியல்முறைக்கு உட்பட்டதோடு தனக்குரிய கலை நாகரிகங்களையும் பிற சிறந்த பண்புகளையும் இழந்து விடும்படி நேர்ந்தமையும் குறிப்பிடத்தக்கதாம். தமிழகத்தின் தென்பகுதியாகிய பாண்டிநாடு கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாண்டியர் ஆட்சியை இழந்து களப்பிரர் ஆளுகைக்கு உட்பட்ட செய்தி முன்னர் விளக்கப்பட்டது. அங்ஙனமே, தமிழகத்தின் வடபகுதியாகிய தொண்டை நாடும் நடு நாடும் கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடையில் பல்லவர் ஆட்சிக்குள்ளாயின.1 நடு நாட்டிற்கும் பாண்டி நாட்டிற்கும் இடையிலுள்ள சோழ நாடும் களப்பிரர் ஆளுகைக்கு உட்பட்டதாயிற்று. ஆகவே, இக்காலப் பகுதியில் தமிழ்நாடு முழுவதும் வேற்றரசர் இருவரது ஆட்சிக்குள்ளாகி விட்டமை தெள்ளிது. அவ்விருவரும் தமிழ்மொழியைத் தம் தாய் மொழியாகக் கொண்டவரல்லர். அவர்களது ஆட்சிக் காலத்தில் பிராகிருதமே அரசாங்க மொழியாக அமைந்திருந்தது. களப்பிரர் ஆட்சியில் பாலி மொழியும் அரசாங்கத்தின் பேராதரவிற்குரிய தாயிருந்தமை அறியத்தக்கது. ஆகவே, கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட ஏதிலார் ஆட்சி, தமிழ் மக்களின் வீழ்ச்சிக்கு எத்துணையோ வகைகளில் அடிகோலியது எனலாம். எனவே, கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதி முதல் கி. பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில் நடை பெற்ற அயலார் ஆட்சியில் தமிழ்மொழி போற்றுவாரற்றுத் தன் வளர்ச்சியும் பெருமையும் இழந்து தாழ்ந்த நிலையை எய்தியிருத்மை உணரற்பாலதாகும்.

அயலார் ஆட்சியில் பிற மொழிகளும் புறச்சமயங்களும்
பெருமை யெய்தி வளர்ச்சியுற்றமை

கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தமிழகத்தின் வடபகுதிகளாகிய தொண்டை நாட்டையும் நடுநாட்டையும் பல்லவர்கள் கைப்பற்றி அரசாண்டு வந்தமை முன்னர் விளக்கப்பட்டது. அவர்களுடைய செப்பேடுகள் முதற்காலப் பகுதியில் பிராகிருத மொழியிலும்,2 இடைக்காலப் பகுதியில் வடமொழியிலும், கி. பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து தொடங்கும் பிற்காலப் பகுதியில் வடமொழி தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வரையப் பெற்றுள்ளன. ஆகவே, முதற்கால இடைக்காலப் பகுதிகளில் அவ்வேந்தர்கள் பிராகிருதத்தையே தம் அரசாங்க மொழியாகக் கொண்டு வடமொழியைப் பெரிதும் ஆதரித்து அம் மொழிவளர்ச்சியில் தம் கருத்தைச் செலுத்திவந்தனர் எனலாம். அன்னோர் தம் தலைநகராகிய காஞ்சியில் வடமொழியிலுள்ள கலைநூல்களையும் பல்வகைப் பட்ட சமய நூல்களையும் வடபுல மக்களும் வந்து கற்குமாறு ஒரு பெருங்கல்லூரி நிறுவி அதனை நன்கு புரந்துவந்தமை அறியத் தக்கது. காஞ்சிமாநகரில் அரசாங்க ஆதரவில் நிலை பெற்றிருந்த அவ்வடமொழிக் கல்லூரி அந்நாட்களில் ஒரு பெரிய பல்கலைகழகம் போல் விளங்கிக்கொண்டிருந்தது. அங்கு மாணவர்கள் எல்லோரும் உண்டியும் உறையுளும் இலவசமாகப் பெற்று எத்தகைய கவலையுமின்றி வட மொழியில் தாம் விரும்பிய கலை நூல்களைப் பயின்றுவந்தனர். அக்கல்லூரியின் பெருமை வடநாடு முழுமையும் பரவியிருந்தது என்று ஐய மின்றிக் கூறலாம். கடம்பர் குல முதல்வனும் வேதங்களை நன்கு பயின்றவனும் கி. பி. 345 முதல் கி. பி. 370 வரையில் இருந்தவனு மாகிய மயூரசர்மன் என்பான், காஞ்சியிலிருந்த வடமொழிக் கல்லூரியில் படிக்கும் பொருட்டுத் தன் ஆசிரியராகிய வீரசர்மரோடு சென்றான் என்று தாளகுண்டாவிலுள்ள கல்வெட்டொன்று1 கூறுகின்றது. பௌத்தர்களால் அமைக்கப் பெற்ற நாலந்தாப் பல்கலைக் கழகத்தில் பேராசியராக விளங்கிய தர்மபாலர் என்பவர் காஞ்சியிலிருந்த திக்நாகருடைய மாணவர் ஆவர். இவர், காஞ்சியிலிருந்த வடமொழிக் கல்லூரியில் முதலில் கல்வி பயின்று, பிறகு அப்பல்கலைக் கழகத்திற்குச் சென்று சில ஆண்டுகள் வரையில் அங்குப் படித்து, பின்னர் அக் கழகத்திற்கே தலைவராயினர் என்பது உணரற்பால தொன்றாம்.2 தொண்டை மண்டலத்தில் சோழ சிங்கபுரத்திற்கு அண்மையிலுள்ள கடிகாசலம், புதுச்சேரியைச் சார்ந்த வாகூர் ஆகிய ஊர்களில் வட மொழிக்கல்லூரிகள் இருந்தன என்பது நந்திவர்மப் பல்லவ மல்லனது திருவல்லத்துக் கல்வெட்டினாலும்1 நிருபதுங்க வர்மனுடய பாகூர்ச் செப்பேடுகளாலும் நன்கறியப்படுகின்றது. அக்கல்லூரிகள், வடமொழி வளர்ச்சி கருதி நான்கு ஐந்தாம் நூற்றாண்டுகளிலேயே இடைக் காலப் பல்லவ மன்னர்களால் அமைக்கபெற்றிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். அவற்றில் வடமொழியிலுள்ள பல கலைகளும் சிறந்த ஆசிரியர் களால் மாணவர்கட்குக் கற்பிக்கப்பட்டு வந்தமையோடு அன்னோர்க்கு உணவும் உடையும் உறையுளும் பிறவும் இலவசமாகக் கொடுக்கப் பெற்றுவந்தமையுங் குறிப்பிடத்தக்கதாகும். வாகூர்க் கல்லூரியில் வடமொழியிலுள்ள பதினான்கு வித்தைகள் கற்பிக்கப்பட்டு வந்தன என்பதும் அக்கலைக்கூடத்தின் ஆண்டுச் செலவிற்காக அந்நாட்டில் மூன்றூர்கள் இறையிலியாக வழங்கப்பட்டுள்ளன என்பதும் பாகூர்ச் செப்பேடுகளால் தெள்ளிதிற் புலப்படுகின்றன.2 பல நூற்றாண்டுகள் தமிழ்ச் சங்கம் நிலை பெற்றிருந்ததும் பாண்டி வேந்தர்களின் தலைநகராக விளங்கியது மாகிய மதுரையம்பதியைச் சிறிதும் அறிந்துகொள்ளாத வட நாட்டு மக்கள், காஞ்சிமா நகரை மாத்திரம் நன்கு அறிந்துள்ளமைக்கும் அதனைப் பரத கண்டத்திலுள்ள ஏழு புண்ணிய நகரங்களுள்3 ஒன்றாக ஏற்றுக்கொண்டு பாராட்டி யுள்ளமைக்கும் காரணம், அந்நகரில் பல்லவ அரசர்கள் அமைத் திருந்த வடமொழிக் கல்லூரியின் பெருமையும் சிறப்பும் அக்காலத்தில் வடபுலம் முழுவதும் பரவியிருந்தமையேயாகும்.4 வடமொழிப் புலவராகிய காளிதாசர் என்பார் நகரங்களுள் சிறந்தது காஞ்சி என்று கூறியிருப்பதும் முற்காலத்தில் அந்நகரில் நடைபெற்றுவந்த வடமொழிக் கல்லூரியின் சிறப்புப் பற்றியே யாம் என்பது ஈண்டுணரற்பாலது. வைதிகர், சைவர், வைணவர், சமணர், பௌத்தர் ஆகிய பல்வகைச் சமயத்தினரும் காஞ்சிமா நகரிலிருந்த வடமொழிக் கல்லூரியில் தத்தம் சமய நூல் களையும் அளவை நூல்களையும் பிற வடமொழி நூல்களையும் நன்கு பயின்று சமயவாதம் புரிவதில் பேராற்றலுடையவர்களாய் விளங்கிவந்தமையால் கி. பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிலவிய சைவ சமயகுரவராகிய திருநாவுக்கரசு அடிகள் கல்வியிற் கரையிலாத காஞ்சிமாநகர்1 என்று தம் கச்சித் திருமேற்றளிப் பதிகத்தில் குறிப்பிடுவாராயினர். இரண்டாம் சிம்மவர்மன் என்னும் பல்லவ மன்னன் காஞ்சியிலிருந்து அரசாண்டுகொண்டிருந்த காலத்தில் அவனது ஆட்சியின் இருபத்திரண்டாம் ஆண்டாகிய கி. பி. 458-ல், திருப்பாதிரிப் புலியூர் என்று இக்காலத்தில் வழங்கிவரும் பாடலிபுத்திரத்தி லிருந்த ஓர் அமண்பள்ளியில் லோகவிபாகம் என்ற திகம்பர சைன நூல் படி எடுக்கப்பெற்றது என்னும் செய்தி அந்நூலில் காணப்படுகின்றது.2 எனவே, அந்நூலின் ஆசிரியர் அவ் வாண்டிற்கு முன்னரே தம் நூலை எழுதி முடித்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் பிராகிருதத்திலும் வடமொழியிலும் பெரும்புலமை எய்தியிருந்த சிம்மசூரி ரிஷி, சர்வநந்தி என்ற இரண்டு அறிஞர்கள் அவ்வமண் பள்ளியில் தங்கி அவ்விரு மொழிகளையும் பலர்க்கும் கற்பித்து வளர்த்துவந்தமை அறியத்தக்கது.3 கி. பி. ஆறாம் நூற்றாண்டில் காஞ்சியிலிருந்து ஆட்சிபுரிந்து கொண்டிருந்த சிம்ம விஷ்ணு என்ற பல்லவ அரசனுடைய அவைக்களப் புலவராக விளங்கியவர் பாரவி என்னும் வடமொழிப் புலவர் ஆவர்.4 அம் மன்னனால் நன்கு ஆதரிக்கப்பெற்று நல்வாழ்வு பெற்றிருந்த இப்புலவர் தலைவர் வடமொழியில் கிராதார்ச்சுனீயம் முதலான நூல்கள் இயற்றித் தம் புகழையாண்டும் பரப்பியிருத்தல் உணரற் பாலதாம். இச்செய்திகளெல்லாம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடையில் தமிழகத்தின் வடபகுதியைக் கைப்பற்றிக் காஞ்சிமாநகரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டுவந்த பல்லவ அரசர்கள் கி. பி. ஏழாம் நூற்றாண்டு வரையில் வடமொழிப் பயிற்சி எங்கும் பரவும்படி செய்துவந்தமையோடு1 அம்மொழியில் வல்லுநரைப் போற்றிப் புரந்தும் வந்தனர் என்பதைத் தெளிவாகப் புலப்படுத்துதல் காண்க. எனவே, அவ்வேந்தர்கள் பொது மக்களின் தாய்மொழி யாகிய தமிழ் மொழியின் வளர்ச்சியில் சிறிதும் ஈடுபடவில்லை என்றும் தமிழ்ப் புலவர்களை ஆதரித்துச் சிறந்த தமிழ் நூல்கள் தோன்றும்படி செய்யவில்லை என்றும் ஐயமின்றிக் கூறலாம். தமிழகத்திற்குப் புதியவர்களாகவும் வேறு மொழி பேசுவராகவும் இருந்த பல்லவர்கள் தமிழ்மொழியின் சிறப்பினை எங்ஙனம் உணரக்கூடும்? ஆதலால், தமிழகத்தின் வட பகுதியில் முற்கால இடைக்காலப் பல்லவர்களின் ஆட்சியில் தமிழ் மொழியில் சிறந்த நூல்கள் தோன்றுவதற்கு இட மில்லாமற் போயினமை காண்க.

இனி, அக்காலத்தில் தமிழகத்தின் தென்பகுதி எத்தகைய நிலையில் இருந்தது என்பது ஆராய்தற்குரியது. கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த களப்பிரர் படை யெழுச்சியினால் பாண்டிநாடு அன்னோர் ஆட்சிக்குட் பட்டதோடு அந்நாட்டின் தலைநகராகிய மதுரையம் பதியில் நெடுங்காலமாகப் புகழுடன் நடைபெற்றுவந்த தமிழ்ச்சங்கம் அழிந்து போயினமையும் முன்னர் விளக்கப்பட்டுள்ளது. ஆகவே, அக்காலப் பகுதி பாண்டி நாட்டிலும் தமிழ்மொழி ஆதரிப்பாரற்றுத் தன் பெருமையிழந்து வீழ்ச்சியடைந்தமை தெள்ளிது. பௌத்த சமயத்தினரான களப்பிரர்கள், பிறகு சோழ நாட்டையும் கைப்பற்றி ஆட்சிபுரிவாராயினர். அந்நாட்களில் அவர்கள் தாம் மேற்கொண்டிருந்த பௌத்த சமயத்தைத் தமிழகத்தின் தென்பகுதியில் யாண்டும் பரப்புவதற்குப் பெரிதும் முயன்றனர். ஆகவே, அக்களப்பிரரது ஆட்சியில் பௌத்த சமய நூல்கள் நம் தமிழ் நாட்டில் தோன்றுவவாயின. அந்நூல்களும் தமிழ் மொழியில் எழுதப்படாமல் பாலி மொழியில் எழுதப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். கி.பி. நான்காம் நூற்றாண்டில் சோழர்களின் பழைய தலைநகராகிய உறையூரில் பிறந்து வளர்ந்த புத்த தத்தன் என்பவன் இருமுறை ஈழநாட்டிற்குச் சென்று, பௌத்த சமய நூல்களை நன்கு பயின்று, பிறகு சோழ நாட்டிற்குத் திரும்பிவந்து, அபிதம்மாவதாரம், விநயவிநிச்சயம் என்ற இரு நூல்களையும் பாலி மொழியில் எழுதி வெளி யிட்டுள்ளனன்.1 அவற்றுள், அபிதம்மாவதாரம் என்ற நூலை, அரண்மனைகளும் பூஞ்சோலைகளும் செல்வம் நிறைந்த வணிகர்களும் உள்ள காவிரிப் பூம்பட்டினத்தில் கணதாசனால் அமைக்கப் பட்டிருந்த ஒரு பெரிய பௌத்தப் பள்ளியில் தான் தங்கியிருந்த காலத்தில் சுமதி என்ற மாணவன் வேண்டிக் கொண்டவாறு எழுதிமுடித்த செய்தியை அதன் இறுதியில் புத்த தத்தன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.2 அன்றியும், சோழ நாட்டில் காவிரியால் வளம் பெற்ற பூத மங்கலம் என்ற நகரில் வெணுதாசன் என்பவனது சிறந்த பள்ளியில்தான் இருந்த நாட்களில் எளிதில் தம் மாணவர்களும் பௌத்த பிட்சுக்களும் சுருங்கிய காலத்தில் கற்றுணருமாறு விநயவிநிச்சயம் என்னும் நூல் இயற்றப்பெற்றது என்றும், அது களப்பிரகுல வேந்தனாக அச்சுத விக்கந்தன் என்பவன் தமிழ் நாட்டில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்த போது தொடங்கி எழுதி முடிக்கப்பெற்றது என்றும் அந்நூலின் இறுதியில் அவ்வாசிரியன் குறித்திருப்பது அறியற்பாலதாகும்.3 இவற்றால் சோழ நாடு களப்பிரர் ஆட்சிக் குட்பட்டிருந்த உண்மையும் அவர்களது ஆளுகையில் பௌத்த சமயமும் பாலி மொழியும் ஆதரிக்கபெற்று அவை எங்கும் பரவிய செய்தியும் நன்கு புலப்படுதல் காண்க. தமிழ் நாட்டில் அக் காலத்தில் நிலவிய பௌத்த சமயகுரவர் பதின்மர் பல்வகை நூல்கள் எழுதியுள்ளனர் என்றும் காஞ்சி மாநகர் ஒன்றில் மாத்திரம் வேறு பௌத்த ஆசிரியர் இருபதின்மர் பாலி மொழியில் பல பௌத்த சமய நூல்கள் எழுதி வெளியிட் டுள்ளார்கள் என்றும் கந்தவம்சம் என்ற பௌத்த நூலொன்று கூறுகின்றது.4 அன்றியும், பாலி மொழிக்கு முதலில் இலக்கணம் வரைந்த காச்சாயனரும் தமிழ் நாட்டவரே என்பது அறியத் தக்கது.1 இவற்றையெல்லாம் கூர்ந்து நோக்குங்கால், கடைச்சங்க காலத்திற்குப் பிறகு கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைக்கால முதல் ஏதிலார் ஆகிய களப்பிரரும் பல்லவரும் நம் தமிழ் நாட்டைக் கைப்பற்றி அரசாண்ட காலத்தில் பாலி, பிராகிருதம், வடமொழி ஆகிய பிற மொழிகளும் பௌத்தம் சமணம் ஆகிய புறச்சமயங்களும் எத்துணை உயர்வெய்திப் பெருமையுற்றன என்பது நன்கு விளங்கும். ஆகவே, அவ்வயலாரது ஆட்சிக்காலம் முழுவதும் தமிழ் மொழிக்கு ஆதரவும் வளர்ச்சியும் இல்லாமற் போயின எனலாம். எனவே, அக்காலப் பகுதி தமிழ் மொழிக்கு ஓர் இருண்ட காலமாகவே இருத்தல் காண்க.

இருண்ட காலத்தினும் சில தமிழ் நூல்கள் தோன்றியமை

வடவேங்கட முதல் தென்குமரி வரையிலுள்ள பெரு நிலப்பரப்பு முழுவதும் பிற மொழியாளராகிய பல்லவரும் களப்பிரரும் அரசாண்ட காலப் பகுதியிலும் சில தமிழ் நூல்கள் தோன்றுவதற்குச் சிறிது வாய்ப்பு ஏற்பட்டமை மகிழ்ச்சிக்குரிய தொன்றாம். அக்காலப் பகுதியில் தமிழ் மொழிக்கு அரசாங்க ஆதரவு ஒரு சிறிதுமின்மை முன்னர் விளக்கப்பட்டது. எனினும், செந்தமிழ்ப் புலமையிற் சிறந்த சிவனடியார் சிலர், அக்காலப் பகுதியில் இருந்துள்ளனர். அத்தகைய பெரியோர்களுள் காரைக்கால் அம்மையார், திருமூலநாயனார் என்போர் குறிப்பிடத்தக்கவராவர். அவர்கள் இயற்றியுள்ள அற்புதத் திருவந்தாதி, இரட்டை மணிமாலை, திருவாலங் காட்டு மூத்த திருப்பதிகங்கள், திருமந்திரம் ஆகிய நூல்கள் அந்நாட்களில் தோன்றியவை என்பது ஐயமின்றித் துணியப்படும். அக்காலப் பகுதியில் சில நீதி நூல்களும் தமிழில் இயற்றப்பட்டுள்ளன. தமிழ் மொழியில் முதலில் நீதி நூல்கள் தனியாக எழுதப்பெற்ற காலம் கடைச்சங்க காலமாகும். கடைச்சங்க நாளில் தமிழில் தனி நீதி நூல்கள் தோன்றியமைக்குக் காரணம் யாது என்பது ஈண்டு ஆராயற்பாலதாம்.

தமிழ் மக்கள் தம் நாட்டில் வந்து தங்கும் அயல் நாட்டாரோடு அன்புடன் கலந்து பழகும் இயல்பினர் என்பது யாவரும் அறிந்ததொன்று. கடைச்சங்க காலத்தில் யவனர், வடவாரியர், கடார நாட்டினர், அருமண தேயத்தார், சோனகர் முதலானோர் தமிழகத்திற்கு அடிக்கடி வந்து தங்கியிருந்த செய்தி, சங்கத்துச் சான்றோர் பாடல்களாலும் உரையாசிரியர் களின் குறிப்புக் களாலும் அயல்நாட்டாருடைய யாத்திரைக் குறிப்புக்களாலும் நன்கறியக் கிடக்கின்றது. அந்நாட்களில் அவ்வயலாரோடு நெருங்கிப் பழகி வந்த தமிழ் மக்களுள் சிலர் தம் நாகரிக நிலையினின்று மாறி ஒழுக்கங்களிலும் தவறுவார் ஆயினர்; எனவே, அவ்வயலாருடைய தீய இயல்புகளையும் தீயொழுக்கங்களையும் அன்னோர் மேற்கொள்ளத் தொடங்கியமை தெள்ளிது. அத்தகையோரைத் திருத்தி நல்வழிப் படுத்துவதும், தமிழருடைய தொன்றுதொட்டுவந்த அற வொழுக்கமும் நாகரிகமும் சிதைந்தொழி யாதவாறு காப்பாற்றுவதும், அக்காலத்தில் தூய வாழ்க்கை நடத்திவந்த தொல்லாணை நல்லாசிரியன்மாரின் மாபெருங் கடமையாகி விட்டமை அறியற்பாலதாம். கடைச்சங்க காலத்தில் நிலவிய பேரறிஞராகிய ஆசிரியர் திருவள்ளுவனார் அக்கடமையை நிறைவேற்றும்பொருட்டுத் திருக்குறள் என்ற சிறந்த நீதிநூலொன்று இயற்றி, அதன் மூலமாகத் தமிழ்மக்கட்குப் பல அரிய உண்மைகளை அறிவுறுத்தி, அன்னோர் தம் அறவொழுக்கங்களிலும் நாகரிக நிலையிலும் தவறாதவாறு அரண் செய்வாராயினர். ஒப்பற்ற அப்பெரு நூலை அக்காலத்திலிருந்த புலவர் அரசர் முதலான எல்லோருமே நன்கு பயின்று நல்ல பயன் எய்தினர். அந்நூற் பயிற்சியின் பயனாகக் கடைச்சங்க நாளில் தமிழ்மக்களின் அறவொழுக்கங்களும் நாகரிகமும் பெரும்பாலும் குன்றாமல் நிலைபெற்றன என்று உறுதியாகக் கூறலாம். அதனையுணர்ந்த வேறு அறிஞர் சிலரும் அவ்வரிய நூலைப் பின்பற்றி மற்றுஞ் சில நீதிநூல்களை அக்காலத்தில் இயற்றியுள்ளனர். அவைகள் எல்லாம் தமிழ்மக்கள் தம் பண்டை அறவொழுக்கங்களைப் பொன்னேபோற் போற்றி அவற்றின் வழியே நல்வாழ்க்கை நடத்தி இன்புறுவதற்குப் பெரிதும் பயன்பட்டுவந்தன வெனின், அச்செய்தி வெறும் புனைந்துரை யன்று.

கடைச்சங்க காலத்திற்குப் பிறகு தமிழ் நாட்டில் ஏற்பட்ட அன்னியர் ஆட்சியில் பௌத்தரும் சமணரும் அரசாங்க ஆதரவு பெற்றுப் பெருஞ் செல்வாக்கு எய்தியிருந்தமை முன்னர் விளக்கப்பட்டது. அந்நாட்களில் தமிழ் மக்களுட் சிலர் பௌத்த சமண சமயங்களில் பெரிதும் ஈடுபட்டு அவற்றைச் சார்ந் தொழுகத் தலைப்பட்டமையோடு தம் ஒழுக்க வழக்கங்களையும் கைவிடத் தொடங்கினர். அந்நிகழ்சிகளை நன்குணர்ந்த சைவ வைணவப் புலவருட் சிலர், தமிழர்களுடைய வழக்க வொழுக்கங்களும் நாகரிகமும் இழுக்குறாவண்ணம் சிறு நீதிநூல்கள் இயற்றி மக்களிடையே பரப்பு வாராயினர். சங்ககாலத் தமிழ் மக்கள், கலப்பற்ற தூய தமிழில் பேசியும் எழுதியும் வந்தமையோடு சிறந்த தமிழறிவு வாய்க்கப்பெற்று மிருந்தனர். எனவே, அவர்கள் உயர்ந்த நீதி நூலாகிய திருக்குறளைப் படித்து உண்மைப்பொருளை உணர்ந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்களாகத் திகழ்ந்தனர். ஆனால், கடைச்சங்க காலத்திற்குப் பிற்பட்ட இருண்டகாலத் தமிழ் மக்கள் சிறந்த தமிழறிவு பெறுவதற்கு வாய்ப்பில்லாமற் போயினமையின் அத்தகைய ஆற்றல் இல்லாதவராயிருந்தனர். அதுபற்றியே அக்காலத்தில் நிலவிய அறிஞர்கள் அன்னோர்க்கு ஏற்றவாறு எளிய வெண்பாக்களில் சிறுசிறு நீதிநூல்கள் இயற்றி யுள்ளனர் என்பது அறியற்பாலதாம். அவ்வாறு தோன்றிய நூல்கள் இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், நான்மணிக் கடிகை என்பனவாம். அந்நூல்களை அவ்விருண்ட காலத் தமிழ் மக்கள் படித்துத் தம் வழக்கவொழுக்கங்கள் குன்றாதவாறு நடந்துவந்தனர் என்பதற்குச் சான்றுகள் இல்லாம லில்லை. அந்நிலையை யுணர்ந்த சமணர்கள் தாமும் அம் முறையைக் கைக்கொண்டு மறைமுகமாகத் தம் சமயக் கொள்கைகளைத் தமிழ் மக்களிடையே பரப்பக் கருதினர். அதற்கேற்ப, கி. பி. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் பௌத்த சமயம் வீழ்ச்சியடைந்தது. பாண்டி நாட்டையும் சோழ நாட்டையும் ஆட்சிபுரிந்த களப்பிரரும் பௌத்த சமயத்தைத் துறந்து, சமண சமயத்தை மேற்கொண்டு ஒழுகத் தொடங்கினர். ஆகவே, சமணர்கள் தம் கருத்தினை நிறைவேற்றிக் கோடற்கு அதுவே தக்க காலமாக அமைந்தது. எனவே, தமிழ்நாட்டில், அமண்பள்ளிகளில் தங்கியிருந்த சமண முனிவர்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களை நன்கு பயின்று சிறந்த புலமை எய்தித் தமிழ் நூல்கள் இயற்றும் ஆற்றலும் பெற்றனர்; பிறகு தமிழ் மொழியில் நூல்கள் இயற்றி, அவற்றின் மூலமாகத் தம் சமயக்கொள்கைகளைத் தமிழ்நாட்டில் யாண்டும் பரப்ப முயன்றனர். அதற்கு உறுதுணையாக, கடைச்சங்கம் நிலவிய பாண்டிநாட்டு மதுரையம்பதியில் பூஜ்யபாதருடைய மாணாக்கர் வச்சிரநந்தி என்ற சமண முனிவர் ஒருவர் கி. பி. 470ஆம் ஆண்டில் திராவிட சங்கம் ஒன்று நிறுவினர். இச் செய்தி, திகம்பர தரிசனசாரம் என்னும் சைன நூலொன்றால் நன்குணரக் கிடக்கின்றது.1 அத்திராவிட சங்கம், சமணரது தமிழ்ச் சங்கமேயாகும். அது தமிழ்நாட்டில் அவர்கள் அமைத்த பிற சைன சங்கங்களுக்கெல்லாம் தலைமைச் சங்கமாக இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். அந்நாட்களில் தமிழ்ச் சான்றோர் எழுதிய நீதிநூல்களைத் தமிழ் மக்கள் பெரிதும் விரும்பிப் படித்துவந்தமையறிந்த அச் சங்கத்தார் முதலில் தாமும் தமிழ்மொழியில் நீதிநூல்கள் இயற்றுவாராயினர். பழமொழி, சிறுபஞ்சமூலம், ஏலாதி என்பவை, அப்போது தோன்றிய நூல்களேயாம். அவை நீதிநூல்களாகக் கருதப்பட்டு வரினும் அவற்றில் எல்லாச் சமயங்கட்கும் ஏற்ற பொது நீதிகளோடு இடையிடையே சைன சமயக் கொள்கைகளும் ஒழுக்கங்களும் கூறப்பட்டிருத்தலைக் கற்றோர் யாவரும் காணலாம்.

அந்நூற்றாண்டுகளில் சைவரும் வைணவரும் சமணரும் தம்தம் சமயத் தொண்டுகளைத் தமிழ்மொழி வாயிலாகச் செய்ய நேர்ந்தமையால் கி. பி. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட இருண்ட காலப் பகுதியிலும் சில தமிழ் நூல்கள் தோன்றுவ வாயின. ஆனால், அந்நூல்கள் எல்லாம் இக் காலத்தில் நமக்குக் கிடைக்கவில்லை; அவற்றுள் சிற்சில நூல்களே இப்போது நம் கைக்கு எட்டியுள்ளன. அவையெல்லாம் சமயச் சார்புபற்றி எழுந்தனவாயினும் அவற்றின் ஆசிரியர்கள் தமிழ் மொழிக்குத் தொண்டு புரிந்த நல்லறிஞரேயாவர். சமயத் தொண்டர்களாகிய அப்பெரியோர்கள் பல்வகைப்பட்ட தமிழ் நூல்களை அந்நாளில் இயற்றியிருத்தல் கூடும். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு எத்துணையோ இடையூறுகட்கும் ஆட்சி மாறுதல்கட்கும் நடுவில் அவை நமக்குக் கிடைக்காமற் போயினமை இயல்பாக நிகழக்கூடியதேயன்றி வியப்பிற்குரிய தன்று. ஆயினும், பண்டைத் தமிழ் நூல்களுக்கு உரைகண்ட பேராசிரியன்மார், தம் தம் உரைகளில் மேற்கோளாக எடுத்துக் காட்டியுள்ள நூல்களுள் சிலவும் புறத்திரட்டிற் காணப்படும் நூல்களுள் சிலவும் இருண்டகாலப் பகுதியில் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்று கருதுவதற்கு இடம் உளது. அவை, எலி விருத்தம், நரிவிருத்தம், கிளிவிருத்தம், முத்தொள்ளாயிரம் என்பனவாம். அவற்றுள், நரிவிருத்தத்தைச் சைவ சமயகுரவருள் ஒருவராகிய திருநாவுக்கரசு அடிகளும் எலி விருத்தம், கிளி விருத்தம் ஆகிய இரண்டையும் அவ்வடிகள் காலத்தவராகிய திருஞான சம்பந்தரும் முறையே ஆதிபுராணத் திருக்குறுந் தொகையிலும் திருவாலவாய்ப் பதிகத்திலும் குறித்துள்ள மையின், அந்நூல்கள் மூன்றும் கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டனவாதல் வேண்டும். எனவே, அவை கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் மதுரை மாநகரிலிருந்த சைனரது தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராக நிலவிய அமண் சமயப்புலவர்களால் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும். அந்நூல்கள் இந்நாளில் கிடைக்காமற் போயினமையின் அவை இறந்தனபோலும். சிந்தாமணியின் ஆசிரியராகிய திருத்தக்க தேவரால் இயற்றப் பெற்ற நரிவிருத்தம் என்னும் நூல் திருநாவுக்கரசு அடிகளால் கூறப்பெற்ற நரிவிருத்தத்தினும் வேறானதொன்று என்பது ஈண்டுணரற்பாலதாகும்.

அக்காலப் பகுதியில் எழுதப்பட்ட நூல்களுள், புலவர் பெருமக்கள் எல்லோருடைய உள்ளத்தையும் பிணிக்கும் தன்மை வாய்ந்தது முத்தொள்ளாயிரம் என்ற அரிய நூலேயாம். அது, தமிழ் மூவேந்தர்களாகிய சேர சோழ பாண்டியர்களின் பெருமைகளை எடுத்துக்கூறும் ஒரு பெருநூலாகும். அந்நூல் முழுவதும் இக்காலத்திற் கிடைத்திலது. எனினும், பண்டை உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்தாளப்பெற்ற சில பாடல்களே இந்நாளில் தேடித் தொகுக்கப்பெற்று முத் தொள்ளாயிரம் என்ற பெயருடன் வெளியிடப்பட்டிருப்பது அறியத்தக்கது. இந்நூலைப் பற்றிய பிற செய்திகள் பின்னர்க் கூறப்படும்.

இனி, இருண்டகாலப் பகுதியில் இயற்றப்பெற்றனவாக இதுகாறும் ஆராய்ந்து காணப்பட்ட இலக்கியங்களின் வரலாறுகளைத் துருவி நோக்கி உண்மைச் செய்திகளை யுணர்ந்து கொள்வது இன்றியமையாததாகும். இலக்கிய வரலாற்றில் விளக்கப்பட வேண்டியவை, நூல் வரலாறு, நூலாசிரியர் வரலாறு, நூல் இயற்றப்பெற்ற காலம், நூலால் நுவலப்படும் பொருள் என்பனவாம். இவற்றை உணர்த்தும் பொருட்டு நூல் தோன்றிய காலத்திலேயே இயற்றப்பெற்றுள்ள சிறப்புப் பாயிரப் பாடல்கள் இவற்றுள் சிலவற்றை மாத்திரம் எடுத்துக் கூறுகின்றன. எனவே, அவை இலக்கிய வரலாற்றிற் குரியனவாக ஈண்டுக் குறிப்பிடப்பெற்ற எல்லாவற்றையும் உணர்த்துவனவாயில்லை. ஆயினும், ஓரளவு பயன்படும் நிலையிலுள்ள சிறப்புப்பாயிரப் பாடல்களையும் நூலகத்துக் காணப்படும் சில அகச்சான்றுகளையும் பிற சான்றுகளையும் துணையாகக் கொண்டு இலக்கிய வரலாற்றை ஆராய்ந்து துணிதல் ஏற்புடையதேயாம்.

கி. பி. 250 முதல் கி. பி. 600 வரையில் அடங்கிய காலப் பகுதியில் இயற்றப்பெற்றனவாக ஆராய்ந்தறியப்பெற்ற தமிழ் நூல்கள் முன்னர்க் கூறப்பட்டன. அவற்றுட் சில, சமய நூல்களாகவும், ஒன்று, சேர சோழ பாண்டியரின் பண்டைப் பெருமைகளைக் கூறும் நூலாகவும் ஏனைய வெல்லாம் நீதி நூல்களாகவும் இருத்தல் உணரற்பாலதாம். அந்நூல் களெல்லாம் எவ்வெவ்வாண்டில் எழுதப்பெற்றன என்பதை அறிந்து கோடற்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அன்றியும், அவை எந்த எந்த நூற்றாண்டில் தோன்றியிருத்தல் கூடும் என்பது கூட உய்த்துணர்ந்து கூறவேண்டிய நிலையில்தான் உளது. ஆகவே, கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப் பகுதிக்கும் கி. பி. ஆறாம் நூற்றாண்டின் கடைப்பகுதிக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றிய தமிழ் இலக்கியங்களில் முதலில் நீதி நூல்களை ஆராய்வோம்.

நான்மணிக்கடிகை


இது நூற்றுநான்கு பாடல்களைத் தன்னகத்துக்கொண்ட ஒரு நீதி நூல். ஒவ்வொரு பாடலிலும் நந்நான்கு உண்மைப் பொருள்கள் சொல்லப் பட்டிருத்தலால் இது நான்மணிக்கடிகை என்னும் பெயர் எய்தியது. இந்நூல் வெண்பா யாப்பில் அமைந்தது. இஃது, ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியுள்ள எண்வகை நூல் வனப்புக்களுள் அம்மை என்னும் வனப்பின் பாற்படும் என்பது பேராசிரியர், நச்சினார்க்கினியர் ஆகிய இரண்டு உரையாசிரியர்களின் கருத்தாகும்.1 அன்றியும், இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று என்பது நாலடி நான்மணி என்று தொடங்கும் பழைய பாடலொன்றால்2 அறியப் படுகின்றது. ஆனால், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எக் காலத்தில் யாரால் தேர்ந்தெடுத்துத் தொகுக்கப்பட்டன என்பது புலப்படவில்லை. உரையாசிரியர்களுள் குணசாகரர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், ஆகியோரைத்3 தவிர மற்றை யோர் பதினெண் கீழ்க்கணக்கைக் குறிப்பிடாமை உணரத்தக்கது.

இனி, நான்மணிக்கடிகையின் ஆசிரியர் விளம்பிநாகனார் என்ற அறிஞர்பெருமான் ஆவர். எனவே, இவர் விளம்பி என்னும் ஊரில் பிறந்தவர் என்பதும் நாகன் என்ற இயற்பெயர் உடையவர் என்பதும் நன்கு அறியப்படும். இவர் வைணவ சமயத்தினர் என்பது நூலின் தொடக்கத்தில் காணப்படும் கடவுள் வாழ்த்துப் பாடல்கள்1 இரண்டினாலும் தெள்ளிதிற் புலனாகின்றது. இவருடைய விளம்பி என்ற ஊர் யாண்டுள்ளது என்பது தெரியவில்லை. இவருடைய பெற்றோர் யாவர் என்பதும் இவரது வாழ்க்கை வரலாறும் புலப்படவில்லை. இவர் கி. பி. நான்காம் நூற்றாண்டில் இருந்திருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரப் படுகின்றது. இது போன்ற நீதி நூல்கள் தமிழ் மொழியில் இயற்றப்பட்டமைக்குக் காரணம் முன்னர் விளக்கப்பட்டுள்ளது. இவ்வாசிரியர் எடுத்துரைக்கும் பல சிறந்த உண்மைகளும் அறிவுரைகளும், இவருடைய புலமைத் திறத்தையும் பரந்த உலகிய லறிவையும் உள்ளத்தின் தெளிவுடைமையும் நன்கு புலப்படுத்துகின்றன. ஆசிரியர் திருவள்ளுவனாரைப்போல், இவர் தம் நூலை ஒருமுறைப்படுத்தி அமைக்கவில்லை. எனினும், இவர் தம் புலமையினாலும் அனுபவத் தினாலும் அறிந்த அரிய உண்மைகளையும் உலகியல்புகளையும் நீதிகளையும் மக்கள் எளிதில் உணர்ந்து பயனெய்துமாறு அவ்வப்படியே இனிய வெண்பாக்களில் கூறியுள்ளனர். ஆதலால், ஒரே கருத்து வெவ்வேறு பாடல்களில் வெவ்வேறு சொற்றொடரால் குறிக்கப்பட்டிருத்தலை இவருடைய நான்மணிக்கடிகையில் சில இடங்களிற் காணலாம். மக்களாகப் பிறந்தோர் எல்லாம் இம்மையிற் பொன்றாப்புகழை நிலை நிறுத்தி, மறுமையில் உயர்ந்த வீட்டுலகம் புகுதலையே தம் குறிக்கோளாகக் கொள்ளல் வேண்டும் என்பதையும், அதற்குறுதுணையா யிருப்பது கல்வியேயாம் என்பதையும், கற்பக் கழிமடமஃகும்2 என்று தொடங்கும் பாடலில் இவர் உணர்த்தியிருப்பது அறியத்தக்கது.

இனி, ஊனுண்டல் - செய்யாமை செல்சாருயிர்க்கு1 எனவும், இனிதுண்பானென்பான் உயிர்கொல்லா துண்பான்2 எனவும், விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலும் குற்றம்3 எனவும், கொலைப்பாலுங் குற்றமேயாம்4 எனவும் இவர் கூறி யிருப்பதை நோக்குமிடத்து, புலாலுண்ணாமை, கொல்லாமை ஆகியவை தலைசிறந்த இரு பேரறங்கள் என்பதும் அவை உலகில் என்றும் நின்று நிலவவேண்டும் என்பதும் இவரது உள்ளக் கிடக்கையாதலுணர்க. இவ்வாசிரியர் கூறி யுள்ள அறிவுரைகள் சில, என்றென்றும் நினைவில் வைத்துக் கொள்ளுதற்கு உரியனவாகும். அவை,

1.  அல்லவை செய்வார்க் கறங்கூற்றம் (பா. 83)

2.  வெல்வது வேண்டின் வெகுளிவிடல் (பா. 15)

3.  தனக்குப்பாழ் - கற்றறி வில்லா வுடம்பு (பா. 20)

4.  ஈன்றாளோ - டெண்ணக் கடவுளுமில் (பா. 55)

5.  கொடுப்பின் அசனங் கொடுக்க (பா. 80)

6.  யார்மாட்டும் - கொள்ளாமை வேண்டும் பகை (பா. 86)

7.  தன்னொடு - செல்வது வேண்டின் அறஞ்செய்க (பா. 15)

8.  குலனுங் குடிமையுங் கல்லாமைக் கீழ்ச்சாம் (பா. 81)

9.  வளமிலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம் (பா. 92)

10. இந்நிலத்து - மன்னுதல் வேண்டின் இசைநடுக (பா. 15)

என்பனவாம்.

இன்னா நாற்பது


இது, கடவுள் வாழ்த்து உள்பட நாற்பத்தொரு வெண்பாக்களையுடைய ஒரு நீதிநூல். இதிலுள்ள ஒவ்வொரு பாடலும் இன்னது இன்னது துன்பம் பயக்கும் என்று கூறுவதால், இஃது இன்னாநாற்பது என்னும் பெயர் பெறுவதாயிற்று. இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று; ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியுள்ள அம்மை என்னும் வனப்பினைத் தன்பாற் கொண்டு விளங்குவது; எல்லா மக்கட்கும் உறுதிபயக்கும் பொது நீதிகளையும் உண்மைகளையும் எடுத்துக் கூறுவது. இதன் ஆசிரியர் கபிலர் என்னும் பெயரினர்; கள்ளுண்ணாமையையும் புலாலுண்ணாமையையும் தம் நூலில் மூன்று பாடல்களில் வற்புறுத்திக் கூறியுள்ள இவ்வாசிரியர், வேள் பாரியின் உற்ற நண்பரும் கடைச்சங்கப் புலவருமாகிய கபிலர்1 அல்லர் என்பது தேற்றம். எனவே, இவர் அப்பெயருடன் பிற்காலத்தில் நிலவிய வேறொரு புலவர் ஆவர். இவர் நூலை நுணுகியாராயுங்கால், கடைச்சங்கம் அழிந்த பிறகு கி. பி. நான்காம் நூற்றாண்டில் சமண சமயத்தினரின் செல்வாக்கு நம் தமிழகத்தில் பரவிய காலத்தில் இவர் இருந்திருத்தல் வேண்டு மென்பது புலனாகின்றது. இவர் துன்பின் மூலங்களை ஆய்ந்துணர்ந்து அவற்றை மாத்திரம் தம் நூலில் தொகுத்துக் கூறியுள்ளமைக்குக் காரணம், அவற்றை மக்கள் அறிந்துகொண்டு அவற்றினின்று நீங்கி இன்பம் எய்தல் வேண்டும் என்னுங் கருத்தினைத் தம் உள்ளத்திற்கொண்டமையே எனலாம். துன்ப நீக்கமே இன்பப் பேறாம் என்பது அறிஞர் எல்லோரும் உணர்ந்ததோர் உண்மையன்றோ? இவ்வாசிரியரும், தம் அனுபவத்தாலும் ஆராய்ச்சியாலும் இவ்வுலகில் இன்னா என்று கண்டவற்றை அவ்வப்படியே இன்னிசை வெண்பாக்களில் கூறிச் செல்லுகின்றனரேயன்றி அவற்றை யெல்லாம் ஒருமுறைப் படுத்தி அமைத்தாரில்லை. எனவே, ஒரே கருத்து வெவ்வேறு பாடல்களில் அமைந்து கூறியதுகூறல் எனப்படுமாறு இருத்தலை இவருடைய நூலில் காணலாம். அதுபற்றி இவர் புலமைத் திறமையும் அருளுடைமையும் இழுக்குடையன வாகா. அக்கருத்தின் உயர்வுநோக்கி, அதனைப் பலரும் நினைவில் வைத்துக்கொள்ளல் வேண்டும் என்பதை வலியுறுத்தற் பொருட்டே அங்ஙனம் கூறியுள்ளனர் என்று கொள்வது அமைவுடைத்து.

இவர் தம் கடவுள் வாழ்த்துப் பாடலில் சிவபெருமான், பலராமன், மாயோன், முருகவேள் ஆகிய நால்வரையும் குறித்துள்ளமையின்,1 இவர் சமயக் கொள்கையில் கடைச்சங்கப் புலவராகிய நக்கீரனாரைப்போல்2 பொது நோக்குடையவர் ஆவர். எனினும், இவர் முக்கட் பகவன் அடிதொழாதார்க் கின்னா என்று சிவபெருமானை அப்பாடலில் முதலில் கூறியிருத்தலால் சிவநெறியில் ஒழுகிய செந்தமிழ்ப் புலவராதல் தெள்ளிது. இவர், பலதேவனையும் மாயோனையும் தனித் தனியாக, அக்கடவுள் வாழ்த்தில் குறிப்பிட்டிருப்பது ஒன்றே, இவர் கடைச்சங்க காலத்திற்குப்பிறகு அதனை யடுத்துள்ள காலப் பகுதியில் இருந்திருத்தல் வேண்டும் என்பதை நன்கு புலப்படுத்தும் எனலாம். பதினோராந் திருமுறையில் காணப்படும் மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி என்ற நூல்கள் மூன்றும் பாடியுள்ள கபிலதேவ நாயனார் என்பவர் இக்காலப் பகுதிக்குப் பிறகு பல்லவர் ஆட்சிக் காலத்தில் கி. பி. எழாம் நூற்றாண்டிற்குப் பின்னிருந்த வேறொரு புலவர் ஆவர். அவர் மூத்த பிள்ளையார்1 மீது இரட்டை மணிமாலை இயற்றியிருப்பதும் அவரது சிவபெருமான் திருவந்தாதியிலுள்ள பாக்கள் எல்லாம், மடக்கு, திரிபு ஆகிய சொல்லணிகளை யுடையனவாக இருப்பதும் அவர் தம் அந்தாதியில் திருச்சிராப்பள்ளிக் குன்றைச் சிவபெருமானுக்குரிய இடமாகக் கூறியிருப்பதும்2 அவர் கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்னர் இருந்தவர் என்பதை நன்கு உறுதிப்படுத்துவனவாகும். எனவே, இன்னா நாற்பது பாடிய கபிலரும் இரட்டை மணிமாலைகளும் அந்தாதியும் இயற்றிய கபிலதேவ நாயனாரும் நம் தமிழகத்தில் வெவ்வேறு காலங்களில் விளங்கிய வெவ்வேறு புலவர் ஆவர். பெயர் ஒற்றுமை யொன்றே கருதி இவ்விரு புலவரையும் ஒருவரெனக் கோடல் சிறிதும் பொருந்தாதென்க. இவ்வாசிரியரைப் பற்றிய பிற செய்திகளெல்லாம் தெரிய வில்லை.

இனி, இவர் இந்நூலில் எடுத்துக் கூறியுள்ள சில உண்மைகள் மறவாமல் என்றென்றும் உள்ளத்திற் கொள்ளத் தக்கனவாகும். அவை,

1.  உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பின்னா (பா. 17)

2.  இன்னா - ஈன்றாளை ஓம்பா விடல் (பா. 18)

3.  குலத்துப் பிறந்தவன் கல்லாமை இன்னா (பா. 20)

4.  தீமை யுடையார் அயலிருத்தல் இன்னா (பா. 25)

5.  இன்னா - கள்ள மனத்தார் தொடர்பு (பா. 34)

6.  அடைக்கலம் வவ்வுதல் இன்னா (பா. 41)

7.  திருவுடை யாரைச் செறலின்னா (பா. 5)

8.  ஊனைத்தின் றூனைப் பெருக்குதல் முன்னின்னா (பா. 23)

9.  புலையுள்ளி வாழ்த லுயிர்க்கின்னா (பா. 13)

10. இடனில் சிறியாரோடியாத்த நண்பின்னா (பா. 12)

11. இன்னா - பொருளில்லார் வண்மை புரிவு (பா. 11)

12. இன்னா - மறையின்றிச் செய்யும் வினை (பா. 16)

என்பனவாம்.

இனியவை நாற்பது


இதுவும் கடவுள் வாழ்த்துட்பட நாற்பத்தொரு வெண்பாக் களையுடைய ஒரு நீதிநூல். இதிலுள்ள ஒவ்வொரு பாடலும் இன்னது இன்னது இனியவை என்று உணர்த்துதலால் இஃது இனியவை நாற்பது என்னும் பெயர் எய்தியது. இந்நூலை இனியது நாற்பது எனவும், இனிது நாற்பது எனவும் அந் நாளில் வழங்கியுள்ளனர் என்று தெரிகிறது. இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று; ஆசிரியர் தொல்காப்பிய னாரால் கூறப்பெற்றுள்ள அம்மை என்னும் வனப்பு அமையப் பெற்றது. இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் ஆவர். இவர், சேந்தன் என்னும் பெயரினர் என்பதும் இவருடைய தந்தையார் பூதன் என்ற பெயருடயவர் என்பதும் அவர் மதுரைத் தமிழாசிரியர் என்னுஞ் சிறப்புப் பெயருடன் அந்நாளில் விளங்கியவர் என்பதும் மேலே குறித்துள்ள தொடர்மொழிகளால் நன்கறியக் கிடக்கின்றன. பூதஞ் சேந்தன் என்பது பூதனுடைய மகன் சேந்தன் என்று பொருள்படும் என்பதைத் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் புள்ளி மயங்கியலிலுள்ள அப்பெயர் மெய்யொழித்து என்று தொடங்கும் ஐம்பத்தைந்தாம் சூத்திரத்தினால்1 தெள்ளிதின் உணர்ந்து கொள்ளலாம். எனவே, இனியவை நாற்பதின் ஆசிரியராகிய சேந்தனாரின் தந்தையார் பூதனார் என்பவர், கடைச்சங்க காலத்திற்குப் பின்னர் மதுரையில் புகழுடன் நிலவிய ஒரு தமிழாசிரியராக இருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. சேந்தனார் தம் நூலில் கடவுள் வாழ்த்துச் செய்யுளில் சிவ பெருமான், திருமால், பிரமதேவன் ஆகிய முப்பெரும் கடவுளரையும்1 கூறியிருத்தலால் இவர் இன்னாநாற்பதின் ஆசிரியராகிய கபிலரைப்போல் சமயக் கொள்கையில் பொது நோக்குடையவர் என்பது தேற்றம். கபிலருடைய கடவுள் வாழ்த்திற்கும் இவ்வாசிரியருடைய கடவுள் வாழ்த்திற்குமுள்ள வேறுபாட்டை நோக்குமிடத்து,2 இவர் கபிலருக்குப் பின்னர் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்திருத்தல் வேண்டுமென்பது நன்கு வெளியாகின்றது. எனவே, இன்னாத வற்றைத் தொகுத்து ஒரு நூல் இயற்றிச் சென்ற கபிலரைப் பின்பற்றியே பூதஞ் சேந்தனாரும் இனியவை பலவற்றைத் தொகுத்து இந்நூலை இயற்றியுள்ளனர் என்பது நன்கு துணியப் படும். மதுரைத் தமிழாசிரியர் என்று பாராட்டப் பெற்றுள்ள தம் தந்தையாரிடம் இவர் தமிழ் நூல்களைப் பயின்று புலமை யெய்தியவராதல் வேண்டும். இவரைப் பற்றிய பிற செய்திகள் புலப்படவில்லை.

கபிலர், இன்னா நாற்பதில் கூறியுள்ள ஊனைத் தின்றூனைப் பெருக்குதல் முன்னின்னா, கல்லா ருரைக்குங் கருமப் பொருளின்னா, குழவிக ளுற்ற பிணியின்னா என்னுந் தொடர்களோடு இவ்வாசிரியர் இனியவை நாற்பதில் கூறியுள்ள ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்னினிதே, கற்ற றிந்தார் கூறுங் கருமப் பொருளினிதே, குழவி பிணியின்றி வாழ்தலினிதே என்ற தொடர்கள் சொல்லாலும் கருத்தாலும் ஒற்றுமையுடையனவாய் அமைந்திருத்தல் காண்க. இவர் தம் நூலில் எடுத்துரைத்துள்ள அறிவுரைகள் எல்லாம் பொன்னே போல் போற்றத் தக்கனவாம். அவற்றுள்,

1.  பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகவினிதே (பா. 2)

2.  கொல்லாமை முன்னினிது (பா. 6)

3.  பங்கமில் செய்கைய ராகிப் பரிந்தியார்க்கும்

அன்புடைய ராத லினிது (பா. 10)

4.  கடமுண்டு வாழாமை காண்ட லினிதே (பா. 1)

5.  துச்சிலிருந்து துயர்கூரா மாண்பினிதே (பா. 40)

6.  மான மழிந்தபின் வாழாமை முன்னினிதே (பா. 14)

7.  நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனியினிதே (பா. 20)

8.  அறம்புரிந் தல்லவை நீக்க லினிதே (பா. 22)

9.  வருவாய் அறிந்து வழங்க லினிதே (பா. 23)

10. கயவரைக் கைகழிந்து வாழ்த லினிதே (பா. 30)

என்பவை எல்லோரும் என்றும் நினைவிற் கொள்ளத்தக்க பொருளுரை களாகும்.

திரிகடுகம்


இது கடவுள் வாழ்த்துட்பட நூற்றொரு வெண்பாக்களை யுடைய ஒரு நீதிநூல். ஒவ்வொரு பாடலும் மக்கட்கு நலம் பயக்கும் மும்மூன்று உறுதிப்பொருள்களைக் கூறுகின்றது. இந்நூலில் ஒவ்வொரு வெண்பாவிலும் மூன்றாம் அடியின் ஈற்றுச் சீர் இம்மூன்றும் என்றாதல் இம்மூவர் என்றாதல் தொகை கூறுதல் குறிப்பிடத்தக்கதாம்.

இனி, திரிகடுகம் என்ற தொடர், சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்றையும் குறிக்கும் என்பது, திரிகடுகம் சுக்கு மிளகு திப்பிலி என்ற திவாகரச் சூத்திரத்தினால்1 நன்கறியப்படும். எனவே, சுக்கு, மிளகு, திப்பிலியாலாகிய திரிகடுகம் என்னும் மருந்து, உடல் நோய் நீக்கி மக்கட்கு நலம் புரிவதுபோல், அன்னோர்க்குறுதிப் பொருள்களை அறிவுறுத்தி அறியாமை யாகிய மனவிருளைப் போக்கி, இம்மை மறுமை இன்பங்களை அளிக்கவல்லது இத்திரிகடுகம் என்னும் நூல் என்பது ஆசிரியரது கருத்தாதல் வேண்டும். இதன் ஆசிரியர் நல்லாதனார் என்பவர்; ஆதன் என்ற இயற்பெயர் கடைச்சங்க காலத்திற்கு முன்னரே நம் தமிழ் நாட்டில் வழங்கி வந்தது என்பதைத் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் புள்ளி மயங்கியலில் ஆதனும் பூதனும் என்று தொடங்கும் ஐம்பத்து மூன்றாம் சூத்திரத்தினால்2 அறியலாம். கடைச்சங்க நாளில் அப்பெயர் சேர நாட்டில்தான் மிகுதியாக வழங்கியுள்ளது என்பது சங்கத்துச் சான்றோர் பாடல்களால் நன்கு புலப்படுகின்றது. ஆகவே, நல்லாதனார் என்பார், சேர நாட்டிற்கு அண்மையிலுள்ள தென்பாண்டி நாட்டில் திருநெல்வேலியைச் சார்ந்த திருத்து என்னும் ஊரினர் என்று பழம் பாடல் ஒன்று1 கூறுவது பொருத்தமுடையதேயாம். இவர் வைணவ சமயத்தினர் என்பது இவர் கூறியுள்ள கடவுள் வாழ்த்துப் பாடலால் உணரக்கிடக்கின்றது. இவர் தம் நூலில் ஒவ்வொரு செய்யுளிலும் மும்மூன்று பொருள்கள் ஒரு சிறந்த பொது உண்மைக்கு உட்படுமாறு அமைத்துக் கூறியுள்ளமைக்கேற்ப, தம் கடவுள் வாழ்த்துப் பாடலில் திருமாலின் திருவடிகள், ஞாலம் அளந்தமை, குருந்தஞ்சாய்த்தமை, சகடம் உதைத்தமை ஆகிய மூன்று செயல்களையும் நிகழ்த்தியதைப் பாராட்டியிருத்தல் அறிந்து மகிழ்தற்குரியதாகும்.

இவ்வாசிரியர் தம் நூலுக்குத் திரிகடுகம் என்னும் வடமொழித் தொடரைப் பெயராக அமைத்திருத்தலை நோக்கு மிடத்து, இவர் கடைச்சங்க காலத்திற்குப் பிறகு வடமொழிக்கு அரசாங்க ஆதரவும் ஏற்றமும் மிகுந் திருந்த காலப்பகுதியில் இருந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு தெளியப் படும். ஆகவே, இவர், கி. பி. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்தவர் எனலாம். இவர் திருக்குறளைத் தெளிவாகப் பயின்று அந்நூலிலுள்ள அரிய கருத்துக்களையும் தொடர்களையும் தம் நூலில் பல இடங்களில் அமைத்துள்ளமை அறியத்தக்கது. அன்றியும், இனியவை நாற்பது என்ற நூலிலுள்ள பல கருத்துக்களும் தொடர்களும் இவர் உள்ளத்தைப் பிணித்து, இவர் நூலாகிய திரிகடுகத்தில் இடம்பெற்று விட்டமை குறிப்பிடத்தக்க தாகும். எனவே, இவர் தம் காலத்திற்கு முற்பட்ட நீதிநூல்கள் பலவற்றையும் கற்றுத் தெளிந்தவர் என்று ஐயமின்றிக் கூறலாம். இவர் தம் நூலாராய்ச்சி யாலும் வாழ்க்கை யனுபவத்தாலும் உணர்ந்து பல பல உண்மைகளுள் மும் மூன்று, ஒவ்வொரு தலைப்பிற்குள் அடங்குமாறு அமைத்து வெண்பா யாப்பில் இந்நூலை இயற்றியிருப்பது பெரிதும் பாராட்டற் பாலது. இவரது வாழ்க்கை வரலாறு முதலியன புலப்படவில்லை. இவரது நூலாகிய திரிகடுகம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று என்பதும் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியுள்ள அம்மை என்னும் வனப்பிற்கு இலக்கியமாய் அமைந்ததென்பதும் ஈண்டு உணரற்பாலனவாம். இந்நூல் பல உண்மை களையும் நீதிகளையும் மக்கட்கு அறிவுறுத்தும் சிறப்புடைய தாதலின் இஃது எல்லோரும் படித்தற்குரிய ஓர் அரிய நூலாகும். இந்நூலிற் கூறப்பட்டுள்ள வற்றுள்,

1.  தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன் (பா. 12)

2.  வருவாயுட் கால்வழங்கி வாழ்தல் (பா. 21)

3.  தோல்வற்றிச் சாயினுஞ் சான்றாண்மை குன்றாமை (பா. 2)

4.  ஈதற்குச் செய்க பொருளை (பா. 90)

5.  நிறைநெஞ் சுடையானை நல்குர வஞ்சும் (பா. 72)

6.  கண்ணுக் கணிகலம் கண்ணோட்டம் (பா. 52)

7.  நெஞ்சம் அடங்குதல் வீடாகும் (பா. 43)

என்னுந் தொடர்கள் யாவரும் என்றும் மறத்தலாகா அறிவுரை களாகும்.

ஆசாரக்கோவை


இது, கடவுள் வாழ்த்தோடு நூற்றொரு பாடல்களை யுடைய ஒரு நூல். இந்நூலின்கண் குறள்வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா ஆகிய வெண்பாவகைகள் எல்லாம் காணப்படுகின்றன. இதில் ஒவ்வொருவரும் தம் வாழ்நாட்களில் மேற்கொள்ளுதற்குரிய முறைகளும் ஒழுக்கங்களும் விலக்கத்தக்க செயல்களும் கூறப்பட்டுள்ளன. இன்னவை செயற்பால என்றும், இன்னவை விலக்கற்பால என்றும் இந்நூல் கூறுவதை நோக்குங்கால், இது வடமொழியிலுள்ள மிருதி நூல்களைப் போன்றதொரு நூல் என்பது நன்கு விளங்கும். இந்நூலில் சொல்லப்பட்டுள்ள உணவு கொள்ளும்முறை, ஆடையணியும் முறை, நீராடும் இயல், தூங்கும் முறை, படிக்கத்தகாத நாள்கள், நன்மாணாக்கர் செயல் முதலானவற்றை இக்காலத்துள்ள தமிழ் மக்களுள் பலர் ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என்பது ஒருதலை எனினும், உலகியலை நன்குணர்ந்து உயர் நிலையை எய்த விரும்புவோர் அறிந்து கோடற்குரிய செய்திகளும் இந்நூலில் கூறப்படுகின்றன. ஆகவே, இஃது எல்லோரும் படித்துப் பார்த்தற்குரிய நூல்களுள் ஒன்று எனலாம். இது, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாக இருப்பதோடு ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியுள்ள அம்மை என்னும் வனப்பினைத் தன்பாற் கொண்டதுமாகும். இதன் ஆசிரியர் கயத்தூர்ப் பெருவாயில் முள்ளியார் எனப்படுவார். இவருடைய முன்னோர்கள் கயத்தூரில் இருந்தவர்கள். இவர் வாழ்ந்துவந்த ஊராகிய பெருவாயில் என்பது புதுக்கோட்டை நாட்டில் குளத்தூர்த் தாலுகாவில் இருந்திருத்தில் வேண்டும் என்பது அந்நாட்டிலுள்ள சில கல்வெட்டுக்களால்1 அறியப்படுகின்றது. இவர் வடமொழியை நன்கு கற்றுத் தேர்ச்சி எய்தியுள்ள ஒரு ஆவர். இவர் வடமொழியில் இருடிகள் சொல்லியுள்ள ஆசாரங்களைத் தொகுத்து ஆசாரக்கோவை என்ற இத்தமிழ் நூலை இயற்றியிருப்பதாக இதிலுள்ள சிறப்புப்பாயிரச் செய்யு ளொன்று2 கூறுவது அறியத்தக்கது. இந்நூற் பெயரும் இதில் கூறப்படும் ஆசாரங்களும் இது வட மொழி நூல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதை நன்கு வலியுறுத்துவனவாகும். இதன் ஆசிரியர் சிவபெருமானுக்குத் தம் நூலில் வணக்கம் கூறியிருத்தலால் சைவ சமயத்தினர் என்பது தெள்ளிது. இவர் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் விளங்கியவராதல் வேண்டும். இவர் தாம் எடுத்துரைக்கும் ஆசாரங்கள் பலவற்றை முந்தையோர் கண்ட முறை எனவும் யாவருங்கண்டநெறி எனவும், பேரறிவாளர் துணிவு எனவும், மிக்கவர் கண்ட நெறி எனவும், நல்லறிவாளர் துணிவு எனவும் உரைத்துள்ளமையால், அவையனைத்தும் அறிஞர்கள் தம் அனுபவத்தாலறிந் துணர்த்திய உண்மைகள் என்பதும், அவர்கள் நூல்களை நன்கு பயின்று அவற்றைத் தொகுத்து இவர்தம் நூலில் கூறியுள்ளனர் என்பதும் வெளியாதல் காண்க. இவ்வாசிரியரது வாழ்க்கை வரலாறும் பிறவும் இக்காலத்தில் தெரியவில்லை.

இவர், நன்றியறிதல், பொறையுடைமை, இன்சொல் கூறல், எவ்வுயிர்க்கும் இன்னாதவற்றைச் செய்யாமை, கல்வி, ஒப்புர வாற்றல், அறிவுடைமை, நல்லினத்தாரோடு நட்டல் ஆகிய இவை எட்டும் ஆசாரங்கட்கு வித்து என்று கூறியிருப்பது உணரற்பாலதாம்.

பழமொழி


இது கடவுள் வாழ்த்துட்பட நானூறு வெண்பாக்களை யுடைய ஒரு நீதிநூல். ஒவ்வொரு வெண்பாவிலும் இறுதியில் ஒவ்வொரு பழமொழி அமைக்கப்பெற்றுள்ள காரணம் பற்றி இந்நூல் பழமொழி என்னும் பெயர் எய்தியது. அப்பழ மொழிகள் எல்லாம் பண்டைக்காலத்தில் நம் தமிழகத்தில் வழங்கிவந்தவை என்பதில் ஐயமில்லை. அப்பழமொழிகளின் துணை கொண்டு எத்துணையோ அரிய உண்மைகளும் நீதிகளும் இந்நூலில் இதன் ஆசிரியரால் தெள்ளிதின் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. சிறந்த நீதிநூல்களாகிய திருக்குறள், நாலடியார் என்பவற்றோடு ஒருங்குவைத்து எண்ணத்தகும் பெருமையுடையது இந்நூல் என்று கூறலாம். அவ்விரு நூல்களிலும் காணப்படாத அரிய உண்மைகள் சிலவற்றை இதன் ஆசிரியர் தம் நுண்ணறிவாலும் அனுபவத்தாலும் அறிந்து கூறியிருப்பது பெரிதும் பாராட்டற்குரியதாகும். தமிழ் மொழியின் பழமையையும் தமிழ் மக்களின் பண்டை நாகரிகத்தையும் அறிய விரும்புவோர் இந்நூலாசிரியரால் பண்டைப் பழமொழி என்று எடுத்தாளப்பெற்றுள்ள எல்லாப் பழமொழிகளையும் நுணுகியாராய்ந்து பார்ப்பின் பல அரிய செய்திகள் புலப்படும் என்பது திண்ணம். அன்றியும், சேர சோழ பாண்டியருள் சிலரையும் கடையெழு வள்ளல்களுள் சிலரையும் பற்றிய செய்திகளும், இதிகாச புராணங்களில் சொல்லப்படும் சில கதைகளும் இந்நூலில் காணப்படுகின்றன. அவற்றுள் பல்யானைச் செல்கெழுகுட்டுவன்,1 மனுநீதிகண்ட சோழன்,2 தூங்கெயி லெறிந்த தொடித்தோட்செம்பியன்,3 சோழன் கரிகாலன்,1 பொற்கைப் பாண்டியன்,2 பாரி,3 பேகன்4 ஆகியோரின் வரலாற்றில் குறிக்கப்படுதற்கரிய சில செய்திகள் இந்நூலில் காணப்படுதல் அறியத்தக்கது. எனவே, இந்நூல் வரலாற்றாராய்ச்சியாளர்க்கும் பயன்படக்கூடியதோர் அரிய நூலாகும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலுள்ள மூன்று பெருநூல்களுள் இதுவும் ஒன்று.

இதன் ஆசிரியர் முன்றுறையரையர் என்பார். இத்தொடரை நோக்குங்கால், இவர் முன்றுறை என்ற ஊரில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு குறுநில மன்னராயிருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரக் கிடக்கின்றது. இவர் குறுநில மன்னரல்லராயின், அரையர் என்னும் பட்டம் பெற்ற ஓர் அரசியல் அதிகாரியாயிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். எனவே, இவருடைய இயற்பெயர் யாது என்பது இப்போது புலப்படவில்லை. அன்றியும் இவரது முன்றுறை என்னும் ஊர் எவ்விடத்தில் உள்ளது என்பதும் தெரியவில்லை. காலஞ்சென்ற தமிழ்ப் பேராசிரியர் திருமணம் செல்வக்கேசவராய முதலியார் அது பாண்டி நாட்டில் உள்ளதோர் ஊர் என்று தாம் வெளியிட்ட பழமொழி நூலின் பதிப்புரையில் எழுதியுள்ளனர். ஆனால், அது பாண்டி நாட்டில் எவ்விடத்தில் எப்பெயருடன் இப்போது உள்ளது என்பதை அவ்வறிஞர் விளக்கினாரில்லை. அப்பெயருடைய ஊர் ஒன்று இந்நாளில் பாண்டி நாட்டில் உளதா என்பதே தெரியவில்லை. எனினும், முன்றுறை, என்ற தொடரை நோக்குமிடத்து, இவ்வாசிரியரது ஊர், கொற்கை முன்றுறை, காவிரி முன்றுறை, திருமருத முன்றுறை, கழார் முன்றுறை, என்பவற்றைப்போல் தீர்த்தச் சிறப்புவாய்ந்து ஒரு பேராற்றங்கரையில் இருந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு அறியக்கிடக்கின்றது. இவர் தம் நூலில் அருகக் கடவுளுக்கு வணக்கம் கூறியிருத்தலாலும் இந்நூலில் காணப்படும் தற் சிறப்புப் பாயிரப் பாடலொன்றாலும்1 இவர் சமண சமயத்தினர் ஆவர் என்பது தெளியப்படும். எனவே, கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் சமண முனிவராகிய வச்சிரநந்தி என்பவரால் மதுரை மாநகரில் நிறுவப்பெற்ற தமிழ்ச் சங்கத்தை ஆதரித்து வளர்த்துவந்தவர் களுள் இப்புலவர் தலைவரும் ஒருவராக இருத்தல் கூடும். அங்ஙன மிருப்பின், இவர் பாண்டி நாட்டி லிருந்த ஓர் அரசியல் தலைவராக இருத்தல் வேண்டும் என்பது தேற்றம்.

இவர் ஆசிரியர் திருவள்ளுவனாரைப்போல் தம் நூலைப் பால் இயல்களாக வகுக்கவில்லை. ஆயினும் இவரது நூல் சிறந்ததொரு நீதிநூல் என்பதில் ஐயமில்லை.

இவர் சங்க நூல்களையும், சைவ வைணவ புராணங் களையும் இராமாயணம் பாரதம் ஆகிய இதிகாசங்களையும் சமய வேறுபாடு கருதாமல் பயின்றவர் என்பது. இவர் அவற்றில் காணப்படும் வரலாறுகளைத் தம் நூலில் ஏற்ற பெற்றியமைத்துப் பண்டைப் பழமொழிகளை விளக்கிக் காட்டுவதால் நன்கு துணியப்படும். அவ்வரலாறுகளுள் சில, இவர் நூலிலன்றி வேறு யாண்டும் காணப்படாத அருமையும் பெருமையும் உடையனவாயிருத்தல் அறியத்தக்கது. அவற்றைத் தக்க ஆதாரங்களில்லாமல் இவர் எடுத்துக் கூறமாட்டார் என்பது ஒருதலை. ஆகவே, அவ் வரலாறுகளுக்கு இவ்வாசிரியர் காலத்தில் சான்றுகள் இலக்கியங்களிலாதல் வழக்காற்றிலாதல் இருந்திருத்தல் வேண்டும் எனலாம். பழமொழிகளையே நூல் முழுவதும் அமைத்து இயற்றப்பெற்ற நூல்களுள் மிக்க தொன்மை
வாய்ந்தது இவருடைய நூலேயோகும்.

இந்நூலுக்குப் பழைய உரை ஒன்றுண்டு. அது பொழிப் புரையாக அமைந்தது. அதனைப் பதவுரையாக்கிக் கருத்துரையும் இன்றியமையாக் குறிப்புக்களும் மேற்கோளும் சேர்த்து, அதிகாரங்களாகிய உட்பிரிவுகளும் வகுத்து ஆசிரியர் செல்வக் கேசவராய முதலியார் வெளியிட்டிருப்பது பெரிதும் மகிழ்தற் குரியது. அன்றியும், செந்தமிழ்ப் பத்திராசிரியராக நிலவிய காலஞ்சென்ற திரு. நாராயண ஐயங்கார் இந்நூலின் முதல் இருநூறு பாடல்களுக்குச் சிறந்த பேருரை ஒன்று வரைந்து மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பாக வெளியிட்டிருப்பது போற்றத்தக்கதாகும். அவ்வறிஞர் எஞ்சியுள்ள இருநூறு பாடல்களுக்கும் தம் விளக்க உரையை எழுதாமல் காலஞ் சென்றமை மிகவும் வருந்துதற்குரியது. இந்நூல், தனக்குப் பிற்பட்ட புலவர் பெருமக்கள் பலர் உள்ளத்தைக் கவர்ந்துள்ளது என்பது அன்னோர் இயற்றியுள்ள நூல்களால் அறியப்படுகின்றது. இதில் காணப்படும் பண்டைப் பழமொழிகளுள்,

1.  குலவிச்சை - கல்லாமற் பாகம் படும் (பா. 21)

2.  கற்றலிற் கேட்டலே நன்று (பா. 61)

3.  உறற்பால - தீண்டா விடுதல் அரிது (பா. 62)

4.  தமக்கு மருத்துவர் தாம் (பா. 56)

5.  கெட்டார்க்கு நட்டாரோவில் (பா. 59)

6.  பழம்பகை நட்பாத லில் (பா. 97)

7.  காணா - ரெனச்செய்யார் மாணா வினை (பா. 102)

8.  தொட்டாரை ஒட்டாப் பொருளில்லை (பா. 118)

9.  செல்வம் - தொகற்பால போழ்தேதொகும் (பா. 120)

10. இன்னாதே - பேஎயோடாயினும் பிரிவு (பா. 122)

11. திருவொடும் இன்னாது துச்சு (பா. 123)

12. என்செய்தாங் கென்பாறினும் - ஆகாதார்க்காகுவதில் (பா. 123)

13. தன்கண்ணிற் - கண்டதூஉம் எண்ணிச் சொலல் (பா. 153)

14. வருந்தாதார் - வாழ்க்கை திருந்துதலின்று (பா. 175)

15. மணலுள் முழுகி மறைந்து கிடக்கும் நுணலுந்தன் வாயால் கெடும் (பா. 184)

16. அறிதுயில் - ஆர்க்கும் எழுப்ப லரிது (பா. 222)

17. யார்கானும் - அஞ்சுவார்க் கில்லை யரண் (பா. 254)

18. சான்றோர் - கயவர்க் குரையார் மறைவு (பா. 229)

19. நிறைகுடம் நீர்தளும்ப லில் (பா. 243)

20. அணியெல்லாம் ஆடையின் பின் (பா. 271)

21. பாய்பவோ - வெந்நீரும் ஆடாதார்தீ (பா. 254)

22. திரையவித் தடார் கடல் (பா. 317)

23. பெண்பெற்றான் அஞ்சான் இழவு (பா. 318)

24. முதலிலார்க் கூதிய மில் (பா. 342)

25. மரத்தின்கீ ழாகா மரம் (பா. 311)

26. உலகினுள் - இல்லதனக் கில்லை பெயர் (பா. 319)

27. அறிமடம் சான்றோர்க் கணி (பா. 361)

28. தீநாள் திருவுடையார்க் கில் (பா. 84)

29. ஒருவர் பொறை இருவர் நட்பு (பா. 247)

30. பின்னின்னா பேதையார் நட்பு (பா. 113)

என்பன யாவரும் அறிந்து கோடற்கரியனவாகும்.

இனி, கூறுங்கால் இல்லையே - ஒன்றுக்குதவாத ஒன்று1 எனவும், எக்காலும் - செய்யா ரெனினும் தமர் செய்வர்2, தாநட் டொழுகுதற்குத் தக்கார் எனல்வேண்டா - யார் நட்பே யாயினும் நட்புக் கொளல் வேண்டும்3 எனவும் போதரும் இவருடைய கருத்துக்கள் தொல்லாசிரியன்மார் கருத்துக்களும் உலகியல் நிகழ்ச்சிகளும் முரண்பட்டு நிற்றல்போல் காணப் படினும் சிறுபான்மைபற்றி அவற்றை ஏற்றுக்கோடலில் இழுக்கொன்றுமில்லை என்றுணர்க.

சிறுபஞ்சமூலம்


இந்நூல் சிறப்புப்பாயிரப் பாடல்கள் இரண்டோடு நூற்று நான்கு பாடல்களையுடையது. ஒவ்வொரு பாடலும் மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படும் ஐந்தைந்து பொருள்களைக் கூறுகின்றது. கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்தின் வேர்கள் சிறந்த மருந்தாகி மக்கள் உடற்பிணியைப் போக்கி நலம்புரியும் என்பது மருத்துவ நூலில் காணப்படுவதோர் உண்மையாகும். அவ்வைந்தையும் மருத்துவ நூல் வல்லார் சிறுபஞ்சமூலம் என்று கூறுவர். அவற்றைப் போல் ஒவ்வொரு வெண்பாவிலும் சொல்லப் பட்டுள்ள ஐந்தைந்து பொருள்கள் கற்போரின் உள்ளப் பிணியாகிய அறியாமையை நீக்கி நன்னெறியில் ஒழுகச் செய்து இம்மை மறுமை இன்பங்களை அளிக்க வல்லனவாதலின், இந்நூல் சிறுபஞ்சமூலம் என்ற பெயரினை எய்தியது என்பது அறியற்பாலது. இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாயிருப்பதோடு ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியுள்ள அம்மை என்னும் வனப்பினை யுடையது மாகும். இதன் ஆசிரியர் காரியாசான் எனப்படுவர். இவர் சைன சமயத்தினர் ஆவர்.1 இவருடைய ஆசிரியர் மாக்காயனார் என்னும் பெயரினர் என்பது இந்நூலின் இறுதியிலுள்ள பாயிரப் பாடலால் நன்குணரக் கிடக்கின்றது.2 அவர், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனார் என்று அந்நாளில் வழங்கப்பட்டிருத்தலால், அப்புலவர் மதுரையம்பதியில் வாழ்ந்த ஒரு தமிழாசிரியராதல் வேண்டும். எனவே, அந் நகரில் கி. பி. 470-ஆம் ஆண்டில் வச்சிரநந்தி என்ற சமண முனிவர் நிறுவிய தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராகி மாணவர் பலர்க்குத் தமிழ் நூல்களைக் கற்பித்து வந்த ஒரு நல்லாசிரியராக அம் மாக்காயனார் இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். அவர்பால் கல்வி பயின்று புலமை எய்தியவரே, திணைமாலை நூற்றைம்பது, ஏலாதி என்னும் இரு நூல்களும் இயற்றியுள்ள கணி மேதாவியார் என்பார். ஆகவே, சிறுபஞ்சமூலம் என்ற இந்நூலின் ஆசிரியராகிய காரியாசானும் கணிமேதாவியாரும் ஒருசாலை மாணாக்கர்கள் என்பது தெள்ளிதிற் புலனாதல் காண்க. எனவே, காரியாசான் மதுரையிற் பிறந்து வளர்ந்தவராகவும் இருக்கலாம்; அன்றேல் கல்வி கற்றற் பொருட்டு மதுரைக்குச் சென்று, சமயத் தொண்டு குறித்து அங்குத் தம் வாழ்நாள் முழுமையும் வதிந்தவராதல் வேண்டும். இவரது நூலில் சைனருடைய சிறப்புநீதிகள் சிறுபான்மை யாகவே காணப்படுகின்றன. எனவே, இவர் தம் நூலில் பெரும் பான்மையாகக் கூறியுள்ளவை, எல்லாச் சமயத்தினரும் படித்தற் கேற்ற பொது நீதிகளே என்று கூறலாம். இவர் செல்வம் மிகுந்தவராகவும், பெருங் கொடையாளராகவும் இருந்திருத்தல் வேண்டும் என்பது இந் நூற்பாயிரத்தால் அறியக் கிடக்கின்றது. இவர் ஆயுர்வேத நூற்பயிற்சியும், வட மொழிப் புலமையும் ஒருங்கே யுடையவர் என்பது ஆராய்ச்சி யாளர்களின் கருத்து. பொதுவாகப் பார்க்குமிடத்து, சமண சமயப் புலவர் எல்லோரும் வடமொழிப் பயிற்சியுடையவராக இருந்தனரென்று தெரிகிறது. இவரைப் பற்றிய பிற வரலாறுகள் புலப்படவில்லை.

இனி, சிறந்த கவிஞனுக்குரிய இலக்கணம் யாது என்பதை இவ்வாசிரியர் தம் சிறுபஞ்சமூலத்தில் ஒரு பாடலில் நன்கு விளக்கி யுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அப்பாடலின் கருத்து: பல நூல்களையும் தக்க ஆசிரியர்பால் கேட்டுப் பொருள் உணர்ந்தவனே பெரும்புலவன் ஆவன்; அவன் சிந்தையின் பெருமையினாலேதான் அவன் பாடும் பாட்டுச் சிறப்படையும் - என்பதாம். மற்றொரு பாடலில் செந்தமிழ் நன்கறியாதவன் கவிபாடுதல் நகைப்பிற்கு இடமாகும் என்னும் பொருள்பட, செந்தமிழ் தேற்றான் கவிசெயலும் - நாவகமே நாடின் நகை என்று இவர் கூறியிருப்பது1 உணரற்பாலதாம். எனவே, ஓர் ஆசிரியனுடைய செந்தமிழ்ப் புலமையும் தூய விரிந்த உள்ளமுமே அவனது நூல் உலகில் என்றும் நின்று நிலவிச் சிறப்புறுவதற்கு ஏதுக்களாம் என்பது இவரது அரிய கருத்தாதல் காண்க. இவர் தம் நூலில் தானத்தாற் போகம் தவத்தால் சுவர்க்கமாம் - ஞானத்தால் வீடாகும் நாட்டு2 என்றுரைத் துள்ளமையால் மெய்யுணர்தல் ஒன்றால்தான் வீடுபேற்றை எய்தலாம் என்பது இவரது உறுதியான கொள்கையாதல் உணர்க.

இனி, இவ்வாசிரியர் கூறியுள்ள தான் பிறரால் - சாவவென வாழான் சான்றோரால் பல்யாண்டும் - வாழ்க வெனவாழ்தல் நன்று3 என்ற பொருள் பொதிந்த அறிவுரை ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் மறவாமல் கடைப்பிடித் தொழுகுவதற்குரிய சிறப்புடையதாகும். தோற்கன்றைக் காட்டிக் கறந்த பசுவின் பாலை நன்னெறியில் ஒழுகுவோர் உண்ணமாட்டார்கள் என்று இப்புலவர் பெருந்தகையார் ஒரு பாடலில் கூறியிருப்பது4 அறியத் தக்கது. தோற் கன்றைக் காட்டிப் பசுக்களைக் கறக்கும் வழக்கம், சென்னை போன்ற நகரங்களில் இக்காலத்தில் மிகுதியாக இருத்தலைக் காணலாம். இக்கொடுஞ் செயல்கள் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிலும் நிகழ்ந்து வந்தன என்பது இவ்வாசிரியர் கூற்றால் நன்கறியப்படுகின்றது. எனவே, எந்தத் தீமையும் எந்தக் காலத்தும் நிகழ்தல் உலகியற்கை போலும். கொல்லாமை, புலாலுண்ணாமை ஆகிய இரு பேரறங்களையும் இவர் பல இடங்களில் வற்புறுத்திக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே, சைன சமயப் பேராசிரியர் எல்லோரும் தம் நூல்களில் அவ்வறங்களைக் கூறாமல் செல்லார் என்பது ஒருதலை. இவ்வாசிரியர் பலி என்னும் சொல்லைக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் சோறு என்ற பொருளில் வழங்கியுள்ளனர். அதனைக் குழவி பலி கொடுப்பான் - எண்பதின் மேலும் வாழ்வான்1 என்னும் அடிகளால் அறியலாம். இவர், திருக்குறள், பழமொழி ஆகிய இரு நூல்களையும் நுணுகி யாராய்ந்தவர் என்பது இவருடைய நூலால் தெள்ளிதிற் புலனாகின்றது. இவர் காலத்திற்குப் பிற்பட்ட புலவர் பெருமக்கள், இவர் நூலை நன்கு பயின்று இதிலுள்ள சொல்லையும் பொருளையும் பெரிதும் போற்றித் தம் தம் நூல்களில் அமைத்துள்ளனர் என்பது அன்னோர் நூல்களால் அறியப்படுகின்றது. இவருடைய ஆசிரியராகிய மாக்காயனாரைப் போல் இவரும் ஆசிரியர் என்று மக்களால் பாராட்டப் பெற்ற பெருமை யுடையவர் என்பது உணரற்பாலதாகும்.

ஏலாதி


இது கடவுள் வாழ்த்தோடு எண்பத்தொரு பாடல்களை யுடைய ஒரு நீதிநூல். இந்நூலில் ஒவ்வொரு பாடலிலும் அவ்வாறு பொருள்கள் கூறப்பட்டுள்ளன. ஏலம் ஒரு பங்கும், இலவங்கப்பட்டை இரண்டு பங்கும், நாககேசரம் மூன்று பங்கும், மிளகு நான்கு பங்கும், திப்பிலி ஐந்து பங்கும், சுக்கு அறு பங்குமாகச் சேர்த்துச் செய்யப் பெற்ற ஏலாதி சூரணம் மக்களுடைய நோயை நீக்கி உடலுக்கு வலிமையளித்தல்போல, பாடல் தோறும் அவ்வாறு பொருள்கள் அமைந்த ஏலாதி என்னும் இந்நூல், அன்னோரின் அறியாமையைப் போக்கி உயிர்க்கு உறுதி பயக்கும் மெய்யுணர்வை அளிக்கவல்லது என்பது இந்நூற் பெயரால் அறியக் கிடப்பதோர் உண்மை யாகும். இக் கருத்தினைத் தம் உள்ளத்திற்கொண்டே இதன் ஆசிரியர் இதற்கு ஏலாதி என்னும் பெயரை இட்டனர் எனலாம். இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று; ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியுள்ள அம்மையென்ற வனப்பிற்கு இலக்கியமாய் வெண்பா யாப்பில் அமைந்தது. இதன் ஆசிரியர் கணிமேதாவியார் எனப்படுவர். இந்நூலின் சிறப்புப்பாயிரப் பாடலால் இவர் கணிமேதையார் எனவும் வழங்கப் பெற்றனர் என்று தெரிகிறது. தமிழ்ப் புலவராகிய இவர் சோதிடத்திலும் வல்லுநராயிருந்தமை பற்றிக் கணிமேதையார் என்று வழங்கப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது தேற்றம். அங்ஙனமாயின் இவரது இயற்பெயர் வேறொன்றாதல் வேண்டும். அஃது இந்நாளில் புலப்படவில்லை. திணைமாலை நூற்றைம்பதின் ஆசிரியரும் இவரேயாவர். அகப்பொருளுக்கு இலக்கியமாயுள்ள அந்நூல் இவரது பொருளிலக்கணப் பயிற்சியையும், ஆராய்ச்சியையும் நன்கு விளக்குவதாகும். இவர் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனார் மாணாக்கர் என்று பாயிரத்தில் கூறப் பட்டிருத்தலால் இவரும் சிறுபஞ்சமூலத்தின் ஆசிரிய ராகிய காரியாசானும் ஒருசாலை மாணாக்கர்கள் என்பது தெள்ளிது. ஆகவே, மதுரை மாநகரில் சமண சமயத்தினர் நடத்தி வந்த தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராக அமர்ந்து, தமிழ்மொழி மூலமாகச் சமயத் தொண்டு புரிந்து வந்த சைனப் புலவருள் இவரும் ஒருவர் ஆவர். இவரைப் பற்றிய பிற வரலாறுகள் தெரியவில்லை.

இனி, இவ்வாசிரியர் தம் நூலில் கொல்லாமை, புலாலுண் ணாமை ஆகிய அறங்களைப் பல பாடல்களில் வற்புறுத்தி யிருத்தல்போல் எளியோர்க்கு உணவும் உடையும் வழங்குவோர் அடையும் பயனையும் பன்முறை எடுத்துக் கூறியுள்ளமை அறியற்பால தொன்றாம். அவை, கூறியது கூறலாகக் காணப் படினும் அவற்றின் சிறப்பும் பயனும் நோக்கி அங்ஙனம் கூறி யுள்ளனரென்றுணர்க. உலகில் அரசராகப் பிறந்து ஆட்சி புரிவதும், இல்லறத்திலிருந்துகொண்டு மனைவி யோடு இன்புற்று வாழ்வதும் மக்களாகப் பிறந்தோர் பெறுதற்குரிய பெரும்பேறுகள் என்பது இவர் கருத்து. இதனை,

பழியிலூண் பாற்படுத்தான் -
மண்ணாளும் மன்னனாய் மற்று (பா. 35)

எனவும்,

கூழீந்தான் கொல்யானை யேறி
அடிப்படுப்பான் மண்ணாண் டரசு (பா. 42)

எனவும்,

ஈத்துண்பான் ஆகும் இருங்கடல்சூழ் மண்ணரசாய் (பா. 44)

எனவும்,

தெளிந்தடிசில் ஈத்துண்பான் -
மாறான் மண்ணாளுமா மற்று (பா. 47)

எனவும்,

ஊணீந்தவர் பல்யானை மன்னராய் -
எண்ணியூ ணாவர் இயைந்து (பா. 52)

எனவும்,

ஊணீந்தார் மாக்கடல்சூழ் -
நாவலந் தீவாள்வாரே நன்கு (பா. 56)

எனவும்,

எள்ளானீத் துண்பானேல் ஏதமில் மண்ணாண்டு
கொள்வான் குடிவாழ்வான் கூர்ந்து (பா. 46)

எனவும்,

அன்புற் றசனங் கொடுத்தான் துணையினோ
டின்புற்ற வாழ்வான் இயைந்து (பா. 50)

எனவும்,

பாடலொ டாடல் பயின்றுயர் செல்வனாய்க்
கூடலொடூட லுளான் கூர்ந்து (பா. 51)

எனவும் போதரும் பல பாடற் பகுதிகளால் நன்குணரலாம். சமண சமயத்தினரான கணிமேதாவியார் இத்தகைய கருத்துக் களைத் தம் நூலில் வலியுறுத்திச் செல்லுதல் பெருவியப் பிற்குரியதாகும். இப்பிறப்பில் தம் வரலாற்றைப் புலவர் பெருமக்கள், விரும்பி எழுதுமாறு பெருவாழ்வெய்தி யுள்ள வர்கள், முற்பிறப்பில் மாணவர்கட்கு உணவு, உடை, எழுத்தாணி, புத்தகம் முதலியவற்றை வழங்கியவர்கள் என்று இவ்வாசிரியர் ஒரு பாடலில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்க தொன்றாம்.1 இவர் ஏலாதியில் ஒரு வெண்பாவில் வீடுபேற்றை மிகத் தெளிவாக விளக்கியுள்ளனர். அப்பாடல்,

பொய்தீர் புலவர் பொருள்புரிந் தாராய்ந்த
மைதீர் உயர்கதியின் மாண்புரைப்பின் - மைதீர்
சுடரின்று சொல்லின்று மாறின்று சோர்வின்
றிடரின் றினிதுயிலு மின்று

என்பதாம்.

இதன் கருத்து ஐயனாரிதனாரது புறப்பொருள் வெண்பா மாலையிலுள்ள,

பொய்யில் புலவர் புரிந்துறையு மேலுலகம்
ஐயமொன் றின்றி யறிந்துரைப்பின் - வெய்ய
பகலின் றிரவின்று பற்றின்று துற்றின்
றிகலின் றிளிவரவு மின்று

என்ற பாடலின் கருத்தோடு பெரிதும் ஒத்திருத்தல் காண்க.

இந்நூலில் மாண்டவர் மாண்ட என்று தொடங்கும் பாட லொன்று, தமிழ் மக்களின் அறவொழுக்கங்களுக்கும் பழைய நாகரிக நிலைக்கும் முற்றிலும் முரண்பட்ட செய்திகளைக் கூறுவதாயுள்ளது. அவ்வெண்பாவிற் காணப்படும் வடமொழிப் பெயர்கள், அது வடமொழியிலுள்ள மிருதி நூல்களைப் பின் பற்றி எழுதப்பட்டிருத்தல் வேண்டும் என்பதை நன்குணர்த்து கின்றன. எனவே, அதில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் தமிழ் நாட்டுப் பழைய வழக்க வொழுக்கங்களைக் குறிக்கவில்லை என்பது அறியற்பாலதாம். இந்நூல் சமண சமயத்தார்க்குரிய சிறப்பு நீதிகளைத் தன்னகத்தே மிகுதியாகக் கொண்டுள்ளது. ஆகவே, அச்சமயக் கொள்கைகள் பலவற்றை இந்நூலால் தெள்ளிதின் உணர்ந்து கொள்ளலாம். இதன் ஆசிரியராகிய கணிமேதாவியார் என்பார் சிறுபஞ்ச மூலத்திலுள்ள சில பாடல்களின் கருத்துக்களையும் சொற்பொருள்களையும் அப்படியே தம் நூலில் அமைத்திருத்தலால் இவர் அந்நூலை நன்கு படித்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஔரதன், கேத்திரசன், கானீனன், கூடன், கிரிதன், பௌநற்பவன், தத்தன், சகோடன், கிருத்திரமன், புத்திரிபுத்ரன், அபவித்தன், உபகிருதன், தேவாதிதேவன், வைசிரவண்ணன் ஆகிய வடமொழிப் பெயர்களை இவர் எடுத்தாண்டிருத் தலால் அம்மொழிப் பயிற்சியும் இவருக்கு இருந்திருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. இவர் தொண்டு என்னுஞ் சொல் ஒன்பது என்று பொருள்படுமாறு அதனை ஏலாதியிலுள்ள ஒரு வெண்பாவில் அமைத்துள்ளமை குறிப்பபிடத்தக்கதாகும்.

கார்நாற்பது


இந்நூல் நாற்பது வெண்பாக்களை யுடையது; கார் காலத்தின் சிறப்புக்கள் இந்நூலில் விதந்து கூறப்பட்டிருத்தலால் இது கார்நாற்பது என்னும் பெயர் எய்துவதாயிற்று. இது காலம் பற்றித் தோன்றிய ஒரு நூல் என்பதை,

காலம் இடம்பொருள் கருதி நாற்பான்
சால வுரைத்தல் நானாற் பதுவே

என்னும் இலக்கண விளக்கப்பாட்டியற் சூத்திரத்தால் நன்கறியலாம். கார்காலம் முல்லைத்திணைக்குரிய பெரும்பொழு தாகும். எனவே, முல்லைத்திணைக்குரிய அகவொழுக்கமே இந்நூலில் யாண்டும் கூறப்பட்டிருத்தல் காணலாம்.

இனி, இல்லறம் நிகழ்த்தும் தலைவன் ஒருவன் வேந்தற் குற்ற துணையாய்ப் பகையரசரோடு போர்புரியப் போகவேண்டி யிருந்தமையால், தன் பிரிவினைத் காதலிக்குரைத்து, கார்ப் பருவத் தொடக்கத்தில் தான் மீண்டுவருவதாகவும் அதுகாறும் அவன் பிரிவாற்றி யிருக்குமாறும் கூறிச்செல்லவே, அங்ஙனமே ஆற்றியிருந்த தலைவி அவன் குறித்த பருவத்தில் வாராமை கண்டு பெரிதும் வருந்தினாளாக, அதனைக் கண்ட தோழி தலைவியைப் பலவாறாக மென்மொழிகளால் ஆற்றுவித்துக் கொண்டிருக்க, பிரிந்து சென்ற தலைமகனும் மீண்டுவந்து தலைமகளை யடைந்தான் என்ற வரலாறு இந்நூலில் விரித்துக் கூறப்பட்டுள்ளது. நாடக வழக்குப்போல், தோழி, தலைமகள், தலைமகன், பாகன், என்போர் கூற்றுக்களை இவ்வரலாற்றில் நூலாசிரியர் முன்னிலையில் வைத்திருப்பது குறிப்பிடத் தக்கதாகும். கார் காலத்தின் சிறப்பையெல்லாம் தனித்தனியாகக் கூறினால் அவை படிப்போர்க்கு இன்பம் பயவாவாதலின் அவற்றை முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளாகிய இருத்தலை நிலைக்கலனாகக் கொண்ட வரலாறொன்றில் அமைத்து இந்நூலை ஆசிரியர் இயற்றியிருப்பது மிகப் பாராட்டற்பாலது.

கார்நாற்பது என்னும் இந்நூலின் ஆசிரியர் மதுரைக் கண்ணங் கூத்தனார் என்ற புலவர் ஆவர். இவர் சிறந்த புலமை யுடையவர் என்பது இந்நூலால் நன்கறியக்கிடக்கின்றது. இப்புலவர் பெருமான் மதுரைமாநகரில் வாழ்ந்தவர் என்பதும் இவருடைய தந்தையார் கண்ணனார் என்ற பெயருடையவர் என்பதும் இவர் கூத்தனார் என்னும் இயற் பெயருடையவர் என்பதும் தெளிவாகப் புலப்படுகின்றன. இவர் தம் நூலின் முதற் பாடலில் திருமாலையும் பத்தொன்பதாம் பாடலில் பலராமனையும்2 கூறியிருத் தலால் சமயக் கொள்கையில் வைணவராயிருத்தல் வேண்டும் என்று கருதுவதற்கு இடமுளது. ஆனால், இவர் கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் நாடெங்கும் மக்கள் விளக்கேற்றி வைத்துக்கொண்டாடும் சிவபெரு மானுக்குரிய பண்டை விழாவை இருபத்தாறாம் பாடலில் குறிப்பிட்டுள்ளனர். திருமால் முல்லை நிலத்திற்குரிய தெய்வமாதல் பற்றி அக்கடவுளை இவர் முதற்பாடலில் குறித்துள்ளனர் என்றும் கூறலாம். இவற்றையெல்லாம் ஆராயு மிடத்து, இவர் பிறப்பால் வைணவர் என்பதும் ஆனால் சமரசக் கொள்கையினர் என்பதும் நன்கு தெளியப்படும். இவர் இயற்றிய வேறு நூலாதல் செய்யுளாதல் இக்காலத்தில கிடைக்கவில்லை. இவரைப் பற்றிய பிற செய்திகளும் புலப்படவில்லை.

இவரது கார் நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இது கடைச்சங்க காலத்திற்குப் பிற்பட்ட இருண்ட காலத்தில் கி. பி. நான்காம் நூற்றாண்டில் தோன்றிய நூல் எனலாம். ஆகவே, இந்நூல் திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை எழுபது முதலான நூல்களுக்கு முற்பட்டது என்பது ஒருதலை. இந்நூலிலுள்ள வெண்பாக்கள் பெரும்பாலும் ஒரூஉ எதுகை மிகுந்தும் பல விகற்பமாகவும் இன்னிசையாகவும் இருத்தலொன்றே, இது மேலே குறிப்பிட்ட நூல்களுக்குக் காலத்தால் முற்பட்டது என்பதை வலியுறுத்துவதாகும். இந் நூலின் சிறப்பினை,

நலமிகு கார்த்திகை நாட்டவ ரிட்ட
தலைநாள் விளக்கிற் றகையுடைய வாகிப்
புலமெலாம் பூத்தன தோன்றி சிலமொழி
தூதொடு வந்த மழை.

என்ற பாடலால் அறிந்துகொள்ளலாம்.

ஐந்திணை ஐம்பது


இஃது, ஒவ்வொரு திணைக்கும் பத்துப் பாக்களாக ஐந்து திணைகட்கும் ஐம்பது பாக்களைத் தன்னகத்துக் கொண்டமை பற்றி ஐந்திணை ஐம்பது என்னும் பெயர் எய்தியது; அகத்திணை யொழுக்கங்களைச் சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் இயல்பினது. இதிலுள்ள செய்யுட்களுள் பல நேரிசை வெண்பாக்களாகவும், சில இன்னிசை வெண்பாக்களாகவும் உள்ளன. அவ்வெண்பாக்கள் சிறந்த நடையும் பொருள் வளமும் கொண்டு மிளிர்வதால் கற்போர் நெஞ்சத்தைப் பிணிக்குந் தன்மையவாயுள்ளன. எனவே, இந்நூற்பாயிரத்தில் ஐந்திணை யைம்பது மார்வத்தின் ஓதாதார் - செந்திமிழ் சேரா தவர் என்று கூறப்பட்டிருப்பது சாலப்பொருத்தமுடைய தேயாம். இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இதன் ஆசிரியர் மாறன் பொறையனார் என்னும் பெயரினர் என்பது இதிலுள்ள பாயிரப் பாடலால்1 அறியப்படுகின்றது. மாறன் பொறையனார் என்ற தொடர் மாறனுடைய மகனார் பொறையனார் என்று பொருள்படுவதாக உள்ளது. ஆகவே, மாறன் பொறையன் என்ற இரண்டு பெயர்களும் இயற்பெயர்களாதல் வேண்டும். இந்நிலையில், மாறன் என்பது பாண்டியனையும் பொறையன் என்பது சேரனையும் குறிக்குஞ் சிறப்புப் பெயர்களாகவும் காணப்படுகின்றன. எனவே, இவ்வாசிரியர் தென்பாண்டி நாட்டினராயிருத்தல் வேண்டும் என்று கருதற்கு இடமுளது. இவரை வண்புள்ளி மாறன் பொறையன் என்று பாயிரங் கூறுவது கொண்டு, இவர் அரசியலில் வரவு செலவு தொடர்புடைய ஓர் அதிகாரியா யிருந்தவர் என்று சிலர் கூறுகின்றனர். இவர் தம் நூலின் முதற் பாடலில்,1 மேகங்கள் கண்ணபிரானது நிறத்தைப்போல் இருண்டெழுந்து, முருகவேளின் வேற்படையைப்போல் மின்னி, சிவபெருமானுக்குரிய மாலையாகிய கொன்றைப் பூக்கள் மலரும் படி வலமாக எழாநின்றன என்று தோழி கூற்றில் வைத்துக் கூறியிருப்பதை நோக்குமிடத்து, இவர் சமயக் கொள்கையில் பொது நோக்குடையவர் என்பதும் ஆனால், புத்த சமண சமயத்தினர் அல்லர் என்பதும் நன்கு புலனாகின்றன. இவரைப் பற்றிய பிற செய்திகள் தெரிய வில்லை.

இவ்வாசிரியருடைய புலமைத்திறத்தையும் இவர் இயற்றியுள்ள ஐந்திணை ஐம்பது என்ற நூலின் அருமை பெருமைகளையும்,

சுனைவாய்ச் சிறுநீரை யெய்தாதென் றெண்ணிப்
பிணைமா னினிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சுஞ் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி (பா. 38)

கொண்கன் பிரிந்த குளிர்பூம் பொழினோக்கி
யுண்கண் சிவப்ப அழுதேன் ஒளிமுகங்
கண்டன்னை யெவ்வம்யா தென்னக் கடல்வந்தென்
வண்டல் சிதைத்ததென் றேன் (பா. 44)

என்னும் பாடல்களால் நன்கறியலாம்.

இந்நூலில் காணப்படும் சில உலகியல் உண்மைகள் ஈண்டுக் குறிப்பிடத்தக்கனவாகும். அவை,

மிக்க மிகுபுகழ் தாங்குபவோ தற்சேர்ந்தார்
ஒற்கங் கடைப்பிடியா தார் (பா. 48)

அறிவ தறியு மறிவினார் கேண்மை
நெறியே யுரையாதோ மற்று (பா. 23)

குளிரும் பருவத்தே யாயினுந் தென்றல்
வளியெறியின் மெய்யிற் கினிதாம் (பா. 30)

என்பனவாம்.

பிறமொழியாளரான ஏதிலார் ஆட்சியில் நம் தமிழ்மொழி சிறிதும் ஆதரிக்கப்படாமல் புறக்கணித்தொதுக்கப்பட்ட கி. பி. நான்காம் நூற்றாண்டில் அகப்பொருளுக்கு ஓர் அரிய இலக்கிய மாக இனிய வெண்பாக்களில் இத்துணைச் சிறப்புவாய்ந்த இந்நூலை இயற்றிய மாறன் பொறையனார் என்ற கவிஞர் கோமான் இருவேறுலகத்தியற்கையோடிகலி, கல்விச் செல்வமும் பொருட் செல்வமும் ஒருங்கே படைத்து, வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த ஓர் அறிஞராயிருத்தல் வேண்டும் என்பது திண்ணம்.

திணைமொழி ஐம்பது


இது, திணையொன்றிற்குப் பத்துப் பாக்களாக அகத் திணை ஐந்துக்கும் ஐம்பது பாக்களைத் தன்பாற் கொண்டது. இது பற்றியே, இந்நூல் திணைமொழியைம்பது என்னும் பெயர் பெற்றது எனலாம். இதிலுள்ள ஐம்பது பாடல்களுள், நாற்பத்தாறு இன்னிசை வெண்பாக்களாகவும் நான்கு நேரிசை வெண்பாக்களாகவும் உள்ளன. இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். ஐந்திணையைம்பதைப்போல் இதுவும் சொற்பொருள் நயங்கள் நிறைந்த ஒரு சிறந்த நூல் என்பது தேற்றம். இந்நூலின் ஆசிரியர் கண்ணன் சேந்தனார் ஆவர். இவர் சாத்தந்தையார் என்பவருடைய புதல்வர் என்று தெரிகிறது. இவ்வாசிரியரின் இயற்பெயரை நோக்குங்கால் இவர் சமண சமயத்தினர் அல்லர் என்பதும் சைவம் வைணவம் ஆகிய இரு பெருநெறி களுள் ஒன்றைக் கைக்கொண்டொழுகியவராதல் வேண்டும் என்பதும் நன்கு துணியப்படும். கடைச்சங்ககாலத்தில் வாழ்ந்தவரும் சோழன் போரவைக் கோப் பெருநற்கிள்ளியைப் பாடிய வரும் ஆகிய சாத்தந்தையார் என்ற புலவரே இவருடைய தந்தையாராயிருத்தல் வேண்டுமென்று சிலர் கூறுகின்றனர். இக்கொள்கையை வலியுறுத்தும் சான்றுகள் இல்லாமையால் இதனை ஒருதலையாகத் துணிய இயலவில்லை.

இனி, இந்நூலிலுள்ள,

வானுயர் வெற்ப இரவின் வரவேண்டா
யானை யுடைய சுரம் (பா. 1)

அரிபரந்த வுண்கண்ணாள் ஆற்றாமை நும்மின்
தெரிவார்யார் தேரு மிடத்து (பா. 12)

என்னுந் தோழி கூற்றுக்களும்,

கரும்பின்கோ தாயினேம் யாம் (பா. 39)

என்னுந் தலைமகள் கூற்றும் இந்நூலின் தெளிவுடைமையை நன்கு புலப்படுத்துவனவாகும். அன்றியும்,

யாழுங் குழலு முழவு மியைந்தென
வீழு மருவி விறன்மலை நன்னாட
மாழைமா நோக்கியு மாற்றா ளிரவரின்
ஊரறி கெளவை தரும் (பா. 7)

என்ற பாடலால் இந்நூலின் அருமை பெருமைகளைத் தெள்ளிதின் உணர்ந்து கொள்ளலாம். இதிலுள்ள ஊரறி கெளவை தரும் என்னும் ஈற்றடி, முத்தொள்ளாயிரத்தில் குன்று விளக்கேபோல் என்று தொடங்கும் பாடலின் ஈற்றடி யாகிய நாடறி கெளவைதரும் என்பதனோடு சொல்லாலும் பொருளாலும் ஒத்திருத்தல் காண்க. இந்நூல் கி. பி. நான்காம் நூற்றாண்டில் இயற்றப்பெற்றதாதல் வேண்டும்.

ஐந்திணை எழுபது


இஃது அகப்பொருள் துறைகளுக்கு இலக்கியமாயுள்ள ஒரு சிறந்த நூல். ஒவ்வொரு திணைக்கும் பதினான்கு பாக்களாக ஐந்து திணைகட்கும் எழுபது பாக்களைத் தன்னகத்துக் கொண்டமை பற்றி இந்நூல் ஐந்திணை யெழுபது என்ற பெயர் எய்தியமை அறியத்தக்கது. இதில் இப்போதுள்ள பாடல்கள் அறுபத்தாறேயாம். எஞ்சிய நான்கும் சிதைந்தழிந்தன போலும். இந்நூலிலுள்ள செய்யுட்கள் இன்னிசை வெண்பாக்களாகவும் நேரிசை வெண்பாக்களாகவும் உள்ளன. இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. ஐந்திணையைம்பதைப்போல் இதுவும் கற்போர் உள்ளத்தைக் கவரும் இயல்பினதாகும். இதில் கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்றுளது. அது யானைமுகக் கடவுளாகிய பிள்ளையார்க்கு உரியதாகும். பிள்ளையாரென்று வழங்கப்பெற்றுவரும் விநாயகக் கடவுளின் வழிபாடு கி. பி. ஏழாம் நூற்றாண்டில்தான் நம் தமிழ் நாட்டில் தொடங்கியது என்பது ஆராய்ச்சியால் அறிந்ததோர் உண்மையாகும். எனவே, அக்கடவுளுக்கு வாழ்த்துக் கூறப்பட்டுள்ள பாடல் இந்நூலாசிரியரால் இயற்றப்பட்டதன்று என்பது தேற்றம். அக் கடவுள் வாழ்த்துச் செய்யுள் நூலின் புறத்தேயுள்ளமையும், அதற்குப் பழைய உரை காணப்படாமையும் இவ்வுண்மையை நன்கு வலியுறுத்துதல் அறியற்பாலதாம்.

இந்நூலின் ஆசிரியர் மூவாதியார் என்று கூறப்படுவர். இவர் சமண சமயத்தினர் என்று சிலர் கருதுகின்றனர். அவ்வாறு கொள்வதற்கு இந்நூலகத்துச் சான்றுகளின்மை உணரற்பாலது. இவ்வாசிரியரைப் பற்றிய செய்திகள் எவையும் இந்நாளில் கிடைக்கவில்லை. மூவாதியார் என்ற இவரது பெயர் கூட இவருடைய இயற்பெயரா அல்லது ஏதேனும் ஓர் ஏதுப் பற்றி இவருக்கு வழங்கிய பெயரா எனபது புலப்படவில்லை.

இனி, இவரது நூலாகிய இவ்வைந்திணை எழுபதில் தலைமகள் கூற்றாக அமைந்துள்ள பாடலொன்று உள்ளத்தைப் பிணிக்கும் தன்மையதாக உளது. அது,

குறையொன் றுடையேன்மற் றோழி நிறையில்லா
மன்னுயிர்க் கேமஞ் செயல்வேண்டு மின்னே
யராவழங்கு நீள்சோலை நாடனை நம்மில்
இராவார லென்ப துரை

என்பதாம்.

ஐந்திணை யைம்பதின் முப்பத்தெட்டாம் பாடலிலுள்ள

கள்ளத்தி னூச்சுஞ் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி

என்னும் இரண்டடிகளும் இந்நூலில் முப்பத்தாறாம் பாடலில் காணப்படுகிற,

கள்ளர் வழங்குஞ் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி

என்ற அடிகளோடு பெரும்பாலும் ஒத்திருத்தல் காணலாம். இவ்விரு நூலாசிரியர்களுள் மாறன் பொறையனார் காலத்தால் சிறிது முற்பட்டவர் எனலாம். ஆகவே, மூவாதியார் என்பார் ஐந்திணையைம்பதை நன்கு பயின்று அதிலுள்ள தொடர்களை அப்படியே தம் நூலில் சில பாடல்களில் அமைத்துக் கொண்டிருத்தல் வேண்டும் என்று கூறுவதில் இழுக்கொன்று மில்லை. இவர் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் இருந்தவர் ஆவர்.

திணைமாலை நூற்றைம்பது


இது நூற்றைம்பத்து மூன்று வெண்பாக்களையுடைய ஒரு நூலாகும்; அகத்துறைகள் பலவற்றிற்கு இலக்கியமாயமைந்தது. குறிஞ்சித் திணைக்கு முப்பத்தொரு பாடல்களும் நெய்தல் திணைக்கு முப்பத்தொரு பாடல்களும் பாலைத்திணைக்கு முப்பது பாடல்களும் முல்லைத்திணைக்கு முப்பத் தொரு பாடல்களும் மருதத்திணைக்கு முப்பது பாடல்களுமாக நூற்றைம் பத்து மூன்று பாடல்களைத் தன்பாற் கொண்டது. இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இதன் ஆசிரியர், கணிமேதாவியார் ஆவர். இவரே ஏலாதி என்ற நூலுக்கும் ஆசிரியர் என்பது முன்னர் விளக்கப் பட்டுள்ளது. இப்புலவர் வரலாற்றுள், இஞ்ஞான்று அறியப்படும் சில செய்தி களை ஏலாதி யென்னும் தலைப்பில் காணலாம். சமண சமயத்தினராகிய இவ்வாசிரியர் அகச்சுவையமைந்த இன்பப் பாடல்களையுடைய இந்நூலை இயற்றியிருப்பது. இவரது பரந்த நோக்கத்தையும் அகத்துறைப் பாடல்கள் நிறைந்த சங்கநூற் புலமையையும் இனிது விளக்குவதாகும். இந்நூலிலுள்ள நான்காம் பாடலில் கோடாப் புகழ் மாறன் கூடலனையாள் என்று இவர் கூறி யிருப்பது, இவ்வாசிரியர் பாண்டிவேந்தன் ஒருவனால் ஆதரிக்கப்பெற்றவர் என்பதை நன்கு புலப்படுத்துவ தாக உளது. எனவே, அப்பாண்டியன் களப்பிரர் ஆளுகைக்குட் பட்டிருந்த ஒரு குறுநில மன்னன் ஆதல் வேண்டும். அவன் யாவன் என்பது இப்போது தெரியவில்லை. அன்றியும் அத் தொடர், இப்புலவர் பாண்டி நாட்டில் மதுரையம்பதியில் வாழ்ந்தவராதல் வேண்டும் என்பதை ஓரளவு உணர்த்துதல் காண்க. இவர் காமவேளின் ஐந்தம்புகளையும் ஒரு பாடலில் குறிப்பிட்டிருத்தலும், அளகம், வகுளம், சுவர்க்கம், அலங்காரம் ஆகிய வடசொற்களைத் தம் நூலில் எடுத்தாண்டிருத்தலும் இவர் கடைச்சங்க காலத்திற்குப் பிற்பட்டவர் என்பதை உறுதிப்படுத்துதல் உணரத்தக்கது.

இனி,

மாயவனுந் தம்முனும் போலே மறிகடலுங்
கானலுஞ்சேர் வெண்மணலுங் காணாயோ

என்னும் பாடற்பகுதியில் மறிகடலுக்கு மாயோனையும் வெண் மணலுக்கு மன்னோனாகிய பலராமனையும் இவர் உவமானங்க ளாக அமைத்திருப்பது, படித்தின்புறற்பாலதாகும்.

ஒருவன் இப்பிறப்பின்கண் செய்த தீவினை, இப் பிறப்பிலேயே அவனையடைந்து பயன் கொடுக்கும்போல் தெரிகிறது; அறியாதவர்கள் அது மறுபிறப்பில்தான் பயன ளிக்குமென்று கூறுவார்கள் என்னுங் கருத்தினை இவ்வாசிரியர்,

இம்மையாற் செய்ததை யிம்மையே யாம்போலும்
உம்மையே யாமென்பா ரோரார்காண்

என்ற பாடற்பகுதியில் குறித்திருப்பது அறியத்தக்கது. சைவசமயகுரவருள் ஒருவராகிய சுந்தரமூர்த்திகளும் செற்றொருவரைச் செய்த தீமைகள் இம்மையே வரும் திண்ணமே3 என்று இக்கருத்தினைத் தம் அருட்பாட லொன்றில் வலியுறுத்தியுள்ளமை காண்க.

இனி, உடன்போக்கினை மேற்கொண்ட தலைவனையும் தலைவியை யும் தேடிச்சென்ற செவிலித்தாய்க்கு அவர்களை எதிரே கண்ட ஒரு கணவனும் அவன் மனைவியும் அச்செய்தியை யுணர்த்துவதாகக் கணவன் கூற்றில் வைத்து இவ்வாசிரியர் இயற்றியுள்ள அரிய பாடலொன்று, பண்டைத் தமிழ் மக்களின் உள்ளத் தூய்மையையும் ஒழுக்கத்தின் ஒப்புயர்வற்ற நிலையையும் நன்கு புலப்படுத்துவதாக உள்ளது. அது,

நண்ணிநீர் சென்மின் நமரவர் ஆபவேல்
எண்ணிய எண்ணம் எளிதரோ - எண்ணிய
வெஞ்சுட ரன்னானை யான்கண்டேன் கண்டாளாம்
தண்சுட ரன்னாளைத் தான்

என்பதாம்.

இப்பாடலில் ஆண்மகனது பிறன்மனை நோக்காத பேராண்மையும் பெண்மகளது பிற ஆடவரைக் கண்களாற் காணாத கற்புடைமையும் தெள்ளிதிற் குறிப்பிடப்பட்டிருத்தல் உணரற்பாலதாம். இக்கருத்தினைச் சைவசமய குரவருள் ஒருவராகிய மணிவாசகப் பெருமான்,

மீண்டா ரெனவுவந் தேன்கண்டு நும்மையிம் மேதகவே
பூண்டா ரிருவர்முன் போயின ரேபுலியூ ரெனைநின்
றாண்டா னருவரை யாளியன் னானைக்கண் டேனயலே
தூண்டா விளக்கனை யாயென்னையோவன்னை சொல்லியதே

என்று தம் திருக்கோவையாரில், ஒரு பாடலில் கூறியிருத்தல் அறியற்பாலதாகும்.

இந்நூலின் இறுதியில் புறவுரையாக ஒரு வெண்பா உளது. அதனை நோக்குமிடத்து, இவ்வாசிரியர் காலத்தில் அகப் பொருளாகிய களவியலை வெறுத்துக்கொண்டிருந்த ஒரு குழுவினர் நம் தமிழ்நாட்டில் இருந்திருத்தல் வேண்டும் என்பதும் அவர்கட்கு அதன் சிறப்பினை விளக்கி அன்னோர் கொண்டிருந்த வெறுப்பினைப் போக்கவேண்டியே இவ்வினிய நூலை இவர் இயற்றியிருத்தல் வேண்டும் என்பதும் நன்கு வெளியாகின்றன. இவர் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் இருந்தவர் என்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது.

கைந்நிலை


இஃது அறுபது வெண்பாக்களையுடைய ஒரு நூல்; ஐந்திணைக்குரிய அகவொழுக்கத்திற்கு இலக்கியமாயமைந்தது. எனவே, ஒவ்வொரு திணையும் பன்னிரண்டு பாடல்களை யுடையதாகும். இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பல வெண்பாக்கள் சிதைந்தழிந்து போயின. இந்நூலின் ஆசிரியர் மாறோகத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் என்பார். இவரது இயற்பெயர் புல்லங்காடனார் என்பது. இவரது ஊர் முள்ளி நாட்டு நல்லூராகும். அவ்வூர் மாறோகத்து முள்ளி நாட்டு நல்லூர் என்று கூறப்பட்டிருத்தலால், அது திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள பாண்டியரின் பழைய தலைநகராகிய கொற்கையின் பக்கத்திலிருந்ததோர் ஊராதல் வேண்டும். மறோகம் கொற்கையைச் சூழ்ந்தநாடு என்பது உணரற் பாலதாகும். கைநிலையின் ஆசிரியராகிய இப் புல்லங்காடனார் தென்பாண்டி நாட்டில் கொற்கைக் கருகாமையில் வாழ்ந்தவ ராதல் வேண்டுமென்பதை இந்நூலின் இறுதிப் பாடல்1 குறிப் பாக உணர்த்துதல் அறியத்தக்கது. இவருடைய தந்தையார் காவிதியார் என்ற பட்டம் பெற்றவராயிருத்தலால் இவர் பாண்டியர்க்கு வழி வழி அமைச்சுரிமை பூண்டொழுகிய ஒரு தொல்பெருங் குடியில் தோன்றியவர் என்பது நன்கு தெளியப் படும். இவரைப்பற்றிய மற்றைச் செய்திகள் புலப்படவில்லை. இந்நூலில், பாசம், ஆசை, இரசம், கேசம், இடபம், உத்தரம் ஆகிய வட சொற்கள் பயின்றுவருதலை நோக்குமிடத்து, இது கடைச்சங்க காலத்திற்குப் பின்னர்த் தோன்றிய நூல் என்பது நன்கு துணியப்படும். ஆகவே, இதன் ஆசிரியர் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் இருந்தவராதல் வேண்டும்.

இதுகாறும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் கடைச் சங்க காலத்திற்குப் பிறகு கி. பி. ஆறாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் தோன்றியுள்ள பதினான்கு நூல்களைப் பற்றிய செய்திகளும் அந்நூல்களை இயற்றிய ஆசிரியன்மாரின் வரலாறுகளும் ஒருவாறு விளக்கப்பட்ன. பதினெண் கீழ்க் கணக்கில் எஞ்சியுள்ள நூல்கள் திருக்குறள், களவழி நாற்பது, முதுமொழிக்காஞ்சி, நாலடியார் ஆகிய நான்குமேயாம். அவற்றுள், திருக்குறள் கடைச்சங்க நாளில் கிறித்துவ ஆண்டு தோன்றுவதற்கு முன்னே இயற்றப்பெற்றது என்பதும், கடைச்சங்கப் புலவர்களுள் சிலர் அந்நூற் சொற்பொருள்களைத் தம் பாடல்களில் அமைத்து அவ்வரிய நூலின்பால் தமக்குள்ள ஈடுபாட்டைப் புலப்படுத்தியுள்ளனர் என்பதும் கடைச்சங்க காலம் என்ற பகுதியில் எடுத்துணர்த்தப்பட்டுள்ளன.

களவழிநாற்பது என்ற நூலை இயற்றிய பொய்கையார் என்பார், கடைச்சங்கப் புலவருள் ஒருவர் என்பது புறநானூற்றி லுள்ள 48, 49-ஆம் பாடல்களாலும் நற்றிணையிலுள்ள 18-ஆம் பாடலாலும் நன்கறியப்படு கின்றது. அன்றியும், இப்புலவரால் சிறை மீட்கப்பெற்ற சேரன் கணைக் காலிரும் பொறையின் பாட லொன்று புறநானூற்றில் காணப்படுவதும் இவ்வுண்மையை உறுதிப்படுத்துவதாகும். எனவே, சோழன் செங்கணான் மீது இப்புலவர் பெருமான் பாடிய களவழி நாற்பதும் கடைச்சங்க காலத்து நூல் என்பது தேற்றம். ஒரு சாரார் சோழன் செங்கணான் கடைச்சங்க காலத்திற்குப் பிற்பட்டவன் என்று கூறுவர். அவ்வேந்தற்கு நல்லடி என்ற புதல்வன் ஒருவன் இருந்தனன் என்பது அன்பிற் செப்பேடுகளால் அறியக் கிடக்கின்றது. அந்நல்லடியைக் குறிக்கும் பாடலொன்று, சங்கத் தொகை நூல்களுள் ஒன்றாகிய அகநானூற்றில் காணப்படுகின்றது. ஆகவே, நல்லடியின் தந்தையாகிய சோழன் செங்கணான் என்பான் கடைச்சங்க காலத்திலிருந்தவன் என்பது நன்கு துணியப்படும். எனவே, அவன் கடைச்சங்க காலத்திலிருந்த வனல்லன் என்று கூறுவது எவ்வாற்றானும் பொருந்தாத தொன்றாம்.

முதுமொழிக்காஞ்சி இயற்றிய கூடலூர் கிழார் என்பவர், சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை இறந்த பொழுது வருந்திப் பாடிய பாடலொன்று புறநானூற்றில் காணப்படுகின்றது. அன்றியும், அவ்வேந்தன் விரும்பியவாறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய ஐங்குறு நூறு தொகுத்த வரும் இப்புலவரேயாவர். எனவே, இவர் கடைச்சங்கப் புலவருள் ஒருவர் என்பது தேற்றம். ஆகவே, இவரது முதுமொழிக் காஞ்சியும் கடைச்சங்க காலத்தில் இயற்றப் பெற்ற நூலாதல் வேண்டும்.

இதுகாறும் விளக்கியவாற்றால் திருக்குறள், களவழி நாற்பது, முதுமொழிக்காஞ்சி ஆகிய மூன்று நூல்களும் கடைச்சங்க காலத்தில் தோன்றியவை என்பது நன்கு புலனாதல் காண்க. அக்காரணம் பற்றியே இவ்விருண்டகாலப் பகுதியில் அம்மூன்று நூல்களின் வரலாறும் ஆராய்ச்சியும் சேர்க்கப் படவில்லை.

இனி, நாலடியார் என்ற நூலில் முத்தரையர் என்னும் பட்டத்துடன் திகழ்ந்த குறுநில மன்னரின் கொடைத் திறமும் சிறப்பும் இரண்டு பாடல்களில்2 கூறப்பட்டுள்ளன. முத்தரை யரைப்பற்றிய செய்திகள் கி. பி. எட்டாம் நூற்றாண்டில்தான் முதலில் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. ஆகவே, அன்னோரைப் புகழ்ந்துரைக்கும் நாலடியாரும் கி. பி. எட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற நூலாதல் வேண்டும் என்பது ஒருதலை. எனவே, அந்நூல் தமிழகத்தின் வடபகுதியில் பல்லவரும் தென்பகுதியில் பாண்டியரும் பேரரசர்களாய்ச் சிறப்புடன் ஆட்சிபுரிந்து கொண்டிருந்த காலப் பகுதியில் தோன்றியது என்பது நன்கு தெளியப்படும். அதனால் இவ்விருண்ட காலப் பகுதியில் நாலடியாரைப் பற்றிய வரலாறு எழுதப்படவில்லை.

இன்னிலை என்னும் நூலொன்று பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சேர்த்து ஆராய்ச்சியாளர் சிலரால் கணக்கிடப் பட்டுள்ளது. அன்னோர் கருத்தின் படி அதனைச் சேர்த்துக் கொண்டால் கைந்நிலை என்ற நூலைக் கீழ்க்கணக்கு நூல்களி லிருந்து விலக்கவேண்டும். ஆனால், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இவை என்றுணர்த்தும் நாலடி நானாற்பது எனத் தொடங்கும் பழைய வெண்பாவில் மெய்ந்நிலைய காஞ்சி யொடு இன்னிலை சொல் காஞ்சியொடு என்ற பாடங்கள் காணப்படுகின்றன. அவற்றை நோக்குங்கால், இன்னிலை என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றெனக் கோடற்கு இடமில்லை என்க. இன்னிலைச் செய்யுட்களுள் ஒன்றாதல் பழைய உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்துக்காட்டப் பெறாமையும் இக்கருத்தை வலியுறுத்துவதாகும்.

காரைக்காலம்மையார் நூல்கள்


காரைக்காலம்மையார் இயற்றியனவாக இப்போது பதினோராந் திருமுறையில் காணப்படும் நூல்கள் நான்காகும். அவை, அற்புதத் திருவந்தாதியும் திருவிரட்டை மணிமாலையும் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இரண்டுமாம். இவற்றுள், அற்பதத்திருவந்தாதி நூற்றொரு வெண்பாக்களைத் தன்னகத்துக் கொண்டது. திருவிரட்டை மணிமாலை, வெண்பாவும் கட்டளைக் கலித்துறையுமாகவுள்ள இருபது பாடல்களைத் தன்பால் உடையது. இவை இரண்டும் அந்தாதித் தொடையில் அமைந்தவை; சிவபெருமானுடைய பல்வகைச் சிறப்பினையும் ஒப்புயர்வற்ற நிலையையும் எடுத்துரைப்பவை. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இரண்டும் இருபத்திரண்டு செய்யுட்களையுடையவை. இவை, தொண்டை மண்டலத்திலுள்ள வட திருவாலங்காடு என்னுந் திருப்பதியில் அண்டமுற நிமிர்ந்தாடும் கூத்தப்பெருமான் மீது பாடப் பெற்றவையாகும். இப்பதிகங்கள் இரண்டிலுமுள்ள இறுதிப் பாடல்களிலும்1 அற்புதத்திருவந்தாதியின் கடைசிச் செய்யுளிலும்2 காரைக்காலம்மையார் தம்மைக் காரைக்காற் பேய் என்று கூறிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வம்மையார் சிவபெருமானிடத்தில் வைத்திருந்த பேரன்பினை அற்புதத் திருவந்தாதி யிலுள்ள இரண்டு பாடல்களால் நன்கறிந்து கொள்ளலாம். அவை,

இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரு நெறிபணியா ரேனும் - சுடருருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்
கன்பறா தென்னெஞ் சவர்க்கு

வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்
தானத்தான் என்பாருந் நாமென்க - ஞானத்தான்
முன்னஞ்சத் தாலிருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான்
என்னெஞ்சத் தானென்பன் யான்

என்பனவாம்.

இவ்வம்மையாரின் வரலாறு, திருத்தொண்டர் புராண மாகிய பெரிய புராணத்தில் சேக்கிழாரடிகளால் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் அறுபத்தாறு பாடல்களில் பத்திச் சுவையொழுகப் பாடப் பட்டுள்ளது. அவ்வரலாற்றின் சுருக்கமாவது:

காரைக்காலம்மையார், சோழ மண்டலத்திலே கீழ் கடலைச் சார்ந்த காரைக்கால் என்னும் பெரும்பதியில் எல்லாச் செல்வங்களிலும் சிறந்து விளங்கிய தனதத்தன் என்ற வணிகற்குப் புனிதவதி என்னும் பெயருடைய புதல்வியாய்த் தோன்றி, நாகையம்பதியிலிருந்த நிதிபதியின் புதல்வன் பரமதத்தன் என்பவனை மணந்து இல்லறம் நிகழ்த்திவரும் நாட்களில், அவன் கொண்டுவந்த இரு மாங்கனிகளுள் ஒன்றினைத் தம் வீட்டில் உண்ட சிவனடியார் ஒருவர்க்கு அளித்துவிட்டமையால், அதனைக் கணவன் கேட்ட ஞான்று சிவபெருமான் திருவருள் துணைகொண்டு வேறு ஒரு பழம் வருவித்துக் கொடுக்க, அப்பழம் முதலில் உண்டதைக் காட்டிலும் பெருஞ் சுவை யுடையதாயிருத்தலை யுணர்ந்த கணவன் ஐயுற்றுக் கேட்ட போது, அம்மையார் இன்றியமையாமைபற்றி உண்மை நிகழ்ச்சியை யுணர்த்தின ராக, அவன் அதனைச் சோதிக்க வேண்டி மற்றொரு மாங்கனி வருவிக்குமாறு கூற, அங்ஙனமே மற்றொன்றும் வந்து விரைவில் மறைந்துபோகவே, அதனால் பேரச்சம் எய்திய கணவன் தக்க சமயம் பார்த்து வாணிகத்தின் பொருட்டுச் செல்பவன்போல் அம்மையாரைவிட்டு நீங்கிப் பாண்டி நாட்டிற்குச் சென்று மறுமணம் புரிந்து வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில், உறவினர் அம்மையாரை அழைத்துக் கொண்டு அங்குச் சென்றபோது, அவன் அம்மையாரைத் தெய்வமென்று கூறி அடிகளில் வீழ்ந்து வணங்குதலும், அதனைக் கண்ட அம்மையார் பெருநாணமுற்று இல்வாழ்க்கையில் பற்றின்றி அதனைத் துறந்து, சிவபெருமானை வேண்டிப் பேய் வடிவம் பெற்றுக் கயிலைக்குச் சென்று அப்பெருமானால் அம்மையே என்றழைக்கும் பேறு பெற்று, வடதிருவாலங் காட்டிற்குத் திரும்பிவந்து ஆடவல்லான்றன் எடுத்த திருவடிகளின்கீழ் என்றும் இருந்து இன்புறும் பெருநிலை யெய்தினர் - என்பதாம்.

இவ்வம்மையார் பேய்வடிவம் பெற்றனர் என்பது உடலில் தசை மிகவுங் குறைந்து போகவே, எற்புச் சட்டகமாக நிலவினர் என்பதை உணர்த்துமென்று கூறலாம். கி. பி. ஏழாம் நூற்றாண்டில் நம் தமிழகத்தில் விளங்கிய சைவசமயகுரவராகிய திருஞானசம்பந்தர், இவ்வம்மையார் தலையால் நடந்து சென்று வழிபட்ட திருவாலங்காட்டில் தாம் அடி வைத்து நடத்தற்குப் பெரிதும் அஞ்சிப் புறத்தேயுள்ள பதியொன்றில் தங்கியிருந்தன ரென்று சேக்கிழாரடிகள் தம் திருத்தொண்டர் புராணத்தில் கூறியுள்ளனர். எனவே, திருஞான சம்பந்தருக்கு முற்பட்டவர், காரைக்காலம்மையார் என்பது தேற்றம். ஆகவே, கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட இருண்ட காலப் பகுதியில் இருந்தவர் இவ்வம்மையார் என்பது தெள்ளிது. எனவே, இவர் அற்புதத் திருவந்தாதி, இரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் ஆகிய நான்கு நூல்களையும் கி. பி. ஐந்து, ஆறாம் நூற்றாண்டில் இயற்றியிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. இந்நூல்களில் இவ்வம்மையார் ஆண்டுள்ள சங்கரன், வேதியான், உமை, அரன், ஈசன், இயமானன், சேமம், கணம், ஆரம், அந்தரம், சிரம், சோதி, கமலம், சிரமம், அந்தி, சரணாரவிந்தம், அட்டமூர்த்தி, ஞானமயம், அந்தாதி ஆகிய வட சொற்களும் தொடர்களும், அற்புதத் திருவந்தாதி என்ற நூற் பெயரும், வட மொழி தமிழகத்தில் மிகப் பரவியிருந்த கி. பி. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டில் இந்நூல்கள் தோன்றி யிருத்தல் வேண்டு மென்பதை உறுதிப்படுத்துதல் காண்க.

அம்மையாரது அற்புதத்திருவந்தாதியிலுள்ள

நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக
நீல மணிமிடற்றான் நீர்மையே - மேலுலந்த
தெக்கோலத் தெவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத் தவ்வுருவே யாம்

அறிவானுந் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற
மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாயம்
அப்பொருளுந் தானே அவன்

என்ற வெண்பாக்கள் சைவ நெறியின் சீரிய கொள்கைகளை அறிவுறுத்துதல் உணரற்பாலதாகும்.

திருமந்திரம்


இது மூவாயிரம் பாடல்களையுடையது; சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் பத்தாந்திருமுறையாகத் திகழும் சிறப்புடையது. இஃது ஒன்பது தந்திரங்களாக வகுக்கப்பெற்றது. ஒவ்வொரு தந்திரமும் பல அதிகாரங்களைத் தன்னகத்துக் கொண்டது. இவ்வொன்பது தந்திரங்களிலும் இருநூற்று முப்பத்திரண்டு அதிகாரங்கள் உள்ளன. இந்நூல் கிடைத்த வரலாறு ஒன்று செவிவழிச் செய்தியாகத் தொன்றுதொட்டு வழங்கிவருகின்றது. அது, திருஞான சம்பந்தர் திருவாவடு துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வணங்கும் பொருட்டு அங்குச் சென்றபோது, திருக்கோயிலின் பலிபீடத்திற் கண்மையில் தமிழ்மணம் கமழ்தல் கண்டு அவ்விடத்தில் அகழ்ந்து பார்க்கும் படி செய்தலும், அதனடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது திருமந்திர நூலாயிருத்தலை யறிந்து பெருமகிழ்ச்சியுற்று இவ்வரிய நூலின் அருமைபெருமைகளை எடுத்துக்கூறி இது தமிழ் நாட்டில் யாண்டும் பரவி யாவர்க்கும் பயன்படுமாறு செய்தருளினர் என்பதாம். இவ்வரலாற்றால் தமிழகத்தில் திருமந்திர நூல் ஒரு காலத்தில் கிடைக்காமற் போயிருத்தல் வேண்டும் என்பதும், பிறகு திருவாவடுதுறைக் கோயிலிலிருந்து ஒரு பிரதி திருஞானசம்பந்த சுவாமிகள் காலத்தில் கிடைத்திருத்தல் வேண்டும் என்பதும் நன்கு புலப்படுதல் காண்க.

தமிழ் நாட்டில் ஏதிலாராகிய களப்பிரரின் ஆட்சி நடைபெற்ற காலப்பகுதியில் பல தமிழ் நூல்கள் அழிந்தும் அழிக்கப்பட்டும் போயின. அக்காலத்தில் தோன்றிய இத்திருமந்திர நூல் அழிந்துபோகாதவாறு செப்பேடுகளில் எழுதப்பெற்று ஒரு பேழையில் அடக்கஞ் செய்யப்பட்டுத் திருவாவடுதுறைத் திருக்கோயிலின் பலிபீடத்திற்கருகில் புதைத்துவைக்கப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதும், பிறகு தமிழ்வேந்தர் ஆட்சியின்கீழ் நாடு அமைதியெய்தியஞான்று திருஞானசம்பந்தப் பெருமானது பேரருள் திறத்தினால் இந்நூல் வெளிவந்து யாண்டும் பரவியிருத்தல் வேண்டும் என்பதும் நன்கு துணியப்படும். செவிவழிச் செய்திகள் காலப்போக்கில் பல மாறுதல்களுக்குள்ளாதல் இயல்பேயாம்.

இந்நூலின் ஆசிரியர் திருமூலநாயனார் ஆவர். இவர் திருக்கயிலையில் நந்தியின் திருவருள் பெற்ற சிவயோகிகளுள் ஒருவர் என்றும் எண்பெருஞ் சித்திகளில் வல்ல பெருஞ் சித்தர் என்றும் திருவாவடுதுறைக் கோயிலின் மேல்புறத்துள்ள அரசமரத்தடியில் மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத்தில மர்ந்து ஆண்டிற்கொரு பாடலாக மூவாயிரந்திருமந்திரப் பாடல்களை அருளினார் என்றும் சேக்கிழாரடிகள் திருத்தொண்டர் புராணத்தில் கூறியுள்ளனர். இச்செய்திகளுள் சில,

சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்
சேர்ந்திருந் தேன்சிவ னாவடு தண்டுறை
சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலிற்
சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்க ளோதியே (பாயி.79)

எனவும்,

என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்ச்செய்யு மாறே (மேற்படி. 81)

எனவும்,

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ் (மேற்படி. 99)

எனவும்,

முத்தி முடிவிது மூவா யிரத்திலே (மேற்படி. 100)

எனவும் போதரும் திருமந்திரப் பாடற்பகுதிகளால் உறுதியாதல் காண்க. ஆனால், இவர் மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத் திலமர்ந்து ஒவ்வோர் ஆண்டிற்கு ஒவ்வொரு பாடலாக மூவாயிரம் பாடல்களைக் கூறியருளினார் என்பதற்குத் திருமந்திர நூலில் அகச்சான்றுகள் காணப்படவில்லை. எனினும், இவர் சிவயோகியாதலால் நெடுங்காலம் இருந்திருத்தல்வேண்டும் என்பது திண்ணம். இவ்வுண்மையை, ஒப்பில் எழுகோடி யுகமிருந்தேனே என்றும் இருந்தேன் இக்காயத்தே எண்ணிலிகோடி2 என்றும் இவர் தம் திருமந்திரத்தில் கூறியுள்ளவற்றால் நன்கறியலாம்.

இனி, ஒன்றவன்றானே என்று தொடங்குஞ் செய்யுள் தான் திருமந்திரத்தின் முதற்பாடல் என்பது சேக்கிழாரடிகள் கூற்றால் உணரப்படுகின்றது. ஆனால், அச்சிடப்பெற்று வெளிவந்துள்ள திருமந்திர நூலில் ஐந்து கரத்தனை யானை முகத்தனை என்று தொடங்கும் விநாயகர் வணக்கம் முதற் செய்யுளாக உள்ளது. மூத்த பிள்ளையாராகிய யானைமுகக் கடவுளின் வழிபாடு, கி. பி. ஏழாம் நூற்றாண்டின் இடையில் திருஞான சம்பந்தர் காலத்திலிருந்த சிறுத்தொண்ட நாயனாரால் நம் தமிழ்நாட்டில் முதலில் தொடங்கப்பெற்றுப் பிறகு தமிழகம் முழுவதும் பரவி, யாண்டும் நிலைபெற்றது என்பது ஆராய்ச்சியில் அறிந்ததோர் உண்மையாகும். எனவே, திருஞான சம்பந்தருக்குக் காலத்தால் முந்தியவரான திருமூல நாயனாரது திருமந்திரத்தில் முதலிலுள்ள யானைமுகக் கடவுளைப் பற்றிய பாடல் பிற்காலத்தில் ஒருவரால் எழுதிச் சேர்க்கப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு புலனாதல் காண்க. அங்ஙனமே பல பாடல்கள் இந்நூலில் இடைச் செருகலாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றமையால், இப்போதுள்ள திரு மந்திரத்தில் மூவாயிரத்து நாற்பத்தேழு பாடல்கள் காணப்படுகின்றன. அன்றியும், சைவசிந்தாந்த மகாசமாசத்தார் வெளியிட்டுள்ள திருமந்திரத்தில் இன்னும் இருபத்துநான்கு பாடல்கள் அதிகப் பாடல்கள் என்ற தலைப்பில் நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, இந்நூலில் இப்போது 3071 பாடல்கள் உள்ளன என்பது உணரற்பாலது. இவற்றையெல்லாம் நோக்குமிடத்து, பிற்காலத்தில் தோன்றிய சைவசித்தாந்தப் புலவர்களுள் ஒருவராதல் சிலராதல் தம் கருத்துக்களைச் செய்யுட்களில் அமைத்து, அப்பாடல்களைத் திருமந்திர நூலில் இடையிடையே சேர்த்திருத்தல் வேண்டும் என்பது தெள்ளிதிற் புலனாதல் காண்க.

இந்நூலில் ஒரே பாடல் இருமுறை அல்லது மும்முறை வெவ்வேறு இடங்களில் வந்துள்ளமை குறிப்பிடத்தக்க தொன்றாம். அவ்வாறுள்ள அதிக பாடல்கள் ஐம்பத்திரண் டாகும்.

இனி, இந்நூலிற் காணப்படும் ஒட்டியாணம்,1கடுக்கன்,2 மல்லாக்கத்தள்ளல்,3 வட்டி,4 பொதுக்கென,5 சிதம்பரம்6 முதலான பிற்காலச் சொல்வழக்கு இதில் இடைச் செருகலாகச் சேர்க்கப் பட்ட சில பாடல்கள் உண்டு என்பதை உறுதிப் படுத்துதல் அறியத்தக்கது.

இந்நூலாசிரியர் முதலில் ஆகமங்கள் ஒன்பது தோன்றின என்றும், பின்னர் அவை விரிந்து இருபத்தெட்டு ஆகமங்களாகப் போயின என்றும் திருமந்திரப் பாடலொன்றில் கூறியிருப்பது உணரற்பாலதாகும். (பா. 1429) அன்றியும், இவ்வாசிரியர் தம்முடைய திருமந்திரம் ஓர் ஆகமநூல் என்றும் இது சிவபெருமான் திருவடித்துணை கொண்டு தம்மால் இயற்றப்பட்டதென்றும் நந்தியிணையடி என்று தொடங்கும் எழுபத்துமூன்றாஞ் செய்யுளில் குறித்துள்ளனர். ஆகவே இந்நூல் சைவசித்தாந்தக் கொள்கைகளையுணர்த்தும் பழைய தமிழாகமநூல் என்பதும், இதற்கு வடமொழியில் முதனூல் இல்லை என்பதும் அறியற்பாலவாம். இவர் பழைய சிவாகமங்கள் ஒன்பதையும் உளத்திற்கொண்டே, தம் திருமந்திர நூலை ஒன்பது தந்திரங்களாக வகுத்துள்ளனர் என்று கூறலாம். இவ்வொன்பது தந்திரங்களிலுமுள்ள சில அதிகாரங்கள் எல்லா மக்கட்கும் பொதுவாகவுள்ள யாக்கை நிலையாமை, புலால்மறுத்தல், அன்புடைமை, நடுவுநிலைமை, வாய்மை, அவாவறுத்தல், புறங்கூறாமை முதலான பொது அறங்களை எடுத்துரைக்கின்றன: பிற அதிகாரங்கள் எல்லாம் சைவசித்தாந்த உண்மைகளைக் கூறுகின்றன. ஆனால் இந்நூலிலுள்ள பல பாடல்கள் பொருள் விளங்காத நிலையில்தான் உள்ளன.

மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சைவ நூல் பரிசோதகரா யிருந்து காலஞ்சென்ற சேற்றூர்ச் சுப்பிரமணியக் கவிராயர் இந்நூலில் நூறு பாடல்களுக்குச் சிறந்த பேருரை வரைந்து மதுரைத் தமிழ்ச்சங்கப் பதிப்பாக அதனை வெளியிட்டுள்ளமை பாராட்டத் தக்கதாகும். இனி,

நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் (பா. 85) என்றும்,
ஆர்க்கும் இடுமின் அவரிவ ரென்னன்மின் (பா. 250) என்றும்,
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் (பா. 2104) என்றும்,
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம் (பா. 1823) என்றும்,
அகத்திற் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம் (பா. 2944) என்றும்,

இவ்வாசிரியர் கூறியுள்ள அரிய உண்மைகள் எல்லாச் சமயத்தினரும், எத்தகைய வேறுபாடுமின்றி எஞ்ஞான்றும் நினைவிற் கொண்டு ஒழுகத்தக்க பொதுவான அறிவுரைகளாகும்.

சைவ சமய குரவராகிய சுந்தரமூர்த்திகள், திருமூல நாயனாரைச் சிவனடியார் அறுபத்து மூவருள் ஒருவராக வைத்துத் தம் திருத்தொண்டத் தொகையில்1வணக்கம் கூறியுள்ளனர். நம்பியாண்டார் நம்பிகள் தம் திருத்தொண்டர் திருவந்தாதியில்2 இவர் வரலாற்றை ஒரு பாடலில் சுருக்கமாக உரைத்துள்ளனர். சேக்கிழாரடிகள் தம் திருத்தொண்டர் புராணத்தில்3 அவ்வரலாற்றை இருபத்தெட்டு இனிய பாடல்களில் விரித்துப் பாடியுள்ளனர். ஆகவே, இவர்கள் எல்லோர்க்கும் காலத்தால் முந்தியவர் திருமூலர் என்பது தேற்றம். திருஞானசம்பந்தர் திருவாவடுதுறைத் திருக் கோயிலுக்குச் சென்றபோது பலிபீடத்திற்கண்மையில் நிலத்தைத் தோண்டுவித்து அவ்விடத்திலிருந்து திருமந்திர நூலை எடுத்தனர் என்னும் வரலாற்றை நோக்குங்கால், திருமூலர் கி. பி. ஏழாம் நூற்றாண்டினிடையில் நிலவிய திருஞானசம்பந்தருடைய காலத்திற்கும் முற்பட்டவர் என்பது தெள்ளிது. இவர் சிதம்பரத்தையும் அதிலுள்ள பொன்னம்பலத்தையும் திருமந்திரத்தில் சில பாடல்களில்1 கூறியுள்ளமையால் தில்லை மாநகரில் அவ்வம்பலம் அமைக்கப்பெற்ற பின்னரே இந்நூலை இயற்றியிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. தில்லை யம்பதியில் கூத்தப்பெருமானுக்கு அம்பலம் அமைத்து அதற்குப் பொன் வேய்ந்தவன் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்த பல்லவ வேந்தனாகிய சிம்மவர்மன் ஆவன். எனவே, தில்லைப் பொன்னம்பலத்தைத் தம் நூலில் கூறியுள்ள திருமூல நாயனார் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலாதல் ஆறாம் நூற்றாண்டிலாதல் இந்நூலை இயற்றியிருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும்.

இனி, இவரது நூலிலுள்ள 204-ஆம் பாடல் யாப்பருங் கலவிருத்தியில் அவ்வுரையாசிரியரால் மேற்கோளாகக் காட்டப் பெற்றுள்ளது. சித்தாந்தம் என்னும் வட சொற்றொடரைத் தமிழ் நூலில் முதலில் எடுத்து வழங்கியவர் திருமூலரே என்பது உணரற்பாலதொன்றாம். பிற்காலத்தில் இச்சொற்றொடர் சமய நூல்களில் மிகுதியாகப் பயின்றுவருதலைக் கற்றோர் பலரும் அறிவர். ஆனால், திருமூலர் காலத்திற்குப் பின்னர் விளங்கிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திகள், திருவாத வூரடிகள் ஆகிய சமய குரவர் நால்வரும் இச் சொற்றொடரைத் தம் திருப்பதிகங்களில் எடுத்தாளாமை குறிப்பிடத்தக்கதாகும். எனினும், கடல் சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்க னடியார்க்குமடியேன் என்று சுந்தர மூர்த்திகளால் திருத்தொண்டத் தொகையில் பாராட்டப் பெற்ற இரண்டாம் நரசிங்கவர்மன் என்ற பல்லவ மன்னன் தான் காஞ்சியில் எடுப்பித்த கைலாசநாதர் கோயிலில் பொறித்துள்ள வடமொழிக் கல்வெட்டொன்றில்1 தன்னைச் சைவ சித்தாந்த நெறியைப் பின்பற்றுபவன் என்று கூறியிருப்பது அறியத்தக்கது. ஆகவே, சமய குரவர் காலங்களில் சித்தாந்தம் என்ற தொடர் வடமொழி நூல்களில் பயின்று வந்ததுபோலும். பழைய தமிழ் நூல்களுள் திருமந்திரத்தைத் தவிர வேறு நூல்களில் இத் தொடர் காணப்படாமை குறிப்பிடத்தக்கதாகும்.

முத்தொள்ளாயிரம்


இது சேர சோழ பாண்டியர் ஆகிய முடியுடைத் தமிழ் வேந்தர் மூவரையும் பாட்டுடைத் தலைவராகக்கொண்டு அறம் பொருள் இன்பம் பற்றிப் புகழ்ந்து பாடப்பெற்ற ஒரு பழைய தமிழ் நூலாகும். இந்நூல் வெண்பா யாப்பில் அமைந்தது; ஈராயிரத்தெழுநூறு பாடல்களை யுடையது; மூவேந்தரையும் தனித்தனியே தொள்ளாயிரம் தொள்ளாயிரம் பாடல்களில் சிறப்பித்துக் கூறுங் காரணம்பற்றி இது முத்தொள்ளாயிரம் என்னும் பெயர் பெறுவதாயிற்று. புறத்திரட்டு என்ற தொகை நூலிலிருந்து இக்காலத்தில் கிடைத்துள்ள முத்தொள்ளாயிரப் பாடல்கள் நூற்றொன்பதாகும். இச் செய்யுட்களின் இனிமை யையும், அருமையையும் உணர்ந்த சேதுவேந்தர் அவைக்களப் புலவர் காலஞ்சென்ற ரா. இராகவையங்கார் இவற்றுள் நூற்றைந்து பாடல்களைத் தொகுத்து முத்தொள்ளாயிரச் செய்யுட்கள் என்ற பெயருடன் மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பாக முதலில் வெளியிட்டனர். இதுகாறும் நூல் முழுமையும் யாண்டும் கிடைக்காமையால் இஃது இறந்துபோன தொன்னூல்களுள் ஒன்று என்பது தேற்றம்.

இனி, சங்கப் புலவர்களைச் சங்கத்துச் சான்றோர் எனவும் கடைச்சங்க காலத்திற்குப் பின்னர் நிலவிய புலவர் பெரு மக்களைப் பிற சான்றோர் எனவும் பேராசிரியர் தம் தொல்காப்பிய உரையில் குறித்திருப்பதைக் காணலாம். இவ்வுண்மையை, நெடுவெண்பாட்டே முந்நா லடித்தே - குறுவெண் பாட்டினளவெழு சீரே என்னுந் தொல்காப்பியச் செய்யுளியல் சூத்திரத்தின் உரையில் பதினெண் கீழ்க்கணக் கினுள்ளும் முத்தொள்ளாயிரத்துள்ளும் ஆறடியினேறாமற் செய்யுள் செய்தார் பிறசான்றோரும் என்று பேராசிரியர் கூறியுள்ளவற்றால் நன்கறிந்துகொள்ளலாம். எனவே, முத்தொள்ளாயிர ஆசிரியர் கடைச்சங்கப் புலவர் அல்லர் என்பதும் அச்சங்க காலத்திற்குப் பிறகு விளங்கியவர் என்பதும் பேராசிரியரது தொல்காப்பிய உரைப்பகுதியால் தெள்ளிதிற் புலப்படுதல் காண்க.

செங்கண் நெடியான்மேல் தேர்விசய னேற்றியபூப்
பைங்கண்வெள் ளேற்றான்பால் கண்டற்றால் - எங்கு
முடிமன்னர் சூடியபூ மொய்ம்மலர்த்தார் மாறன்
அடிமிசையே காணப் படும்

என்னும் முத்தொள்ளாயிரப் பாடலுக்கு மறுப்புரையாகத் திருமாலடியாருள் ஒருவராகிய நம்மாழ்வார் தம் திருவாய் மொழியில்,

தீர்த்தன் உலகளந்த சேவடிமேற் பூந்தாமம்
சேர்த்தி யதுவே சிவன்முடிமேற் றான்கண்டு
பார்த்தன் றெளிந்தெழுந்த பைந்துழா யான்பெருமை
பேர்த்தும் ஒருவராற் பேசக் கிடந்ததே

என்ற பாடலொன்றைக் கூறியுள்ளனர். எனவே, கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டினிடையிலிருந்த நம்மாழ்வார்க்கு முத்தொள்ளாயிர வாசிரியர் காலத்தால் முற்பட்டவர் ஆவர்.

நாம நெடுவேல் நலங்கிள்ளி சோணாட்டுத்
தாமரையு நீலமுந் தைவந் - தியாமத்து
வண்டொன்று வந்தது வாரல் பனிவாடாய்
பண்டன்று பட்டினங் காப்பு

என்ற முத்தொள்ளாயிரப் பாடலிலுள்ள பண்டன்று பட்டினங் காப்பு என்னுந் தொடரைப் பெரியாழ்வார் தம் திருமொழியில், நெய்க்குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள்போல் நிரந்தெங்கும் கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம்பெற உய்யப்போமின்.

மெய்க்கொண்டு வந்துபுகுந்து வேதப் பிரானார் கிடந்தார் பைக்கொண்ட பாம்பணையோடும் பண்டன்று பட்டினங்காப்பே.

என்பது முதலாகவுள்ள எட்டுச் செய்யுட்களின் இறுதியில் அமைத்துள்ளனர். எனவே,முத்தொள்ளாயிர வாசிரியர் பெரியாழ்வாரின் காலமாகிய கி. பி. எட்டாம் நூற்றாண்டிற்கும் முந்தியவர் என்பது தேற்றம்.

செய்யா ரெனினுங் தமர்செய்வ ரென்னுஞ்சொல்
மெய்யாதல் கண்டேன் விளங்கிழாய் - கையார்
வரிவளை நின்றன வையையார் கோமான்
புரிவளை நின்றியம்பக் கேட்டு

என்னும் முத்தொள்ளாயிரக் கைக்கிளைச் செய்யுளில் செய்யா ரெனினுந் தமர்செய்வர் என்ற பழமொழித் தொடர் காணப்படுகின்றது. அன்றியும், மன்னுயிர்காவல் என்று தொடங்கும் கைக்கிளைப்பாட்டில் பழமொழியிலுள்ள தொடர் ஒன்றை நீரொழுகப் பாலொழுகா வாறு என்று சிறிது மாற்றி அமைத்துள்ளனர். ஆகவே, இந்நூலாசிரியர் பழமொழியின் ஆசிரியராகிய முன்றுறை யரையர்க்குப் பின்னர் இருந்திருத்தல் வேண்டும் என்று தெரிகிறது. இதுகாறும் ஆராய்ந்தவற்றால் பழமொழியாசிரியரின் காலமாகிய கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரும் பெரியாழ்வார் நிலவிய கி. பி. எட்டாம் நூற்றாண்டிற்கு முன்னரும் இவ்வாசிரியர் இருந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு வெளியாதல் காணலாம். பிற்காலத்தில் தமிழ்வேந்தர்களின் குதிரைகளுக்கு வழங்கிய கனவட்டம், பாடலம், ஆகிய பெயர்களை இவர் தம் நூலில் கூறியிருத்தலாலும், நாமம், பூமி, பரிசயம், ஓசை, திலகம், வீதி, சேலேகம், சாலேகம், சேனை, உதிரம், விசயன், உபாயம், ஆகம், நேமி, சமம் முதலான வடசொற்களை எடுத்தாண்டிருத்தலாலும் தமிழகத்தில் வடமொழி பரவிப் பெருமை யெய்தியிருந்த கி. பி. ஆறாம் நூற்றாண்டில் இவர் இருந்திருத்தல் வேண்டும் என்று கொள்வது எவ்வாற்றானும் பொருந்தும் எனலாம்.

இவர் சேர சோழ பாண்டியருள் எவ்வேந்தனையும் பேர் குறித்துத் தனியே புகழ்ந்து பாடாமல் அம்மூவேந்தரையும் அன்னோர்க்குரிய பொதுப்பெயர்களால் சிறப்பித்துப் பாடியுள்ளமையொன்றே, இவர் பரிசில் முதலான பயன் கருதி இந்நூலை இயற்றவில்லை என்பதை நன்கு புலப்படுத்துவதாகும். எனவே, முடியுடைத் தமிழ் வேந்தர் மூவருடைய அறிவு திருவாற்றல்களையும் வீரம் கொடை முதலானவற்றையும் எல்லோர்க்கும் உணர்த்தும் பொருட்டு ஆசிரியர் இந்நூலை இயற்றியிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை.

இந்நூலாசிரியருடைய பெயரும் வரலாறும் தெரிய வில்லை. பெரியாழ்வாரும் நம்மாழ்வாரும் இவர் நூலைப் பயின்றிருத்தலை நோக்குங்கால், இவர் பாண்டி நாட்டிலிருந்த புலவராயிருத்தல் வேண்டும் என்பது தெள்ளிது.

மன்னிய நாண்மீன்1 என்று தொடங்கும் கடவுள் வாழ்த்துப் பாடலாலும், புகழ் என்ற பகுதியிற் காணப்படும் மடங்கா மயிலூர்தி எனவும், செங்கண் நெடியான்மேல் எனவும் தொடங்கும் வெண்பாக்களாலும் இந்நூலாசிரியர் சைவ சமயத்தினராயிருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும்.

விருந்தே தானும் - புதுவது கிளந்த யாப்பின் மேற்றே என்னுந் தொல்காப்பியச் செய்யுளியற் சூத்திரத்தின் உரையில் புதுவதுகிளந்த யாப்பின் மேற்றென்ற தென்னை யெனின். புதிதாகத் தாம் வேண்டியவாற்றால் பல செய்யுளுந்தொடர்ந்து வரச்செய்வது; அது முத்தொள்ளாயிரமும் பொய்கையார் முதலாயினார் செய்த அந்தாதிச் செய்யுளும் எனவுணர்க என்று பேராசிரியர் கூறியிருத்தலால், முத்தொள்ளாயிரம் எனப்படுவது ஆசிரியர் தாம் வேண்டியவாற்றால் புதிதாக இயற்றிய தொடர்நிலைச் செய்யுள் என்பது தெளிவாகப் பெறப்படு கின்றது. ஆகவே, இந்நூல், ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியுள்ள விருந்து என்னும் வனப்பிற்கு இலக்கியமாயுள்ளது என்பது அறியத் தக்கது. இதிலுள்ள வெண்பாக்கள் பெரும் பான்மை நான்கடியாலும் சிறுபான்மை ஐந்தாறு அடிகளாலும் அமைந்தவை என்பதும் அவற்றுள் கைக்கிளைச் செய்யுட்களே மிகுதியாக இருந்தன என்பதும் தொல்காப்பியச் செய்யுளி யலிலுள்ள 158, 159ஆம் சூத்திரங்களின் உரையிற் காணப்படும் பேராசிரியரின் குறிப்புக்களால் வெளியாகின்றன. இந்நூலில் இக்காலத்தில் கிடைத்துள்ள நூற்றொன்பது பாடல்களையும்1 ஆராயுங்கால், இது முடியுடைத் தமிழ் வேந்தர் மூவருடைய நாடு, நகரம், யானை, குதிரை,வென்றி, கொடை முதலான வற்றைப் புகழ்ந்தும், அவர்கள் பெற்ற திறைப் பொருளைச் சிறப்பித்தும் , அன்னோரின் பகைப் புலங்களைப் பழித்துமுள்ள பாடல்களையும், சுட்டியொருவர் பெயர் கொண்ட பற்பல கைக்கிளைச் செய்யுட்களையும் தன்னகத்துக்கொண்டது என்பது நன்கு தெளியப்படும்.

இனி இந்நூலிற் காணப்படும் பழைய வழக்கங்களும் செய்திகளும் ஈண்டுக் குறிப்பிடத் தக்கனவாம். அவை, யானை புறப்பட்டுச் செல்லுங்கால் அதற்கு முன்னே பறையறைந்து சென்றமை (9, 62). தமிழ்நாட்டுப் பெண்கள் கூடலிழைக்கும் வழக்கமுடையராயிருந்தமை (73), பிணியுற்றார்க்குப் பிறந்த நாளில்பிணிமிகும் என்னுங் கொள்கையாண்டும் பரவி யிருந்தமை (95), அரசர்கள் குடிகளிடம் ஆறிலொரு கடமை பெற்று ஆட்சிபுரிந்து வந்தமை (57), பாண்டியனது குதிரை கனவட்டம் என்னும் பெயர் எய்தியிருந்தமை (50), தமிழ் வேந்தர்கள் தம் பிறந்தநாள் விழாக்களில் அந்தணர்கட்குப் பசுவும் பொன்னும், புலவர் பெருமக்கட்குக் களிறும் வழங்கியமை (40), பாண்டி நாட்டுக் கொற்கைத் துறையில் சிறந்த முத்துக்கள் கிடைத்து வந்தமை (101), முற்காலத்தில் தமிழ்நாட்டுப் பெண்கள் சங்குகளால் அமைக்கப்பட்ட வளைகளை அணிந்து வந்தமை (41), தமிழகத்தில் இல்லங்கள் தோறும் குடுமிக் கதவுகள் இருந்தமை (43), சோழனுடைய குதிரை பாடலம் என்னும் பெயர் பெற்றிருந்தமை (48) என்பனவாம்.

சோழனுடைய குதிரை கோரம் என்னும் பெயருடையது என்பது,

ஆரந் தழுவு தடந்தோ ளகளங்கன்
கோரந் தொழுத கொடிக்கு (தண்டியலங். சூ. 38)

எனவும்,

கோழி யனுபமன் கோரம் புலிவாழி
வாழிய மண்டலத்து வான் (வீரசோ. அலங். சூ. 13, 32 மேற்கோள்)

எனவும் போதரும் பழைய பாடல்களால் நன்கறியக் கிடக்கின்றது, அன்றியும், சோழர்களின் அவைக்களப் புலவராயிருந்த ஒட்டக்கூத்தர், விக்கிரம சோழனுலா, குலோத்துங்க சோழனுலா, இராசராச சோழனுலா ஆகிய மூன்றிலும் சோழர்களின் குதிரையின் பெயர் கோரம் என்றே குறித்துள்ளனர். இந்நிலையில் சோழனுடைய குதிரையைப் பாடலம் என்று முத்தொள்ளாயிர முடையார் கூறியிருப்பது ஆராய்தற்குரியதாகும். இவர் கூற்றிற்கு முரணாகப் பிங்கலந்தை என்ற நிகண்டின் ஆசிரியர் பாடலம் என்பது சேரனுடைய குதிரையின் பெயர் என்று கூறியுள்ளனர். சங்கத்துச் சான்றோர் பாடல்களில் கனவட்டம் பாடலம் என்னும் பெயர்களே காணப்படவில்லை. ஆனால், மருதக்கலியிலுள்ள 31 - ஆம் பாடலில் கோரமே வாழி குதிரை என்று மதுரை மருதனிள நாகனார் கூறியிருப்பது சிந்திக்கத்தக்கதொன்றாம். தமிழ் வேந்தர்கட்குத் தசாங்கம் கூறும் வழக்கம் ஏற்பட்ட காலத்தில்தான் அன்னோர் குதிரைகளுக்கும் தனித்தனிப் பெயர் இடப்பட்டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆகவே, கடைச்சங்க காலத்திற்குப் பிறகு முத்தொள்ளாயிர ஆசிரியர் காலத்தே தான் தமிழ் வேந்தர்களின் குதிரைகட்குத் தனிப் பெயர்கள் வழங்கத் தொடங்கியிருத்தல் வேண்டும். அவர்க்குப் பிற்பட்ட காலத்துப் புலவர்களால் அப்பெயர்கள் எக்காரணம் பற்றியோ மாற்றிக் கூறப்பட்டுள்ளன. ஆயினும் அவ்வக் காலங்களில் வழங்கியவாறே அப்பெயர்களைப் புலவர் பெருமக்கள் தம் நூல்களில் கூறியுள்ளனராதல் வேண்டும்.

முத்தொள்ளாயிரத்தின் அருமை பெருமைகளையும் ஒப்புயர்வற்ற தனிச் சிறப்பினையும்,

கச்சி யொருகால் மிதியா வொருகாலால்
தத்துநீர்த் தண்ணுஞ்சை தான்மிதியா - பிற்றையும்
ஈழ மொருகால் மிதியா வருமேநம்
கோழியர்கோன் கிள்ளி களிறு. (முத்தொள். பா. 21)

பார்படுப செம்பொன் பதிபடுப முத்தமிழ்நூல்
நீர்படுப வெண்சங்கு நித்திலமுஞ் - சாரன்
மலைபடுப யானை வயமாறன் கூர்வேற்
றலைபடுப தார் வேந்தர் மார்பு. (மேற்படி, பா. 36)

ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்று கதவடைத்தேன் - நாணிப்
பெருஞ்செல்வ ரில்லத்து நல்கூர்ந்தார் போல
வருஞ்செல்லும் பேருமென் னெஞ்சு. (மேற்படி, பா. 88)

வளையவாய் நீண்டதோள் வாட்கணா யன்னை
இளையளாய் மூத்திலள் கொல்லோ - தளையவிழ்தார்
மண்கொண்ட தானை மறங்கனல்வேல் மாறனைக்
கண்கொண்டு நோக்கலென் பாள் (மேற்படி, பா. 77)

என்னும் பாடல்களால் தெள்ளிதின் உணர்ந்துகொள்ளலாம்.

கிளிவிருத்தம், எலிவிருத்தம், நரிவிருத்தம்


முற்காலத்தில் இம்மூன்று நூல்களும் இருந்தன என்பது, வீர சோழிய யாப்புப் படலம் இருபத்தொன்றாம் பாடலுரையில் குண்டலகேசி விருத்தம், கிளிவிருத்தம், எலி விருத்தம், நரிவிருத்தம் முதலாயுள்ளவற்றுள் கலித் துறைகளும் உளவாம் என்று உரையாசியர் பெருந்தேவனார் கூறியுள்ளவற்றால் நன்கறியப்படும். இவ்விருத்த நூல்களுள் கிளிவிருத்தம் முதலான மூன்றும் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் ஆகிய இரு பெரியோர்களும் விளங்கிய காலங்களிலே நாள்தோறும் சமணர்களால் பெரிதும் போற்றி ஓதப்பெற்று வந்தன என்பது அவர்களுடைய அருட்பாக்களால் புலப்படுகின்றது. இச்செய்தியை,

கூட்டினார் கிளியின் விருத்தமுரைத்ததோ ரெலியின் தொழிற்
பாட்டு மெய்சொலிப் பக்கமேசெலு மெக்கர்தங்களைப் பல்லறம்
காட்டியேவருமா டெலாங்கவர் கையரைக் கசிவொன் றிலாச்
சேட்டைகட் கெளியேனலேன் திருவாலவாயரன் நிற்கவே

என்ற திருஞானசம்பந்தரது திருபாடலாலும்

எரிபெ ருக்குவ ரவ்வெரி யீசன
துருவ ருக்கம தாவ துணர்கிலார்
அரிய யற்கரி யானை யயர்த்துப்போய்
நரிவி ருத்தம தாகுவர் நாடரே

என்னுந் திருநாவுக்கரசு அடிகளது திருவாக்கினாலும் உணர்ந்து கொள்ளலாம். இவற்றுள், நரிவிருத்தமதாகுவர் என்பதற்கு நரியின் விருத்தாந்தத்தைப்போல் இறுதியில் முடிவெய்துவர் என்று பொருள் கொள்வதே நேரிதாயினும், கிளிவிருத்தம் எலி விருத்தங்களைப்போன்ற நூலொன்று நரிவிருத்தம் என்னும் பெயருடன் தம் காலத்தில் சமணர்களுக்குள் வழங்கிவந்ததையும் அதில் சொல்லப்பட்ட நரியின் கதையையும் உளத்திற் கொண்டே அப்பரடிகள் அவ்வாறு உரைத்துள்ளனர் என்பது உணரற்பாலதாம். அன்றியும், மேலே எடுத்துக்காட்டப்பெற்ற வீரசோழிய உரையாசிரியரது கூற்றும் நரிவிருத்தம் என்ற நூலொன்று அக்காலத்தில் இருந்தது என்பதை நன்கு உறுதிப் படுத்துதல் காண்க.

இனி, இம்மூன்று நூல்களும் திருஞானசம்பந்தராலும் திருநாவுக்கரசராலும் கூறப்பெற்றிருந்தலால், இவை அவர்கள் காலமாகிய கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முன்னர் இயற்றப் பட்டவையாதல் வேண்டும். எனவே, இவை சமணசமயம் செழித்து உயர்நிலையிலிருந்த கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றியிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆகவே, இவை சமணர்களால் மதுரையில் நடத்தப்பெற்று வந்த தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் வெளிவந்த நூல்களாயிருத்தல் கூடும்.

இனி, சீவக சிந்தாமணியின் ஆசிரியராகிய திருத்தக்க தேவரால் இயற்றப்பெற்ற நரிவிருத்தம் என்னும் சைன நூல் ஒன்று இக்காலத்தில் உள்ளது. அதனை உவமைக் கதை நீதி நரிவிருத்தம் என்று அந்நாளில் வழங்கியுள்ளனர். அஃது ஐம்பது பாடல்களைத் தன்னகத்துக் கொண்டது. வீர சோழிய உரையாசிரியர் கூறியுள்ளவாறு அந்நூலில் கலித்துறைகள் காணப்படவில்லை. அன்றியும், அது கி. பி. பத்தாம் நூற்றாண்டில் தம் ஆசிரியரது ஆணையின்படி திருத்தக்க தேவர் இயற்றியதாகும். எனவே, அப்பரடிகளாலும் வீர சோழிய உரையாசிரியராலும் குறிப்பிடப் பெற்ற நரிவிருத்தம், திருத்தக்க தேவரது நரிவிருத்தத்தினும் பழமைவாய்ந்ததும் வேறான தொன்றுமாம்.

கிளி விருத்தம், எலி விருத்தம், நரி விருத்தம் ஆகிய இம்மூன்று நூல்களும் இக்காலத்தில் கிடைக்காமையால் இவற்றின் வரலாற்றை அரிய இயலவில்லை. எனினும், இவை சைனசமய நூல்கள் என்பது மாத்திரம் சைவசமய குரவர்களின் திருவாக்கினால் வெளியாகின்றது. திருத்தக்கதேவரது நரி விருத்தத்தைப் போலவே, இவைகளும் யாக்கை நிலையாமை, செல்வ நிலையாமை முதலானவற்றையும், பொய், கொலை, களவு, கள், காமம் என்ற ஐம்பெருந் தீச்செயல்கள் புரிந்து அழிவெய்தியவர்களின் சரிதங்களையும், அவற்றை யொழித்து உயர்நிலை பெற்றோர் பெருமைகளையும், பிற சமண சமயக் கொள்கைகளையும் கூறும் சைன நூல்களாக இருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரப்படுகின்றது. இந்நூல்கள் இந்நாளில் - வழக்கில் இல்லையாயினும், இவை இருண்டகாலப் பகுதியில் தோன்றியவையாதலின் இவற்றைப் பற்றி ஆராய்ச்சியிற் புலப்
பட்ட சில செய்திகள் ஈண்டு எழுதப் பெற்றுள்ளன.


தமிழ் இலக்கிய வரலாறு (13, 14, 15 - ஆம் நூற்றாண்டுகள்)

ஒரு நாட்டில் சிறந்த இலக்கியங்கள் தோன்றுங் காலம் அரியதொரு பொற்காலமே யாகும். அத்தகைய காலம் எப்போதேனும் தோன்றும். உள்நாட்டுக் குழப்பமும் வெளி நாட்டாரது படையெழுச்சியுமின்றி நாடு அமைதியுற்று நிலவுங் காலப்பகுதிதான், புலவர் பெருமக்கள் அல்லலின்றித் தம் ஆற்றல் புலப்படுமாறு சிறந்த நூல்கள் இயற்றுவதற்கு ஏற்றது எனலாம். ஆகவே, அறிவு திரு ஆற்றல்களைப் படைத்த பெருவேந்தரது ஆட்சியின்கீழ் நாடு அமைந்து சீருஞ்சிறப்பும் எய்தியிருக்கும் காலத்தேதான் புலவர்களின் அரிய நூல்கள் தோன்றும் என்பது தேற்றம். எனவே, கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் நம் தமிழகம் எத்தகைய நிலையில் இருந்தது என்பதைக் காண்பது அந்நூற்றாண்டில் தோன்றிய இலக்கியங்களின் வரலாற்றை ஆராய்வதற்குப் பெரிதும் பயன்படும் என்பது ஒருதலை.

சற்றேறக்குறைய நானூறு ஆண்டுகள் நம் தமிழ் நாட்டில் நடை பெற்றுவந்த சோழர் பேரரசு கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் வலி குன்றியது. அதன் பயனாகச் சோழ இராச்சியம் சிதறுண்டது. ஆங்காங்கிருந்த குறுநில மன்னர்கள் பேரரசுக்கடங்காமல் சுயேச்சையாகத் தாமே தனியரசு செலுத்தத் தொடங்கினார்கள்.

இந்நிலையில் மதுரைமாநகரில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்த பாண்டியர்கள் வலிமை எய்தித் தம் பேரரசை மறுபடியும் மதுரையில் நிறுவியதோடு தனியரசு புரிந்து கொண்டிருந்த குறுநில மன்னர்களை வென்று தம்மடிப் படுத்தியும் பெருமை எய்தினார்கள்.1அக்காலப் பகுதியில் மைசூர் நாட்டில் துவார சமுத்திரத்திலிருந்து அரசாண்டு கொண்டிருந்த ஹொய்சளர்கள், சோழர்களுக்கு உதவி புரிதற் பொருட்டுத் திருச்சிராப்பள்ளிக் கண்மையிலுள்ள கண்ணனூரைத் தலைநகராகக் கொண்டு அதனைச் சூழ்ந்த பெருநிலப்பரப்பை ஆட்சி புரிந்தும் வந்தனர்.2 எனினும், அவர்களது ஆட்சிக்குட்பட்டிருந்த சோழநாட்டுப் பகுதியும் இறுதியில் பாண்டியர் வசமாயிற்று.3 எனவே, முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன், முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியன், முதல் மாறவர்மன் குலசேகரபாண்டியன் ஆகிய மூன்று பேரரசர்களின் ஆளுகையின் கீழ் கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் நம் தமிழகம் முழுதும் அமைந்திருந்தமை அறியத்தக்கதாகும். ஆயினும், ஆட்சி மாறுதல் அடிக்கடி நிகழ்ந்து வந்தமையின் நாடு முழுவதும் அமைதியுற்றிருந்தது என்று கூறுவதற்கிடமில்லை. ஆகவே, இந்நூற்றாண்டில் சிறந்த புலவர்கள் தோன்றி அரிய நூல்கள் இயற்றவில்லை என்றே கூறலாம். எனினும், சைவ சித்தாந்த நூல்களுள் தலைமையும் பெருமையும் பெற்றுள்ள சிவஞானபோதமும் அதன்வழி நூலாகிய சிவஞான சித்தியாரும் பதின்மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பெற்றிருத்தல் குறிப்பிடத்தக்க தொன்றாம். இனி, இந்நூற்றாண்டில் தோன்றிய தமிழ் நூல்களை ஆராய்வாம்.

திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்


இது மதுரையில் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுள் நிகழ்த்திய அறுபத்து நான்கு திருவிளையாடல்களைக் கூறும் ஒரு தமிழ் நூலாகும். புராணம் என்பது பழைய வரலாறு என்று பொருள்படும். எனவே, திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் என்பது திருவாலவாய் என்னும் மதுரையில் எழுந்தருளியுள்ள இறைவன் திருவிளையாடல்களாகிய பழைய வரலாறுகளைக் கூறும் நூல் என்று பொருள்படுதல் அறிக. முழுமுதற் கடவுளாகிய இறைவன் செய்தருளிய செயற்கருஞ் செயல்களை விளையாட்டு என்று கூறுதல் தொன்றுதொட்டு வழங்கிவரும் மரபாகும். காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி என்று மாணிக்கவாசக அடிகளும், ஏற்றவிவை அரனருளின் திருவிளையாட்டாக இயம்புவர்கள் என்று உமாபதி சிவாச்சாரியரும் இறைவன் புரிந்தருளும் ஐந்தொழில்களையும் திருவிளையாட்டாகக் கூறியிருத்தல் உணரற் பாலதாம். எளிதிற் செய்தருளும் ஆற்றலுடைய இறைவன் செயலாதல்பற்றி அச்செயல்கள் எல்லாம் திருவிளையாடல்கள் என்று வழங்கப்படுகின்றன எனலாம்.

இந்நூல் உத்தரமகா புராணம் என்னும் வடநூலின் ஒரு பகுதியாகிய சாரசமுச்சயம் என்பதிலிருந்து மொழி பெயர்த்துச் செய்யுள் நடையில் இயற்றப்பட்டது என்று இதன் ஆசிரியர் ஒரு பாடலில்1 கூறியுள்ளனர். இது கடவுள் வாழ்த்து, அவையடக்கம், பதிகம், நூல் வரலாறு, திருநாட்டுச் சிறப்பு, திருநகரச் சிறப்பு, நூற் பயன் என்னும் உறுப்புகளோடு இந்திரன் பழி தீர்த்த திருவிளையாடல் முதலாக வேதம் உணர்த்திய திருவிளையாடல் ஈறாகவுள்ள அறுபத்து நான்கு திருவிளையாடல்களைத் தன்னகத்துக் கொண்டது; ஆயிரத்தெழுநூற்றைம்பத்து மூன்று செய்யுட்களையுடையது. இந்நூல் பழைய திருவிளையாடல் எனவும் வேப்பத்தூரார் திருவிளையாடல் எனவும் வழங்கப்படுகின்றது. இக்காலத்தில் எல்லோராலும் மிகுதியாகப் படிக்கப்பெற்று வருவதும் சொற்பொருள் நயங்களும் பத்திச் சுவையும் ஒருங்கே அமையப் பெற்றதும் ஆகிய பரஞ்சோதி முனிவரது திருவிளையாடற் புராணம் தோன்றிய பின்னர் இந்நூல் படிப்பாரற்று ஒதுக்கிடம் பெற்றது என்று அறிஞர் சிலர் கூறுவது ஓரளவிற் பொருந்துமெனலாம்2 காலஞ்சென்ற தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் இந்நூலை ஆராய்ந்து அச்சிட்டு வெளியிடாமலிருந்திருப்பின் தேடுவோரும் படிப்போரும் இல்லாமல் இது மறைந்து அழிந்து போயிருக்குமோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

இந் நூலுக்கும் பரஞ்சோதி முனிவரது திருவிளையாடற் புராணத்திற்குமுள்ள வேறுபாடுகள் பலவாகும். திருவிளையாடல்களின் அமைப்பு முறையிலும் இந்நூலும் பரஞ்சோதியார் நூலும் வேறுபட்டுள்ளன. ஆயினும், இந்நூல் கல்லாடத்தோடு பெரிதும் ஒத்திருத்தல் அறியற்பாலதாகும். திருவாசகத்திலுள்ள சில பதிகங்கள் இன்ன இன்ன சமயத்தில் மணிவாசகப் பெருமானால் பாடப்பட்டன என்று இந்நூல் கூறுவது உணரத்தக்கது.

இந் நூலாசிரியர் செல்லி நகர்ப் பெரும்பற்றப் புலியூர் நம்பி ஆவர். இவர் பாண்டி நாட்டிலுள்ள செல்லி நகரில் அந்தணர் குலத்தில் வேம்பத்தூர்ச் சோழியர் வகுப்பில் கௌணிய கோத்திரத்தில் தோன்றியவர். இவருக்குப் பெரும்பற்றப் புலியூர் நம்பி என்று பெயரிடப் பெற்றிருத்தலை நோக்குமிடத்து, இவருடைய பெற்றோர்கள் தில்லை மாநகரில் எழுந்தருளியுள்ள அம்பலவாணர் திருவடிகளில் அளவற்ற அன்புடையவர்களா யிருத்தல் வேண்டுமென்பது நன்கு புலனாகின்றது. இவர் பெயர் தில்லை நம்பி என்று வழங்கப் பெறுவதும் உண்டு. இவருடைய பெற்றோர்களின் பெயர் முதலியன தெரியவில்லை. இவருடைய ஆசிரியர், சிதம்பரம் மாளிகை மடத்திலிருந்த வெண்காடரின் சீடராகிய விநாயகர் என்ற பெரியார் என்பது இந்நூல் கடவுள் வாழ்த்துப் பகுதியில் உள்ள 23 - ஆம் செய்யுளால்1 அறியப் படுகிறது.

இவருடைய ஊராகிய செல்லி நகர் என்பது, திருநெல்வேலி ஜில்லாவில் சங்கர நயினார் கோயில் தாலுகாவில் கரிவலம் வந்த நல்லூருக்கு அண்மையில் பனையூர் என்னும் பெயருடன் இக்காலத்தில் உள்ளது. இதற்குப் பரசுராம சதுர்வேதிமங்கலம் என்ற பெயரும் உண்டு. இவருடைய முன்னோர்கள், மதுரைமாநகர்க்குக் கிழக்கேயுள்ளதும் வேம்பற்றூர் என்று முற்காலத்தில் வழங்கப்பெற்றதுமாகிய வேம்பத்தூரிலிருந்து செல்லி நகர்க்குச் சென்று அவ்வூரைத் தங்கட்கு உறைவிடமாகக் கொண்டவர்கள் என்று தெரிகிறது. அகநானூற்றில் 117 - ஆம் பாடலும், புறநானூற்றில் 317 - ஆம் பாடலும் இயற்றியுள்ள வேம்பற்றூர்க் குமரனாரும் குறுந்தொகையில் 362 - ஆம் பாடல் இயற்றியுள்ள வேம்பற்றூர்க் கண்ணங்கூத்தனும் இவ் வேம்பத்தூரில் வாழ்ந்தவர்களேயாவர். இடைக்காலத்திலும் பல புலவர் பெருமக்கள் இவ்வூரில் இருந்துள்ளனர். இவ்வூர்ப் புலவர்களை வேம்பத்தூர்ச் சங்கத்தார் என்று வழங்குவதும் உண்டு. கடைச்சங்க கால முதல் இக்காலம் வரையில் இவ்வேம்பத்தூர் சிறந்த தமிழ்ப் புலவர்கட்குரிய இடமாக இருத்தல் அறியத்தக்கது.

கௌணிய கோத்திரத்தினராகிய செல்லி நகர் ஆனந்த தாண்டவ நம்பி என்பவருடைய மனைவியார் மதுரையில் அங்கயற் கண்ணம்மையின் சந்நிதிக் கோபுரத்தை கி. பி. 1228 -ல் கட்டுவித்தனர் என்று மதுரைத் திருப்பணிமாலை1 கூறுகின்றது.2 திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் பாடிப் பாண்டி வேந்தனிடம் சில ஊர்களை இறையிலியாகப் பெற்ற பெரும்பற்றப் புலியூர் நம்பியும் கௌணிய கோத்திரத்தினர், செல்லி நகரத்தில் வாழ்ந்தவர். ஆனந்த தாண்டவ நம்பி என்ற பெயரும் பெரும் பற்றப் புலியூர் நம்பி என்ற பெயரும் ஒன்றுக் கொன்று பரியாய நாமங்களாக உள்ளன. இவ்வாசிரியர் தம் திருவிளையாடற் புராணத்தில் கூறியுள்ள பல வரலாறுகள் திருவாசகம், கல்லாடம், பட்டினத்தடிகள், பிரபந்தங்கள் ஆகிய பழைய நூல்களைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிகிறது. ஆகவே, இவ்வாசிரியர் சிறிது பழைமை வாய்ந்தவராகவே காணப்படுகிறார். எனவே, இவற்றையெல்லாம் கூர்ந்து நோக்குமிடத்து, கி. பி. 1228 - ல் வாழ்ந்த ஆனந்த தாண்டவ நம்பியே திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் பாடி இறையிலி நிலங்களும் பல்லக்கு முதலான வரிசைகளும் பெற்று பெருவாழ்வெய்திய பெரும்பற்றப் புலியூர் நம்பியாயிருத்தல் வேண்டும் என்று கருதற்கு இடமுளது. இவர்களுடைய பெயரும் ஊரும் கோத்திரமும் சிவபக்தியும் திருத்தொண்டும் செல்வ நிலையும் ஒத்திருப்பது இம்முடிபை உறுதிப்படுத்துதல் காண்க.

இவ்வாசிரியர் இப் புராணத்தில் கடவுள் வாழ்த்துப் பகுதியில் பெரும்பற்றப் புலியூர்,1 திருச்சிற்றம்பலம்,2 பொன்னம்பலம்,3 என்பவற்றைத் தனித்தனிப் பாடல்களில் சிறப்பித்திருத்தலால் இவர், தம் பெற்றோர்களைப் போலவே பொன்னம்பலவாணர் திருவடிகளில் பெரும்பற்றுடையவ ராயிருத்தல் வேண்டும் என்பது நன்கறியப்படுகின்றது. ஆலவாயிற் பெருமானடிகளை இவர் தம் நூலில் பல இடங்களில் சொக்கர் என்று கூறிச் செல்வது குறிப்பிடத் தக்கதொன்றாம். சங்கம் வீற்றிருந்து தமிழாராய்ந்த இறைவனைச் சுந்தரர் என்ற வடமொழிப் பெயரால் வழங்காமல் சொக்கர் என்ற தமிழ்ப் பெயரால் இவர் வழங்கியுள்ளமை பாராட்டத் தக்கதேயாம். பாண்டி நாட்டின் பழைய வரலாறுகளோடு தொடர்புடையனவாய் இக்காலத்திலுள்ள சில ஊர்களை நாம் அறிந்து கொள்வதற்கு இவரது நூல் சிறந்த ஆதாரமாக உள்ளது. கடைச் சங்கப் புலவருள் ஒருவராகிய கபிலர் பிறந்த ஊர் பாண்டி நாட்டிலுள்ள திருவாதவூரே யாமென்று தமிழகத்திற்கு உணர்த்தியவர் இவவாசிரியரேயாவர்.4 பொதுவாக நோக்குமிடத்து, இவரது நூல் தமிழ் வளங் கொழிக்கும் சிறந்த செந்தமிழ் நடையில் அமையவில்லை யென்று கூறலாம். எனினும், இவர் ஒப்பற்ற சிவபக்தி யுடையவராய்த் திகழ்ந்தவர் என்பதை இவருடைய நூல் நன்கு புலப்படுத்துவதாக உள்ளது.

நள வெண்பா


இது நளன் சரிதத்தை இனிய வெண்பாக்களில் கூறும் ஒரு சிறந்த தமிழ் நூல்; சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் ஆகிய மூன்று காண்டங்களையுடையது; 424 நேரிசை வெண்பாக்களைத் தன்னகத்துக் கொண்டது; வெண்பாவிற் புகழேந்தி1 என்று பாராட்ப் பெற்ற புகழேந்திப் புலவரால் இயற்றப்பட்டது.

யுதிட்டிரர் சூதாட்டத்தில் தம் நாட்டை இழந்து தம்பியருடன் காடுறையும் நாட்களில் அவரைப் பார்க்கச் சென்ற வியாச முனிவர் அவருக்குப் பல்வகையானும் ஆறுதல் கூறி அவருடைய துன்பத்தைப் போக்கும்பொருட்டு நளன் சரிதையை எடுத்துரைத்ததாகத் தோற்றுவாய் செய்து கொண்டு இப்புலவர்பிரான் இந்நூலை அமைத்துள்ளனர். ஆகவே, இவர் மாபாரதத்தை முதனூலாகக்கொண்டு இந்நளவெண்பாவை இயற்றியுள்ளனர் என்பது தெள்ளிது. இவர் தொண்டை மண்டலத்தில் செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள பொன்விளைந்த களத்தூரில் பிறந்தவர். இருடைய தாய்தந்தையர் யாவர் என்பது தெரியவில்லை. இவர் வைணவ சமயத்தினர் என்பது இந்நூலில் காண்டந்தோறும் முதலில் திருமாலுக்கு வணக்கம் கூறி யிருத்தலால் இனிது பெறப்படுகின்றது. அதற்கடுத்துச் சிவபெருமானுக்கும் இவர் வணக்கம் கூறியிருத்தலால், சைவ சமயத்தை இகழ்ந்து பேசாத இயல்பினராய் விரிந்த மனப் பான்மையோடு வாழ்ந்த வைணவராதல் வேண்டும். எனினும், கலிதொடர் காண்டத்தில்,

நாராய ணாய நமவென் றவனடியிற்
சேராரை வெந்துயரம் சேர்ந்தார் போல்

எனவும் கலிநீங்கு காண்டத்தில்,

மிக்கோன் உலகளந்த மெய்யடியே சார்வாகப்
புக்கோர் அருவினையோற் போயிற்றே

எனவும் கூறியிருத்தலை நோக்குங்கால் இவர் திருமாலிடத்தில் பெரிதும் ஈடுபாடுடையவர் என்பது நன்கறியக் கிடக்கின்றது.

இவர் சங்க நூல்களையும் பாரதவெண்பா, முத்தொள்ளா யிரம், திருவாய்மொழி முதலான நூல்களையும் தெள்ளிதிற் பயின்று, இனிய ஓசையோடு சொல்வளமும் பொருள்வளமும் அமையச் சிறந்த வெண்பாக்கள் இயற்றுவதில் வல்லுநராக விளங்கினர் என்று தெரிகிறது.

இப் புலவர் மள்ளுவ நாட்டுத் தலைனாகிய சந்திரன் சுவர்க்கி என்பவனை,

வண்டார் வளவயல்சூழ் மள்ளுவநாட் டெங்கோமான்
தண்டான் புனைசந் திரன்சுவர்க்கி - கொண்டாடும்
பாவலன்பா னின்ற பசிபோல நீங்கிற்றே
காவலன்பா னின்ற கலி

சங்க நிதிபோற் றிருசந் திரன்சுவர்க்கி
வெங்கலிவாய் நின்றுலக மீட்டாற்போல் - மங்கையைவெம்
பாம்பின்வாய் நின்று பறித்தான் பகைகடிந்த
காம்பின்வாய் வில்வேடன் கண்டு

தாருவெனப் பார்மேல் தருசந் திரன்சுவர்க்கி
மேருவரைத் தோளான் விரவார்போல் - கூரிருளில்
செங்கா னகஞ்சிதையத் தேவியை விட்டேகினான்
வெங்கா னகந்தனிலே வேந்து.

மாமனு நூல் வாழ வருசந் திரன் சுவர்க்கி
தாமரையாள் வைகுந் தடந்தோளா - காமருபூத்
தாரான் முரணைநகர் தானென்று சாற்றலாம்
பாராளும் வேந்தன் பதி

என்று தம் நளவெண்பாவில் பாராட்டிள்ளனர். ஆகவே, இவர் அத் தலைவனுடைய அன்பிற்கும் ஆதரவிற்கும் உரியவராகிக் கவலையின்றி இனிது வாழ்ந்து வந்தவராதல் வேண்டும். பெருங் கொடை வள்ளலாக நிலவிய அத்தலைவனுடைய மள்ளுவ நாடும் முரணை நகரும் இப்போது எங்கே உள்ளன என்பது புலப்படவில்லை. இதுகாறும் படி எடுக்கப்பட்டும் வெளிவந்து முள்ள கல்வெட்டுக்களில் மள்ளுவ நாடும் முரணை நகர் என்ற ஊரும் காணப்படவில்லை. சுயம்வர மண்டபத்தில் வீற்றிருந்த வேந்தர்களை இன்னாரின்னாரென்று மணமகளாகிய தமயந்திக்குத் தோழி விளக்கிக் கூறுமிடத்து, முதலில் சோழ நாட்டு மன்னனையே2 இவ்வாசிரியர் எடுத்துரைத்துள்ளனர். இதனால் சந்திரன் சுவர்க்கி என்ற தலைவன் சோழ மண்டலத்தின் உள் நாடொன்றில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சிற்றரசனாக இருத்தல் கூடும் என்று கருதற்கிடமுளது. திருச்சிராப்பள்ளி ஜில்லா முசிறித் தாலுகாவில் 67 ஊர்களைத் தன்னகத்துக் கொண்ட வள்ளுவப் பாடி நாடு என்றதோர் உள்நாடு முற்காலத்தில் இருந்தது என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது.3 இவ்வள்ளுவப்பாடி நாடே வள்ளுவ நாடு என்று வழங்கி மள்ளுவ நாடு எனப் பிற்காலத்தில் தவறாக அச்சிடப்பட்டும் இருக்கலாம். நாடுகளின் பெயர்கள் பல நூற்றாண்டுகட்கு முன்னரே வழக்கொழிந்து போயினமையின் அவற்றின் உண்மைப் பெயர்களை அறிந்து கொள்வது அத்துணை எளிதுமன்று. அதனால் வள்ளுவ நாடு என்பது மள்ளுவ நாடு என்று அச்சேறிய புத்தகங்களில் காணப்படுவதில் வியப்பொன்றுமில்லை. நம் தமிழகத்தில் பல ஊர்களும் நகரங்களும் தம் பழைய பெயர்களால் இக்காலத்தில் வழங்கப்பெறாமல் இடைக்காலத்தில் பெற்ற புதிய பெயர் களோடு நிலவுகின்றன. அன்றியும், சில ஊர்களின் பெயர்கள் மருவியும் சிதைந்தும் வழங்குகின்றன. இந்நிலையின் சந்திரன் சுவர்க்கியின் தலைநகராகிய முரணை என்பது இந்நாளில் எப்பெயருடன் எங்கேயுள்ளது என்பது புலப்பட வில்லை. அது முரணுர் என்பதன் மரூஉவாகவும் இருத்தல் கூடும். புகழேந்தியாரால் நன்றியறிதல் காரணமாக நளவெண்பாவில் நான்கு இடங்களில் உளமுவந்து பாராட்டப் பெற்றுள்ள இக்குறுநில மன்னன் சோழமண்டலத்தில் ஒரு பகுதியில் வாழ்ந்து வந்தவன் என்பதில் ஐய மில்லை. தமிழ்நாட்டிலுள்ள கல்வெட்டுக்கள் எல்லாம் படியெடுக்கப் பெற்று வெளிவருமாயின் இத்தகைய ஐயங்கள் நீங்கும் என்பது தேற்றம்.

இது, புகழேந்தியாரது காலத்தை ஆராய்வது இன்றியமையாதது ஆகும். இப்புகழேந்தியார் ஈழ நாட்டிற்குச் சென்று, அங்கிருந்த ஆரிய சேகரனைப் பாடி யானையும் பொன்னும் மணியும் பரிசிலாகப் பெற்றுத் திரும்பி வந்த போது, அவற்றைக்கண்டு வியந்த பாண்டிய வேந்தனும் இப்புலவர்க்குப் பல வரிசைகளைச் செய்து பாராட்டினான் என்று தமிழ் நாவலர் சரிதை கூறுகின்றது. இவர் அன்னோரைச் சிறப்பித்துப் பாடிய பாடல்களும் அச்சரிதையிற் காணப்படுகின்றன.1 இப்புலவரால் பாடப்பெற்ற ஆரிய சேகரன் என்பான், கி. பி. 1268 முதல் 1311 வரையில் பாண்டிய இராச்சியத்தில் சக்கரவர்த்தியாக வீற்றிருந்து ஆட்சிபுரிந்த முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியனுடைய படைத் தலைவர்களுள் ஒருவனாகிய ஆரியச் சக்கரவர்த்தியே யாவன் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். அத்தலைவன் பாண்டி மண்டலத்தில் செவ்விருக்கை நாட்டிலுள்ள சக்கரவர்த்தி நல்லூரில் பிறந்தவர்; மதிதுங்கன் என்னும் பெயரினன். மேலே குறிப்பிட்ட குலசேகர பாண்டியனுக்கு அமைச்சனாகவும் படைத் தலைவனாகவும் விளங்கியவன்; அவ்வேந்தனால் அளிக்கப்பெற்ற தனிநின்று வென்றபெருமாள் என்னும் பட்டம் பெற்றவன். அப்படைத் தலைவன் கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் ஈழநாட்டின் மேல் படையெடுத்துச் சென்று சிங்கள மன்னனைப் போரில் வென்று அந்நாட்டில் பெரும்பகுதியைப் பேரழிவிற்கு உள்ளாக்கி யமையோடு சுபகிரிக் கோட்டையையும் கைப்பற்றிக் கொண்டான் என்று இலங்கைச் சரிதமாகிய மகாவம்சம் உணர்த்துகின்றது. அன்றியும், அந்நாட்டில் கிடைத்த பெரும் பொருளையும் புத்ததேவரது மாண்பு வாய்ந்த பல்லையும் அப்படைத்தலைவன் கைப்பற்றிக் கொண்டுவந்து பாண்டி வேந்தனுக்கு அளித்தனன் என்று அந்நூல் கூறுகின்றது. அத்தலைவன் இலங்கைப் போர்க்குச் சென்று அங்குத் தங்கியிருந்த காலத்தேதான் நம் புகழேந்தியார் அவனைக் கண்டு பாடிப் பரிசில் பெற்றிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆகவே, இவ்விருவரும் முன்னரே பாண்டி நாட்டில் நட்புரிமை பெற்றுத் திகழ்ந்தவராதல் வேண்டும். எனவே,முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியனது காலமாகிய கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியே, புகழேந்தியார் வாழ்ந்த காலம் ஆகும்.

மாறவர்மன் குலசேகர பாண்டியனது ஆட்சிக் காலத்தில் தொண்டை நாடு நடு நாடுகளுக்கு அரசப் பிரதிநிதியாயிருந்து அவற்றைக் கி. பி. 1268 முதல் கி. பி. 1281 வரையில் ஆட்சிபுரிந்தவன். அவ்வேந்தனுடைய தம்பியும் இராசாக்கள் நாயன் என்ற சிறப்புப் பெயருடையவனும் ஆகிய மாறவர்மன் விக்கிரம பாண்டியன் ஆவன்.4 அந்நாட்களில் தொண்டை நாட்டுப் பொன் விளைந்த களத்தூரில் வாழ்ந்து கொண்டிருந்த இப்புலவர் பெருமான் தம் நாட்டில் அரசப் பிரதிநிதியாயிருந்த அவ்விக்கிரம பாண்டியனுடைய நட்பையும் ஆதரவையும் பெற்றிருத்தல் கூடும் என்பது தமிழ் நாவலர் சரிதையிலுள்ள அவரது பாடலொன்றால் அறியக் கிடக்கின்றது. பின்னர், இவர் மதுரைமா நகர்க்குச் சென்று, குலசேகர பாண்டியனது பேரன்பிற்குரியவராகி, அவனுடைய அவைக்களப் புலவராகவும் இருந்திருத்தல் வேண்டும். அக்காலத்தில் அப் பாண்டி வேந்தனுக்கு அமைச்சர்களாகவும் படைத்தலைவர்களாகவும் நிலவிய தலைவர்களும் இப்புலவரிடத்தில் பற்றுடையவர்களாக இருந்தனராதல் வேண்டும். அத்தகைய தலைவர்களுள் மதிதுங்கன் தனிநின்று வென்ற பெருமாளாகிய ஆரியச் சக்கரவர்த்தியும் ஒருவன் என்பது அவன் இவர்க்கு இலங்கையில் வழங்கியுள்ள பெருங் கொடையால் வெளியாகின்றது.

கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்திகளாக விளங்கிய விக்கிரம சோழன், இரண்டாங் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராச சோழன் ஆகிய மூவர்க்கும் அவைக்களப் புலவராயிருந்த ஒட்டக் கூத்தருக்கும் இப் புகழேந்தியாருக்கும் பெரும் பகைமை உண்டென்றும் அது காரணமாக இவரை ஒட்டக் கூத்தர் சோழ நாட்டில் சிறையிலிடுவித்தனரென்றும் முன்னரே அச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த சிலரை இவர் தமிழ்ப் புலவர்களாக்கி அன்னோரைக் கொண்டு ஒட்டக் கூத்தரை வென்று அவர் தருக்கடங்குமாறு செய்தனர் என்றும் சொல்லப்படும் செய்திகளெல்லாம் வரலாற்றுண்மைகள் அல்ல; வெறும் கற்பனைக் கதைகளேயாம். ஒட்டக்கூத்தர் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் முதல் இடைப்பகுதிகளில் வாழ்ந்தவராவர்;2 புகழேந்தியார் கி., பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் என்பது முன்னர் ஆராய்ந்து அறியப்பட்டதொன்றாம். எனவே, புகழேந்தியார் ஒட்டக் கூத்தர்க்கு ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்குப் பிற்பட்டவராயிருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும். ஆகவே, இவ்விருவரையும் ஒரே காலத்தவராக்கிக் கூறப்படும் விநோதமான கதைகள் எல்லாம் ஏற்றுக்கொள்ளத்தக்க உண்மையான வரலாறுகள் ஆகமாட்டா.

இவரது நூலாகிய நளவெண்பா, காப்பிய இலக்கணங்கள் நன்கமையப் பெற்றுக் கற்போர் உள்ளத்தைக் கவர்ந்து கொள்ளும் இயல்பினதாயிருத்தல் அறியத்தக்கது. இந் நூலில் இவர் ஞாயிறு திங்கள்களின் தோற்றம், மறைவு, பொழில் விளையாட்டு, மகப்பேற்றின் சிறப்பு, சூதாட்டத்தின் தீமை, முன்வினையின் வலிமை முதலானவற்றை எடுத்துக் கூறும் பாடல்கள் படித்தின்புறத் தக்கனவாம். காதலன்பு மிக்க மனைவியைக் காரிருளில் பாழ் மண்டபத்தில் உறக்கத்தே விட்டுச் சென்ற நளன், வழியில் அலவனையும் கடலையும் கண்டு உளம் வருந்தி உரைத்ததாக ஆசிரியர் சில பாடல்கள் இயற்றியுள்ளனர். அவற்றுள்,

காதலியைக் காரிருளிற் கானகத்தே கைவிட்ட
பாதகனைப் பார்க்கப் படாதென்றோ - நாதம்
அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவ வோடி
ஒளிக்கின்ற தென்னோ உரை.

போவாய் வருவாய்ப் புரண்டு விழுந்திரங்கி
நாவாய் குழற நடுங்குறுவாய் - தீவாய்
அரவகற்று மென்போல ஆர்கலியே மாதை
இரவகற்றி வந்தாய்கொல் இன்று.

என்ற இரண்டு பாடல்களும் இப் புலவர்பிரானது கற்பனைத் திறத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இருத்தல் காண்க.

முன்னோர் மொழி பொருளே யன்றி யவர்மொழியும் - பொன்னேபோற் போற்றுவ மென்பதற் கேற்பப் பண்டைத் தமிழ் நூல்களிலிருந்து சில பாடல்களை எடுத்து இவ்வாசிரியர் தம் நளவெண்பாவில் ஏற்ற இடங்களில் அமைத்துள்ளனர் என்று தெரிகிறது.

நளவெண்பாவில் கலிதொடர் காண்டத்தில் சூதாட் டத்தினால் வரும் கேடுகளை உணர்த்துவதாயுள்ள,

உருவழிக்கும் உண்மை உயர்வழிக்கும் வண்மைத்
திருவழிக்கும் மானஞ் சிதைக்கும் - மருவும்
ஒருவரோ டன்பழிக்கும் ஒன்றல்ல சூது
பொருவரோ தக்கோர் புரிந்து.

என்ற பாடல் சிற்சில வேறுபாட்டுடன் பாரதவெண்பாவில் காணப்படுகின்றது, அது,

உருவழிக்கும் உண்மை நலனழிக்கும் வண்மைத்
திருவழிக்கும் மானஞ் சிதைக்கும் - ஒருவர்
ஒருவரோ டன்பழிக்கும் ஒன்றலாச் சூது
பொருவரோ தக்கோர் புரிந்து

என்பதாம். அன்றியும் அக்காண்டத்தில் காணப்படும் மற்றொரு பாடலாகிய,

காதல் கவறாடல் கள்ளுண்டல் பொய்ம்மொழிதல்
ஈதல் மறுத்தல் இவைகண்டாய் - போதில்
சினையாமை வைகுந் திருநாடா செம்மை
நினையாமை பூண்டார் நெறி3

என்பதும் பாரத வெண்பாவிலுள்ள ஒரு செய்யுள் என்று கருதுவதற்கு இடம் உளது. இவ்விரண்டு பாடல்களையும் எடுத்துத் தம் புறத்திரட்டில் தொகுத்துள்ள பண்டை யாசிரியர் இவற்றின் கீழ்ப் பாரதம் என்று குறித்திருத்தல் உணரற்பாலதாம். ஆகவே, இவ்விரண்டையும் புகழேந்தியார் பாரத வெண்பாலிருந்து எடுத்துக்கொண்டார் என்பது தெள்ளிது.

வெண்பா யாப்பில் அமைந்துள்ள தமிழ்க் காப்பியங்களுள் நளவெண்பா ஒரு சிறந்த நூல் என்பதில் ஐயமில்லை. பண்டைக் காலத்தில் நம் தமிழகத்தில் நளன் சரிதம் பெரிதும் வழங்கி வந்தது என்பதை,

வல்லா டாயத்து மண்ணர சிழந்து
மெல்லியல் தன்னுடன் வெங்கா னடைந்தோன்
காதலிற் பிரிந்தோ னல்லன் காதலி
தீதொடு படூஉஞ் சிறுமைய ளல்லள்
அடவிக் கானகத் தாயிழை தன்னை
இடையிருள் யாமத் திட்டு நீக்கியது
வல்வினை யன்றோ மடந்தைதன் பிழையெனச்
சொல்லலு முண்டேற் சொல்லா யோநீ
அனையையு மல்லை யாயிழை தன்னொடு
பிரியா வாழ்க்கை பெற்றனை யன்றே

என்று இயங்கோவடிகள் தம் சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் கூற்றில் வைத்து உரைத்துள்ளமையால் நன்கறியலாம். அவ்வாறு மக்களால் பேரார்வத்தோடு விரும்பப்பட்ட அப்பழைய சரிதையை எல்லோரும் எளிதில் படிக்கக் கூடிய இனிய வெண்பா யாப்பில் அமைத்துச் சிறந்த காப்பியம் ஒன்று இயற்ற வேண்டும் என்ற உறுதியான எண்ணத்தால் உந்தப்பெற்று மாபாரதத்தில் வனபர்வத்திலுள்ள நளோபாக்கியனாத்தை ஆதாரமாகக் கொண்டு இந்நளவெண்பாவை நம் புகழேந்தியார் பாடியிருத்தல் வேண்டும் என்பது தேற்றம். உண்மையில் இந்நூல் ஒன்றாலேயே இவர் பொன்றாப் பெரும்புகழ் எய்தியுள்ளனர் எனலாம்.

இனி, புகழேந்திப் புலவர் தொண்டை நாட்டில் செஞ்சியின் கண்ணிருந்த ஒரு தலைவன்மேல் செஞ்சிக்கலம்பகம் என்ற நூலொன்று பாடியுள்ளனர் என்பது,

காரர் களந்தைப் புகழேந்தி சொன்ன கலம்பகத்தின்
நேரான நையும்படி யென்ற பாடலின் நேரியர்கோன்
சீராகச் செப்பிய நற்பாடல் கொண்டவன் செஞ்சியர் கோன்
மாராபி ராமனங் கொற்றந்தை யூர் தொண்டை மண்டலமே

என்னும் படிக்காசுப் புலவரது தொண்டை மண்டல சதகப் பாடலால் அறியப்படுகிறது. அக் கலம்பகம் இக்காலத்தில் கிடைக்காமையால் இறந்தொழிந்த பண்டை நூல்களுள் ஒன்றாயிற்று என்று கூறலாம். எனினும், அதிலுள்ள ஒரு பாடல் மாத்திரம் படிக்காசுப் புலவரால் மேற்கோளாக எடுத்துக்காட்டப் பெற்றுள்ளது. அது,

நையும் படியென் நாங்கொற்ற நங்கோன் செஞ்சிவரைமீதே
ஐயம் பெறுநுண் ணிடை மடவாய் அகிலின் தூப முகிலன்று
பெய்யுந் துளியோ மழையன்று பிரசத்துளியே பிழையாது
வையம் பெறினும் பொய்யுரைக்க மாட்டார் தொண்டை நாட்டாரே

என்பதாம். புகழேந்தியார் தாம் பிறந்த தொண்டை நாட்டின்பால் எத்துணைப் பற்றுடையவராயிருந்தனர் என்பதை அக்கலம்பகப் பாடல் நன்கு புலப்படுத்துதல் காண்க.

புகழேந்தியாருடைய நூல்களில் இந்நாளில் கிடைத்திருப்பது நளவெண்பா ஒன்றேயாம். இவர் பெயரால் வழங்கிவரும் அல்லியரசாணிமாலை, புலந்திரன் களவு மாலை, இரத்தினச் சுருக்கம் எனப்படும் உவமான சங்கிரகம் முதலான நூல்களெல்லாம் இவரால் இயற்றப் பெற்றவை யல்ல.கேட்டாலும் இன்பம் கிடைக்கும் கண்டீர் கொண்ட கீர்த்தியொடு - பாட்டாலுயர்ந்த புகழேந்தி2 என்று கி. பி. பதினேழாம் நூற்றாண்டில் நிலவிய படிக்காசுப் புலவர் பெருமான் தலைமீது புலமையின் அடையாளம் ஒரு சிறிதும் காணப்படாத இப் பயனற்ற நூல்களைச் சுமத்துதல் கொடியதோர் அடாச்செயல் என்பது யாவரும் அறியத்தக்க தொன்றாம்.

சிவஞானபோதம்


நம் தமிழ் மொழியிலுள்ள சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கினுள் இது தலைமை வாய்ந்ததாகும். இந்நூல் பன்னிரண்டு சூத்திரங்களையும் அவற்றை ஏதுக்கள் கொண்டு விரித்துக் கூறும் முப்பத்தொன்பது அதிகரணங்களையும் எண்பத்தோர் எடுத்துக்காட்டு வெண்பாக்களையும் உடையது. இந்நூலிலுள்ள முதற் சூத்திரத்தில் பதி (இறைவன்) உண்மையும் இரண்டாம் சூத்திரத்தில் பாச (தளை) உண்மையும் மூன்றாஞ் சூத்திரத்தில் பசு (உயிர்) உண்மையும் நான்காம் சூத்திரத்தில் பசு இலக்கணமும் ஐந்தாம் சூத்திரத்தில் பாச இலக்கணமும் ஆறாம் சூத்திரத்தில் பதி இலக்கணமும் கூறப்பட்டுள்ளன. இவ்வாறும் பொதுவதிகாரம் என்று சொல்லப்படும். இவற்றுள் முதல் மூன்றையும் பிரமாண இயல் என்றும் பின் மூன்றையும் இலக்கண இயல் என்றும் கூறுவர்.

இந்நூல் ஏழாஞ் சூத்திரத்தில் முத்திபெறுவதற் கேதுவாகிய உயிரின் சிறப்பிலக்கணமும், எட்டாஞ் சூத்திரத்தில் சிவஞானத்தை உயிர் உணரும் முறையும், ஒன்பதாம் சூத்திரத்தில் உயிர் பாச ஞானத்திற்கு மீளாதவாறு அதனைப் புனிதமாக்கு முறையும் பத்தாஞ் சூத்திரத்தில் பாச நீக்கம் பண்ணும் முறையும் பதினோராஞ் சூத்திரத்தில் உயிர் அயரா அன்பால் இறைவன் திருவடியாகிய சிவானந்த அனுபவம் எய்துவதும், பனிரண்டாஞ் சூத்திரத்தில் சீவர் முத்தர் நிலையும் சொல்லப்பட்டிருக்கின்றன. இவ்வாறும் உண்மையதிகாரம் என்று கூறப்படும். இவற்றுள் 7, 8, 9ஆம் சூத்திரங்களைச் சாதனவியல் எனவும், 10, 11, 12ஆம் சூத்திரங்களைப் பயனியல் எனவும் உரைப்பர். இந்நூலிலுள்ள பன்னிரண்டு சூத்திரங்களும் நாற்பது வரிகளையுடையனவாகும்.

இவ்வரும்பெரும் ஞான நூலால் தெளியப்படும் உண்மை களாவன; காணப்படுகின்ற உலகமானது அவன், அவள், அது என்னும் முத்திறத்தது; அது தோற்றம், நிலை, அழிதல் ஆகிய மூன்று தொழில்களையுடையது; உயிரும் அறிவும் ஆற்றலும் இல்லாததாதலின் அது தானே தோன்றி, நின்று அழிதலில்லை; சிற்றறிவும் சிறு தொழிலும், ஒரு வரம்பிற்குட்பட்ட ஆற்றலும் உடைய உயிர்களாலும் அது முத்தொழிற்படவில்லை; எனவே, அவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட முற்றுணர்வும் பேராற்றலும் படைத்த பரம்பொருளாலேயே உலகம் முத்தொழிற் படுகின்றது என்பது தேற்றம்; உலகிலுள்ள பொருள்கள் உலகிலேயே ஒடுங்கி இறுதியில் யாவும் ஒருங்கே எதனுள் ஒடுங்குகின்றதோ அதிலிருந்து தான் ஒடுங்கியவாறே மீண்டும் தோன்றுகின்றது. எனவே, எல்லாவற்றையும் தன்னுள் ஒடுக்கித் தான் ஒன்றிலும் ஒடுங்காமல் தனித்து எது நிலைபெற்றிருக்கின்றதோ அதுவே முழு முதற்பொருளும் எல்லாவற்றிற்கும் ஆதியும் ஆகும்; அப்பரம்பொருளே சிவனென்னும் நாமந் தனக்கேயுரிய செம்மேனி எம்மான் என்பர் தமிழ் மூதறிஞர்; இறைவன் முத்தொழில்களையும் புரிதற்குக் காரணம், உயிர்கள் தொன்று தொட்டுப் பற்றி நிற்கும் ஆணவமலத்தைப் போக்கித் தன் திருவடியை யடைந்து உய்ய வேண்டும் என்ற பேரருளேயாம்; இங்ஙனம் முத்தொழில்களும் இயற்றும் இறைவன் உயிர்களிடை ஒன்றாகவும் வேறாகவும் உடனாகவும் நின்று, தன் ஆணையாகிய திருவருட்சத்தியினால் உயிர்கள் நல்வினை தீவினைகளுக்கேற்ப இறத்தல் பிறத்தல் களாகிய போக்குவரவு புரிய நீக்கமின்று நிற்பன; அவ்வுயிர், பருவுடல், நுண்ணுடல், புலன்கள், பிராண வாயு ஆகியவற்றின் வேறாய் இவற்றின் கூட்டமாகிய உடம்பினுள் இருப்பது; உலகின்கண் அரசன் தம் அமைச்சர் குழாத்தோடு ஆட்சிபுரிதல் போல உயிர் கருவி கரணங்களோடு கூடித் தொழில் நடாத்தும்; உயிரின் அறிவை மலம் மறைத்தலால் அது தன்னோடு ஒன்றாகவும் உடனாகவும் உள்ள இறைவனை அறிவதில்லை; அவ்வுயிரும் உலகியலறிவாகிய பாச ஞானத்தாலும் தன் அறிவாகிய பசு ஞானத்தாலும் அறிய முடியாத இறைவனை அவனருளே கண்ணாகக் காணக்கூடிய சிவஞானத்தால் மாத்திரம் அறிய முடியும்; ஆகவே, இறைவன் பாச ஞானத்திற்கும் பசு ஞானத்திற்கும் அப்பாற்பட்டவனாகவும் சிவஞானத்தால் அறியப்படுபவனாகவும் உள்ளான்; உயிரானது சார்ந்ததன் வண்ணமாகும் இயல்புடைய படிகம் போல் இறைவனைச் சார்ந்து இறைவன் அருளையும் உலகினைச் சார்ந்து உலக அனுபவத்தையும் பெறும்; அது பல பிறவிகளில் செய்த நல்வினையால் சிவ புண்ணியம் எய்தி, சரியை கிரியை போகங்களை முடித்த நிலையில் அவ்வுயிர்க்கு உடனின்று உயர்த்திவரும் இறைவனே அதன் பக்குவத்திற்கேற்ப அதற்குக் குருவாய்த் தோன்றிச் சிவஞானத்தை அறிவுறுத்துவன்; இங்ஙனம் சிவஞானம் எய்தப்பெற்ற உயிர்க்கு இறைவன் தண்ணருள் வழங்குவன்; அதன் பொருட்டு உயிரானது முறைப் படி திருவைந்தெழுத்தை எண்ண வேண்டும்; அவ்வுயிரும் இறைபணியில் வழுவாமல் தன்செயல் ஒன்றுமில்லை என்று அப்பரம்பொருளின் அருள் வழி நிற்ப, இறைவனும் உயிரின் செயல்கள் எல்லாவற்றையும் தன் செயல்களாகக் கொள்வன்; அதனால், அவ்வுயிரைப்பற்றிக் கொண்டு நிற்கும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றும் பற்றறக் கழிந்துவிடும்; இங்ஙனம், இறைவன் அருள்வழி நிற்கும் உயிர் இவ்வுலக இன்னல்களால் வருந்தாமல் அயராது செய்யும் அன்பினால் முதல்வன் திரு வடியைச் சாரும்; இவ்வாறு மறவாத பேரன்பால் சிவானுபவம் உள்ளத்தே நிறையப்பெற்ற சீவன் முத்தர் அத்தகைய சிவனடியாரது திருவேடத்தையும் திருக்கோயிலையும் சிவனென வழிபடுபவர்; அவர்களுடைய அறிவு சிவஞானத்தையும் இச்சை சிவனடியார் கூட்டுறவையும் செயல் வணக்கத்தையும் பற்றி நிற்கும்; இந்நிலையில் அமர்ந்திருந்த சீவன் முத்தர் இறுதியில் சிவபெருமான் திருவடியடைந்து பேரின்பப் பெருவாழ் வெய்துவர் - என்பனவாம்.

இவ்வொப்பற்ற நூலை இயற்றியருளிய ஆசிரியர் திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவ நாயனார் ஆவர். இப்பெரியார், தொண்டை மண்டலத்திற்கும் சோழ மண்டலத் திற்கும் இடையிலேயுள்ள திருமுனைப்பாடி நாடு என்னும் நடு நாட்டிலே பெண்ணாடகம்1 என்ற பேரூரில் வேளாளர் குலத்தில் செல்வமிகுந்த பழங்குடியிற்றோன்றிச் சிறப்புடன் வாழ்ந்துவந்த அச்சுத களப்பாளர்க்குப் புதல்வராகத் தோன்றியவர். இவ்வச்சுத களப்பாளர் நெடுநாட்களாக மகப்பேறின்றி வருந்தித் திருத் துறையூர்க்குச் சென்று, தம் குல குருவாகிய அருணந்தி சிவாசாரி யரிடம் தம் குறையைத் தெரிவித்து, அப்பெரியார் கூறியவாறு தேவாரத் திருமுறை யின்கண் கயிறு சாத்திய போது திருஞான சம்பந்த அடிகளது திருவெண்காட்டுப் பதிகத்தில் இரண்டாவது பாடலாகவுள்ள,

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநிலை
வாயினவே வரம்பெறுவ ரையுறவேண்டா வொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாந் தீவினையே

என்னும் செய்யுள் காணப்பட்டதாம். அதனைக் கண்ட அருணந்திசிவம் அகமகிழ்ந்து அச்சுதகளப்பாளர் திருவெண்காட்டிற்குச் சென்று அவ்வூர்த் திருக்கோயிலிலுள்ள முக்குளங்களையும் மனைவியோடு நாள்தோறும் நீராடிச் சிவபெருமானை வழிபடுதல் வேண்டுமென்று கூறினர். அங்ஙனமே அவர் தம் மனைவியாரோடு திருவெண்காட்டிற்குச் சென்று முக்குள நீராடி2 இறைவனையும் இறைவியையும் பேரன்போடு வழிபட்டு வரும் நாட்களில் அவ்வம்மையார் கருவுற்றுப் பத்தாந் திங்களில் ஓர் ஆண் மகவைப் பெற்றனர். சிவபெருமான் திருவருளால் தோன்றிய தம் தவப்புதல்வர்க்கு அச்சுத களப்பாளர் பெருமகிழ்வுடன் உரிய சடங்குகள் நிகழ்த்தித் திருவெண்காடர் என்னும் திருப்பெயருமிட்டு, பிறகு தம்மூராகிய பெண்ணாகடத்தை யடைந்தனர். இவர் அங்கு வளர்ந்து வருங்காலத்தில் இவருடைய தாய்மாமனார் இவரைத் தம் ஊராகிய திருவெண்ணெய் நல்லூருக்கு அழைத்துப் போய்த் தம் இல்லத்தில் அன்போடு வளர்த்து வருவாராயினர். இவருக்கு ஈராண்டு நிறைந்து மூன்றாம் ஆண்டு தொடங்கியது. அப்பொழுது திருக்கயிலை காவல் பூண்ட நந்திதேவரது வழியில் வந்த சத்தியஞான தரிசினிகளின் மாணவராகிய பரஞ்சோதி மாமுனிவர் என்பார், பொதிய மலைக்குப் போகுங்கால் திருவெண்ணெய் நல்லூரில் தங்கி அருளொளியுடன் நிலவிய திருவெண்காடர்க்குச் சைவ சித்தாந்த மெய்ப்பொருளை அறிவுறுத்தி, அதனைத் தமிழுலகம் உணர்ந்துய்யுமாறு செய்தல் வேண்டும் என்றுரைத்து, இவருக்கு மெய்கண்டார் என்ற திருப்பெயரும் சூட்டி இவரைவிட்டு நீங்கினர். பின்னர் மெய்கண்ட தேவர் திருவெண்ணெய் நல்லூரிலுள்ள பொல்லாப் பிள்ளையார் திருமுன்னர் நிட்டையிலமர்ந்து மெய்யுணர்ச்சி விளங்கப் பெற்றுத் தமிழ்மொழியில் ஏதுக்க ளோடும் எடுத்துக் காட்டுக்களோடும் பன்னிரண்டு சூத்திரங்களால் சிவஞானபோதத்தை இயற்றியருளினர்; பிறகு, இந்நூலைத் தம்மையடைந்த தக்க மாணவர்கட்கும் அறிவுறுத்தி வந்தனர். இவர் பால் இதனைப் பயின்ற மாணவர் நாற்பத்தொன்பதின்மர் என்ப.

இனி, ஆசிரியர் மெய்கண்டதேவர் வடமொழி இரௌரவ ஆகமத்தில் காணப்படும் பாவ விமோசனப் படலத்திலுள்ள பன்னிரண்டு சுலோகங்களை மொழியெர்த்துப் பன்னிரு சூத்திரங்களாக்கித் தம் சிவஞானபோத நூலை இயற்றி முடித்தனர் என்று சிலர் கூறுவர். ஆனால், சிவஞானபோதச் சிறப்புப்பாயிரத்தில் இச்செய்தி சொல்லப்படவில்லை. அன்றியும், இவ்வாசிரியர் தம் நூலை வடமொழியிலிருந்து மொழி பெயர்த்து இயற்றியதாக இந் நூலகத்து யாண்டும் குறிப்பாகக்கூட உணர்த்தவில்லை. இரௌரவ ஆகமத்திலுள்ள சிவஞான போதம் தெளிவில்லாத பன்னிரண்டு சுலோகங்களை யுடையது; சூத்திரங்களாலாய தன்று. இத் தமிழ்ச் சிவஞானபோதமோ, வடமொழியிலுள்ள வியாகரண சூத்திரம், வேதாந்த சூத்திரம், யோக சூத்திரம் ஆகிய நூல்களைப் போலத் திட்ப நுட்பம் வாய்ந்த தெள்ளிய சூத்திரங்களால் அமைந்தது. வடமொழிச் சிவஞான போதத்தின் பன்னிரண்டாவது சுலோகத்தின் இறுதியில் இவ்விதமாகச் சிவஞான போதத்திலே சைவப்பொருள் துணியப்பட்ட தென்றறிக என்று கூறப் பட்டிருத்தலால் மெய்கண்டாரது சிவஞானபோதத்தையே சில நூற்றாண்டு கட்குமுன் வடமொழியில் சுலோகங்களாக மொழிபெயர்த்து இரௌரவ ஆகமத்தில் சேர்த்திருத்தல் வேண்டுமென்பது நன்கறியக் கிடக்கின்றது. மெய்கண்டதேவர் காலத்திற்கு முன் தமிழிலும் வடமொழியிலும் சிவஞானபோதம் என்ற நூல் ஒன்று இருந்தது என்பதற்கு யாண்டும் ஆதாரமில்லை. எனவே, இவ்வாசிரியர் இயற்றியுள்ள சிவஞான போதம் நம் தமிழ் மொழியிலே தோன்றிய முதனூல் என்பதும் வடமொழியிலிருந்து மொழி பெயர்த்ததன்று என்பதும் ஐயமின்றித் துணியப்படும்.

கி. பி. 18-ஆம் நூற்றாண்டினிடையில் திருவாவடுதுறை ஆதீனத்தின் அடியார் குழாத்துள் ஒருவராக விளங்கிய சிவஞான முனிவர் என்ற பேரறிஞர்1 இச் சிவஞான போதத்திற்குச் சிற்றுரையும் பேருரையும் எழுதியுள்ளனர். இவ்விரண்டினுள் பேருரை சிவஞானபாடியம் என்று வழங்குகின்றது. அது மிக விரிந்ததோர் உரையாகும். அவ்வுரை மிருகேந்திரம், பௌட்கரம், சர்வஞானோத்தரம், தேவி காலோத்தரம் முதலான சிவாகமப் பொருள்களையும் சமயக் குரவர்களின் திருப்பாடல்களையும் அமைந்துள்ள அரிய கருத்துக்களும் தன்னகத்துக்கொண்டு, தருக்க நுட்பங்கள் செறிந்ததாய்க் கற்போர் உள்ளத்தை உவப்பிக்கும் தன்மையது. இந்நூலுக்குப் பாண்டிப் பெருமாள் என்பவர் இயற்றிய வேறோர் உரையும் உண்டு.

இனி, சிவஞான போதம் எப்போது இயற்றப் பெற்றிருத்தல் கூடும் என்பது ஆராயற்பாலதாகும். இந்நூலின் ஆசிரியராகிய மெய்கண்ட தேவரைப் பற்றிய சில செய்திகள், வட ஆர்க்காடு ஜில்லாவிலுள்ள திருவண்ணாமலையில் அருணாசலேசுவரர் திருகோயிலில் வரையப்பட்டுள்ள ஒரு கல்வெட்டில் உள்ளன. அக் கல்வெட்டால் இப்பெரியார் வாழ்ந்த காலம் நன்கறியப்படுகின்றது. அது, (1) வதி ஸ்ரீ திரிபுவனச் சக்ரவர்த்திகள் ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு1 யாண்டு 16-வது இஷப நாயிற்று இருபத்தெட்டாந் தியதியும் சனிக்கிழமையும் பெற்ற மிருக சீரிஷத்து நாள் உடையார் திருவண்ணா மலையுடைய (2) நாயனார் கோயில் சீமாகேவரக் கண்காணி செய்வார்களும் தேவர்கன்மி கோயிற் கணக்கனும் திருவெண்ணெய் நல்லூருடையான் மெய்கண்ட தேவன் ஊருடைய பெருமாளான எடுத்தது வலிய வேளார்க்குக் கல்வெட்டிக் கொடுத்த பரிசா (3) வது இந்நாயனார் தேவதானம் செங்குன்ற நாட்டு மாத்தூரான இராசஇராச நல்லூரில் இவர் வெட்டுவித்த மெய்கண்ட தேவப் புத்தேரிக்குக் கடமையிறுக்குமிடத்து திருத்தின ஆண்டு குழி நாழியும் பாடிகாவலும் கொள்ளக் கடவதாகவும் இதன் (4) எதிராமாண்டு கால்வரிசையும் பாடிகாவலும் இறக்கக் கடவதாகவும் இதன் எதிராம் ஆண்டு முதல் காலே அரைக்கால் வரிசையும் பாடிகாவலும் உட்பட வேலி எண்பதின்கலம் இறக்கக் கடவதாகவும் இவ்வேந்தலுக்கு எல்லை அரசுக்குக் கிழக்கு நீரேறின (5) நிலம் திருத்திப் பயிர் செய்யக்கடவதாகவும் இவ்வேந்தலுக்குப் புன்செய் நிலம் அரசுக்குக் கிழக்கு திருக் கோவலூர் பெருவழிக்கு வடக்கு இவ்வேந்தலைச் சூழ்ந்த நிலத்திலே அஞ்சு வேலி தரை எல்லையாய் பண்டாரத்துக்குக் கடமை இறுக்கக் கடவதாகவும் இவ்வேந்தலில் (6) திருத்தப்பட்ட நிலத்திலே இவ்விராசராச நல்லூரில் எழுந்தருளுவிக்கிற உடையார் மெய்கண்டீசுவரமுடைய நாயனார்க்குப் பூசைக்கும் அமுதுபடிக்கும் மூன்றில் ஒன்று தேவதானமாகவும் இவ்வேரிக்கு ஏரிப்பட்டி மன்றாட்டுப் பட்டியுமாக ஐஞ்ஞூறு குழி விடக்கடவதாகவும் இவ்வேந்தல் (7) தம் பொருளிட்டு வெட்டுகிற நிலம் இவ்வேரியும் நிலமும் குடிநீங்கா தேவதானமாய் இவர்க்குச் சந்திராதித்த வரையும் காணியாய் விற்றொற்றிப் பரிக்கிரகஞ் செல்லக் கடவதாகவும் இப்படிச் சம்மதித்துக் கல்வெட்டிக் கொடுத்தோம் இவ்வனைவோம் இது பன்மாஹே வர ரஷை.

கி. பி. 1216 முதல் 1256 வரையில் அரசாண்ட மூன்றாம் இராசராச சோழனது பதினாறாம் ஆட்சியாண்டில் திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்ட தேவர் என்ற பெரியார் திருவண்ணாமலையைச் சேர்ந்த மாத்தூராகிய இராராச நல்லூரில் மெய்கண்டதேவப் புத்தேரி என்னும் ஏரி ஒன்று வெட்டுவித்தனர் என்பதும் அவ்வூரில் தம் பெயரால் மெய்கண்டேச்சுரம் என்னும் சிவாலயம் ஒன்றமைத்து அதற்கு நாள் வழிபாட்டிற்கு நிவந்தமாக ஆண்டொன்றுக்கு நானூறு கல நெல் வருவாய் வரக்கூடிய ஐந்து வேலி நிலத்தைத் தேவதான இறையிலியாக2 வழங்கினர் என்பதும் இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளன. இதில் காணப்படும் இஷபநாயிற்று இருபத்தெட்டாம் தியதியும் சனிக்கிழமையும் பெற்ற மிருக சீரிஷத்து நாள் என்னுங் காலக் குறிப்பை ஆராய்ந்த பேராசிரியர் கீல்ஹார்ன் என்ற அறிஞர், இது கி. பி. 1232-ம் ஆண்டு மேத் திங்கள் 22-ஆம் நாளைக் குறிக்கும் என்று கூறுகின்றனர்.3கி. பி. 1216-ல் முடி சூட்டப் பெற்ற மூன்றாம் ராசஇராச சோழனது ஆட்சியின் பதினாறாம் ஆண்டு கி. பி. 1232ஆக விருத்தல் அவ்வறிஞரது முடிபை உறுதிப்படுத்துதல் உணரற்பாலதாம். எனவே, திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்ட தேவர் தம் பெயரால் ஏரியும் திருக்கோயிலும் இராசராச நல்லூராகிய மாத்தூரில் அமைத்த காலம் கி. பி. 1232-ஆம் ஆண்டாகும்.

மெய்கண்டதேவரது மரபில் நான்காம் ஞான குரவராக வுள்ள உமாபதி சிவாசாரியார்,4தாம் சங்கற்ப நிராகரணம் என்ற நூலை இயற்றிய காலம் சகம் ஆண்டு 1235 என்று அந்நூலில் குறித்துள்ளனர். எனவே, கி. பி. 1313-ல் அவ்வாசிரியர் அந்நூலை இயற்றினர் எனலாம். ஆகவே, உமாபதி சிவத்திற்கு எண்பத் தோராண்டுகட்கு முன் கி. பி. 1232-ல் மெய்கண்டதேவர் இருந்தனர் என்பது எவ்வாற்றானும் ஏற்புடைத்தேயாம்.

இக் கல்வெட்டு வரையப் பெற்ற காலம், இதில் சொல்லப்பட்டுள்ள பெரியாரின் பெயர், இவருடைய ஊர், இவர் புரிந்துள்ள அறச் செயல்கள், சூழ்நிலை ஆகியவற்றை நுணுகி ஆராயுமிடத்து, இவரே தமிழ் மொழியில் சிவஞான போதம் இயற்றியருளிய அறிஞர் பெருமானாதல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும். இவ்வாசிரியர்க்கு ஊருடைய பெருமாள், எடுத்தது வலிய வேளார் என்னுஞ் சிறப்புப் பெயர்கள் அக்காலத்தில் வழங்கியுள்ளன என்பது இக் கல்வெட்டால் அறியப்படுகின்றது. எனவே, இவர் சோழ மன்னர்களாலும் பொதுமக்களாலும் அந்நாளில் போற்றிப் பாராட்டப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது தேற்றம். இதுகாறும் கூறியவாற்றால் ஆசிரியர் மெய்கண்ட தேவர் பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிவஞானபோதத்தை இயற்றியிருத்தல் வேண்டும் என்பது நன்கு புலப்படுதல் காண்க.

சிவஞான சித்தியார்


சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கினுள் இதுவே மிக விரிவானது; பரபக்கம், சுபக்கம் என்ற இரு பெரும் பகுதிகளை யுடையது. அவற்றுள் பரபக்கம் 301 விருத்தப் பாக்களையுடையது. இதில் உலகாயதம் முதல் பாஞ்சராத்திரம் ஈறாகவுள்ள பதினான்கு சமயங்களின் கொள்கைகளும் அவற்றிற்கு மறுப்புக்களும் விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றன; சுபக்கம் 328 விருத்தப் பாக்களை யுடையது; இப்பகுதியில் சிவஞானபோதச் சூத்திரங்கள் பன்னிரண்டையும் பின்பற்றிச் சைவ சித்தாந்தக் கொள்கைகள் நன்கு விளக்கப்பட்டிருக்கின்றன. எனவே, இதற்கு முதனூல் மெய்கண்ட தேவரது சிவஞானபோதமேயாகும். சிவஞான போத நூற்பொருளை எல்லோரும் இனிதுணர்ந் துய்ய வேண்டும் என்ற கருத்துடன் அதனைப் பின்பற்றி இந்நூல் விருத்தயாப்பில் விரிவாகவும் விளக்கமாகவும் இயற்றப் பட்டுள்ளது என்று ஐயமின்றிக் கூறலாம்.

வள்ளுவன்சீர் அன்பர்மொழி வாசகந்தொல் காப்பியமே
தெள்ளுபரி மேலழகர் செய்தவுரை - ஒள்ளியசீர்த்
தொண்டர்புராணம் தொகுசத்தி யோராறுந்
தண்டமிழன் மேலாந் தரம்

என்னும் பழைய பாடலில் தமிழ் மொழியிலுள்ள சித்தாந்த நூல்களில் சிவஞான சித்தியாரே மிக உயர்ந்தது என்று கூறப்பட்டிருத்தல் அறியற்பாலதாகும். அன்றியும், சிவத்தின் மேல் தெய்வமில்லை சிவஞான சித்திக்கு மேல் சாத்திரமில்லை என்னும் பழமொழியும் பார்விரித்த நூலெல்லாம் பார்த்தறியச் சித்தியிலே - ஓர்விருத்தப் பாதி போதும் என்னும் சிவபோக சாரப் பாடற் பகுதியும் இந்நூலின் அருமை பெருமைகளை நன்குணர்த்துதல் காண்க.

இந்நூலாசிரியர் அருணந்திசிவாசாரியர் ஆவர். இவர் கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் திருத்துறையூரில்,2 ஆதி சைவ மரபில் தோன்றிச் சைவாகமங்கள் எல்லாவற்றையும் ஐயந்திரிபறக் கற்றுத் தேர்ச்சி எய்தி, சகலாகம பண்டிதர் என்ற சிறப்புப் பெயரொடு அக்காலத்தில் விளங்கியவர்; மெய்கண்ட தேவருடைய தந்தையாராகிய அச்சுதக் களப்பாளருக்குக் குலகுருவாகத் திகழ்ந்தவர்; அவர் மகப்பேறின்றி வருந்திய காலத்தில் திருமுறைகளில் கயிறு சாத்தச் சொல்லி, அப்போது காணப்பட்ட திருப்பாட்டு உணர்த்தியவாறு அவரைத் திருவெண்காட்டிற்கு அனுப்பி முக்குளங்களிலும், நீராடி இறைவனை வழிபட்டு வருமாறு செய்தவர். இவர் திருவெண்ணெய் நல்லூர்க்கு வந்த காலத்தில் சைவ நன்மக்கள் பலர் இவரை எதிர்கொண்டு வணங்கி அழைத்துவர அவ்வூரிலிருந்த மெய்கண்ட தேவர் மாத்திரம் அங்குப் போகவில்லை; பின்னர் சென்று இவரைப் பார்க்கவுமில்லை. பிறகு இவர் மெய்கண்ட தேவரைத் தாமே பார்க்கச் சென்றனர். அப்போது மெய்கண்ட தேவர் தம் மாணவர்கட்கு ஆணவ மல உண்மையை விளக்கிக் கொண்டிருந்தனரேயன்றி இவரைக் கண்டு ஒன்றும் பேசவில்லை. என்று கேட்க அவர் தம் முன் நின்ற அருணந்தி சிவாசாரியரையே தம் விரலால் சுட்டிக் காண்பித்தனராம். உடனே இவர் மெய்யறிவு விளங்கப்பெற்று மெய்கண்ட தேவர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கித் தமக்கு மெய்ப்பொருளை அறிவுறுத்துமாறு வேண்டினர். இவரது நிலையை உணர்ந்த மெய்கண்ட தேவர் இவருக்கு மெய்ப்பொருளை யுணர்த்தித் தம் மாணவர் நாற்பத்
தொன்பதின்மருள் முதல்வராயிருக்கும் சிறப்பையும் அளித்தனர். இவர் தம் ஆசிரியரிடம் கேட்ட உண்மைப் பொருளை நன்கு விளக்கி முதனூலாகிய சிவஞான போதத்திற்கு வழிநூலாகச் சிவஞான சித்தியார் என்னும் நூலை இயற்றினர். இச்சிவஞான சித்தியார் பர பக்கத்திற்கு மூவரும், சுபக்கத்திற்கு அறுவரும்,2 உரையெழுதியுள்ளனர். இதுவும் இந்நூலின் பெருமைக்குத் தக்க சான்றாதல் அறிக.

சந்தான குரவர் நால்வருள், சிவஞான போதம் இயற்றியருளிய மெய்கண்டதேவர் முதல்வர் என்பதும் அவர் முதல் மாணவரும் சிவஞான சித்தியார் இயற்றியவரும் ஆகிய அருணந்தி சிவாசாரியர் இரண்டாமவர் என்பதும் அறியற் பாலாவாம்.

இருபா இருபஃது


இது சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கினுள் ஒன்று; பத்து நேரிசை வெண்பாவும் பத்து நேரிசை ஆசிரியப்பாவுமாக இருபது செய்யுட்களையுடையது; அந்தாதித் தொடையில் அமைந்தது. இதன் ஆசிரியர் மெய்கண்ட தேவரின் முதல் மாணவரும் சிவஞான சித்தியாரின் ஆசிரியருமான அருணந்தி சிவாசாரியர் ஆவர். இப் பெரியார் தம் ஞானசாரியராகிய மெய்கண்ட தேவரை வழிபட்டு வினவும் முகத்தால் சைவ சித்தாந்த உண்மைகளை விளக்கிக் கூறுவது இந்நூல்.

உண்மை விளக்கம்


இது சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கினுள் ஒன்று; ஐம்பத்து மூன்று நேரிசை வெண்பாக்களைத் தன்னகத்துக் கொண்டது; முப்பத்தாறு தத்துவங்களின் இயல்பையும் உயிர், பதி, பாசம் என்பவற்றின் தன்மைகளையும், திருக்கூத்தின் பொருளையும், ஐந்தெழுத்துண்மை கூத்தப் பெருமான் திருவடிவில் விளங்கும் முறையையும் தெளிவாகவும் சுருக்கமாகவும் உணர்த்துவது. இதன் ஆசிரியர் திருவதிகை மனவாசகங் கடந்தார் என்ற பெரியார் ஆவர். இவர் மெய்கண்ட தேவர் மாணவர் நாற்பத்தொன்பதின்மருள் ஒருவர். இவரது பிறப்பிடம் திருவதிகையாகும். இந்நூல் பழைய ஏட்டுப் பிரதிகள் இரண்டினுள்,

மன்னதிகை வாழும் மனவா சகங்கடந்தான்
மின்னனையார் வாழ்விலுறா மெய்கண்டான் - பன்மறைகள்
வண்மைதரும் ஆகமநூல் வைத்த பொருள்வழுவா
உண்மைவிளக் கஞ்செய்தான் உற்று.

என்ற வெண்பா ஒன்று இறுதியில் இருத்தல் அறியத்தக்கது.

கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற சில தமிழ் நூல்களின் பெயர்கள் கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றன. ஆனால், அந்நூல்கள் இக்காலத்தில் கிடைக்கவில்லை. எனினும், கல்வெட்டுக்களின் துணைகொண்டு அவற்றையும் அவற்றின் ஆசிரியர்களையும் பற்றிய செய்திகளை ஆராய்ந்து காண்பாம்.

பாரதம்


மூன்றாங் குலோத்துங்க சோழனது முப்பத்திரண்டாம ஆட்சியாண்டாகிய கி. பி. 1210-ல் வட திருவாலங்காட்டில் வரையப்பெற்றுள்ள கல்வெட்டொன்று1 இப்பாரதத்தைப் பற்றிய செய்தியை உணர்த்துகின்றது. அது, பழையனூர் நாட்டுத் திருவாலங்காட்டில் எழுந்தருளியுள்ள கூத்தப் பிரானுக்கு நுந்தா விளக்கொன்று வைத்து அதற்கு நிவந்தம் விட்ட ஒரு தலைவரைக் குறிக்குமிடத்து, அவர் பாரதத்தன்னை அருந்தமிழ்ப்படுத்திச் சிவநெறி கண்டவர் என்று புகழ்ந்து கூறுகின்றது. அவர், தொண்டை மண்டலததில் குன்றவர்த்தனக் கோட்டத்திலுள்ள இல்லத்தூர் நாட்டில் அரும்பாக்கம் என்ற ஊரில் வாழ்ந்தவர் என்பதும் அறநிலைவிசாகன் என்னும் பெயரினர் என்பதும் திரை லோக்ய மல்லன், வத்சராசன் என்ற பட்டங்களையுடையவர் என்பதும் அக்கல்வெட்டால் அறிப்படுகின்றன. அக்கல்வெட்டு உணர்த்தும் செய்திகளைக் கூர்ந்து நோக்குமிடத்து, அவர் மூன்றாங் குலோத்துங்க சோழனுடைய அசியல் அதிகாரிகளுள் ஒருவராகவும் சிவபக்தி வாய்ந்த சிறந்த செந்தமிழ்ப் புலவராகவும் இருந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு புலனாகின்றது. அரும்பாக்கத்து அறநிலை விசானார் இயற்றிய இப்பாரத நூல் இப்போது கிடைக்காமையால் இதனைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை. பதின்மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற இப்பாரதத்திற்குமுன் கடைச்சங்க காலத்தில் பெருந்தேவனார் இயற்றிய பாரதம் ஒன்றும், கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் ஆட்சியில் இயற்றப்பெற்ற பாரதம் ஒன்றும் நம் தமிழ் மொழியில் இருந்தமை அறியத்தக்கதாகும்.

காங்கேயன் பிள்ளைக்கவி


இராமநாதபுரம் ஜில்லா திருப்பத்தூர்த் தாலுகாவில் உள்ள பெருச்சிக் கோயிலில் காணப்படும் கல்வெட்டொன்று இந்நூலைப் பற்றிய செய்தியைக் கூறுகின்றது. அது, முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியனது ஆட்சியின் பதினான்காம் ஆண்டாகிய கி. பி. 1230-ல் வரையப்பட்டது. அக் கல்வெட்டினால் இப் பிள்ளைக்கவியின் ஆசிரியர், சிறு பெருச்சியூர்க் கொடிக்கொண்டான் பெரியான் ஆதிச்சதேவன் என்ற புலவர் என்று தெரிகிறது. இக்கவிஞர் மாறவர்மன் சுந்தர பாண்டியனுடைய அரசியல் அதிகாரிகளுள் ஒருவனும் தேனாற்றுப் போக்கிலுள்ள நியமம் என்ற ஊரினனுமாகிய கண்டன் உதயஞ்செய்தான் காங்கேயன் என்ற தலைவன்மீது இப்பிள்ளைத் தமிழைப் பாடி இதற்குப் பரிசிலாகச் சாத்தனேரி என்னும் ஊரில் அவன் அளித்த இறையிலி நிலங்களைப் பெற்று வாழ்ந்து வந்தனர் என்பது அக்கல்வெட்டால் அறியக் கிடக்கின்றது.2 மாறவர்மன் சுந்தர பாண்டியனுடைய அவைக் களப் புலவராக விளங்கிய காரானை விழுப்பரையர் என்பவர் பெரியான் ஆதிச்சதேவன் என்ற இப்புலவர்க்கும் அரசியல் அதிகாரியாகிய கண்டன் உதயஞ் செய்தான் காங்கேயனுக்கும் நட்புண்டுபண்ணியிருத்தலாலும் அத்தலைவன் இவரை நம்புலவன் என்று ஒரு கல்வெட்டில்3 உரிமையுடன் கூறியிருத்தலாலும் இவர் கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் பாண்டி நாட்டில் நிலவிய சிறந்த புலவர்களுள் ஒருவராயிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். அப்பிள்ளைக்கவி இக்காலத்தில் கிடைக்காமையின் இதனைப்பற்றி யாதும் குறித்தற்கியல வில்லை; கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் நடுவில் கவிச்சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தர் இயற்றிய குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழுக்குப் பிறகு அறியப்படும் பிள்ளைத் தமிழ் இதுவேயாம்.

கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் பண்டைத் தமிழ் நூல்களுக்குச் சிறந்த உரைகண்ட உரையாசிரியர் இருவர் இருந்துள்ளனர் என்று தெரிகிறது. அன்னோர் சேனாவரையரும் பரிமேலழகரும் ஆவர். அவர்களைப் பற்றிய செய்திகளை ஈண்டுக் குறிப்பதும் பொருந்தும்.

சேனாவரையர்


இவர் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரை வரைந்த பெரியார்களுள்1 ஒருவர்; வடமொழியும் தமிழும் நன்கு பயின்றவர். இவ்விரு பெரிய மொழிகளும் இருவேறு தனிமொழிகள் என்பதை மறந்து வடநூல் முடிபுகளையும் கொள்கைகளையும் தமிழ் மொழிக்குரிய இலக்கணங்களில் புகுத்தி அவற்றிற்கு அமைதி கூறியவர். இவரது வடமொழிப் பயிற்சியொன்று பற்றியே இவர் உரையாசிரியர்களுள் சிறந்தவர் என்று இக்காலத்தவரால் பாராட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சேனாவரையர் என்பது படைத்தலைவர் என்று பொருளைத் தரும். அவற்றுள் கிளையெண் குழூஉ என்று தொடங்கும் நன்னூல் சூத்திரத்தின் உரையில்2 சிறப்பால் பெறும்பெயர்க்கு ஆசிரியன், படைத்தலைவன், சேனாவரையன் என்பவற்றை மயிலைநாதர் உதாரணமாகக் காட்டியிருத்தலால், பண்டைத் தமிழ் வேந்தர்கள் தம் படைத்தலைவர்களுக்கு வழங்கிய சிறப்புப் பெயரே சேனாவரையர் என்பது எனலாம். எனினும், இப்பெயர் இயற்பெயராகவும் வழங்கியுள்ளது. ஆகவே, தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரைகண்ட இவ்வாசிரியரது இயற்பெயரே சேனாவரையர் என்று வழங்கியதாதல் வேண்டும்.

தொல்காப்பியச் சொல்லதிகாரத்துப் பெயரியலில் எல்லா மென்னும் பெயர் என்று தொடங்கும் சூத்திரத்திலுள்ள பெண்மை யடுத்த மகனென் கிளவியும் என்ற பகுதிக்குரிய விசேடவுரையில்3 புறத்துப்போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்மகளை மாறோக்கத்தார் இக்காலத்தும் பெண்மகன் என்று வழங்குப என்று இவ்வுரையாசிரியர் அது வழங்குமிடத்தைத் தெளிவாகக் கூறியுள்ளார். பிற உரையாசிரியர்களாகிய இளம்பூரண அடிகளும் தெய்வச் சிலையாரும் இவ்வாறு இதனை இடங்காட்டி விளக்கவில்லை. எனவே, இவர் மாறோகத்தைச் சார்ந்த நிலப்பரப்பில் வாழ்ந்தவராதல் வேண்டும். மாறோகம் என்பது கொற்கையைச் சூழ்ந்த நாடு என்று கூறுவர். ஆனால், பாண்டியர்களின் கடற்றுறைப் பட்டின மாகிய கொற்கையைச் சூழ்ந்த நாடு முற்காலத்தில் குடநாடு என்று வழங்கியது என்பது பாண்டி நாட்டுக் கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது.2 பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய கைந்நிலையின் ஆசிரியர், மாறோகத்து முள்ளி நாட்டு நல்லூர்க் காவதியார் மகனார் புல்லங்காடனார் என்பது பழைய ஏட்டுப் பிரதிகளால் அறியக்கிடக்கின்றது.3 ஆகவே, முள்ளிநாட்டைத் தன்னகத்துக் கொண்ட பெருநாடொன்று மாறோக நாடு என்ற பெயருடையதாயிருந்திருத்தல் வேண்டும். முள்ளி நாடு என்பது திருநெல்வேலி ஜில்லாவிலிருந்த நாடுகளில் ஒன்றாகும்.4 எனவே, மாறோகமும் தென்பாண்டி நாட்டிலிருந்த ஒரு நாடு என்பதில் ஐயமில்லை. தொல்காப்பியனார் காலத்தில் வழங்கிய பழைய வழக்கம் ஒன்று தென்பாண்டி நாட்டில் மாறோகத்தில் தம் காலத்திலும் வழக்கிலிருந்ததை நேரில் உணர்ந்து சேனாவரையர் தம் தொல்காப்பியச் சொல்லதிகார உரையில் குறித்திருத்தலால் இவர் தென்பாண்டி நாட்டில் ஒரு பகுதியில் வாழ்ந்தவராதல் வேண்டும். திருநெல்வேலி ஜில்லாவில் கொற்கைக்கண்மை யிலுள்ளஆற்றூரில் காணப்படும் கல்வெட்டொன்று,5 ஆற்றூர்ச் சேனாவரையர் என்பார் தம் முன்னோரிடத்திலிருந்து ஆசிரியர் மாணவர் முறையில் தாம் பெற்ற நிலம் மனை முதலியவற்றை அவ்வூர்ச் சிவன் கோயிலுக்கு கி. பி. 1275-ல் அளித்தனர் என்று கூறுகின்றது. இக்கல்வெட்டில் சொல்லப்பட்ட ஆற்றூர் சேனாவரையரே தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரைகண்டவராக இருத்தல் வேண்டும் என்று கருதுவதற்கு இடமுளது. இவ்வறிஞர் ஆற்றூர்க் கோவிலுக்கு அளித்த நிலம், மனை முதலியவை இவர் ஆசிரியர் மாணவர் முறையில் முன்னோரிடமிருந்து அடைந்தவையாயிருத்தலும் இவரது ஊர் மாறோக நாட்டிலுள்ள ஆற்றூராயிருத்தலும் இம்முடிபினை ஆதரித்தல் காண்க. ஆகவே, இவ்வுரையாசிரியர் எம்மண்டலமும் கொண்டருளிய மாறவர்மன் குலசேகர பாண்டியன் (கி. பி. 1268 - 1311) ஆட்சிக்காலத்தில் தென்பாண்டி நாட்டில் கொற்கைக்கணித்தாகத் தாமிரபரணிக் கரையிலுள்ள ஆற்றூரில் வாழ்ந்தவர் என்பது அறியத்தக்கது. இவர் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு எழுதிய உரைஒன்றே இக்காலத்தில் கிடைத்துள்ளது. இவரைப் பற்றிய பிற செய்திகள் புலப்படவில்லை.

பரிமேலழகர்


இவர் திருக்குறளுக்கும் எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றாகிய பரிபாடலுக்கும் சிறந்த உரைகண்ட பேராசிரியர் ஆவர். திருக்குறளுக்கு முற்காலத்தில் உரை எழுதியவர்கள் பதின்மர் என்பது,

தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பரிமே லழகர் பருதி - திருமலையர்
மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர்நூற்
கெல்லையுரை செய்தார் இவர்

என்ற பாடலால் அறியப்படுகின்றது. இப்பதின்மருள் பரிமேலழகரே இறுதியில் உரை எழுதியவர். மற்ற ஒன்பதின்மரும் இவருக்கு முற்பட்டவர்கள். பதின்மர் உரைகளில் இவ்வறிஞரது உரையே மிகச் சிறந்தது என்பது பெரியோர்களது கருத்து. இதனை,

பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள
நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ - நூலிற்
பரித்தவுரை யெல்லாம் பரிமே லழகன்
தெரித்தவுரை யாமோ தெளி

விரைத்தா ரலங்கற் றிருவள் ளுவர்முன்னம் வெண்குறட்பா
நிரைத்தார் மிகுபொருள் நான்கும் விளங்க நெறிப்புலவர்
உரைத்தார் பலரு மதற்குரை தன்னை யுலகறியக்
கருத்தான் வகுத்தமைத் தான்கலை தேரொக்கைகாவலனே

என்னும் பழைய பாடல்களால் உணரலாம். சந்தான குரவருள் ஒருவராகிய கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் தமிழ் மொழியிலுள்ள நீதிநூல், பத்திநூல், இலக்கண நூல், உரைநூல், புராணநூல், சித்தாந்த நூல் ஆகிய ஆறு பிரிவுகளிலும் ஒவ்வொன்றிலும் இன்ன இன்ன நூல் சிறந்தது என்பதை,

வள்ளுவன்சீ ரன்பர்மொழி வாசகந்தொல் காப்பியமே
தெள்ளுபரி மேலழகர் செய்தவுரை - ஒள்ளியசீர்
தொண்டர் புராணந் தொகுசித்தி யோராறுந்
தண்டமிழின் மேலாந் தரம்

என்ற பாடலில் குறித்துள்ளனர். இதில் உரைகளுள் சிறந்தது பரிமேலழகர் உரையே யென்று அவர் கூறியிருத்தல் காண்க. இவ்வாறு பரிமேலழகர் உரையை முன்னோர் பலர் பாராட்டி யுள்ளமைக்குக் காரணம், இவ்வுரை சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல் ஆகிய இயல்பினை யுடையதாய்த் தூய தமிழில் அமைந்திருப்பதேயாம். வடமொழியிலும் மிக்க பயிற்சியுடையவ ராக விளங்கிய இவ்வுரையாசிரியர் சிறந்த செந்தமிழ் நூலாகிய திருக்குறளுக்கும் கடைச்சங்க நூலாகிய பரிபாடலுக்கும் அவற்றின் தூய்மைக்கும் பெருமைக்கும் ஏற்றவாறு தெள்ளிய தூயதமிழில் உரை வரைந்திருப்பது பெரிதும் போற்றுவதற்குரிய செயலாகும்.

இவ்வுரையாசிரியர் காஞ்சிமா நகரில் வாழ்ந்தவர் என்பதும் வைணவ சமயத்தினர் என்பதும் திருக்காஞ்சி வாழ் பரிமேலழகன் - வள்ளுவர் நூற்கு வழி காட்டினான் தொண்டை மண்டலமே என்னும் தொண்டை மண்டல சதகப் பாடற் பகுதியாலும் நீணிலங்கடந்தோன் தாள்தொழு மரபிற் - பரிமேலழகன் என்னும் பரிபாடல் உரைச் சிறப்புப் பாயிரம் பகுதியாலும் நன்கறியக் கிடக்கின்றன. இவர் காஞ்சீபுரத்தி லுள்ள உலகளந்த பெருமாள் கோயில் அருச்சகர் மரபில் தோன்றியவர் என்ற செவி வழிச் செய்தியும் இவற்றை ஆதரித்து நிற்றல் காண்க.

இவர் திருமாலிடத்து மெய்யன்பு பூண்டு ஒழுகியவரா யிருந்தும், பரிபாடலுரையில் சிவபெருமானையும் முருகவேளையும் குறிப்பிடும் இடங்களில் அவர்களுடைய பெருமைகளை நன்கு விளக்கியிருப்பது இவரது நடு நிலைமையைத் தெள்ளிதிற் புலப்படுத்துகிறது. இவரது பண்பினை, அன்பருள் நாணொப் புரவுகண்ணோட்டம் - நன்றறி வாய்மை நற்றவ முடையோன் - இத்தகையன்றி யீசன தருளால் - உய்த்துணர் வுடையவோர் உண்மையாளன்1 என்ற திருக்குறள் உரைச் சிறப்புப்பாயிரப் பகுதியால் இனிதுணரலாம். பழைய செய்யுட் பகுதிகளைத் தம் உரைநடையில் அமைத்த உரையாசிரியர்களுள் இவரே முதன்மை வாய்ந்தவர் என்பது அறிஞர்களது கருத்து. இவ்வுண்மையை இவருடைய உரைகளைப் படிக்கும் புலவர்கள் நன்கறிவர்.

காஞ்சி அருளாளப் பெருமாள் கோயிலில், தெலுங்கச் சோழன் விஜயகண்ட கோபாலனது இருபத்திரண்டாம் ஆட்சியாண்டாகிய கி. பி. 1272 இல் வரையப்பட்ட கல்வெட்டொன்று,2 புவியாளப் பிறந்த ஆமூர் நீலகங்கரையன் என்ற தலைவன் ஒருவன் வண்டுவரைப் பெருமாளான பரிமேலழகிய பெருமாள் தாதரிடம் ஐந்நூறு குழியுள்ள நந்தவனம் ஒன்றை விலைக்கு வாங்கி அப்பெருமாள் கோயிலுக்கு அளித்தனன் என்று கூறுகின்றது. இதில் குறிக்கப்பெற்ற பரிமேலழகிய பெருமான் தாதரே உரையாசிரியாராகிய பரிமேலழகராயிருத்தல் வேண்டும் என்பது அறிஞர் பலருடைய கருத்தாகும்.3 பெயர், இடம், காலம், சமயம் ஆகியவற்றை நோக்குங்கால் இக்கருத்து வலியுறுதல் காணலாம். இக்கல்வெட்டில் சொல்லப்படும் தாதன் என்பது இந்நாளில் வைணவர்கள் நாள்தோறும் வழங்கி வரும் தாசன் என்னும் பரிபாடைச் சொல்லேயாம். இவ்வுரையாசிரியர்க்கு வண்துவரைப் பெருமாள் என்ற பிறிதொரு பெயரும் உண்டு என்பது இக்கல்வெட்டால் அறியப்படுகின்றது. இவர் வாழ்ந்த காலம் கி. பி. பதின் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியாதல் உணர்க.

இனி, மேலே குறிப்பிட்ட விரைத்தாரலங்கல் என்று தொடங்கும் பழைய பாடலில் இவர் ஒக்கை காவலன் என்று கூறப்பட்டிருத்தலால் பாண்டி நாட்டிலுள்ள ஒக்கூரே இவரது ஊர் என்பது சிலர் கருத்து. ஒக்கூர் என்னும் பெயரோடு சோழ நாட்டிலும் ஓர் ஊர் இருத்தலால் அதனை ஒருதலையாகத் துணிதற்கியலவில்லை. மற்றொரு பழைய பாடலில் தமிழ்க்கூடல் - பரிமேலழகியன் என்ற தொடர் காணப் படுதலால் இவர் தம் வாழ்நாளில் ஒரு பகுதியில் மதுரைமா நகரில் வாழ்ந்தவராதல் வேண்டும் என்பர் சிலர். எனவே, இவர் மதுரைமாநகரில் சில ஆண்டுகளும் காஞ்சிமாநகரில் சில ஆண்டுகளும் வாழ்ந்திருத்தல் கூடும். இவரைப்பற்றிய பிற வரலாறுகளை அறிதற்குரிய ஆதாரங்கள் இப்போது கிடைக்கவில்லை.

தஞ்சைவாணன் கோவை


இது மாறைநாட்டு1த் தஞ்சையில் வாழ்ந்து கொண்டிருந்த வாணன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பொய்யாமொழிப் புலவரால் பாடப்பட்ட கோவை நூலாகும். கோவை என்பது தமிழ் மொழியில் வழங்கிவரும் பலவகைப் பிரபந்தங்களுள் ஒன்று. அகப்பொருள் துறைகளைப் பொருள் தொடர்ந்து வருமாறு ஒழுங்குபெற அமைத்து ஒரு நாடகக் காப்பியம் போல் நானூறு கட்டளைக் கலித்துறைகளில் பாடப்பட வேண்டும் என்பது இதன் இலக்கணம். இத்தகைய கோவை நூல்களுள் மிக்க பழமை வாய்ந்தவை, மணிவாசகப் பெருமான் இயற்றியருளிய திருச்சிற்றம்பலக் கோவையாரும் இறையனார் அகப் பொருள் உரையில் உரையாசிரியரால் மேற்கோளாக எடுத்துக்காட்டப் பெற்ற பாண்டிக்கோவையுமேயாம்.

தஞ்சைவாணன் கோவை, திருச்சிற்றம்பலக் கோவையார்க்கு அடுத்த நிலையில் வைத்துப் பாராட்டப்படும் பெருமை வாய்ந்தது; சொல்வளம் பொருள்வளம் செறிந்தது; நாற்கவிராச நம்பியின் அகப் பொருள் விளக்கத்திற்குச் சிறந்ததோர் இலக்கியமாக நிலவும் சிறப்புடையது.

இந்நூல், களவியல், வரைவியல், கற்பியல் என்ற மூன்று பகுதிகளையுடையதாய் நானூற்றிருபத்தைந்து அகத்துறைப் பாடல்களில் அமைந்தது.

இந்நூலின் ஆசிரியராகிய பொய்யாமொழிப் புலவர் தொண்டை மண்டலத்தில் செங்காட்டுக் கோட்டத்து2த் துறையூரில் பிறந்தவர்; அமண்பாக்கிழார் குடியினர்; இவருடைய இயற்பெயர் யாது என்பதும் பெற்றோர் யாவர் என்பதும் தெரியவில்லை. பொய்யாநாவிற் கபிலன்1 என்று பாராட்டப்படும் கடைச்சங்கப் புலவர் கபிலரைப்போல் இவரும் தூய உள்ளமும் பெரும் புலமையும் படைத்துப் பொய்யாச் செந்நாவுடையவராயிருந்தமை பற்றிப் பொய்யாமொழியார் என்ற சிறப்புப் பெயர் எய்தினர். இப்பெயர் யாண்டும் பரவி வழங்கத் தொடங்கியபின் இவரது இயற்பெயர் மறைந்து விட்டது.

இப்புலவர்பிரான் சோழ மண்டலத்தில் தஞ்சைமாநகர்க்கு அண்மையிலுள்ள கண்டியூரில் புகழுடன் வாழ்ந்து கொண்டிருந்த சீநக்கன் என்ற வள்ளலின் அன்பிற்கும் ஆதரவிற்கும் உரியவராகிப் பல ஆண்டுகள் அங்குத் தங்கியிருந்தனர். அவ்வூரில் தமக்கு ஏற்பட்ட பொய்ப்பழி2 காரணமாக இவர் பெரிதும் மனமுடைந்து, தம்பால் சிறிதும் ஐயமின்றிப் பேரன்புடன் நடத்திவந்த சீநக்க வள்ளலையும் பிரிந்து, பாண்டி நாட்டிற்குச் சென்று, பாண்டி வேந்தனிடம் தங்கியிருந்தனர். அந்நாட்களில் அவ்வரசன் வேண்டியவாறு மதுரைப் பொற்றாமரைக் குளத்தில் பழைய சங்கப் பலகை மிதந்து தோன்றும்படி,

பூவேந்தர் முன்போற் புரப்பா ரிலையன்றிப்
பாவேந்த ருண்டென்னும் பான்மைதான் - மாவேந்தன்
மாற னறிய மதுரா புரித்தமிழோர்
வீறணையே சற்றே மித

என்ற பாடலைப் பாடினார் என்று தமிழ் நாவலர் சரிதை கூறுகின்றது.

பிறகு, இவர் தென்பாண்டி நாட்டிற்குச் சென்று அந்நாட்டின் உள்நாடுகளுள் ஒன்றாகிய மாறை நாட்டின் தலைவனாக நிலவிய வாணனைக்கண்டு, அவனால் ஆதரிக்கப் பெற்று அங்குத் தங்கியிருந்தனர்; அக்காலத்தில் அவனது பேரன்பினால் பிணிக்கப்பட்டு அவன்மேல் இக்கோவையைப் பாடி அரங்கேற்றினர். வாணனும் அந்நூலால் தனக்குப் பொன்றாப் புகழை யுண்டுபண்ணிய இப்புலவர் பெருமானுக்குப் பொன்னும் மணியுமாகப் பல வரிசைகளை வழங்கிப் பாராட்டினான். சில ஆண்டுகள் அங்கிருந்த பின்னர் இவர் சீநக்க வள்ளலைக் காண விரும்பிக் கண்டியூர்க்குத் திரும்பினர். அவ்வள்ளலும் இவரைப் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்று அளவளாவித் தன் தொல்பெருங் கேண்மையிற் சிறிதும் குறையாமல் போற்றிப் புரந்துவந்தான். அந்நாட்களில் சீநக்கன் இறக்கவே, சுற்றத்தார் அவன் உடலை ஈமத்திற்கு எடுத்துச் சென்று எரிகொளுவுவாராயினர். அப்போது உடனிருந்த பொய்யாமொழியார், தம் ஆருயிர் நண்பனது பிரிவாற்றாமல் கண்ணீருகுத்து,

அன்றுநீ செல்லக் கிடவென்றா யாருயிர்விட்
டின்றுநீ வானுக மெய்தினாய் - வென்றிதிகழ்
வானக்க பூண்மடவார் மார்பனே கண்டியூர்ச்
சீனக்கா செல்லக் கிட

என்ற பாடலைச் சொல்லிப் புலம்பித் தாமும் அவ்வெரியில் வீழ்ந்து உயிர் துறந்தனர். இவரது உடனுயிர் நீத்த சீரிய நட்புரிமை, கடைச்சங்கப் புலவருள் ஒருவராகிய கபிலரை நினைவுறுத்துதல் காணலாம்.

இவருடைய சிறந்த பண்புடைமையை,

அறமுரைத் தானும் புலவன்முப் பாலின்
திறமுரைத் தானும் புலவன் - குறுமுனி
தானும் புலவன் தரணி பொறுக்குமோ
யானும் புலவ னெனில்

என்று இவர் பாடியுள்ள ஒரு வெண்பாவினால் நன்கறியலாம்.

இனி, இப்புலவர் பெருந்தகையின் காலம் யாது என்பதை ஆராய்வாம். ஒருசாரார் இவர் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டினர் எனவும், பிறிதொரு சாரார் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டினர் எனவும் மற்றொரு சாரார் கி. பி. பதினாறாம் நூற்றாண்டினர் எனவும் கூறுகின்றனர். இவற்றுள் ஒன்றேனும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாயில்லை என்பது கிடைத்துள்ள சில ஆதாரங்களால் புலனாகின்றது. இவர் ஒரு காட்டு வழியே போய்க்கொண்டிருந்தபோது முருகவேள் ஒரு வேட்டுவனாகத் தோன்றி, முட்டை என்ற பெயருடைய தன் மேல் ஒரு பாட்டுப் பாடவேண்டும் என்று கேட்டனர் எனவும், அப்போது இவர், பொன்பாவுங் கள்ளி1 என்று தொடங்கும் வெண்பா ஒன்று பாடினர் எனவும் தமிழ் நாவலர் சரிதை உணர்த்துகின்றது. இவ் வரலாற்றை அருணகிரிநாதர், முரட்டுப் புலவனை முட்டைப் பெயர் செப்பிக் கவிபெறு பெருமாளே2 என்று தம் திருப்புகழில் குறித்துள்ளனர். எனவே, இவர் அருணகிரிநாதரின் காலமாகிய கி. பி. பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதிக்கு முன்னர் இருந்திருத்தல் வேண்டும் என்பது தேற்றம். கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முதல் சடையவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சிக் காலத்தில் நிலவிய நாற்கவிராச நம்பியின் அகப்பொருள் விளக்கத்தைப் பின்பற்றி இவர் தஞ்சைவாணன் கோவையை இயற்றியுள்ளார் என்று தெரிகிறது. ஆகவே, இவர் கி. பி. பதினைந்தாம் நூற்றாண்டிற்கு முன்னரும் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிற்குப் பின்னரும் இருந்தவராதல் வேண்டும் என்பது தெள்ளிது.

இனி, தஞ்சைவாணன் கோவையின் பாட்டுடைத் தலைவனை,

வழுதியர் நாமம் வளர்கின்ற வாணன்

எனவும்,

வெங்கோன் மழைபொழி வானவர் போர்வென்ற மீனவர்தம்
செங்கோன் முறைமை செலுத்திய வாணன்

எனவும்,

செழியன் கயலைத் திசைவைத்த வாணன்

எனவும் இவர் புகழ்ந்து கூறியிருத்தலால் அவன் பாண்டி வேந்தனுக்கு அமைச்சனாகவும் படைத் தலைவனாகவும் இருந்து பெருமை எய்தியவன் என்பது நன்கு புலனாகின்றது. அன்றியும், அவ்வாணன் சேரனையும் சோழனையும் போரில் வென்றடக்கிய செய்தியை,

விசயக் கொடிமேல்
வாங்கிய சாப முயர்த்தவன் போர்வென்ற வாணன்

என்றும்,

கொலைகா லயிற்படை நேரியற் கோனகங் கோடவங்கைச்
சிலைகால் வளைத்துத் திருத்திய வாணன்

என்றும்,

மண்டுந் திரைவையை சூழ்தஞ்சை வாணர்க்கு வன்புலியும்
செண்டுங் கொடுத்தகல் செம்பியர்

என்றும், தஞ்சைவாணன் கோவையில் இவர் குறித்துள்ளனர். எனவே வாணன் பாண்டிவேந்தன் ஒருவனுக்குப் படைத்தலைவ னாகச் சென்று, சேர சோழரோடு போர்களை நிகழ்த்தியிருத்தல் வேண்டும் என்பது திண்ணம்.

கி. பி. 1251 முதல் கி. பி. 1271 வரையில் பாண்டி நாட்டில் ஆட்சி புரிந்த முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியனும் அவனுக்குப் பிறகு கி. பி. 1311 வரையில் அரசாண்ட முதல் மாறவர்மன் குலேசேகர பாண்டியனும் சேரனையும் சோழனையும் வென்று திறைகொண்டு சக்கரவர்திகளாகத் திகழ்ந்தவர்கள் என்பது பாண்டியர் வரலாற்றால் அறியப் படுகிறது. அப்பாண்டி வேந்தர் இருவரும் முறையே சேரனை வென்றான்1 கொல்லங் கொண்டான் என்ற பட்டங்களை யுடையவர்களாயிருந்தனர் என்பது கல்வெட்டுக்களால் உணரக்கிடக்கின்றது. ஆகவே, அவ்விரு பேரரசருள் ஒருவன்பால் வாணன் படைத்தலைவனாயிருந்திருத்தல் வேண்டும். முதல் சடையவர்மன் சுந்தர பாண்டியன் வாணர்களை வென்று தன்னடிப்படுத்தினான் என்று கல்வெட்டுக்கள் கூறுவதால், கோவையின் பாட்டுடைத் தலைவனாகிய வாணன், முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியனுக்குப் படைத்தலைவனாகச் சென்று சேர சோழரோடு போர்கள் நடத்தியிருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும். எனவே, பொய்யாமொழிப் புலவர் கி. பி. 1268 முதல் 1311 வரையில் பாண்டிய இராச்சியத்தில் சக்கரவர்த்தியாக வீற்றிருந்து ஆட்சி புரிந்த முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் இருந்தவர் ஆவர். ஆகவே, இப்புலவர் பிரான் கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிவவியவர் என்பது தெள்ளிது.

கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் முதற்பகுதியில்தான் வாணவர்கள் பாண்டி நாட்டிற்குச் சென்றனர் என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. ஆதலால் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் தென்பாண்டி நாட்டின் உள் நாடுகளுள் ஒன்றாகிய மாறை நாட்டில் வாணக்குலத் தலைவன் ஒருவன் இருந்தனன் என்றும், அவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பொய்யாமொழியார் தஞ்சைவாணன் கோவை இயற்றியுள்ளனர் என்றும் கூறுவது எவ்வாற்றானும் ஏற்புடைத்தாகாமை காண்க.

இத் தஞ்சைவாணன் கோவைக்குக் குன்றத்தூர் அட்டாவதானம் சொக்கப்ப நாவலர் எழுதிய பேருரை ஒன்றுளது. அவ்வுரையில் கோவை நூல்களில் பயின்று வரும் களவியல் நிகழ்ச்சிகளுக்கு நாட்கள் வரையறை செய்து அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதொன்றாம்.


II கி. பி. பதினான்காம் நூற்றாண்டு

தமிழ் இலக்கிய வரலாற்றில் கி. பி. பதினான்காம் நூற்றாண்டு ஒரு சிறந்த காலப் பகுதியாக இல்லை என்றே கூறவேண்டும். இந்நூற்றாண்டில்தான் தமிழ்நாடு அயலாரது படையெழுச்சிக்குட்பட்டு எல்லையற்ற இன்னலுக்குள்ளாகித் தன் செல்வத்தையும் சிறப்பையும் இழக்கும்படி நேர்ந்தது. கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் உயர்நிலையிலிருந்த பாண்டியரது தமிழ்ப் பேரரசும் கி. பி. பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீழ்ச்சியுற்றது. முதல் மாற வர்மன் குலசேகர பாண்டியனுடைய புதல்வர்களாகிய சடையவர்மன் சுந்தர பாண்டியனும் சடையவர்மன் வீர பாண்டியனும் ஆட்சியுரிமை பற்றித் தம்முட் பகைகொண்டு போர்புரிந்து கொண்டிருந்தமையால் தமிழ் நாட்டில் குழப்பம் மிகுந்திருந்தது.1 இவர்களுள் தோல்வியுற்ற சுந்தர பாண்டியன் அல்லாவுடீன் கில்ஜியின் படைத்தலைவனாகிய மாலிக்காபூரைத் தென்னாட்டின் மீது படையெடுத்து வருமாறு அழைத்தமையால் அவனும் அங்ஙனமே படையெடுத்து வந்து தமிழகத்திலுள்ள பல ஊர்களைக் கொள்ளையடித்துப் பெரும் பொருள்களைக் கவர்ந்து சென்றான்.2 அவனுக்குப் பிறகு டில்லி யரசனாகிய முகமது பின் துக்களக் என்பான், ஜலாலுடீன் அசன்ஷா என்ற தலைவனைப் பெரும்படையோடு தமிழ் நாட்டிற்கு அனுப்பினான். அப்படைத் தலைவன் பாண்டி நாட்டை வென்று தன் ஆட்சிக்குட்படுத்தினான்.3 பின்னர், மதுரைமா நகரில் முகமதியர் ஆட்சி நிறுவப்பட்டு ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் வரையில் நடைபெற்றது. எனவே, பாண்டியர் பேரரசு அழிந்தது. அந்நாட்களில் முகமதியர் புரிந்த போரின் பயனாக மைசூர் நாட்டில் நிலைபெற்றிருந்த ஹொய்சள அரசாங்கமும் ஒழிந்தது.1 அதன் பின்னர் விசயநகர அரசாங்கம் தோன்றியது. கி. பி. பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விசயநகர வேந்தன் தமிழ் நாட்டின் மீது படையெடுத்துவந்து, தொண்டை மண்டலத்துப் படை வீட்டு இராச்சியத்தை ஆட்சிபுரிந்த சம்புவராயர்களையும் பாண்டி நாட்டை அரசாண்ட முகமதியர்களையும் போரில் வென்று தமிழ்நாடு முழுவதையும் கைப்பற்றித் தன் ஆட்சிக்குட் படுத்தினான்.2 பிறகு, விஜயநகர வேந்தர்களின் பிதிநிதிகள் தமிழ் நாட்டை ஆண்டு வந்தனர்.3ஆகவே, தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ் வேந்தர்களின் ஆட்சி இப் பதினான்காம் நூற்றாண்டில்தான் அழிந்தது என்று ஐயமின்றிக் கூறலாம். பிற சமயத்தினரும் பிற மொழியாளருமான முகமதியர் களும், கன்னட மொழியினரான விசயநகர வேந்தர்களும் தம்தம் மொழிகளை அரசாங்க மொழியாகக் கொண்டு, தமிழகத்தின் தாய் மொழியைப் புறக்கணித்துத் தமிழ்நாட்டில் ஆட்சிபுரியத் தொடங்கிய காலம் இப்பதினான்காம் நூற்றாண்டேயாகும். இந்நூற்றாண்டில் அந்நியர் ஆட்சி நடைபெற்றமையாலும் ஆட்சியும் அடிக்கடி மாறி வந்தமையாலும் தமிழ் மக்கட்கு அமைதியான வாழ்வில்லை; யாண்டும் வறுமை மிகுந்தது; சமயக்கொள்கை பற்றியும் பொருளுடைமை பற்றியும் தமிழ் மக்கள்அடைந்த அல்லல்களுக்கோர் எல்லை இல்லை எனலாம். நாட்டு மக்கள் ஊரை விட்டோடிப் பாதுகாவலுள்ள இடங்களைத் தேடியலைந்து நிலைகெட்டுப் போயினர். நாட்டில் அமைதியும் ஆதரவும் இல்லாத காலப்பகுதியில் எத்தகைய பெரும் புலவர்கள் இருந்தாலும் அவர்கள் பயன் தரத்தக்க எவ்வேலையும் செய்தற்கியலாது என்பது ஒருதலை.

எனவே, கி. பி. பதினான்காம் நூற்றாண்டில் சிறந்த தமிழ் நூல்கள் மிகுதியாகத் தோன்றுவதற்கிடமின்மை அறியற்பாலது. சைவசித்தாந்த நூல்கள் பதினான்கினுள் சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப்பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மைநெறிவிளக்கம், சங்கற்ப நிராகரணம் ஆகிய எட்டு நூல்களும் தில்லைக்கலம்பகம், திருவாமாத்தூர்க் கலம்பகம், ஏகாம்பரநாதர் உலா, வில்லிப் புத்தூராழ்வார் பாரதம், கப்பற்கோவை,தேசிகப் பிரபந்தம் ஆகிய நூல்களும் இந்நூற்றாண்டில் இயற்றப் பெற்றவையாகும்.

சிவப்பிரகாசம்


இது, சிவஞானபோதம், சிவஞான சித்தியார் என்ற இரு நூல்களையும் பின்பற்றி இயற்றப்பெற்ற ஒரு சித்தாந்த நூலாகும். இதில் சிவஞான போதச் சூத்திரங்கள் பன்னிரண்டையும் பின்பற்றிச் சித்தாந்தக் கொள்கைகள் தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றன. இது பொது அதிகாரம் ஐம்பதும் உண்மை அதிகாரம் ஐம்பதும் ஆக நூறு விருத்தப்பாக்களையுடையது. இது சிவஞான சித்தியார் சுபக்கத்தின் சுருக்க மென்றே சொல்லலாம். இதன் ஆசிரியர் கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியர் ஆவர். இவர் சிவஞான சித்தியாரின் ஆசிரியராகிய அருணந்தி சிவசாரியரின் மாணவர் மறைஞான சம்பந்தரைத் தம் ஆசிரியராகக் கொண்டு சித்தாந்த நூல்களை ஓதி உணர்ந்தவர்; தில்லை வாழந்தணர் மூவாயிரவருள் ஒருவர்; வடமொழியிலுள்ள சிவாகமங்களை நன்கு பயின்றவர்; சந்தானகுரவர் நால்வருள் இறுதியில் இருந்தவர். இவர் பழமையானவை என்று சொல்லப்படும் எல்லா நூல்களும் முற்றிலும் நன்மையானவையல்ல; இன்று தோன்றிய நூல்கள் என்று சொல்லப்படும் எவையும் தீயவையாதலும் இல்லை என்ற கருத்தினை,

தோன்மையவாம் எனும் எவையும் நன்றாகா இன்று
தோன்றிய நூல் எனும் எவையும் தீதாகா

என்று இந்நூலின் பாயிரத்திலுள்ள பாடலொன்றில் உணர்த்துவது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாசிரியர் தாம் இயற்றிய சங்கற்ப நிராகரணம் என்ற நூலில் சகம் 1235-ஆம் ஆண்டில் ஆனித் திங்களில் தில்லைத் திருக்கோயிலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி காரணமாக அந்நூலைத் தாம் எழுத நேர்ந்தது என்ற செய்தியைக் குறித்துள்ளனர்.1 எனவே, சகம் 1235-க்குச் சரியான கி.பி 1313-ம் ஆண்டில் சங்கற்ப நிராகரணம் இவ்வாசிரியரால் இயற்றப் பெற்றுள்ளது என்பது தேற்றம். ஆகவே, இவர் கி.பி பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் விளங்கியவர் என்பது நன்கு துணியப்படும். இவரது சமாதிக்கோயில் சிதம்பரம் புகைவண்டி நிலையத்திற்கு அணித்தாகக் கிழக்கேயுள்ள கொற்றவன்குடித் தோப்பில் குளத்தின் வடகரையில் உள்ளது

சிவப்பிரகாசம் என்னும் இந்நூலுக்குப் பழைய உரைகள் இரண்டுண்டு. ஒன்று மதுரை சிவப்பிரகாசர் இயற்றிய உரையாகும். பிறிதொன்று திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்த நல்லசிவதேவரது சிந்தனை உரையாகும்

திருவருட்பயன்


இது சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கினுள் ஒன்று. இது பதிமுதுநிலை, உயிரவை நிலை, இருள்மல நிலை, அருளது நிலை, அருளுரு நிலை, அறியும் நெறி, உயிர் விளக்கம், இன்புறு நிலை, அஞ்செழுத்தருள் நிலை, அனைந்தோர்தன்மை ஆகிய பத்துப் பகுதிகளையுடையது. நூறு குறள் வெண்பாக்களைத் தன்னகத்துக் கொண்டது. இதில் சித்தாந்த உண்மைகள் பலவற்றைக் காணலாம். இதன் ஆசிரியர் கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியர் ஆவர்.

வினா வெண்பா


இது சைவசிந்தாந்த நூல்கள் பதினான்கினுள் ஒன்று;1 பதின்மூன்று நேரிசை வெண்பாக்களுடையது. இவை, சித்தாந்தக் கருத்துக்கள் நன்கு விளங்குமாறு ஞானாசிரியராகிய மறைஞான சம்பந்தரை வினவுவதுபோல் அமைக்கப்பெற்ற நேரிசை வெண்பாக்கள் ஆகும். இந்நூலின் ஆசிரியர் கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியர் ஆவர்.

போற்றிப்பஃறொடை


இது சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கினுள் ஒன்று;1 நூற்றுத்தொண்ணூறு அடிகளையுடைய ஒரு கலிவெண்பா வினால் அமைந்தது. கொற்றவன் குடி உமாபதி சிவாசாரியர் தம் ஞானகுரவராகிய மறைஞான சம்பந்தர் தம்மை ஆட் கொண்டருளிய பேரருளினையும் உணர்த்திய அருண் மொழிகளையும், அவருடைய பிற அருஞ் செயல்களையும் நினைந்து நினைந்து உருகி, அக்குரவரைத் துதிக்குமுகத்தால் பல சித்தாந்த உண்மைகளைத் தெரிவிக்கும் ஓர் அரிய நூலாகும். இந்நூலில் தம் ஞானாசிரியருடைய அருட் செயல்களுள் ஒவ்வொன்றையும் எடுத்துரைத்து உமாபதி சிவனார் போற்றுவதால் இது போற்றிப்பஃறொடை என்னும் பெயர் எய்தியது. இந்நூலின் இறுதியில்

போற்றி திருத்தில்லை போற்றி சிவபோகம்
போற்றியவன் மெய்ஞ்ஞானய் புண்ணிய நூல்- போற்றியெங்கள்
வெம்பந்த வாழ்க்கைவிட வேறாய்வந் துண்ணின்ற
சம்பந்த மாமுனிபொற்றாள்

என்ற வெண்பா ஒன்று காணப்படுகிறது.

கொடிக்கவி


இது சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கினுள் ஒன்று; ஒரு கட்டளைக் கலித்துறையையும் மூன்று நேரிசை வெண்பாக்களையும் தன்னகத்துக் கொண்ட ஒரு சிறு நூல்; தில்லையிற் கொடியேற்று முகத்தால் சில சித்தாந்த உண்மைகளைக் கூறுவது இந்நூல்,1 இதன் ஆசிரியர் கொற்றவன் குடி உமாபதி சிவாசாரியர் ஆவர்.

நெஞ்சுவிடுதூது


இது பதினான்கு சைவசித்தாந்த நூல்களுள் ஒன்று; கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியர் தம் ஞான குரவராகிய மறைஞான சம்பந்தர்பால் தம் நெஞ்சைத் தூதுவிடுக்கும் முறையில் இயற்றிய ஒரு நூலாகும்; இது 258 அடிகளையுடைய ஒரு கலிவெண்பாவினால் அமைந்தது. தமிழ் மொழியில் வழங்கும் தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்றாய தூது என்பது கலிவெண்பாவினால் இயற்றப் பெறுவது பாட்டின் மரபு. இந்நூலில் ஞானநெறியின் முறையை இதன் ஆசிரியர் உணர்த்தியுள்ளனர். பாட்டுடைத் தலைவராகிய தம் ஞானாசிரியரை,

வெம்பும் பிறவியலை வீழாமல் வீடளித்த
சம்பந்த மாமுனியென் தம்பிரான்- அம்புவியோர்
போற்றுந் திருவடியென் புன்தலைமே லேபொறித்தோன்.

என்று உமாபதி சிவனார் இத் தூது நூலில் குறித்திருப்பது அறியத்தக்கது. இவ்வாசிரியர்,

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
விலைப்பட்டார் மற்றயவ ரென்று-நிலைத்தமிழின்
தெய்வப் புலமைத் திருவள் ளுவருரைத்த
மெய்வைத்த சொல்லை விரும்பாமல்

என்று திருக்குறளிலுள்ள ஒரு பாடலை இந்நூலில் அமைத்திருப்பதோடு அதன் ஆசிரியரைப் பாராட்டிக் கூறியிருப்பதும் உணரற்பாலதாம். இன்னார் இன்னார்பால் சொல்லாதே என்று நெஞ்சிற்குணர்த்துமிடத்து, இந்நூலில் உலகாயதர், மாயாவாதிகள், பௌத்தர், சமணர், பிரபாகரர் ஆகிய புறச் சமயவாதிகளின் கொள்கைகளை ஆசிரியர் சுருங்கச் சொல்லியிருப்பது படித்தறியத்தக்கதாகும். இந்நூலில் இறுதியில் ஒரு வெண்பா உளது. அது,

வெம்பும் பிறவியலை வீழாமல் வீடளித்த
சம்பந்த மாமுனிவன் தார்வாங்கி-அம்புந்தும்
வஞ்சமே வும்விழியார் வல்வினையெல் லாமகல
நெஞ்சமே வாராய் நினைந்து

என்பதாம்.

உண்மைநெறி விளக்கம்


இது சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கினுள் ஒன்று; நூறு விருத்தப்பாக்களையுடையது; சைவ சித்தாந்தத்துள் பேசப்படும் தசகாரியமாகிய பத்தையும் நன்கு விளக்குவது. தசகாரியம் என்று சொல்லப்படுவன, தத்துவரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆன்ம ரூபம், ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி, சிவரூபம், சிவ தரிசனம், சிவயோகம், சிவபோகம் ஆகிய பத்துமேயாம். இவற்றைக் காலஞ்சென்ற பேராசிரியர் கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் முறையே முதல் வடிவு, முதலின் காட்சி, முதல் நீக்கம், உயிர்வடிவு, உயிர்க் காட்சி,உயிருணர்வு நீக்கம், சிவவடிவு, சிவக்காட்சி, சிவப்பற்று, சிவபோகம் என்று கூறியிருப்பது உணரற்பாலது. இந்நூலின் ஆசிரியரும் உமாபதி சிவாசாரியரேயாவர் என்பது அறிஞர் பலருடைய கருத்தாகும். எனினும்,

எண்ணும் அருணூ ல் எளிதின் அறிவாருக்
குண்மை நெறிவிளக்கம் ஓதினான்-வண்ணமிலாத்
தண்காழித் தத்துவனார் தாளே புனைந்தருளும்
நண்பாய தத்துவநா தன்

என்ற பாடலை எடுத்துக்காட்டி இதன் ஆசிரியர் சீகாழித் தத்துவநாதனார் என்று கூறுவர் சிலர்.1 உண்மை நெறி விளக்க ஏட்டுப் பிரதிகளுள் மிக்க பழமை வாய்ந்த பிரதிகளில் இவ்வெண்பா உளதா என்பதையும் இதன் ஆசிரியர் சீகாழித் தத்துவநாதனார் என்று குறிக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆராய்ந்தறிந்த பிறகுதான் இதனை ஒருதலையாகத் துணிதல் கூடும்.

சங்கற்ப நிராகரணம்


இது சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கினுள் ஒன்று; இருபது நேரிசையாசிரியப் பாக்களையுடையது; மாயாவாத மதத்தையும் சிவஞான சித்தியார் பரபக்கத்தில் சொல்லப்படாத அகப்புறச் சமயங்கள், அகச்சமயங்கள் ஆகியவற்றையும் எடுத்துக் கூறி, மறுத்து, அவற்றிற்கும் சைவ சித்தாந்தத்திற்கு முள்ள வேறுபாடுகளை நுண்ணிதின் உணர்த்துவது; இந்நூலின் ஆசிரியர் உமாபதி சிவாசாரியார் ஆவர். இவர் தாம் இதனை இயற்ற நேர்ந்தமைக்குரிய காரணத்தை ஓர் ஆசிரியப்பாவில் விளக்கிக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்க தொன்றாம்.

சிவாகமங்களைக் கற்றுணர்ந்த ஆசிரியர் எண்மர் சகாப்தம் 1235- ஆம் ஆண்டிலே1 தில்லையில் ஆனித் திருவிழா ஆறாம் நாளிலே தேர்மண்டபத்தில் வரிசையாய் அமர்ந்திருந்தனர். அப்போது மாயாவாதி ஒருவரும் ஆசிரியர் மெய்கண்டார் அருள் பெற்ற ஒருவரும்அங்கிருந்தனர். அச்சமயத்தில் நற்கதி யடைய விரும்பிய வேறு ஒருவர் வீடுபேற்றை எய்துதற்குரிய நன்னெறி யாது என்று வினவ, மாயாவாதியார் தம் சமயக் கொள்கையைக் கூறினர். அவர் கூறியவற்றை மறுத்து எண்மருள் ஒருவர் தம் மதத்தை நிலைநாட்டினர்.அவர் சமயக் கொள்கையை மற்றொருவர் மறுக்க, இவ்வாறு மற்றையோரும் நிகழ்த்திய சமய வாதங்களைக் கேட்டுக் கொண்டிருந்த மெய்கண்டார் அருள் பெற்ற மாணவர், அன்னோர் கொள்கைகளிலுள்ள குற்றங்களை எடுத்துக் காட்டி உண்மையைத் தெரிவிக்கும் பொருட்டே இந்நூல்2 உமாபதி சிவாச்சாரியரால் இயற்றப்பட்டது என்பது அறியற்பாலதாகும். இந்நிகழ்ச்சி தில்லையில் நிகழ்ந்த காலத்தையும் இவ்வாசிரியர் இந்நூலிலுள் குறித்திருத்தல் காணலாம். அவ்வாண்டு கி.பி. 1313 ஆகும் என்பது முன்னரே விளக்கப்பட்டது.

சந்தான குரவர் நால்வருள் இவரே இறுதியில் இருந்த வராதலின் இவர் இயற்றிய சித்தாந்த நூல்கள் எட்டோடு இவருக்கு முற்பட்ட ஞானகுரவர்கள் இயற்றிய சித்தாந்த நூல்கள்ஆறும் சேர்ந்து சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கு ஆயின என்றுணர்க.

கோயிற்புராணம், திருத்தொண்டர் புராணம், திருமுறை கண்ட புராணம், சேக்கிழார் புராணம் ஆகிய நூல்களும் உமாபதி சிவாசாரியர் இயற்றியன என்பர். இவற்றுள், கோயிற்புராணம் என்பது தில்லைத் தல புராணம் ஆகும். இது ஐந்து சருக்கங்களையும் 415 செய்யுட்களையும் உடையது. திருத்தொண்டர் புராணசாரம் என்பது சிவனடியார் அறுபத்து மூவர் தொகையடியார் ஒன்பதின்மர் ஆகியோர் வரலாறுகளைச் சுருக்கி எழுபத்தாறு விருத்தப் பாக்களில் கூறும் நூல். திருமுறை கண்ட புராணம் என்பது சோழ மன்னன் ஒருவன் சமய குரவர் மூவரும் பாடிய திருப்பதிகங்களைத் திருநாரையூர் பொல்லாப் பிள்ளையாரின் திருவருள் பெற்ற நம்பியாண்டார் நம்பியின் துணை கொண்டு தில்லையம்பதியில் தேடிக் கண்ட வரலாற்றைக் கூறுவது. இது நாற்பத்தைந்து செய்யுட்களை யுடையது. சேக்கிழார் புராணம் என்பது குலோத்துங்க சோழன் வேண்டிக்கொண்டவாறு பெரிய புராணம் என்று வழங்கும் திருத்தொண்டர் புராணத்தைச் சேக்கிழாரடிகள் தில்லைமா நகரில் பாடி ஆயிரக்கால் மண்டபத்தில் அரங்கேற்றிய வராலற்றை நூற்றுமூன்று பாடல்களில் எடுத்துரைப்பது. இவற்றுள், கோயிற் புராணம் ஒன்று மாத்திரம் உமாபதி சிவாசாரியரால் இயற்றப்பெற்ற தென்பது யாவர்க்கும் உடன்பாடு. பிற நூல்களின் ஆசிரியர் யாவர் என்பதுபற்றிக் கருத்து வேறுபாடு உண்டு. அச்சிட்ட சில நூல்களில் இவற்றின் ஆசிரியர் பெயர் காணப்படவில்லை. இவற்றின் ஆசிரியர் இன்னார் என்றுணர்த்தும் சிறப்புப் பாயிரப் பாடல் சில ஏட்டுப் பிரதிகளில் மாத்திரம் உளதாம். பெரிய புராணப் பதிப்பாசிரியர் சிலர், இவற்றின் ஆசிரியர் உமாபதி சிவாசாரியர் எனக் கூறுதல் மரபு என்று ஐயப்பாடு தோன்றும் நிலையில் குறித்துள்ளனர். இதற்கேற்ப, சிறப்புப் பாயிரப் பாடலுள் ஒன்று உமாபதி தேவர் சேக்கிழார் தம்மிசைப் புராணம் உரைத்தாரென்பமாதோ என்று நெகிழ்ந்து கூறுகின்றது. இந்நிலையில் திருமுறைகண்ட புராணம், சேக்கிழார் புராணம், திருத்தொண்டர் புராணசாரம் ஆகியவற்றின் ஆசிரியர் உமாபதி சிவாசாரியரே என்றுரைத்தற்கு இயலவில்லை. தொன்மையவாய்த்தோன்றும் ஏட்டுப் பிரதிகளில் ஆசிரியர் பெயரைப் பார்த்துத் துணிதல் வேண்டும்.

தில்லைக் கலம்பகம்


இது தில்லையம்பலவாணர் மீது பாடப்பட்ட ஒரு பிரபந்தமாகும். இது நூறு செய்யுட்களையுடையது. கலம்பகம் என்பது தமிழிலுள்ள தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்று;அம்மானை, புயவகுப்பு, மதங்கம், காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்னும் பதினெட்டு உறுப்புகளை உடையது; பல்வகைச் செய்யுட்களால் அந்தாதியாக அமைந்தது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் தொண்டை மண்டலம் திருமுனைப்பாடி நாடு சோழ மண்டலம் ஆகிய நாடுகளை ஆட்சி புரிந்த பல்லவ மன்னனாகிய தெள்ளாறெறிந்த நந்திவர்மன் மீது இயற்றப்பெற்ற நந்திக் கலம்பகமே, இதுகாறும் கிடைத்துள்ள கலம்பகங்களுள் மிக்க பழமை வாய்ந்ததாகும். அதற்கு முற்பட்ட கலம்பகம் யாண்டும் கிடைக்கவில்லை.

இனி, தில்லைக் கலம்பகம் என்பது, கலம்பகத்திற் கிரட்டையர்கள் என்று பாரட்டப்பெற்ற இரட்டைப் புலவர்களால் பாடப்பட்ட பெருமையுடையது. பெரு நட்பினால் பிணிக்கப்பெற்ற இரண்டு புலவர்கள் ஒருங்கு சேர்ந்து யாண்டும் போய் வருவதைத் தம் வழக்கமாகக் கொண்டிருந்தமையால் இன்னார் இயற்பெயரால் வழங்கப்படாமல் இரட்டைப் புலவர் என்றே அக்காலத்தவரால் வழங்கப் பெற்றுள்ளனர். அதனால், இப்புலவர் பெருமக்களுடைய இயற்பெயர்களும் இக்காலத்தில் தெரியாமல் மறைந்து போய்விட்டன. இவர்களுள் ஒருவர் முடவர் என்றும், மற்றொருவர் குருடர் என்றும் முடவரைக் குருடர் சுமந்து செல்வதும் முடவர் வழி காட்டுவதும் இவர்கள் கொண்டொழுகிய முறை என்றும் புலவர் வரலாறு எழுதியுள்ள பலரும் கூறுகின்றனர். இவர்கள் இளஞ்சூரியர் முதுசூரியர் என்று அழைக்கப்பட்டனர் என்பது தமிழ் நாவலர் சரிதையில்1 கண்ட செய்தி. சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்ப் புலவர்களின் வரலாற்றை முதலில் எழுதியவர்கள், படிப்போர்க்கு வியப்பையும் விநோதத்தையும் விளைவிக்கும் பொருட்டு ஆதாரமில்லாதனவும் உண்மையில் நிகழாதனவும் பொருத்த மில்லாதனவுமாகிய பல செய்திகளைப் புலவர் வரலாற்றில் கற்பனையாக எழுதி வெளியிட்டுவிட்டனர். பின் வந்தோர் அவற்றை ஆராய்ந்து பாராமல் அப்படியே ஏற்றுக்கொண்டு எழுதியும் பேசியும் வருவாராயினர். இந்நிலையில் தான் தமிழ்ப்புலவர்களின் வரலாறு இன்றும் உள்ளது. ஆகவே புலவர் பெருமக்களாகிய இரட்டையர்களின் வரலாற்றிலும் அத்தகைய ஆதாரமற்ற செய்திகள் காணப்படுவதில் வியப்பொன்றும் இல்லை. இவ்விரட்டைப் புலவர்களுள் ஒருவர் முடவராகவும் மற்றொருவர் குருடராகவும் இருந்தனர் என்பதற்கும் முடவரைக் குருடர் தம் தோள்களில் சுமந்து சென்றனர் என்பதற்கும் சான்றுகள் காணப்படவில்லை. ஒருவரை மற்றொருவர் தமிழகம் முழுவதும் தோளில் சுமந்து சுற்றி வருவதுதான் இயல்பாக நிகழக் கூடியதொன்றா? இவர்களது பெரும் புலமையால் பிணிக்கப்பட்டு அன்பு பூண்டொழுகிய தமிழ்நாட்டுக் குறுநில மன்னர்களும் பிற செல்வர்களும் இவர்கள் யாண்டும் போய்வருவதற்கு ஏற்ற ஊர்திகள் வழங்கித் தம் அன்புடைமையைப் புலப்படுத்தி இருக்க மாட்டார்களா? ஆகவே, இவர்களைப் பற்றிச் சொல்லப்படும் அச்செய்திகள் ஆதாரமற்ற வெறுங் கற்பனைகளேயாம். பெரும் புலமையால் நட்புரிமை பூண்டு ஒருவர்க்கு மற்றொருவர் இன்றியமை யாதவராய் யாண்டும் இணை பிரியாமல் போய்ப் பாடிப் புகழுடன் வாழ்ந்த இரண்டு புலவர் பெருமக்களே தமிழகத்தில் அந்நாளில் இரட்டைப் புலவர் என்று வழங்கப் பெற்றனராவர். இவர்களுடைய பெருமை தமிழகம் முழுவதும் பரவி விளக்க முற்றிருந் தமையால் இவர்களுள் ஆண்டில் முதிர்ந்தவரை முதுசூரியர் எனவும் இளையவரை இளஞ்சூரியவர் எனவும் அக்காலத்தில் வழங்கியிருத்தல் வேண்டும். எனவே, இப்பெயர்கள் இரண்டும் இவர்கட்கு அந்நாளில் வழங்கிய சிறப்புப் பெயர்களேயன்றி இயற்பெயர்கள் ஆக மாட்டா என்பதும் அறியத்தக்கது. இவர்கள் பிறந்த ஊர் சோழநாட்டு இலந்துறை என்பது செவிவழிச் செய்தியாகும். இவர்கள் சோழ நாட்டிலுள்ள சிற்றூர்கள் சிலவற்றைத் தில்லைக் கலம்பகத்தில்1 எடுத்துக் கூறியிருத்தலால் இவர்களுடைய நாடு சோழ நாடாகவே இருத்தல் கூடும். இலந்துறை என்பது திருநாகேச்சுரம் புகைவண்டி நிலையத்திற்குத் தெற்கே மூன்று மைல் தூரத்தில் உள்ளது. இவர்களுடைய பெற்றோர்கள் யாவர் என்பதும் பிறவும் தெரியவில்லை.

இவர்கள் இயற்றிய தில்லைக் கலம்பகம் பக்திச் சுவை நிறைந்து பல அரிய உண்மைகளைத் தெரிவிக்கும் ஒரு சிறந்த நூலாக உள்ளது. இந்நூலால் இவர்களது சிவபக்தியின் மாண்பு நன்கு புலப்படும். இந்நாளில் தில்லைத் திருக்கோயிலில் நடைபெறுவது வைதிக பூசையே என்றும், ஆகம பூசை அன்றென்றும் சொல்லப்படுகின்றன. ஆனால், இக்கலம்பகத் திலுள்ள நில்லாத எழுபிறப்பும் என்று தொடங்கும் செய்யுளால்2 மகுடாகமம் தில்லைத் திருக்கோயிலுக்குரியது என்று தெரிகிறது. எனவே, முற்காலத்தில் மகுடாகம முறையைப் பின்பற்றியே தில்லை திருக்கோயிலில் நாள் வழி பாடும் விழாக்களும் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது இக்கலம்பகச் செய்யுளால் நன்கறியக் கிடத்தல் உணரற் பாலதாம். கல்லினுங் கடிதாக3 என்று தொடங்கும் பாடலிலுள்ள மெய்யருந்தவர் கோவை யெழுதிச் சிவந்தன…………… தெள்ளு செந்தமிழ் மூவர் கவியைச் சுமந்தன தில்லை யம்பலவாணர் கனகப்புயங்களே என்ற பகுதி, சமயக் குரவர் நால்வருடைய பாடல்களின் பெருமையை உணர்த்துவதாக உள்ளது.அன்றியும், திருச்சிற்றம்பலக் கோவையை மணிவாசகப் பெருமான் பாடியபோது தில்லை அம்பலவாணரே அதனைத் தம் திருக் கையால் எழுதியருளினார் என்ற வரலாறு இரட்டைப் புலவர் காலத்தில் பெருக வழங்கியிருத்தல் வேண்டுமென்பது இதனால் தெள்ளிதிற் புலப்படுகின்றது. கடல் விடம் நுகர்ந்த1 என்று தொடங்கும் பாடலில் பஞ்சபூத இலிங்கங்கள் எழுந்தருளி யுள்ள திருப்பதிகளும் இரத்தின சபை முதலான ஐந்து அம்பலங்கள் உள்ள இடங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. இரட்டையர்கள் காலத்தில் தமிழகத்தில் ஆட்சி புரிந்தவர்களின் கொடுங்கோன்மையும் அதனால் வணிகர்களும் வேளாளர்களும் துன்புற நேர்ந்தமையும் பூவணிக வேளாளர் புவியரசர் கொடுங்கோன்மை பொறுத்தாற்போல- ஆவணியும் புரட்டாசி மாதமு நான் தனியிருந்திங் காற்றிலேனே2 என்ற பாடற் பகுதியில் குறிக்கப் பெற்றிருத்தல் காணலாம். இப்புலவர்கள் வாழ்ந்த காலத்தில் நம் தமிழ்நாடு முகமதியர் படை யெழுச்சிக்குள்ளாகி அன்னோர்க்கும் அவர்க்குக் கீழிருந்த சிற்றரசர் ஆட்சிக்கும் உட்பட்டுப் பல அல்லல்களை எய்திய செய்தி சரித்திரம் வல்லார் அறிந்ததே. எனவே, இக்கலம்பகம் வரலாற்றாராய்ச்சிக்கு எத்துணைப் பயன் அளிப்பதாக உள்ளது என்பது உணரற்பாலது. இது போன்ற பல அரிய செய்திகள் இந்நூலில் காணப்படுகின்றன.

இனி, இப்புலவர்கள் வாழ்ந்த காலம் யாது என்பதை ஆராயவாம். கி. பி. பதினேழாம் நூற்றாண்டிலிருந்த படிக்காசுப் புலவர் இயற்றிய தொண்டை மண்டல சதகத்திலுள்ள,

மேதைப் புலவரெண் ணேகாம் பரசம்பு மெச்சநெடுங்
காதைப் புலவ ரிரட்டையர் பாடுங் கலம்பகமும்
ஓதற் கரியநல் லேகம்ப வாண ருலாவுமந்த
மாதைப் பனுவலும் பாராட் டிடுந்தொண்டை மண்டலமே

என்ற செய்யுளால் இரட்டைப் புலவர்கள் ஏகம்பரச் சம்புவராயன் காலத்தில் இருந்தவர்களென்பது நன்கு வெளியாகின்றது. இச் சம்புவராயன் தொண்டைமண்டலத்தில் படைவீட்டு இராச்சியத்திலிருந்து அரசாண்ட ஒரு பல்லவர் குல வேந்தன். கி. பி. 1321 முதல் கி. பி. 1339 வரையில் தொண்டை மண்டலத்தில் வட ஆர்க்காடு, செங்கற்பட்டு ஜில்லாக் களடங்கிய பெருநிலப் பரப்பை ஆட்சிபுரிந்த வென்று மண் கொண்ட சம்புவராயன் என்பவனே ஏகாம்பரச் சம்புவராயன் என்ற இயற்பெயருடையவன் என்பது, வட ஆர்க்காடு ஜில்லா வாலாஜாப்பேட்டை தாலுகாவிலுள்ள குட்டியம் என்னும் ஊரில் காணப்படும் கல்வெட்டொன்றால் தெள்ளிதிற் புலப்படுகின்றது. இவனுக்கு மல்லிநாத சம்புவராயன் என்ற பெயரும் வழங்கியுள்ளது என்பது, இவன் புதல்வன் இராச நாராயண சம்புவராயன் என்பான் தன்னை மல்லிநாதன் இராசநாராயணன் என்று ஒரு கல் வெட்டில் குறித்திருத்தலால் நன்கறியக் கிடக்கின்றது.2 ஆகவே இரட்டைப் புலவர்கள் தாம் பாடிய ஏகாம்பர நாதருலாவில் வடித்தசுடர் வேற்சம்பன் வாழ்மல்லி நாதன் எனவும், செம்பதுமை கேள்வன் திருமல்லி நாதனுபர் சம்புபதி எனவும், பாராட்டியுள்ள மல்லிநாத சம்புவராயன் என்பான் ஏகாம்பரச் சம்புவராயனாகிய வென்று மண்கொண்ட சம்புவராயனே யாவன்.எனவே, இப்புலவர் பெருமக்கள் வென்று மண்கொண்ட சம்புவராயன் ஆட்சிக் காலமாகிய கி. பி. 1321-க்கும் கி. பி. 1339-க்கும் இடையில் வாழ்ந்த வர்கள் என்பது தேற்றம். இக்காலம் மற்றொரு செய்தியாலும் வலியுறுதல் காணலாம். இப்புலவர்கள் திருவண்ணாமலையிலிருந்த ஒரு மடத்தின் தலைவராகிய சம்பந்தாண்டான்

என்பவர்மீது பாடிய பாடல் ஒன்று தமிழ் நாவலர் சரிதையில் காணப்படு கிறது3 அவர் திருவண்ணாமலைக்கோயில் காரியங்களை மேற்பார்த்து வந்தவர் என்பது அங்குள்ள கல்வெட்டொன்றால் புலப்படுகின்றது.4 அக்கல்வெட்டு, போசள வேந்தனாகிய மூன்றாம் வீரவல்லாள தேவனது ஆட்சியில் சகம் ஆண்டு 1262-க்கு நேரான கி. பி. 1340-ல் வரையப்பட்டதாகும். எனவே, இவ்வாண்டிலிருந்த திருவண்ணாமலை மடத்தின் தலைவரும் இரட்டைப் புலவர்களும் ஒரே காலத்தவர் என்பது தெள்ளிது. ஆகவே, இப்புலவர் பெருமக்கள் கி. பி. பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் நம் தமிழகத்தில் நிலவியவர்கள் என்பது நன்கு துணியப்படும்.

திருவாமாத்தூர்க் கலம்பகம்


இக் கலம்பகம் சைவ சமய குரவர்களால் பாடப்பெற்ற தொண்டை நாட்டுத் திருப்பதிகள் முப்பத்திரண்டினுள் ஒன்றாகிய திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மீது இரட்டைப் புலவர்கள் பாடியது; காப்புச் செய்யுள் உட்பட நூற்றிரண்டு பாடல்களை உடையது. பல பூக்கள் கலந்து தொடுத்த கலம்பகமாகிய மாலைபோல, இந்நூல் பல்வகைச் செய்யுட்களும் தன்னகத்து விரவிவர அமைந்துள்ளது. அது பற்றியே இவ்வகைப் பிரபந்தங்கள் எல்லாம் கலம்பகம் என்னும் பெயர் பெற்றன எனலாம். இத் திருவாமாத்தூர்க் கலம்பகம் சொற்பொருள் நயங்கள் மிகுந்தது; பக்திச் சுவை நிறைந்தது; அகத்துறைப்பொருள் அமைந்த பல இனிய செய்யுட்களை யுடையது. இக்கலம்பகத்தில் ஒரு பாடலில் சிவனடியார் பெருமையினை, இரட்டைப் புலவர்கள் விளக்கியிருப்பது அறியத்தக்கதாகும். அது,

மீளார் பிறப்பினில் வீழார் நரகினால் வேறொரு நூல்
கேளார் உயிர்க்கொரு கேடுசெய் யார்கிளார் தீவினையின்
மூளார் திருநுதல் நீறிக ழார்பின்னை முத்தியல்ல
தாளார்தென் மாதை யழகிய நாதர் அடியவரே

என்பதாம். அரி என்ற சொல்வடிவமே திருமால் அரனார்க்குத் தேவி என்றுணர்த்தும் என்பதை இக்கலம்பகத்திலுள்ள

வருக்கைத் தடம்பொழின் மாமாதை யையர்க்கு- மாசொன்றில்லா
முருக்கொத்த மேனி யழகிய நாதர்க்கு மூச்சரவத்
திருக்கைக் கமல அரனார்க் கரிதிருத் தேவியன்றேல்
அரிக்குப்பொருளுரை யீர்கெடு வீர்நும் மறிவின்மையே

என்னும் பாடலில் இப்புலவர்கள் கூறியிருத்தல் உணரற்பாலதாம் 1 இக்கலம்பகத்தின் முதற் பாடலாகிய மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாவி லுள்ள,

அணிப்புலவர் பெருமிதமோ அல்லதுநின் தமிழறிவோ
மணிப்பலகைக் கீழ்நின்றாய் மறைகிடந்து முறையிடவே

என்ற பகுதி படித்து இன்புறத்தக்கதாகும். இந் நூலாசிரியராகிய இரட்டைப் புலவர்களைப் பற்றிய செய்திகள் தில்லைக் கலம்பகம் என்ற தலைப்பில் வரையப் பட்டிருத்தலால் ஈண்டு எழுதப்படவில்லை.

ஏகாம்பரநாதர் உலா


இது காஞ்சிமா நகரில் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள ஏகாம்பரேசர் மீது பாடப்பட்ட ஒரு பிரபந்தமாகும். உலா என்பது தமிழ் மொழியில் வழங்கும் பல்வகைப் பிரபந்தங்களுள் ஒன்று. இது பாட்டுடைத் தலைவன் உலா வருதலைச் சிறப்பித்துப் பாடப்படுதலால் உலா என்னும் பெயர் பெற்றது. இதனை உலாப்புறம்1 எனவும் கூறுவதுண்டு. இது, தலைவன் வீதியிற் பவனி வருங்கால் அவ் வீதியிலுள்ள பேதை முதல் பேரிளம் பெண் ஈறான எழு பருவத்துப் பொது மகளிரும் அவனைக் கண்டு காமுற்றதாகக் கலிவெண்பாவில் பாடப்பட வேண்டும் என்பது பாட்டியன் மரபு. இதில், தலைவன் பெயரும் அவனைக் கண்டு மகளிர் காதல் கொண்ட செய்தியும் கூறப்படுவதால் இது புறப் பொருளைச் சார்ந்த பெண்பாற் கைக்கிளையுள் அடங்குமென்று கூறலாம். தொல்காப்பியம் புறத்திணையிலுள்ள ஊரொடு தோற்றமு முரித்தென மொழிப என்ற சூத்திரத்தின்2 உரையில் ஆசிரியர் நச்சினார்க்கினியர் அது பின்னுள்ளோர் ஏழு பருவமாகப் பகுத்துக் கலிவெண் பாட்டாகச் செய்கின்ற உலாச் செய்யுளாம் என்று கூறி இதனைப் பாடாண்திணைக் குரியதாகக் குறித்திருப்பதும் அறியத் தக்கதாகும். புலவர் பெருமக்கள் தாம் வழிபடும் தெய்வங்கள், தம் ஆசிரியர், தம்மை ஆதரித்த அரசர்கள், தலைவர்கள் ஆகியோர் மீது உலாக்கள் பாடியுள்ளனர். கி. பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலும் எட்டாம் நூற்றாண்டின் முதற்பகுதியிலும் சேர நாட்டில் ஆட்சி புரிந்த சேரமான் பெருமாள் நாயனார் இயற்றிய திருக்க யிலாய ஞான வுலாவே இப்போதுள்ள உலாக்களுள் மிக்க பழமை வாய்ந்தது எனலாம். தெய்வங்கள் மீது இயற்றப் பெற்ற உலாக்களே மிகுதியாக உள்ளன என்பது உணரற்பாலது.

இத்தகைய உலாக்களுள் ஏகாம்பரநாதர் உலாவும் ஒன்று. கலிவெண்பாவில் ஓரெதுகையமைந்த இரண்டடிகளைக் கண்ணி என்று கூறுவது மரபு. இவ்வேகாம்பர நாதர் உலா ஐந்நூற்றைம்பத்தைந்து கண்ணிகளையுடையது. எனவே, இவ்வுலா ஆயிரத்து நூற்றுபத்து அடிகளுடைய ஒரு கலிவெண்பாவில் இயற்றப்பட்டதாகும். சைவ மணங்கமழும் இந்நூலைப்பாடிப் புகழ் எய்தியவர் இரட்டைப் புலவர்கள் ஆவர். இவர்கள் வரலாறு முன்னர்க் கூறப்பட்டுள்ளது. இந்நூலில், உமாதேவியார்க்கு அருளும் பொருட்டுச் சிவபெருமான் காஞ்சிமாநகரில் எழுந்தருளித் திருக்கோயில் கொண்ட வரலாறு முதலில் கூறப்பட்டுள்ளது. பிறகு, பங்குனித் திங்களில் நடைபெற்ற திருவிழாவில் மூத்தபிள்ளையார், முருகவேள், மாசாத்தனார், வீரபத்திரர், சண்டேசுவரர், ஆளுடைய பிள்ளையார், ஆளுடைய அரசு,2 ஆளுடைய நம்பி,3 ஆளுடைய அடிகள்,4 சேரமான் பெருமாள் நாயனார், திருநீற்றுச் சோழர்,5 வரகுண பாண்டியர்,6 காரைக் காலம்மையார், ஏனைய சிவனடியார்கள், முனிவர்கள் ஆகிய எல்லோரும் வரிசையாக நின்று வணங்க இறைவன் திருத்தேரில் எழுந்தருளித் திருமால், பிரமதேவன், இந்திரன், சூரியன், திக்குப்பாலர் முதலானோர் தம் தம் ஊர்திகளில் உடன் வரப் பவனி வருதலும், பலவகை மகளிர் குழாங்கள் அப்பெருமானைத் தரிசித்துக் காமுறுதலும் சொல்லப்பட்டுள்ளன. அதன்பின்னர், முறையே பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்னும் ஏழு பருவமகளிரின் இயல்புகளும், அன்னோர் இறைவனைத் தரிசித்தலும், அதனால் அவர்கட்கு ஏற்பட்ட உணர்ச்சிகளும், அவற்றால் நிகழ்ந்த செயல்களும் விளக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றன. இது, தொடர்ந்த பொருளுடையதாய் ஒரு நீண்ட கலிவெண்பாட்டில் அமைந்திருத்தலால் இதனைத் தொடர்நிலைச் செய்யுளாகவே கொள்ளுதல் பொருத்த முடையதாகும். எனவே, சிறு காப்பியங்களுள் ஒன்றாகவைத்து எண்ணுதற்குரிய தகுதி இதன்பால் உள்ளது என்று சொல்லலாம்.

இவ்வுலாவில்,

சம்புகுலத் தொருவன் சாத்துகைக்கா மென்றளித்த
செம்பொன் மணிமகுடஞ் சேர்வித்து

எனவும்,

வடித்தசுடர் வேற்சம்பன் வாழ்மல்லி நாதன்
கொடுத்த திருத்தேர் மேற்கொண்டு

எனவும்,

தத்துபரி பல்லவன் சம்பு குலப்பெருமான்
வைத்த துலாபார மண்டபத்தும்

எனவும் - திங்கள்

முடித்த முடிக்கு முடிகொடுத்த சம்பன்
படைத்ததுலா மண்டபமும் பார்த்து

எனவும் போதருங் கண்ணிகளில் தொண்டை நாட்டை அந் நாளில் ஆட்சி புரிந்த வென்று மண்கொண்ட சம்புவராயனாகிய ஏகாம்பரச் சம்புவராயன் என்பான், காஞ்சி ஏகாம்பரநாதர்க்குச் செய்த திருத்தொண்டுகள் விளக்கமாகக் கூறப்பட்டிருத்தல் காணலாம்.

சைவ சமய குரவர்களுடைய அருட்பாடல்களைத் தேடித் தொகுத்துத் திருமுறைகளாக வகுத்த பெரியார் நம்பியாண்டார் நம்பி என்பது பலரும் அறிந்த செய்தியாகும். கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் தோன்றிய பெரிய புராணத்திலுள்ள கணநாத நாயனார் புராணத்தில் ஓரிடத்தில் தான் திருமுறை என்ற பெயர் வழக்கு மிக அருகிக் காணப்படு கிறது. கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய பிற இலக்கியங் களிலாதல் அந்நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் இயற்றப்பட்ட இலக்கியங்களிலாதல் திருமுறை என்ற தொடர் காணப்படாமை குறிப்பிடத்தக்கது. இஃது இங்ஙனமிருக்க, கி. பி. பதினான்காம் நூற்றாண்டின் இடையில் இரட்டைப் புலவர்களால் இயற்றப்பட்ட இவ்வேகாம்பரநாதர் உலாவில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திகள் ஆகிய மூவர்களின் திருப் பாடல்களும் மணிவாசகப் பெருமானது திருவாசகமும் திருமுறை என்ற பெயரோடு கூறப்பட்டிருத்தல் அறியத்தக்கது. இதனை,

சைவப் பெருமை தமிழ்நா டறிவித்த
தெய்வப் புலவன் திருமுறையும்-வெவ்வமணர்
ஈருமத யானைக் கிடும்போது மஞ்செழுத்தைத்
தேரு மரசன் திருமுறையும்-சேரனுடன்
அன்று கயிலைக் கதிமதவெள் ளானையின்மேற்
சென்ற பெருமான் திருமுறையும்- தென்றிசையின்
மாடப் பெருந்துறையில் வந்த அருட்கோலம்
தேடித் திரிந்தோன் திருமுறையும்-கூடவினி
தோதி யவர்கள்திரு வுள்ளக் கருத்தினுள
கோதில் நிலைமையெலாங் கும்பிட்டுச்-சோதிதிகழ்
அஞ்செழுத்து மேகம்ப ராடுந் திருக்கூத்து
நெஞ்சழுத்தி வைக்கு நிலமையாள்

என்னுங் கண்ணிகளிற் காணலாம்.

ஆதிசைவ அந்தணர் ஒருவர், பேரிளம்பெண் பருவ நங்கை ஒருத்திக்குச் சிவபெருமானுக்கும் பிறதெய்வங்களுக்கு முள்ள வேறுபாட்டையும் அப்பெருமானது ஒப்பற்ற முழு முதல் தன்மையையும் எடுத்துரைக்கும் முறையில் பல வரலாறுகளை இந்நூலில் இவ்வாசிரியர்கள் கூறியிருப்பது படித்து மகிழ்தற்குரியதாகும். இதனால் இரட்டைப் புலவர்கள் எல்லையற்ற சிவபத்திச் செல்வம் வாய்க்கப்பெற்றவர்கள் என்பது நன்கு தெளியப்படும். அன்றியும், சமயகுரவர்களிடத்தும், சிறுதொண்டர், காரைக்காலம்மையார், சண்டேசுவரர் முதலான அடியவர்களிடத்தும் அளவற்ற அன்புடையவர்களாக இவர்கள் இருந்துள்ளனர் என்பது இவ்வுலாவினால் அறியப்படுகின்றது.

வில்லிபுத்தூராழ்வார் பாரதம்


இது பரதனுடைய வழித் தோன்றல்களாகிய பாண்டவர் துரியோதனாதியர்களின் வரலாற்றைக் கூறும் நூலாகும். ஈண்டுக் குறிக்கப்பெற்ற பரதன் என்பான், சந்திரகுலத்தில் துஷ்யந்தனுக்குச் சகுந்தலையினிடத்தில் தோன்றிய புதல்வன் ஆவான். இந்நூலுக்கு முதனூலாகவுள்ளது வடமொழியிலுள்ள மாபாரதமாகும். எனவே இத்தமிழ் நூலின் பெயர் முதனூலாற்பெற்றதேயாம்.

இந்நூல், ஆதிபருவம், சபாபர்வம், ஆரணியபர்வம், விராடபர்வம், உத்தியோகபர்வம், வீட்டுமபருவம், துரோண பருவம், கன்னபருவம், சல்லியபருவம், சௌப்திகபருவம் ஆகிய பத்துப் பருவங்களையும் 4339 விருத்தப்பாக்களையும் தன்னகத்துக் கொண்டது. வடமொழியிலுள்ள வியாசரது மாபாரதத்தில் காணப்படும் பதினெட்டுப் பருவங்களில் இந்நூலில் முதல் பத்துப் பருவங்களே உள்ளன. எஞ்சியுள்ள த்ரீ பருவம், சாந்தி பருவம், அநுசாசன பருவம், அசுவமேத பருவம், ஆச்சிரமவாச பருவம், மௌசல பருவம், மாகப்பிரதான பருவம், சுவர்க்காரோகண பருவம் ஆகிய எட்டுப் பருவங்களும் இந்நூலில் இல்லாமை குறிப்பிடத்தக்கது. இந்நூலின் ஆசிரியர் வில்லிபுத்தூராழ்வார் ஆவர்.

இவ்வாசிரியர், திருமுனைப்பாடி நாட்டில் சனியூர் என்ற பழம்பதியில் வீரராகவர் என்ற அத்தணர்க்குப் புதல்வராகத் தோன்றியவர்; 1 வைணவ சமயத்தினர்,2 இவருடைய தந்தையார், வில்லிபுத்தூராழ்வார் என்று வழங்கும் பெரியாழ்வாரிடம் தாம் கொண்ட அன்பு காரணமாகத் தம் புதல்வருக்கு இப் பெயரிட்டிருத்தல் கூடும். இக்கவிஞர் கோமான் பிறந்து வளர்ந்த சனியூர் இப்போது எவ்விடத்திலுள்ளது என்பது தெரியவில்லை. நம் தமிழகத்தில் பல ஊர்கள் தம் பழைய பெயர்களை இழந்து புதிய பெயர்களுடன் இந்நாளில் நிலை பெற்றிருக்கின்றன என்பது வரலாற்றா ராய்ச்சியாளர் பலரும் அறிந்ததொன்றே. அவ்வாறு பெயர் மாறிய ஊர்களுள் சனியூரும் ஒன்றாதல் வேண்டும். அவ்வூர் இந்நாளில் எப்பெயரால் வழங்கி வருகின்றது என்பதை அறியவும் இயலவில்லை. திருமுனைப்பாடி நாட்டுத் திருக்கோயில்களில் காணப்படும் கல்வெட்டுக்கள் எல்லா வற்றையும் துருவி ஆராய்ந்து பார்த்தால் அவ்வூர் இப்போது எப்பெயருடன் உள்ளது என்பது புலப்படலாம். வில்லிப் புத்தூராழ்வார் பாரதத்திற்கு இப்புலவர்பிரான் புதல்வர் வரந்தருவார் என்பார் இருபத்துமூன்று பாடல்களில் ஒரு சிறப்புப்பாயிரம் பாடியுள்ளனர். அதில் தாரகாயண வண்டலை சனியூர்1 எனவும், நிறைந்த புகழ்ச் சனிநகர்2 எனவும் சொல்லப் பட்டிருப்பதால், அவ்வூர் வளம்பொருந்திய சோலை சூழ்ந்த சிறந்த நகரமாயிருந்திருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரக் கிடக்கின்றது.

வில்லிபுத்தூராழ்வார் கற்றுத்துறை போய கவிஞர்பிரா னாக யாண்டும் தம் புகழ் பரவுமாறு சனியூரில் வாழ்ந்து கொண்டிருக்குங்காலத்தில், அத்திருமுனைப்பாடி நாட்டில் வக்கபாகை என்ற நகரத்தில் கொங்கர் குலத்தில் தோன்றிய வரபதி ஆட்கொண்டான் என்ற குறுநில மன்னன் ஒருவன் இருந்தான். அவன் புலவர் பெருமக்களிடத்தில் பெரும் பற்று டையவனாகவும் பெருங்கொடை வள்ளலாகவும் திகழ்ந்தனன். அத்தகையவன் தன் நாட்டில் பேராற்றல் படைத்த பெருங் கவிஞராக நிலவிய வில்லிபுத்தூராழ்வாரை அழைப்பித்துப் பல்வகைச் சிறப்புக்களும் செய்து, நீங்களும் யானும் பிறந்த திசைக் கிசைநிற்பப் பாரதமாம் பெருங்கதையைப் பெரியோர் தங்கள் - சிறந்தசெவிக் கமுதமெனத் தமிழ் மொழியின் விருத்தத்தாற் செய்க என வேண்டினன். அவ்வேண்டுகோளை இப்புலவர்பிரான் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டனர். இவர் அதனை மறுக்காமல் உடன்பட்டமைக்குரிய காரணத்தையும் பாரதத்தில் தம் தற்சிறப்புப் பாயிரத்தில் நன்கு விளக்கியுள்ளனர். அது,

முன்னு மாமறை முனிவருந் தேவரும் பிறரும்
பன்னு மாமொழிப் பாரதப் பெருமையும் பாரேன்
மன்னு மாதவன் சரிதமும் இடையிடை வழங்கும்
என்னு மாசையால் யானுமீ தியம்புதற் கிசைந்தேன்

என்பதாம். எனவே, தம் நாட்டு வேந்தனது வேண்டுகோளும் கண்ண பிரானிடத்தில் அவ்வாசிரியர் கொண்டிருந்த பேரன்புமே இவர் பாரதத்தைத் தமிழ் மொழியில் இயற்றியமைக்குரிய உண்மையான காரணங்கள் ஆகும். இச் செய்திகளை இவருடைய மகனார் வரந்தருவார் பாடிய சிறப்புப் பாயிரத்தாலும் இவரது தற்சிறப்புப் பாயிரத்தாலும் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

தாயபாகப் பிரிவினைப்பற்றி இவருக்கும் இவருடைய தம்பியார்க்கும் பகைமை ஏற்பட்டு முதிர்ந்து வரவே, அன்னோருடைய மனவேறுபாட்டை மாற்றக்கருதிய அந்நாட்டு வேந்தன் பெருங்கவிஞராகிய வில்லிபுத்தூராழ் வாரைப் பாரதத்தைப் பாடுமாறு ஆணையிட்டனனாக, இவரும் அங்ஙனமே அதனைப் பாடி முடித்த பின்னர்த் தம் பாகத்தையும் தம் தம்பியார்க்கு வழங்கி மனக்கோட்டம் நீங்கி ஒன்றுபட்டு வாழ்ந்து வந்தனர் என்று இவர் பாரதம் பாடியமைக்குக் காரணம் கூறுவர் சிலர். வேறு சிலர், இவர் அருணகிரிநாதர்பால் தோல்வியுற்று அவர் அறிவுறுத்தியவாறு பாரதத்தை இயற்றினார் என்று கூறுவர்.3 இச்செய்திகள் எல்லாம் இவரது பாரதத்தில் உள்ள சிறப்புப் பாயிரத்தில் காணப்படவில்லை. ஆகவே, இவைகள் ஆதாரமின்றிக் கூறப்படும் வெறுங்கற்பனைக் கதைகளேயாம். சிறப்புப் பாயிரத்தில் காணப்படும் வரலாறே ஏற்றுக்கொள்ளத்தக்கதாகும்.

மாபாரதத்தை தமிழ்மொழியில் இயற்றுவித்த பெருங் கொடை வள்ளலாகிய வரபதியாட்கொண்டானுடைய பேரும் புகழும் என்றும் நின்று நிலவுமாறு நன்றி பாராட்டு முறையில் இந்நூலில் நான்கு இடங்களில் அவனைப் புகழ்ந்து இவ் வாசிரியர் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அச் செய்யுட்கள்,

சொன்மழை பொழிந்து நாடொறுந் தனது
தோள்வலி துதிக்கு நாவலர்க்குப்
பொன்மழை பொழியுங் கொங்கர் பூபதிதன்
பொற்பதம் பொருந்தலர் போலக்
கன்மழை பொழியுங் காளமா முகிலுங்
கடவுளர்த் துரந்தவன் கரத்தில்
வின்மழை பொழியக் கற்களுந் துகளாய்
மேனியும் வெளிறிமீண்டனவே,

கொடிமதிற் பாகை வேந்தன் கொங்கர்கோர் -புரவிக்காலால்
வடதிசை யரசர் தங்கள் மாமணி மகுடம் போல
அடலுடை விசைய னொற்றை யம்பினால் மீண்டுஞ்சென்று
படவர வுயர்த்த கோவைப் பண்ணினான் மகுடபங்கம்

நாகையாப் புகழாண் பெண்ணை
நதிவளஞ் சுரக்கு நாடன்
வாகையாற் பொலிதிண் டோளான்
மாகதக் கொங்கர் கோமான்
பாகையாட் கொண்டான் செங்கைப்
பரிசு பெற்றவர்கள் போல
ஓகையாற் செருக்கி மீண்டார்
உதிட்டிரன் சேனையுள்ளார்

கோவல்சூழ் பெண்ணை நாடன் கொங்கர்கோன் பாகைவேந்தன்
பாவலர் மானங் காத்தான் பங்கயச் செங்கை யென்ன
மேவலர் எமரென் னாமல் வெங்களந் தன்னில் நின்ற
காவலன் கன்னன் கையும் பொழிந்தது கனக மாரி

என்பனவாம். இவற்றால் கொங்கர் கோமானாகிய வரபதி ஆட்கொண்டா னுடைய வண்மை, வீரம், ஆற்றல் முதலியவை நன்கு புலப்படுதல் காண்க.

அகத்தியபட்டர் வடமொழியில் இயற்றியுள்ள பால பாரதமே இவருடைய நூலுக்கு முதனூல் என்று அறிஞர் சிலர் கூறுகின்றனர். எனினும், வடமொழி வியாசபாரதம் இந் நூலுக்குப் பெருந்துணையாயிருந் திருத்தல் வேண்டும் என்பது அறிஞர் பலருடைய கருத்தாகும். அன்றியும், தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் இயற்றப்பெற்று இவர் காலத்தில் யாண்டும் பரவியிருந்த பாரதவெண்பாவும் இவர் தம் நூலுக்கு ஆதாரமாகக்கொண்ட நூல்களுள் ஒன்றாதல் வேண்டும்.

இவரது தற்சிறப்புப் பாயிரத்தாலும் இவர் தம் நூலில் சருக்கந்தோறும் தொடக்கத்தில் திருமாலுக்கு வணக்கம் கூறியிருத்தலாலும் இவர் பரமவைணவர் என்பது நன்கு தெளியப்படும். எனினும், அருச்சுனன் தீர்த்தயாத்திரைச் சருக்கத்தில் ஏகாம்பரேசர் எழுந்தருளியுள்ள காஞ்சி மாநகர்,2 திருவண்ணாமலை,3 திருவெண்ணை நல்லூர்,4 திருவதிகை வீராட்டானம்5 ஆகிய சைவத் திருப்பதிகளை உளமுவந்து சிறப்பித்துப் பாடியிருப்பதோடு

இன்னம்பல பலயோனியி லெய்தாநெறி பெறவே
முன்னம்பல ரடிதேடவு முடிதேடவு மெட்டா
அன்னம்பல பயில்வார்பின லணிதில்லையு ளாடும்
பொன்னம்பல நாதன்கழல் பொற்போடு பணிந்தான்

என்று அருச்சுனன் தில்லைச் சிற்றம்பலவாணரைப் பணிந்து போற்றியதைக் கூறுமிடத்து அப்பெருமானது பரத்துவம் நன்கு புலப்படுமாறு பாரட்டியு முள்ளனர். அன்றியும் அருச்சுனன் தவநிலைச் சருக்கத்தில்,

ஓரேனந் தனைத்தேட வொளித்தருளும்
இருபாதத் தொருவ னந்தப்
போரேனந் தனைத்தேடிக் கணங்களுடன்
புறப்பட்டான் புனங்க ளெல்லாம்
சீரேனல் விளைகிரிக்குத் தேவதையாங்
குழவியையுஞ் செங்கை யேந்திப்
பாரேனை யுலகனைத்தும் பணிவுடனே
புகழ்ந்திடத்தன் பதிபின் வந்தாள்

எனவும்,

விண்ணிலுறை வானவரில் யாரடிபடாதவர்
விரிஞ்சனரியே முதலினோர்
மண்ணிலுறை மானவரில் யாரடி படாதவர்
மனுக்கள் முதலோர்க ளதலக்
கண்ணிலுறை நாகர்களில் யாரடிபடாதவர்கள்
கட்செவிமகீபன் முதலோர்
எண்ணில்பல யோனியிலும் யாவடி படாதன
விருந்துழி யிருந்துழியரோ

வேதமடி யுண்டன விரிந்தபல ஆகம
விதங்களடியுண்டன வொரைம்
பூதமடி யுண்டன விநாழிகை முதற்புகல் செய்
பொழுதொடு சலிப்பில் பொருளின்
பேதமடி யுண்டன பிறப்பிலி யிறப்பிலி
பிறங்கலரசன்றன் மகளார்
நாதனமலன் சமர வேடவடிவங்கொடு
நரன்கையடி யுண்டபொழுதே

எனவும் இவ்வாசிரியர் கூறியிருப்பதை நோக்குமிடத்து, இவர் உண்மை ஞானியாய்ச் சமயப் பொது நோக்குடையவராய் வாழ்ந்து வந்த ஒரு பெரியார் என்பது நன்கறியக் கிடத்தல் காண்க.

இவர் தமிழ் மொழியிடத்தும் தமிழ் மூவேந்தரிடத்தும் மிக்க பற்றுடையவர் என்பது இப்பாரத நூலில் காணப்படும் சில செய்யுட்களால் புலப்படுகின்றது.

கலிதனில் வியாதன் கூறக் கணபதி யெழுது பாடல்
பொலிவுற தமிழி னாறாரிரமென விருத்தம் போற்றிச்
சலிவறு வில்லி புத்தூரி றைவனும் சார்வ பூமன்
ஒலிதரு மறையோர் கோமா னுயர்ந்தவ ருவப்பச் - சொன்னான்

என்ற பாடல் ஒன்றை எடுத்துக் கூறி இவர் ஆறாயிரஞ் செய்யுட்களில் மாபாரதத்தைப் பாடி முடித்தனர் என்று சிலர் கூறுகின்றனர். இப்போது வழங்கிவரும் வில்லி புத்தூராழ்வார் பாரதத்தில் மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பில் 4339 செய்யுட்களும் யாழ்ப்பாணப் பதிப்பில் 4351 செய்யுட்களும் காணப்படுகின்றன. இப்பதிப்புக்களில் பாரதத்திலுள்ள முதல் பத்துப் பருவங்களே உள்ளன. எஞ்சிய எட்டுப் பருவங்களையும் இவர் பாடவில்லை யென்று தெரிகிறது. இவ் வுண்மையைப் பாரதத்தின் பிற்பகுதியாகிய எட்டுப் பருவங்களையும் பாடி முடித்த அரங்கநாதக் கவிராயர் கூறியுள்ள,

பைந்தமிழி னலஞ் சிறந்த முனைப்பாடித்
திருநாட்டில் பாகை வேந்தன்
சுந்தரஞ்சேர் பாரதமாம் வடகலையைத்
தென்கலையாற் சொல்க வென்னச்
சந்தனுவின் சரிதைமுதற் பதினெட்டாம்
நாட்போரின் சரிதங் காறும்
புந்திமகிழ் தரவில்லி புத்தூராழ்
வான்முன்பு புகன்றிட்டானே

என்ற பாடலால் நன்கறியலாம். எனவே, ஆதிபருவம், முதல் சௌப்திகப் பருவம் ஈறாகவுள்ள முதல் பத்துப் பருவங் களையுமே 4339 செய்யுட்களில் இவ்வாசிரியர் பாடியிருத்தல் வேண்டுமென்பது தேற்றம். ஆகவே, இவர் ஆறாயிரம் விருத்தங்களில் பாரதம் முழுவதையும் இயற்றினார் என்பதற்கு மேலே குறித்த கலிதனில் என்று தொடங்கும் பாடலேயன்றி வேறு சான்று களின்மை அறியற்பாலதாகும். அப் பாடலும் யாரால் எப்போது பாடப்பட்டது என்பது கூடத் தெரிய வில்லை. ஆதலால், அதனை ஆதாரமாகக் கொண்டு, எதனையும் ஒருதலையாகக் கூறுவது ஏற்புடைத்தன்று.

இவ்வாசிரியரை மாபாரதத்தைத் தமிழில் இயற்றுமாறு வேண்டிக்கொண்ட கொங்கர் கோமானாகிய வரபதி ஆட் கொண்டானை,

சாணர்க்கு முன்னிற்கு மாட்கொண்ட நாயன் - தமிழ்க்கொங்கர்கோன்
பாணுற்ற வரிவண்டு சேர்வக்கை நகராதி பக்கத்திலே
ஊணுக்கு வாரா திருப்பாய் விருப்பாகி யுயர்வானிலே
வீணுக்கு நின்னாக மெலிகின்ற தெவ்வாறு வெண்டிங்களே

என்று இரட்டைப் புலவர்கள் பாடியுள்ளனர். எனவே, வில்லி புத்தூராழ்வாரும் இரட்டைப் புலவர் வாழ்ந்த காலத்தில் இருந்திருத்தல் வேண்டுமென்பது நன்கு துணியப்படும். இரட்டைப் புலவர்கள்2 கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர்கள் என்பது முன்னர் ஆராய்ந்து கண்ட முடிவாகும். எனவே வில்லிபுத்தூராழ்வாரும் கி. பி. பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த புலவர் பெருமான் என்பது தேற்றம்.

வில்லிபுத்தூராழ்வார் காலத்தில் நடுநாட்டில் கன்னட மொழிக்குப் பேராதரவு ஏற்பட்டிருந்தமை வரந்தருவாரது சிறப்புப்பாயிரத்தால் நன்கறியக்கிடக்கின்றது. அக்காலப் பகுதியில் ஹொய்சள வேந்தனாகிய மூன்றாம் வீர வல்லாள தேவன் (கி.பி. 1292-1342) துவார சமுத்திரத்தையும் திருவண்ணாமலையையும் தலைநகர்களாகக் கொண்டு ஆட்சி புரிந்தமையால் 24 கன்னடம் அரசாங்க மொழியாக நிலவி நடு நாட்டில் பெருமையுற்றிருக்கிறது. ஆகவே, இவ்வாசிரியர் கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர் என்பது வரந்தருவார் கூறியுள்ள செய்தியாலும் உறுதியாதல் காண்க.

இவரது பாரதம் பல்வகைப்பட்ட சந்தங்களும் சொல்லணி பொருளணி களும் அமைந்த பாடல்களைத் தன்னகத்துக் கொண்டு, படிப்போர்க்கும் கேட்போர்க்கும் உணர்ச்சியும் மகிழ்ச்சியும் உண்டுபண்ணும் இயல்பினதாக உள்ளது. இக்காரணம் பற்றியே தமிழகத்திலுள்ள சிற்றூர் பேரூர் ஆகிய எல்லா இடங்களிலும் இந்நூற்பயிற்சி பரவியிருந்தது எனலாம். இதிலுள்ள பல செய்யுட்களை மனப்பாடஞ்செய்து சந்தர்ப்பங்களோடு இனிமையாக எடுத்துக்கூறும் முதியோர் சிலரை இக்காலத்தும் கிராமங்களில் காணலாம். இந்நூல்பயிற்சி யாண்டும் பரவி வந்தமையால்தான் பாரதவெண்பா முதலான பிற பாரத நூல்கள் படிப்பாரற்று அழிந்து போயின என்பது ஈண்டு அறியத்தக்கது. இந்நூலில் வடசொற்களும் வடமொழித் தொடர்களும் மிகுதியாகக் காணப்படுகின்றன. இந்நூலுக்கு முற்பட்ட எந்தத் தமிழ் நூலிலும் இத்துணை வடசொற்கள் காணப்படவில்லையென்று ஐயமின்றிக் கூறலாம். எனவே, மிகுதியான வடசொற்கள் கலந்த முதல் தமிழ் நூல் இப்பாரதமேயாகும். வில்லிபுத்தூராழ்வார் கால முதல் தமிழ்ச் செய்யுள் நடை வடசொற்கள் விரவி மாறுதலையடையத் தொடங்கியது எனலாம். இம்மாறுபாட்டிற்கு முதற் காரணம், வடமொழிப் புலமையும் தமிழ்ப் புலமையும் ஒருங்கே யமையப் பெற்ற புலவருள் சிலர், சந்த இன்பங்கருதி இருமொழிச் சொற்களையும் கலந்து தமிழ்ச் செய்யுட்கள் இயற்றத் தொடங்கியமையேயாம். மற்றொரு காரணம், வடமொழி யிலுள்ள சாத்திரங்களையும் புராணங்களையும் இதிகாசங்களையும் தமிழில் மொழிபெயர்த்துச் செய்யுட்களாகப் பாடத்தொடங்கிய தமிழ்ப் புலவர்கள் இயற்பெயரும் இடப்பெயருமல்லாத மற்ற வடசொற்களுக்கு நேரான தூய தமிழ்ச் சொற்களை அமைத்துப் பாட முயலாமல் வட சொற்களையும் தொடர்களையும் சிதைத்தும் சிதைக்காமலும் தமிழ்ச் செய்யுட்களில் இடையிடையே வைத்துப் பாடி விட்டமையேயாகும். இரு மொழிச் சொற்களும் கலந்து முத்தும் பவளமும் போல் விளங்கித் தமிழ்ச் செய்யுட்களுக்கு இனிய ஓசை நயத்தை உண்டுபண்ணிக் கொண்டிருக்கின்றன என்று ஒருசிலர் கூறுவர். தமிழ் மொழியின் தூய்மையும் பண்பும் பிற மொழிக் கலப்பால் கெட்டுவிடும் என்பதை அன்னோர் அறியார் போலும். வில்லிபுத்தூராழ்வார் காலத்தில் தமிழ்ச் செய்யுள் நடையில் ஏற்பட்ட இம்மாறுதல் காலப்போக்கில் பெருகி நிலைபெற்றுப் போயிற்று. இவ்வுண்மையை அருணகிரிநாதரது திருப்புகழ், தாயுமானவர் பாடல் முதலான நூல்களால் நன்குணரலாம்.

தேசிகப் பிரபந்தம்


இது வடகலை வைணவ ஆசாரியராகிய வேதாந்த தேசிகரால் இயற்றப்பெற்றது; வைணவ சமயக் கொள்கைகளை நன்கு விளக்குவது; வெண்பா, வெண்டுறை, ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம், கலிப்பா, கலி விருத்தம், கட்டளைக் கலித்துறை ஆகிய பாக்களாலும் பாவினங்களாலும் அமைந்தது; பத்தொன்பது பிரபந்தங்களையும் நானூற்றைந்து பாடல்களையும் உடையது. இதிலுள்ள பத்தொன்பது பிரபந்தங்கள், அமிருத ரஞ்சனி, அதிகார சங்கிரகம், அமிருதா சுவாதினி, பரமபத சோபானம், பரமபத பங்கம், மெய்விரத மான்மியம், அடைக்கலப் பத்து, அருத்த பஞ்சகம்,ஸ்ரீ வைணவ தினசரி, திருச்சின்ன மாலை, பன்னிரு நாமம், திருமந்திரச் சுருக்கு, தூயச் சுருக்கு, சரமசுலோகச் சுருக்கு, கீதார்த்த சங்கிரகம், மும்மணிக் கோவை, நவமணி மாலை, பிரபந்த சாரம், ஆகார நியமம் என்பன. இவற்றுள், ஸ்ரீ வைணவ தினசரி என்பது ஸ்ரீ வைணவர்கள் நாள்தோறும் செய்ய வேண்டிய காரியங்களை விளக்குவது; ஆகார நியமம் என்பது ஸ்ரீ வைணவர்கள் உள்ளத் தூய்மை எய்தி நற் காரியங்களில் ஈடுபடும் பொருட்டு அவர்கள் உண்ணத் தக்கனவும் உண்ணத் தகாதனவும் ஆகிய உணவுப் பொருள்களை எடுத்துரைப்பது, இப்பிரபந்தங்களுள் சில, வேதாந்த தேசிகர் மணிப்பிரவாள நடையில் இயற்றியுள்ள பிரபந்தங்கள் சிலவற்றில் அமைந்த தமிழ்ச் செய்யுட்களைத் தனியே எடுத்துத் தொகுக்கப் பெற்றவை என்று தெரிகிறது. தேசிகப் பிரபந்தம் இருபத்து நான்கு பிரபந்தங்களைத் தன்னகத்துக் கொண்டது என்றும், அவற்றுள் பந்து, கழல், அம்மானை, ஊசல், ஏசல் என்ற ஐந்து பிரபந்தங்களும் இக்காலத்தில் கிடைக்கவில்லை என்றும் வைணவ சமய அறிஞர்கள் கூறுகின்றனர்.

இப்பிரபந்தத்தின் ஆசிரியராகிய வேதாந்த தேசிகர் தொண்டை மண்டலத்தில் காஞ்சிமாநகரைச் சார்ந்த தூப்பல் என்ற பழம்பதியில் அந்தணர் குலத்தில் தோன்றியவர். இவருடைய தந்தையார் அனந்தசூரி என்பார்; தாயார் கோதாரம்பா எனப்படுவர். வேங்கட நாதன் என்பது இவருடைய பிள்ளைத் திருநாமம். இவர் தம்முடைய அம்மானாகிய கடாம்பி அப்புள்ளாரிடம் பல கலைகளையும் பயின்று தமிழ் மொழியிலும் வடமொழியிலும் சிறந்த புலமை எய்தினார் என்று தெரிகிறது. இவர் தம் நாற்பத்திரண்டாம் வயதில் திருவரங்கத்தில் அத்துவித சமயத்தாரோடு வாதம் புரிந்து அன்னோரை வென்று, வைணவ சித்தாந்தத்தை நிலை நாட்டியமை பற்றி வேதாந்தாசாரியர் என்ற சிறப்புப் பெயர் பெற்றனர் என்று சொல்லப்படுகிறது.

இவர் தம் வாழ்நாளில் காஞ்சி, திருவயிந்திரபுரம், திருவரங்கம் ஆகிய நகரங்களில் வதிந்தமையோடு மைசூர் நாட்டுத் திருநாராயணபுரத்திலும் சத்திய மங்கலத்திலும் பல ஆண்டுகள் தங்கியிருந்தனரென்றும் கூறு கின்றனர். இவர் கி.பி. 1268-ல் பிறந்து 1369-ல் திருமாலுலகை யடைந்தனர் என்ப. எனவே, இவர் ஒரு நூற்றாண்டிற்குமேல் உயிர் வாழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய இவ்வாசிரியர், பதினான்காம் நூற்றாண்டில் அறுபத்தொன்பது ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்து பல நூல்களை இயற்றியுள்ளமை அறியத்தக்கது. இவர்காலத்தில் தான் திருவரங்கப் பெருங்கோயில் முகமதியரது படையெழுச்சியால் பல இன்னல்களுக்கு உள்ளாயிற்று.

கப்பற்கோவை


அச்சிடப்பெற்று வெளிவராத தமிழ் நூல்களுள் இதுவும் ஒன்று. இதனைக் கருமாணிக்கன் கோவை எனவும் கூறுவர். பாண்டி நாட்டுக் கப்பலூரைத் தலை நகராகக் கொண்டு அதனைச் சூழ்ந்த நிலப்பரப்பை ஆட்சிபுரிந்தவனும் பாண்டியர்க்குப் படைத்தலைவனாக விளங்கியவனு மாகிய கருமாணிக்கன் என்ற தலைவன் ஒருவன் மேல் பாடப்பட்டது. இந்நூல். இதன் ஆசிரியர் யாவர் என்பது தெரிய வில்லை. இதன் ஏட்டுப் பிரதிகள் இரண்டு, சென்னை அடையாற்றுக் கலாக்ஷேத்திரத்திலுள்ள மகாமகோபாத்தியாய உ. வே. சாமிநாதையர் நூல் நிலையத்தில் உள்ளன.

செந்தமிழ்ப் பத்திரிகாசிரியராக முன்னர் விளங்கிய ராவ் சாகெப் மு. இராகவையங்கார் அவர்கள் இந்நூலைப் பற்றிக் கப்பற்கோவை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி, செந்தமிழ் ஆறாந்தொகுதியில் வெளி யிட்டுள்ளனர். இலக்கண விளக்க உரையாசிரியர் கப்பற்கோவையினின்று பத்து மேற்கோட் செய்யுட்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். அப் பாடல்களை நோக்குமிடத்து, இது சிறந்த கோவை நூல்களுள் ஒன்று என்று தெரிகிறது. இதன் பாட்டுடைத் தலைவனாகிய கருமாணிக்கன் என்பான் கப்பலூர், துவரை முதலான ஊர்களைத் தலைநகர்களாகக் கொண்டவன் என்பதும் யாதவராயன் என்ற குடிப்பெயரும் தொண்டைமான் என்னும் சிறப்புப் பெயரும் உடையவன் என்பதும் காலிங்கராயனுக்கு உடன்பிறந்தான் என்பதும் இந்நூல் பாடல்கள் சிலவற்றால் நன்கறியக்கிடக்கின்றன. மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி பராக்கிரம பாண்டியனது ஆட்சியின் ஏழாம் ஆண்டாகிய கி.பி. 1341-ல் பாண்டி மண்டலத்து, முத்தூறு கூற்றத்து உலகளந்த சோழ நல்லூரான கப்பலூருடையான் யாதவராயன் காலிங்க ராயனான கருமாணிக்கத்தேவன் என்பான், நடுநாட்டில் திருக்கோவலூர்த் தாலூகாவிலுள்ள இராசேந்திர சிங்க நல்லூராகிய மாரிங்கூர்த்திரு விராமீசு வரமுடைய நாயனார்க்கு நாள்தோறும் வழிபாடு நடத்தும் பொருட்டுத் தன் பெயரால் ஒரு கட்டளை அமைத்து அதற்கு நிலம் வழங்கினான் என்று அவ்வூர்க் கல்வெட்டு ஒன்று1 உணர்த்துகின்றது. இக்கல் வெட்டில் குறிக்கப் பெற்ற தலைவனுடைய நாடும் ஊரும் குடிப்பெயரும் நுணுகிப் பார்க்குமிடத்து, இவனே கப்பற் கோவையின் பாட்டுடைத் தலைவனாகிய தொண்டைமானின் உடன் பிறந்தானாகிய காலிங்கராயனாக இருத்தல் வேண்டும் என்று கருதற்கு இடம் உள்ளது. இங்ஙனங் கொள்ளுமிடத்து, உடன்பிறந்தார் இருவருமே கருமாணிக்கன் என்ற இயற் பெயருடையவர்கள் ஆவர். அப்பூதியடிகள் தம் இரு புதல்வருக்கும் மூத்த திருநாவுக்கரசு இளைய திருநாவுக்கரசு என்று பெயரிட்டிருந்தமைபோல் தம்மூரில் எழுந்தருளி யிருக்கும் திருமாலிடத்தில் ஈடுபட்டிருந்த இவர்களுடைய பெற்றோர் தம் புதல்வர் இருவர்க்குமே கருமாணிக்கன் என்று பெயரிட்டிருத்தல் வேண்டும். இவ்விருவரும் பாண்டியர்களின் கீழ் அமைச்சராகவும் படைத்தலைவ ராகவும் அமர்ந்து அவர்களது அன்பிற்குரியவர்களாகி அவ்வேந்தர்கள் வழங்கிய காலிங்க ராயன் தொண்டைமான் என்னும் பட்டங்களைப் பெற்றவர்கள் என்பது கல்வெட்டினாலும் கப்பற்கோவையாலும் புலப்படு கின்றது. இவர்களுள் காலிங்கராயன் கி. பி. 1341-ல் இருந்தவன் என்பது2 மாரீங்கூர்க் கல்வெட்டினால் அறியப்படுவதொன்றாம். எனவே அவனுடன் பிறந்தானும் தொண்டைமான் என்ற பட்டமுடையவனும்கப்பற்கோவையின் பாட்டுடைத் தலைவனுமாகிய கருமாணிக்கன் என்பவனும் அக்காலப் பகுதியில் இருந்தவனாதல் வேண்டும். ஆகவே, கப்பற்கோவை கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் இடையில் இயற்றப் பெற்றது என்பது தேற்றம். இந்நூலிலிருந்து இலக்கண விளக்க உரை யாசிரியர் எடுத்துகாட்டியுள்ள மேற்கோள் செய்யுட்களுள் சிலவற்றை அடியிற் காண்க.

இமையாத வேழமொ ரெட்டுங் குலகிரி யேழுமுற்றுஞ்
சுமையாற வந்தரு ளுந்தொண்டைமான் கப்பற் - றோகையன்னீர்
அமையாத வன்புதந் தார்பிரிந் தாலரி தாற்றுவதென்
றுமையா ளறிந்தல்ல வோசிவந்தாள் தன்னொரு பக்கமே.

அதுநா மறிந்திலம் அன்னையிப் போதணி நீர்த்துவரை
துதிநா வலர்புகழுந் தொண்டைமான் வெற்பிற் - றோண்மெலிவும்
புதுநாண் மதிநுதல் வண்ணமும் பார்த்துப்- புகையுயிர்த்தாள்
இதுநா மினிஅன்ன மேவண்ட லாடு மிடமல்லவே.

சுளையார் பொழிற்றுவரைத் தொண்டைமான் கப்பல்- சூழ்துறைவா
இளையாள் வருந்துவ தென்னையென் றாளன்னை - யாமிருந்து
விளையாடு சிற்றிலை வெண்டலைத் தெண்டிரை வேலையெற்றும்
வளையா லழித்ததென் றாளென்செய் வாள்பின்னை- வாணுதலே

இச்செயுட்களால் இந்நூலின் சொல்நயம் பொருள் நயங்களையும் இந்நூலாசிரியரது புலமைத் திறத்தையும் ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம்.


III கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு

தமிழ்நாடு முழுவதும் வேறு மொழி பேசும் அன்னியர் களால் ஆளப்பட்டுவந்த ஒரு காலப்பகுதியே இப்பதினைந்தாம் நூற்றாண்டாகும். இந்நூற்றாண்டில் தமிழ்நாடு விசய நகர இராச்சியத்திற்கு உட்பட்டுச் சில மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. விசய நகர வேந்தர்களின் பிரதிநிதிகளான மண்டலாதிபதிகள் அம்மாகாணங்களிலிருந்து கொண்டு அவற்றைத் தாமே நேராக ஆட்சி புரிந்துவந்தனர்.கன்னடமே அவர்களுடைய தாய் மொழியாகும். எனவே, இந்நூற்றாண்டில் தமிழ்மொழி அரசாங்க மொழியாகவும் இல்லை: அரசாங் கத்தால் ஆதரிக்கப்பட்ட மொழியாகவும் இல்லை. ஆகவே, பிற மொழியாளராகிய அன்னியர் ஆளுகையில் சிறந்த தமிழ் நூல்கள் தோன்றுவதற்குச் சிறிதும் இடமில்லை. எனவே, தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறந்ததோர் காலப்பகுதியாக இந் நூற்றாண்டைக் கூற முடியவில்லை எனினும், இத்தகைய ஆதர வற்ற காலங்களில் கடவுளிடத்தில் பேரன்பு பூண்டொழுகிய அடியார் சிலர் தோன்றி, நள்ளிரவில் புறப்பட்ட திங்கள் போல் விளங்கி, யாண்டும் தமிழொலி முழங்க நற்றமிழ்ப் பாக்கள் பாடி, மக்கள் உள்ளத்தைக் கவர்ந்து, தாய்மொழிப்பற்றுக் குன்றாத வாறு காத்து வருவது தொன்று தொட்டு நிகழ்ந்துவரும் ஓர் அரிய நிகழ்ச்சியாகும். அம்முறையில் இந்நூற்றாண்டில் தோன்றிய நூல்கள் திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, கந்தரந்தாதி, திருவானைக்காவுலா, ஓங்குகோயிற் புராணம் என்பனவாம்.

திருப்புகழ்


இது தமிழகத்திலுள்ள பல ஊர்களிலும் நகரங்களிலும் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள முருகக் கடவுள் மீது பாடப்பெற்ற சந்தப் பாக்களைத் தன்னகத்துக் கொண்ட ஒரு சிறந்த நூலாகும். குன்றமெறிந்த குமரவேளின் புகழை எடுத்துக் கூறும் இன்னிசைப் பாடல்கள் அடங்கிய நூலாதல் பற்றி இது திருப்புகழ் என்ற பெயர் எய்துவதாயிற்று. இந்நூலிலுள்ள ஒவ்வொரு பாடலும் திருப்புகழ் என்று வழங்கப் பெற்று வருவது குறிப்பிடத் தக்கதாகும். நம் தமிழ்நாட்டிலுள்ள சைவத் திருப்பதிகங்களுள் சமயகுரவர் மூவருடைய தேவாரப் பதிகங்கள் பெற்ற தலங்கள் பெரிதும் பாரட்டப்பட்டு வருதல் போல், திருப்புகழ், பெற்ற குமர கோட்டங்களுள்ள திருப்பதிகளும் தமிழ் மக்களால் சிறப்பாகப் போற்றப்பெற்று வருதல் உணரற்பாலதாகும். இந்நூலில் இக்காலத்தில் கிடைத்துள்ள பாடல்கள் 1307 ஆகும். இதன் ஆசிரியர் அருணகிரிநாதர் ஆவர்.

இவ்வாசிரியர் தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் இடைப்பட்ட நடுநாட்டிலேயுள்ள திருவண்ணா மலையிற் பிறந்தவர். இவருடைய தாய் தந்தையர் யாவர் என்பதும் குலம் யாது என்பதும், தெரியவில்லை. இவர் பட்டினத்தடிகளின் புதல்வர் என்றும் சிவாலாயத்திற்குத் தொண்டுபுரியும் தொழிலை மேற்கொண்ட ஓர் உருத்திர கணிகையின் மகனார் என்றும் சிலர் கூறுவர். கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் விளங்கிய சிவஞானச் செல்வராகிய பட்டினத்தடிகளுக்கு ஏறக்குறைய அறுநூறு ஆண்டுகட்குப் பிறகு நிலவிய அருணகிரிநாதர் புதல்வராதல் எங்ஙனம் கூடும்? அன்றியும், ஒட்டுடன் பற்றின்றி உலகைத் துறந்த பெருஞ் செல்வராகிய பட்டினத்தடி களின் உயர்ந்த துறவு நிலையையுணர்ந்த அறிஞர்கள் அவ்வடிகளின் மேல் ஏற்றிக் கூறும் பொய்ச் செய்திகளைக் கேட்டு நகைப்பர் என்பது திண்ணம். அருணகிரி நாதரின் தாயார் பதியிலார் குலத்தில் தோன்றியவர் என்பதற்கும் ஆதாரமில்லை. இதற்கு மாறாக, இவ்வடிகள் தம் தாய் தந்தையர் நல்லொழுக்கத்திற் சிறந்து தூய்மை வாய்மை முதலான சீலமுடையவர் களாகத் திகழ்ந்தவர்கள் என்பதைத் திருப்புகழ்ப் பாடலொன்றில்1 குறித்துள்ளமை அறியத்தக்கது. இப்பெரியாரது திருப்புகழை ஆராயுமிடத்து இவரது உண்மை வரலாறு ஓரளவு வெளியாகின்றது. இவர் செல்வம்மிக்க ஒரு பெருங்குடியில் தோன்றி, இளமையில் தக்க புலவர் பெருமக்களிடத்தில் தமிழும் வடமொழியும் நன்கு பயின்று இரு மொழிகளிலும் புலமையெய்திப் பெற்றோரால் இளமையிலேயே மணஞ் செய்விக்கப் பெற்று மனைவியோடு இல்வாழ்க்கை நடத்தி வரும் நாட்களில் ஊழ்வினை வயத்தால் இன்பத் துறையில் எளியராகிப் பரத்தையர் பலரோடு உறவாடித் தம் முன்னோர் தேடிவைத்திருந்த பொருளெல்லாம் அழித்தனர்;2 பெரியோர் கூறிய நல்லுரைகளையும் கேளாமல் தம்மனம் போனவாறு அலைந்தனர். அதனால் பல கொடிய நோய்களுக்குள்ளாகிப் பார்த்தோர் பலரும் எள்ளி நகையாடும் நிலையை யடைந்தனர்; நோயினின்றும் நீங்கி நலமுறுதற்கு இடமில்லை என்பதை நன்குணர்ந்தும் பலரும் தம்மை நோக்கிக் கூறும் இழிந்த சொற்களால் மனம் உடைந்தும் தம் உயிரையே போக்கிக் கொள்ளத் துணிந்து அதற்குரியதொரு செயலை மேற் கொண்டார்.3 அந்நிலையில் முருகவேள் அருள் கூர்ந்து இவர்முன் தோன்றி இவரது தீராத கொடிய நோயையும் தீர்த்துத் தம் திருவடிகளை இவர் தலையில் சூட்டி அருள் பாலித்தனர்.1 அன்றியும் முத்தைத்தரு பத்தித் திருநகை என அடியெடுத்துத் தந்து, தம் திருப்புகழை இனிய செந்தமிழ்ப் பாக்களில் அமைத்துப் பாடுமாறு பணித்து2 மறைந்தருளினர். அங்ஙனமே, இவர் பல வண்ணப் பாக்களால் குன்றமெறிந்த குமரவேளைப் பாடிப் பரவி வருவராயினர்; அந்நாளில் தமிழகத்திலும் அதற்கப் பாலும் அப்பெருமான் எழுந்தருளி யுள்ள திருப்பதிகள் எல்லாவற்றிற்கும் சென்று தம் வண்ணப் பாக்களால் துதித்து வந்தனர். இவர் பாடியுள்ள திருப்புகழ்ப் பாக்களை நோக்குமிடத்து, திருவண்ணாமலை யேயன்றித் திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே காவிரிக் கரையிலுள்ள வயலூரிலும் பழனியிலும் இவர் நெடுங்காலம் இருந்திருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரக் கிடக்கின்றது. இறுதியில் இவர் தம்மை யாட்கொண்ட செவ்வேள் திருவடிகளையடைந்து பேரின்பப் பெருவாழ்வை எய்தினர். அந்நாளில் இப்புலவர் பிரானின் திருப்புகழ்ப்பாக்களை அன்பர்கள் எல்லோரும் படித்தும் கேட்டும் பெருமகிழ்ச்சியுற்றமையால் இவரது புகழ் யாண்டும் பரவியிருந்தது என்பது,

பூர்வ பச்சிம தக்ஷிண உத்தரதிக்குள
பக்தர்கள் அற்புதமென ஓதும்
சித்ர கவித்துவ சத்தமிகுத்த திருப்புகழ்

எனவும்,

ஆபாதனேன் மிகப்பிரசித்திபெற்று இனிதுலகேழும்
யானாக நாம அற்புதத்திருப்புகழ் தேனூற ஓதி
எத்திசைப் புலத்தினும் ஏடேவு ராஜகத்தினைப் பணித்ததும்

எனவும் போதரும் திருப்புகழ்ப் பாடற் பகுதிகளால் தெள்ளிதிற் புலனாகின்றது.

வில்லிபுத்தூராழ்வாரும் திருவண்ணாமலையிலிருந்த சம்பந்தாண்டான் என்பவரும் அருணகிரி நாதரோடு வாதம் புரிந்து தோல்வியுற்றனர் என்று சிலர் கூறுவர்.1 வில்லிபுத் தூராழ்வார் அருணகிரிநாதருக்குச் சுமார் ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகட் காதல் முற்பட்டவராயிருத்தல் வேண்டும் என்பது ஆராய்ச்சியால் அறியக்கிடக்கின்றது. எனவே, இவ்விருவரும் வாதம் புரிந்தனர் என்பது ஏற்புடைத்தன்று, அன்றியும், இதனை உறுதிப்படுத்தற்குரிய தக்க சான்றுகளும் இல்லை. அங்ஙனமே காலத்தால் இவருக்கு முற்பட்ட சம்பந்தாண்டான்2 வாதம் புரிந்த செய்தியும் வெறும் கற்பனையேயாகும். நம் நாட்டில் புலவர் வரலாறு எழுதியோர் பலர், தம் புத்தகங்களின் பக்கங்கள் பெருகுதற் பொருட்டும், மேற்போக்காகப் படிப்போர் உள்ளத்தைப் பிணித்தற் பொருட்டும் ஆதாரமற்ற கற்பனைச் செய்திகள் எல்லா வற்றையும் தொகுத்து உண்மையாக நிகழ்ந்த வரலாறுபோல் எழுதி வெளியிட்டிருப்பது வருந்தத்தக்கது.

இனி, அருணகிரியார் பால் பகைகொண்டிருந்த சம்பந் தாண்டானது சூழ்ச்சியினால் பிரபுடதேவராயனது வேண்டு கோட்கிணங்கி இப்புலவர் பெருமான் தம் சித்தவன்மையால் விண்ணுலகிலிருந்து பாரிசாத மலரைக் கொண்டுவரும் பொருட்டு, தம் உடலைத் திருவண்ணாமலைக் கோயிற் கோபுரத்தில் மறைவான ஓரிடத்தில் வைத்துவிட்டு, அங்கு இறந்து கிடந்த ஒரு கிளியின் உடலில் புகுந்து வானுலகம் சென்றனர் எனவும், அச்சமயத்தில் சம்பந்தாண்டான் இவரது உடல் கோயிற் கோபுரத்தில் காணப்படுவதால் இவர் இறந்து போய் விட்டனர் என்று கூறவே, அரசன் உண்மையை உணராமல் அவ்வுடலை எடுப்பித்து, இறுதிக்கடனை நிறை வேற்றி விட்டனன் எனவும், பிறகு கிளிவடிவத்தோடு திரும்பி வந்த இப்பெரியார், தம் உடல் எரிவாய்ப் பட்டு அழிந்ததை யறிந்து, திருத்தணிகைக்குச் சென்று முருகவேள்பால் தங்கி அப்பெருமான் திருவடிகளில் கலந்தனர் எனவும் கூறுவர்.3 இவ்வரலாறு பொருந்தாததோர் அரியகதையாக உளது. இதனை யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார் என்பது திண்ணம். இவர், தம் திருப்புகழ்ப் பாக்களில் துகளில் சாயுச்சியக் கதியை யீயற்ற சொற் சுகசொரூபத்தை யுற்றடை
வேனோ1 எனவும், பரவசந்தணிந்து னையுணர்ந்தொரு மவுன பஞ்சரம் பயில் தரும் சுகபதமடைந் திருந்தருள் பொருந்தும தொருநாளே2 எனவும் கூறியிருப்பது கொண்டு புனைந்துரைவகையில் எழுந்ததே இக்கதை என்பது ஐயமின்றித் துணியப்படும். சுகம் என்பதற்குக் கிளி என்ற பொருளும் உண்டு. மேலே குறிப்பிட்ட திருப்புகழ் அடிகளில் காணப்படும் சுகம் என்ற சொல்லுக்கு அப்பொருள் கொண்டு ஒரு சிலர் படைத்து மொழிந்ததே இக்கதை என்பது உணரற்பாலது. இவ்வாசிரியர் தம் திருப்புகழ்ப் பாக்களில் குறித்துள்ள சுகசொரூபம் சுகபதம்ஆகிய தொடர்கள் பேரின்ப நிலையையே உணர்த்தும் என்பது அறியத்தக்கதாகும்.

இப்பெரியார்வாக்கிற்கருணகிரி3 என்றும் கருணைக் கருணகிரி4 என்றும் அறிஞர்களால் பாராட்டப்படும் பெருமையுடையவர் ஆவர். தாயுமான அடிகள் கூறியுள்ள ஐயா அருணகிரி அப்பா உனைப்போல –மெய்யாக ஓர் சொல் விளம்பினர் யார்5 என்ற பாடற் பகுதியாலும் இவரது சிறப்பினை நன்குணரலாம்.

இனி, இப்புலவர் பெருமான் வாழ்ந்த காலம் யாது என்பதை ஆராய்வாம், திருப்புகழிலுள்ள,

அதல சேடனாராட அகிலமேரு மீதாட
அபினகாளி தானாட அவளோடன்

றதிரவீசி வாதாடும் விடையிலேறு வாராட
அருகு பூத வேதாளம் அவையாட

மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
மருவு வானு ளோராட மதியாட

வனச மாமி யாராட நெடிய மாம னாராட
மயிலு மாடி நீயாடி வரவேணும்

கதைவிடாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால் நீடு
கருத லார்கள் மாசேனை பொடியாகக்

கதறுகாலி போய்மீள விஜயனேறு தேர்மீது
கனக வேத கோடூதி அலைமோதும்

உததி மீதி லேசாயும் உலகமூடு சீர்பாத
உவண மூர்தி மாமாயன் மருகோனே

உதயதாம மார்பான ப்ரபுட தேவ மாராஜன்
உளமு மாட வாழ்தேவர் பெருமாளே

என்ற பாடலில் இவ்வாசிரியர் தம் காலத்திலிருந்த பிரபுட தேவ மாராயன் என்ற வேந்தன் ஒருவனைக் கூறியுள்ளனர். பண்டைத் தமிழ் வேந்தர்களாகிய சோழர் பாண்டியர்களின் ஆட்சி தமிழகத்தில் வீழ்ச்சியுற்ற பின்னர், கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இதனை முகமதியர் ஆளுகையினின்றும் மீட்டுப் பழைய நிலைக்குக் கொணர்ந்து முன்போலவே சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தவர்கள் விஜயநகர அரசர்கள் என்பது நம் நாட்டின் வரலாற்றை ஆராய்ந்தோர் பலரும் நன்கறிந்ததே. அவ்விஜய நகர மன்னர்களுள் முதலில் அரசாண்டோர் சங்கம மரபினர் ஆவர். அவர்களுள் பிரபுதேவராயர் என்ற பெயருடன் இரண்டு அரசர்கள் இருந்துள்ளனர் என்பர் சரித்திர ஆசிரியர்கள்.2 அவ்விருவருள் ஒருவன் கி. பி. 1406 முதல் கி. பி. 1422 வரையில் ஆட்சி புரிந்த முதல் தேவராயன் ஆவன்;3மற்றையோன்அவன் பேரனாகிய இரண்டாம் தேவராயன் ஆவன். இவன் கி. பி. 1422 முதல் 1447 வரையில் அரசாண்டவன்.4 இவ்விரு வேந்தருள் அருணகிரியாரால் பாரட்டப் பெற்றவன் யாவன் என்பது தெளிவாகப் புலப்படவில்லை. அன்றியும், இரண்டாம் தேவராயனுடைய மகனும் கி.பி. 1447 முதல் 1465 வரையில் ஆட்சி புரிந்தவனுமாகிய மல்லிகார்ச்சுனராயனும் பிரபுட தேவமகாராயன் என்று வழங்கப்பெற்றுள்ளனன் என்பது தென் கன்னடம் ஜில்லாவில் ஓரூரில் காணப்படும் கன்னடக் கல்வெட்டொன்றால் 1 அறியக்கிடக்கின்றது. இக்கல் வெட்டில் குறிக்கப்பட்டுள்ள காலம் கி. பி. 1458 ஆகும்.2 எனவே, பிரபுட தேவமகாராயன் என்ற பெயருடன் அரசாண்ட விஜயநகர வேந்தர் மூவர் என்பதும் இம்மூவரும் கி. பி. 1406 முதல் 1465 வரையில் இருந்தவர்கள் என்பதும் நன்கு துணியப்படும். இம்மூவருள் எவ்வரசனை நம் அருணகிரியார் தம் திருப்புகழில் கூறியிருந்தாலும் இவர் கி.பி 15- ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர்ஆவர் என்பது தேற்றம். இரண்டாம் தேவராயன் வட மொழியிற் சிறந்த புலமை யுடையவன் என்றும் அம்மொழியில் இரண்டு நூல்கள் இயற்றியுள்ளான் என்றும் தன் காலத்திலிருந்த புலவர் பெரு மக்களை ஆதரித்த பெருங் கொடைவள்ளல் என்றும் வரலாற்றாராய்ச்சி யாளர்கள் கூறுகின்றனர். 3 ஆகவே, அருணகிரியாரை இவ்வேந்தன் காலத்தவராகக் கொள்ளினும் கொள்ளலாம். ஆனால் இக்கொள்கையை உறுதிப்படுத்தற்குரிய தக்க சான்றுகள் கிடைக்கவில்லை. எனினும் இவர் கி. பி. பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர் என்பது ஐயமின்றித் தெளியப்படும்.

திருப்புகழில் இக்காலத்தில் கிடைத்துள்ள 1307 பாடல்களில் 1008-க்கு மேற்பட்ட சந்த வேறுபாடுகள் காணப்படுகின்றன என்று அவற்றை ஆராய்ந்த அறிஞர்கள் கூறுகின்றனர். சந்தப் பாக்களாலாகிய திருப்புகழ்ப் பாவகையை முதலில் புதிய முறையில் அமைத்தவர் அருணகிரிநாதரே யாவர் என்பது பலருடைய கருத்தாகும். எனினும், பட்டினத்துப் பிள்ளையார் இயற்றியதாகப் பதினோராம் திருமுறையிற் காணப்படும் கோயில் நான்மணிமாலையில் வருகின்ற சந்தச் செய்யுட்கள் திருப்புகழாசிரியருக்கு வழிகாட்டியாயிருந்தன என்று எண்ண இடமுண்டு என உயர்திரு விபுலானந்த அடிகள் தம் யாழ்நூலில்1 கூறியிருப்பது அறியத்தக்கதாகும். அன்றியும், தமிழ்ப் பெரும்பேராசிரியராகிய அவ்வடிகள் இவர் பாடிய திருப்புகழ் நூலினுள்ளே இடைச் செருகல்கள் பல புகுந்து நூல்வனப்பினைக் குறைவு படுத்துகின்றன. இடைச் செருகல்களை யொழித்துதூய உருவத்தில் திருப்புகழ் நூல் வெளிவருமாயின், சைவ சித்தாந்த மெய்ஞ்ஞான நூல்களில் ஒன்றாக விளங்குமென்பதற்கு ஐயமில்லை என்று இந்நூலின் பெருமையைத் தம் யாழ் நூலில் உள்ள வாறுணர்த்தியிருப்பது2 யாவரும் அறிந்துகொள்வதற்குரிய தொன்றாகும். திருப்புகழ்ப் பாக்களில் வட சொற்களும் சொற்றொடர்களும் மிகுதியாகப் பயின்று வருதலைக் காணலாம். அதற்குக் காரணம் அருணகிரியின் சிறந்த வடமொழிப் பயிற்சியே எனலாம். இவ்வாசிரியர் பாடிய திருப்புகழ்ப் பாடல்கள் பதினாறாயிரம் என்பர். இவர் திருப்புகழ்ப் பாடலில்,

புமியதனிற் ப்ரபுவான புகலியில் வித்தகர் போல
அமிர்தகவித் தொடைபாட அடிமைதனக் கருள்வாயே

என்று குன்றமெறிந்த குமரவேளை வேண்டிக்கொண்டிருத் தலால் திருஞானசம்பந்தரைப் போலவே இவரும் பதினாறாயிரம் பாடல்களைப் பாடியிருத்தல் வேண்டும் என்பது சிலர் கொள்கை. சைவ சமய குரவருள் முதல்வராகிய அப்பெரியாரைப் போல் அமிர்தம் போன்ற ஆசுகவிகளைப் பாடும் ஆற்றலைத் தமக்கும் அருளுதல் வேண்டும் என்பதுதான்இவரது வேண்டுகோளாகும். எனவே, இவர் பதினாறாயிரம் திருப்புகழ்ச் செய்யுட்களை இயற்றியுள்ளனர் என்பதற்குப் பிற்காலப் புலவர் சிலர் கூற்றுக்களே4 யன்றிப் பழைய ஆதாரங்களின்மை அறியற்பாலதாம். ஆனால், திருப்புகழில் இக்காலத்தில் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ள 1307 பாடல்களேயன்றி இன்னும் பல பாடல்கள் இருந்திருத்தல் கூடும். அவை கிடைக்காமல் காலப்போக்கில் அழிந்திருக்கலாம். ஆதலால், இவர் பாடிய திருப்புகழ்ப் பாடல்களின் தொகையைக் கணக்கிட்டுக் கூறுவது இயலாத தொன்

நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் டதனாலே
மால்கொண்ட பேதைக்குள் மண நாறும்
மார்தங்கு தாரைத்தந் தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண் டெறிவோனே
வரங்கொள் சூரர்க்குங் குலகாலா
நாலந்த வேதத்தின் பொருளோனே
நானென்று மார்தட்டும் பெருமாளே.

என்ற பாடலொன்றால் யாவரும் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.

கந்தர் அந்தாதி


இது கடவுள் வாழ்த்துட்பட நூற்றிரண்டு பாடல்களையுடைய ஒரு யமக அந்தாதியாகும்; முருகக்கடவுள் மீது அருணகிரிநாதரால் பாடப்பெற்றது; கட்டளைக் கலித்துறையில் அமைந்தது. இதிலுள்ள கடவுள் வாழ்த்துச் செய்யுட்களை நோக்குமிடத்து, இந்நூல் திருவண்ணாமலையில் பாடப்பட்டிருத்தல் வேண்டும் என்பது நன்கு புலனாகின்றது. இவ்வாசிரியர் வில்லிபுத்தூர் ஆழ்வாரோடு வாதஞ்செய்தபோது இந்நூலை இயற்றினர் என்றும் ஒவ்வொரு பாடலுக்கும் உரை கூறிவந்த வில்லிபுத்தூரார் திதத்த என்று தொடங்கும் 54-ஆம் பாடலுக்கு உரை கூற இயலாமல் தோல்வியுற்றனர் என்றும் பிறகு அருணகிரியாரே அப்பாடலுக்கு உரை கூறி விளக்கினர் என்றும் கூறுவர். அருணகிரியாருக்கு வில்லிபுத்தூரார் முற்பட்டவராதலின் அவர்கள் கூற்றுப் பொருந்தாதென்றுணர்க.

கந்தர் அலங்காரம்


இது, கடவுள் வாழ்த்து நூற்பயன் என்பவற்றோடு நூற்றிரண்டு செய்யுட்களை உடையது; குமரவேள்மீது அருணகிரிநாதரால் கட்டளைக் கலித்துறையில் இயற்றப் பெற்றது; பத்திச்சுவை மிகுந்தது. இதிலுள்ள கடவுள் வாழ்த்தினால் இது திருவண்ணாமலையில் பாடப்பெற்றிருத்தல் வேண்டும் என்பது தெள்ளிது. இந்நூலில் மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் - வைதாரையுமங்கு வாழ வைப்போன்1 என்று ஆசிரியர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்க தொன்றாம். இதிலுள்ள அரிய செய்யுட்கள் சிலவற்றை அடியிற் காண்க.

வேலை விளங்குகை யான்செய்ய தாளினில் வீழ்ந்திறைஞ்சி
மாலே கொளவிங்ஙன் காண்பதல் லால்மன வாக்குச்செய
லாலே யடைதற் கரிதா யருவுரு வாகியொன்று
போலே யிருக்கும் பொருளையெவ் வாறு புகல்வதுவே

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை - குன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுச்செங் கோடன் மயூரமுமே

கந்தர் அநுபூதி


இது கடவுள் வாழ்த்தோடு ஐம்பத்திரண்டு செய்யுட்களையுடையது; முருகவேள்மீது அருணகிரி நாதரால் பாடப்பட்டது; கலிவிருத்தத்தில் அமைந்தது. சைவத் திருமுறைகளில் பத்தாந் திருமுறையாகவுள்ள திருமந்திரத்தைப் போன்றது இந்நூல் என்று பெரியோர் கூறுவர். இதனை மந்திர நூல் என்று சொல்வதும் உண்டு. ஆறுமுகப் பெருமானது அருள்பெற விரும்பும் அன்பர்கள் நாள்தோறும் இந்நூலைப் பூசித்துப் படித்து வருவது வழக்கம். அருணகிரிநாதர் கிளி உருவத்தோடு உயிர் வாழ்ந்த காலத்தில் இந்நூலை இயற்றினர் என்பது சிலருடைய கொள்கை. இஃது எவ்வகை யாலும் ஏற்றுக்கொள்ளத்தக்க உண்மை நிகழ்ச்சியன்று. இந்நூல் ஐம்பத்தொரு பாடல்களையே தன்னகத்துக் கொண்டதாதலின் அதற்கு மேலுள்ள பாடல்கள் அருணகிரியார் பாடியனவல்ல என்பது அறியத்தக்கதாகும். இந்நூலின் அருமை பெருமைகளை,

கந்தரநு பூதிபெற்றுக் கந்தரது பூதிசொன்ன
எந்தை யருள்நாடி யிருக்குந்நாள் எந்நாளோ

என்னும் தவஞானச் செல்வராகிய தாயுமான அடிகளது திருவாக்கினால் நன்கறியலாம்.

திருவகுப்பு


இது, சீர்பாத வகுப்பு, தேவேந்திர சங்க வகுப்பு, வேல் வகுப்பு, வேளைக்காரன் வகுப்பு, பெருத்த வசனவகுப்பு, பூத வேதாள வகுப்பு, பொருகளத்தலகை வகுப்பு, செருக்களத்தலகை வகுப்பு, போர்க்களத்தலகை வகுப்பு, திருஞான வேழ வகுப்பு, திருக்கையில் வழக்க வகுப்பு, வேடிச்சி காவலன் வகுப்பு, சேவகன் வகுப்பு, வேல் வாங்கு வகுப்பு, புய வகுப்பு, சித்து வகுப்பு, கடைக்கணியல் வகுப்பு, சிவலோக வகுப்பு, என்னும் பதினெட்டு வகுப்புகளுடையது. நீண்ட பதினெட்டுச் சந்த விருத்தங்களால் அமைந்தது. இந்தப் பதினெட்டு வகுப்புகளுக்கு மேல் காணப்படும் மயில் வகுப்பு முதலான ஏழும் அருணகிரிநாதரால் இயற்றப்பெற்றவையல்ல என்பது அறிஞர்களது கருத்து. இந்நூலில் முருக வேளின் திருவடிச் சிறப்பு, அடியார் பெருமை, வேற்படை திருமொழி, சேனைகள், போர்வீரம், உபதேசத்தால் பெற்ற ஞானம், பன்னிருபுயங்கள், திருப்புகப் பெருமை, கடைக்கண் நோக்கச் சிறப்பு திருவருளால் பெற்ற அன்பின் சிறப்பு ஆகியவற்றை மிக நீண்ட சந்தப்பாக்களில் அருணகிரியார் பாராட்டியிருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.

இவ்வாசிரியர் தம் செய்யுட்களில் வடசொற்களையும் சொற்றொடர் களையும் வரையறையின்றி மிகுதியாக அமைத்துள்ளமை முன்னர்க் கூறப்பட்டுள்ளது. இவர் காலத்தில் தமிழ்நாட்டில் முகமதியர்களும் இருந்தனர். எனவே, அவர்களுடைய இந்துதானிச் சொற்களும் சிலவும் தமிழில் பேச்சு வழக்கில் கலந்து பிறகு தமிழ் நூல்களிலும் இடம் பெற்று விட்டன. அவற்றுள் சலாம்1சபாஷ்2 ராவுத்தன்3 என்ற சொற்களை அருணகிரியாரும் தம் நூல்களில் எடுத்தாண்டிருத்தல் உணரற் பாலதாகும்.

திருவானைக்கா உலா


இது திருவானைக்காவில் கோயில் கொண்டெழுந் தருளியுள்ள சிவபெருமான் மீது பாடப்பெற்ற ஓர் உலாப் பிரபந்தமாகும். இதன் ஆசிரியர் காளமேகப் புலவர் ஆவர். இவருடைய ஊர் நந்திபுரம் என்பதும் இவரது இயற்பெயர் வரதன் என்பதும்,

வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும்
வீசு கவிகாள மேகமே- பூசுரனே
விண்டின்ற வெவ்வழலில் வேகுதே பாவியென்
மண்டின்ற பாணமென்ற வாய்

என்ற பாடலால் நன்கு வெளியாகின்றன. இவர் அந்தணர் குலத்தினர் என்பதும் இப்பாடலால் புலப்படுதல் காணலாம். நந்திபுரம் என்பது இக்காலத்தில் நாதன் கோயில் என்று வழங்கும் ஊராகும். கும்பகோணத்திற்குத் தெற்கே இரண்டு மூன்று மைல் தூரத்திலுள்ள இவ்வூர், முற்காலத்தில் சோழர்களின் தலைநகரங்களுள் ஒன்றாக விளங்கிய பழையாறை நகரின்2 ஒரு பகுதியாகும். நந்திவர்மப் பல்லவமல்லன் என்று வழங்கும் இரண்டாம் நந்திவர்மனென்பான், பழையாறை நகர்க்கு நந்திபுரம் என்று பெயரிட்டு, அங்கு நந்திபுரவிண்ணகரம் என்னும் திருமால் கோயில் ஒன்றும் அமைத்தனன் என்பது அறியத்தக்கது. அவ்வூரில் வைணவ அந்தணர் குலத்தில் தோன்றிய இவ்வாசிரியர், தம் இளமைப் பருவத்தில் முதலில் திருவரங்கத்திலும் பிறகு திருவானைக்காவிலும் தாம் மேற்கொண்ட தொழில் காரணமாக வசிக்க நேர்ந்தது எனவும் அந்நாட்களில் திருவானைக்காவில் எழுந்தருளியுள்ள அகிலாண்டேசுவரியின் திருவருளால் தமிழ்மொழியில் சிறந்த புலமையெய்தினர் எனவும் கூறுவர். இவர் ஆசுகவிபாடுவதில் வல்லவர் என்பதும் வசை பாடுவதில் ஒப்பற்றவர் என்பதும்,

காசுக்குக் கம்பன் கருணைக் கருணகிரி
ஆசுக்குக் காளமுகி லாவனே - தேசுபெறும்
ஊழுக்குக் கூத்தன் உவக்கப் புகழேந்தி
கூழிக்கிங் கெளவையெனக் கூறு

எனவும்

வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர்
செயங்கொண்டான் விருத்தமென்னும்
ஒண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா
அந்தாதிக் கொட்டக் கூத்தன்
கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்
வசைபாடக் காளமேகம்
பண்பாக வுயர்சந்தம் படிக்காச லாதொருவர் பகரொணதே

எனவும் போதரும் பழைய பாடல்களால் நன்கறியக் கிடக்கின்றன.

கருமுகில் மழை பொழிதல்போல் இப்புலவர்பிரான், ஆசுகவிகள் பாடுவதில் பேராற்றல் பெற்றிருந்தமை பற்றிக் காளமேகப்புலவர் என்ற சிறப்புப் பெயர் எய்தினர் என்று தெரிகிறது. இச்சிறப்புப்பெயர் யாண்டும் பரவி நிலைபெற்றுப் போகவே, வரதன் என்ற இவரது இயற்பெயர் வழக்கொழிந்து மறைந்து விட்டது. இவருடைய சிலேடைப் பாடல்கள் வசைப்பாடல்கள் முதலானவற்றைத் தமிழ் நாவலர் சரிதை, தனிப்பாடற்றிரட்டு, தனிச் செய்யுள், சிந்தாமணி, பெருந்தொகை ஆகிய நூல்களில் காணலாம். இவருடைய சிலேடைப் பாடல்களையும் தனிப்பாடல்களையும் நோக்குமிடத்து இவர் திருமலைராயன் என்ற தலைவனொருவன் காலத்தில் இருந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு புலனாகின்றது. இப்புலவர் அத்தலைவன் தமக்குச் செய்த பேருதவியைப் பாராட்டிப் பாடிய பாடல் ஒன்று தமிழ் நாவலர் சரிதையில் காணப்படுகின்றது. அஃது,

இந்திரன் கலையா யென்மருங் கிருந்தான்
அக்கினி யுதரம்விட் டகலான்
எமனெனைக் கருதான் அரனெனக் கருதி
நிருதிவந் தென்னையென் செய்வான்
அந்தமாம் வருணன் இருகண்விட் டகலான்
அகத்துமக் களுக்குமப் படியே
அநிலமாம் அரியே அமுதமாய் வருவன்
ஆரெனை யுலகினில் ஒப்பர்

சந்தத மிந்த வரிசையே பெற்றுத்
தரித்திர ராசனை வணங்கித்
தலைசெயு மென்னை நிலைசெய் கல்யாணிச்
சாளுவத் திருமலை ராயன்
மந்தரப் புயனாங் கோப்பய னுதவு
மகிபதி விதரண ராமன்
வாக்கினாற் குபேர னாக்கினான் இவனே
மாசிலீ சானனா வானே

என்பதாம்.

வறுமை நோயினால் பற்றப்பட்டு வருந்திக் கொண்டிருந்த தம்மைப் பெரிதும் ஆதாரித்துக் குபேரன் போன்ற செல்வமுடையவனாகும்படி செய்தவன், சாளுவ மன்னனாகிய திருமலைராயன் என்பதையும் அவன் விதரணராமன் என்ற சிறப்புப் பெயர் எய்தியவன் என்பதையும் கோப்பயன் என்பவனுடைய புதல்வன் என்பதையும் இப்பாடலில் காளமேகப் புலவர் கூறியிருத்தல் அறியத்தக்கது. சாளுவத் திருமலைராயன் என்ற தலைவன் ஒருவனுடைய கல்வெட்டுகள் சோழ நாட்டில் திருவனைக்கா,1 தஞ்சாவூர்,2 பாவநாசம்,3 பட்டீச்சுரம்,4 முதலான ஊர்களில் காணப்படுகின்றன. எனவே, விசயநகர வேந்தர்களின் பிரதிநிதிகளாகச் சோழநாட்டிலிருந்து ஆட்சிபுரிந்த அரசியல் தலைவர்களுள் திருமலைராயனும் ஒருவன் என்பது தேற்றம். தஞ்சாவூர் ஜில்லாவில் அரிசிலாற்றுக்கும் முடிகொண்டான் ஆற்றுக்கும் இடையில் ஓடிக் கடலோடு கலக்கும் திருமலைராசன் என்ற ஆறு அவனது ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்டதேயாகும். அன்றியும், காரைக்காலுக்குத் தெற்கே ஆறு மைல் தூரத்தில் திருமலைராசன் ஆற்றங்கரையிலுள்ள திருமலைராசன் பட்டினமும் அவ்வரசியல் தலைவன் பெயரால் அமைக்கப் பெற்ற நகரமேயாகும். அவனது ஆட்சிக் காலத்தை நன்கு விளக்கக்கூடிய கல்வெட்டொன்று தஞ்சைமாநகரிலுள்ள இராசராசேச்சுரம் என்ற பெரிய கோயிலில் பொறிக்கப் பட்டுள்ளது. அக் கல்வெட்டு அவன் சில ஊர்களைச் சர்வமானியமாக வழங்கிய செய்தியை உணர்த்துவதாகும். அதன் முற்பகுதி சுபமது சகாப்தம் ஆயிரத்து முன்னூற்று எழுபத்தேழின்மேல் செல்லா நின்ற பவ வருஷத்துக்குச் செல்லும் யுவ வருஷம் சித்திரை மாதம் 17……… ஸ்ரீ மந்மகாமண்டலேவரன் மேதினீவரன் கண்ட கட்டாரி சாளுவ சாளுவ திருமலை தேவமகாராசர் என்பது இக்கல்வெட்டுப் பகுதியினால் சகம் 1377- க்கு நேரான கி. பி. 1455-ல் திருமலைராயன் என்பான் சோழ நாட்டில் விசயநகர வேந்தனின் பிரதிநிதியாயிருந்து அரசாண்டனன் என்பது நன்கு வெளியாகின்றது. காளமேகப் புலவரால் கல்யாணிச் சாளுவ திருமலை ராயன்- மந்தரப்புயனும் கோப்பயனுதவு மகிபதி விதரணராமன் என்று புகழ்ந்து பாடப்பட்டவன் மேலே வரையப்பட்ட கல்வெட்டால் குறிக்கப்பட்ட சாளுவத் திருமலைதேவ மகாராசனேயாவன் என்பது நன்கு துணியப்படும். அவன் விசயநகர வேந்தனாகிய மல்லிகார்ச்சுனராயனுக்குப்1 பிரதிநிதியாய் அமர்ந்து சோழ நாட்டை அந்நாட்களில் ஆட்சிபுரிந்தவன் ஆவன். ஆகவே திருமலைராயனால் ஆதரிக்கப்பெற்ற காளமேகப் புலவர் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் நம் தமிழகத்தில் வாழ்ந்தவர் என்பது தேற்றம்.

ஓங்கு கோயிற் புராணம்


இராமநாதபுரம் ஜில்லா திருப்பத்தூரிலுள்ள திருத்தளியாண்ட நாயனார் கோயிலில் காணப்படும் கல்வெட்டொன்றால் இப்புராணத்தின் பெயர் அறியப் படுகின்றது. அத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் புரிந்தருளிய திருவிளையாடல்களைக் கூறுவது இந்நூல். இப்புராணம் இக்காலத்தில் கிடைக்காத நூல்களுள் ஒன்றாதலின், இதனைப்பற்றிக் கூறுவதற்கு ஒன்றுமில்லை, இது, திருவம் பலமுடையார் மறை ஞானசம்பந்தர் என்ற பெரியாரால் இயற்றப்பெற்றதாகும். இவ்வாசிரியர், திருப்பத்தூரிலிருந்த சிறு மடத்தில் வதிந்தவர்; மெய் கண்ட சந்தானத்தைச் சேர்ந்தவர்.

இவர், கி.பி. 1484- ஆம் ஆண்டில் இப்புராணத்தைப் பாடி அரங்கேற்றியபோது, கோயில் அதிகாரிகள் மேல் திருமங்கலம் என்ற மண்ணிமங்கலத்தில் இவருக்கு ஐந்து மாநிலம் இறையிலி யாக அளித்தனர் என்று திருப்பத்தூர்க் கோயிற் கீழைப் பிராகாரத்திலுள்ள கல்வெட்டொன்று1 உணர்த்துகின்றது. எனவே, இவர் கி. பி. பதினைந்தாம் நூற்றாண்டில் நிலவிய புலவராவார்.